Showing posts with label கோலிவுட். Show all posts
Showing posts with label கோலிவுட். Show all posts

Friday, February 14, 2020

வானம் கொட்டட்டும்





கடந்த சில வருடங்களாகவே, குறிப்பாக முகநூலிலிருந்து வெளியேறிய பிறகு திரைப்பட விமர்சனங்கள் எழுதுவதை தவிர்த்து வந்தேன். திருவனந்தபுர திரைவிழாவில் பார்த்த மிகச் சிறந்த கலைப்படங்களைப் பற்றியாவது எழுத வேண்டும் என்று நினைத்து அதுவும் டிவிட்டரோடு நின்றுவிட்டது. புனரமைக்கப்பட்ட இத்தளத்தில் இனி குறிப்புகளாகவாவது எழுத வேண்டுமென்று விழைகிறேன்.


நண்பர் தனா இயக்கிய முதல் திரைப்படமான "படைவீரன்" வெளியான அன்று முதல் காட்சியை நண்பர்கள் படை சூழ சென்று பார்த்தோம். காட்சியமைப்புகளின் தெளிவிலும் வண்ணங்களின் குழைவிலும் தானொரு மணி ரத்னத்தின் மாணவன் என்பதை பதிவு செய்திருந்தார்.  ஆனால் கதாப்பாத்திர தேர்வில் தொடங்கி திரைக்கதையாக்கம் வரை செறிவற்று அமைத்ததில் ஒரு இயக்குனராக தோல்வியடைந்திருந்தார். முதற்படம் உருவாக்குவதில் இருக்கும் அழுத்தங்களையும் மீறி பாறையிடுக்கில் பீறிடும் அருவியைப் போல சிறந்த இயக்குனர்கள் எப்படியாவது தங்களை வெளிக்கொண்டு வந்துவிடுவார்கள். அப்படியானதொரு கவனத்தை  தன்னுடைய  இரண்டாவது படத்தில்தான் உருவாக்கியிருக்கிறார் தனா.

இப்படம் ஒருவகையில் முக்கியமானது என்பதை ஒரு சில புள்ளிகளில் தொகுத்துக் கொள்ளலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஜெயமோகன் அவர் தளத்தில் முன் வைத்திருந்த குறிப்புகளை ஒட்டிதான் என்னுடைய எண்ணங்களும் அமைகிறது.

முதலில், படைவீரனில் முதன்மையான சறுக்கலை எங்கு சந்தித்திருந்தாரோ அங்குதான் தனா இதில் பலமாக எழுந்து நின்றிருக்கிறார். பாத்திரங்கள் வடிவமைப்பிலும் அதற்கான நடிகர்களின் தேர்வுமே இப்படத்தின் முதல் சிறப்பு. ராதிகாவும் ஐஸ்வர்யா ராஜேஷும் விக்ரம் பிரபுவிற்குமே கூட அவர்களின் உருவுக்கு ஏற்றபடி கதைப் பாத்திரம் உருகொண்டெழுவதைப் போல ஒரு தோற்றம் உருவாவது ஆச்சர்யமே. தன்னந்தனியனான ஒரு வயதான அண்ணனை பாலாஜி சக்திவேல் தன் எடை தாங்கிய நடையிலேயே அன்பு செய்ய வைக்கிறார். சரத்குமார்-ராதிகா ஒரு சாமர்த்தியமான தேர்வு, வசதியானதும் கூட. அவர்களிடையேயான அன்னியோன்யத்தை நிரூபிக்க ஒரு காட்சி கூட வீணாக்கத் தேவை ஏற்படவில்லை இயக்குனருக்கு. சிறை மீண்டு வந்த பிறகு சரத்குமாருக்கு சாதகமாக தன் பிள்ளைகளை எதிர்த்து ராதிகா நிற்பது நியாயமாகவே தோன்றியது, எந்தக் காரணமும் கூறப்படமாலேயே. சாந்தனு, ரெட்டி, ரெட்டியின் மகன் என அவர்களின் தோற்றமே அவர்களுக்கான கதைகளை எழுதிக் கொள்கிறது. இதனால், இத்தனை நடிகர்கள் குழுமியிருக்கும் இக்கதையில் எல்லோருக்குமான கதாப்பாத்திர வளர்ச்சியைப் பற்றி கவலைப்பட அவசியமில்லாமல் போகிறது. மையப் பாத்திரங்களின் உருமாறும் உறவுகளின் தன்மைகளே தனித்துவமாக மேலெழுந்து வருகிறது. அதுவே இப்படத்தின் ஆகப்பெரிய சிறப்பம்சமாக எனக்கு தோன்றுகிறது.

கோட்டுரு படங்களில் மைய கோட்டை தொட்டு தொட்டு விலகிச் செல்லும் ஒலி அலைகளைப் போல இக்கதையின் மைய உறவுகள் பட்டும் படாமலும் தங்களை அமைத்துக் கொள்கின்றன. நகரத்திற்கும் கிராமத்திற்குமான வேறுபாட்டை இந்த விலகல் அடிக்கோடிடுகிறது. அண்ணனை அரிவாளால் தாக்கிய இருவரை கொன்றேவிடுகிறான் தம்பி போஸ். சிறையிலிருக்கும் போஸை பழி தீர்ப்பதற்காக 16 வருடங்கள் காத்திருக்கிறார்கள் இறந்தவனின் மகன்கள். இப்படி உறவுக்காக உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்கும் கிராம வாழ்க்கையிலிருந்து தன் குழந்தைகளோடு    வெளியேறும் சந்திரா எந்த உறவுகளையும் மீண்டும் நாடிப் போவதில்லை. உண்மையில் சந்திராவின் குடும்பத்தினரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. செல்வாவிற்கும் மங்கைக்கும் இடையிலான அண்ணண் தங்கை உறவு கூட விளையாட்டாகவேதான் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் பலமாக துணை நிற்கிறார்கள் என்றாலும் வெகு இயல்பாக வாழ்வின் வேக ஓட்டத்திற்கு ஊடாக அவர்களின் உறவு அடுத்த கட்டங்களுக்கு துள்ளிச் செல்கிறது.

மங்கை, கல்யாண் ரெட்டி, ராமன் இவர்களுக்கிடையிலான உறவு தமிழ் சினிமாவிற்கு புதுமையான ஒன்று. இன்ன மாதிரி என்று எந்த வரையறையும் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் முடியும் சாத்தியத்தோடே முன்னகர்கிறது. ஒரு காட்சி இதை மிகச் சிறப்பாக பதிவு செய்கிறது. கல்யாண் ரெட்டியுடன் மங்கை பேருந்தில் சென்றுக்கொண்டிருப்பதை அண்ணன் செல்வா பார்த்து துரத்துகையில், மங்கை அவனிடமிருந்து தப்பித்து தெருக்களின் வழி ஓடி ஏதேச்சையாக பைக்கில் அங்கு வரும் ராமனுடன் தொற்றிக் கொண்டு தப்பி விடுகிறாள். கல்யாணிற்கும் ராமனுக்கும் இடையிலான மங்கையின் ஓட்டத்தில் இடையே அண்ணன். ஆனால் அந்த சிறிய துரத்தலை மீறி செல்வா எந்த விதத்திலும் மங்கையின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. மங்கையுமே ஏன் ராமன் இன்னும் தன்னிடம் காதலை சொல்லவில்லையென்றோ கல்யாண் ரெட்டி ஏன் தன்னிடம் சொல்லாமல் தன்னை பெண் பார்க்க வந்து நிற்கிறான் என்றோ எந்தக் கேள்வியும் கேட்டுக் கொள்வதில்லை. அதன் போக்கில் வாழ்வின் மீது காலாற நடக்கிறார்கள். இப்படியான ஒரு உறவுதான் ப்ரீதாவிற்கும் செல்வாவிற்கும் இடையிலும். செல்வா தன் தொழிலில் தன்னுடைய வெற்றியை போஸிற்கு காட்டும் காரணியாகவே ப்ரிதாவின் பாத்திரம் அமைந்திருந்தாலும் இவர்கள் எவர் இடையிலும் சிடுக்குகள் இல்லாமல் இருப்பதற்கு உறவின் அழுத்தங்கள் அற்று இருப்பதே காரணமாக அமைகிறது.

தன் மகன்களுக்காக ஊரைவிட்டு வெளியேறியதாலேயே தாய் பாசத்தை  இரண்டு பாடல்களிலாவது சித் தன் அடித் தொண்டையிலிருந்து பிழிவதற்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தும் அது தவிர்க்கப்பட்டிருப்பது உயிர் வதையிலிருந்து விடுதலையாவதற்கு ஒப்பானது. மாறாக சந்திரா தன் கணவன் திரும்பிய பிறகான ஒரு சந்தர்ப்பத்தில் "எனக்கென நீ என்ன செய்தாய்?" என்று தன் மகனைப் பார்த்து கேள்வி கேட்கும் ஒருவராகத்தான் இருக்கிறார். விடுதலையான தன் கணவனின் மீது அன்பையும் பொறுப்புகளையும் அள்ளிக் கொடுக்கும் சந்திரா அவர் சிறையிலிருந்தபோது சென்று சந்தித்தது சொற்ப சந்தர்பங்களில் மட்டுமே. இப்படி மைய உறவுகள் அத்தனையும் நகரம் தந்த விடுதலையின் மீதேறி, வாழ்வை புதிய கலங்களில் இனி சமைக்க வேண்டிய தேவையின் காரணம் கொண்டு தங்களுக்குள் பின்னிப் பிணையாமல் இலகுவாகவே தொட்டுச் செல்கிறது. இது தமிழ் சினிமாவின் நவீன யதார்த்த பின்னணியில் அமையும் பெரும் முன்நகர்வு. படத்தின் முதல் காட்சியிலேயே இயக்குனர், விலங்கு மனிதன் உறவுகள் வன்முறை ஒன்றுக்கொன்று முயங்கி கிடக்கும் கிராமத்தை சொல்லிவிடுகிறார். மிச்ச படம் இதன் எதிர்வினையே. விளையாட்டாக இதையும் சொல்லலாம்: இப்படத்தின் பாடல் வரிகளும் இசையை தொட்டும் தொடாமலேயேதான் கடக்கிறது!

மிகவும் சன்னமாக சாதி மத அழுத்தங்களிலிருந்து நகரம் தரும் விடுதலையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சந்திரா வாழும் தெரு ஒரு முஸ்லீம் தெரு. அவருக்கு வேலை கொடுத்து உதவுவது ஒரு முஸ்லீம். செல்வாமீது காதல் கொள்ளும் ப்ரீத்தா ஒரு கிறித்துவர். சாதியும் குடும்பப் பகைகளும் உயிர் பலி கேட்கும் ஒரு சூழலிலிருந்து அவர்கள் வந்து சேர்ந்து வளரும் இடம் மிக முக்கியமானது. அது அதிக சத்தமின்றி சொல்லப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த மைய கருவை சொல்லும் முயற்சியில்தான் தன் முதல் படத்தில் தோல்வி கண்டிருந்தார் தனா. அந்த வகையில் இத்திரைப்படம் அவரின் கவனம் கொள்ளத்தக்க பாய்ச்சல்தான்.



வானம் கொட்டட்டும் ஒரு சிறந்த படமாக அமையாமல் ஒரு நல்ல படமாக நின்று விட்டதிற்கு முதன்மையாக மூன்று காரணங்களை கூற முடியும். இது ஒரு வெகுஜன சினிமாதான் என்றே எடுத்துக் கொண்டாலும் சமரசங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை கருத்தில் கொண்டாலும் இப்படத்தின் முடிச்சுவுகள் அவிழும் இடங்கள் அது பிண்ணப்பட்ட தரத்தில் இருந்து வெகுவாக கீழிறங்கியிருக்கிறது. உதாரணமாக மங்கையின் இன்னவென்று சொல்ல முடியாத ஒரு முக்கோண உறவை முடிக்க எண்ணி மிகவும் பழக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து முடித்திருப்பது. "இராமன் தன் காதலை இன்னும் சொல்லவில்லையே" என்ற இடத்திலேயே மங்கையின் சாய்வு எவர் மீது என்பது புலனாகிவிட்டபோது, அந்தக் கதை இப்படி வசதியாக முடிய வேண்டிய அவசியமில்லை. ராமனுக்கு தன் காதலை சொல்லும் தைரியத்தை வரவழைக்கும் ஒரு சூழல் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. ராமனுக்கு நேர்மாறாக  வெளிப்படையாகப் பேசும் கல்யாண் இப்படி மங்கையிடம் சொல்லாமல் தன் பெற்றோரை அழைத்து வருவானா? இந்த முக்கோண உறவு இப்படத்தில் முடிவுறாமல் இருந்திருந்தாலும் இன்னமும் அழகானதாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். ப்ரீதாவிற்கும் செல்வாவிற்கும் முத்தத்தில் தொடங்கும் காதலும் இப்படித்தான். அவர்களுக்கென ஒரு டூயட் கூட படத்தில் இல்லாதபோது இரண்டரை மணி நேரத்தில் அவர்கள் காதலர்களாக மாற வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்கு இன்னமும் நேரம் இருக்கிறது. சிறையிலிருந்து திரும்பி வந்த போஸ் உதவ எண்ணி செய்யும் காரியங்கள் விபரீதத்தில் முடிவது இக்கதையின் புதுமையான ஒரு கோணம். ஏற்கனவே விலகி நிற்கும் பிள்ளைகளுக்கு நியாயம் சேர்ப்பவை. கணவன் என்பதால் சந்திராவும் தம்பி என்பதால் வேல்சாமியும் அவர் பக்கம் நிற்கலாம், அந்த அவசியம் அவர் வாசமின்றி வளர்ந்த பிள்ளைகளுக்கு இல்லை. ஆனால், "கோல்டன் ப்ரூட்ஸ்" லாபகரமாக மாறுவதும் கல்யாணிடம் சத்தம் போட்டதாலேயே அவன் பெற்றோர்களை அழைத்து வருவதும் ஒரு வெகுஜன சினிமாவாக, அதுவும் "எல்லோருக்கும் பிடிக்கும்" சினிமாவாக மாற வேண்டிய அவசரத்தில் செய்யப்பட்டவையாகவே இருக்கிறது.

இரண்டாவதாக திரைக்கதை ஒரு சிறுகதைக்கு ஒப்பானது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதன் பயணம், நோக்கம் தெளிந்துவிட வேண்டும். ஓட்டத்தினுடாக இதில் ஏற்படும் அலைபாய்தல்கள் படத்திலிருந்து கவனத்தை சிதறடிக்கவே செய்யும். வன்முறைக்கு எதிராக தொடங்கும் இப்படம் அதை அழுந்தப் பதிய தவறவிடுகிறது. விடுதலையான போஸ் சிறை வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாக இல்லை. மீசையை முறுக்கி புல்லட்டில் சென்று காதல் பஞ்சாயத்து செய்யவே விரும்புகிறார். அப்பாத்திரம் அப்படிதான் அமையும் என்றே கொண்டாலும் இறுதி வசனத்தில் ஒரு கொலை செய்ததின் மூலம் சிறையில் தன் வாழ்க்கை அழிந்ததே என்று வருத்தப்படுகிறார் அன்றி வன்முறையையும் வன்முறையின் மீதான தன் இனத்தின் பற்றையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. வேல்சாமியும் கூட "நம்ம ஊர் போலீஸா இருந்தா ஈஸியா வெளியே கொண்டு வந்து விடுவேன்" என்ற ரீதியிலேயே பேசுகிறார். இதே வசதி பாஸ்கரனுக்கு கிடைக்குமென்றால் அவனும் போஸை கொலை செய்து விட்டு வெளியில் வந்துவிடலாமா? பாஸ்கரன் இப்படத்தின் மிக முக்கியமான பாத்திரம். முதல் காட்சியில் இரத்தம் தெறிக்கும் முகத்துடன் அறிமுகம் ஆகும் இவனை நோக்கித்தான் இடைவேளை காட்சி உறைகிறது. ஆனால் கதையோட்டத்தில் அவனுக்கான இடம் கொடுக்கப்படவில்லை. அவனின் நியாயத்தின் ஒரு துளி குருதி கூட படத்தின் இறுதியில் நம் மீது தெறிக்கவில்லை. அவன் நியாயம் தோற்கும் இடம் அல்லவா அது. போஸின் ஒரு வரி அவன் பித்து பிடித்து திரிந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்து விடுமா? கதைக்குள் சரியான வளர்ச்சியற்ற ஒரு எதிர் பாத்திரம் படத்தின் சமன் குலையச் செய்யும். பார்வையாளர்களை வெளியே தள்ளும்.

மூன்றாவதாக, இப்படத்தின் தொழில் நுட்ப அம்சங்கள் மெட்றாஸ் டாக்கீஸ் தரத்தில் இருந்தாலும் சித் ஸ்ரீராமின் பின்னணி இசை பெரும் சோர்வையே கொடுத்தது. மணி ரத்னத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பான 'பாடல்களை பிச்சு பிச்சு போடும்" உத்தி நன்றாக கை கொடுத்தாலும் பின்னணி இசை அவரின் முதிரா அனுபவத்தையே உணர்த்தியது. பின்னணி இசையின்றி படங்கள் பார்த்து பழகிவிட்ட என் போன்றோருக்கு பெரும் சித்திரவதையாகவே இருந்தது. (விகடன் பாணியில் 'சித்'திரவதை என்று போட்டிருக்க வேண்டுமோ) உதாரணமாக ஒரு காட்சி மட்டும். தந்தையை இழந்து ப்ரீத்தா தனிமையில் அமர்ந்திருக்கிறாள். வாழ்வின் பெருந்துணையை இழந்திருக்கும் அவளிடத்தில் செல்வா நெருங்கிச் செல்கிறான். பார்வையாளனுக்கு ஒரு சின்ன ஆர்வத்தை அந்த அமைதி கொடுக்கிறது. அவர்கள் உறவு அடுத்த கட்டத்தை அடையப் போகும் இடம் அது. ஆனால் ஒரு சொல் அங்கு உதிர்க்கப்படும் முன்னரே பின்னணி இசை எழுகிறது. அதுவும் படம் முழுதும் பல்வேறு இடங்களில் இசைக்கப்பட்ட அதே இசை. இது என்ன மாதிரியான காட்சி என்பது அந்த நொடியே புரியவைக்கப்படுகிறது. தன்னுணர்வின்றியே பார்வையாளனுக்கு பெரும் அயர்ச்சியை இது கொடுத்து விடுகிறது. பிறகு அவன் செய்ய வேண்டியதெல்லாம் அக்காட்சி முடியும் வரை காத்திருப்பதுதான், திரையில் நடப்பவற்றிற்கு எந்த ஒட்டுதலும் இல்லாமல். இப்படி பல காட்சிகளை ஒரு படி கீழே இழுத்துக் கொண்டேயிருக்கிறது பின்னணி இசை. சித் ஸ்ரீராமின் ஓசைகள் புதிதாக இருப்பது உண்மையென்றாலும் இப்படத்திற்கு அது உதவவில்லை. துண்டு பாடல்களாக வருவன சிறப்பாகவே இருப்பதும் உண்மைதான்.

வெகுஜன சினிமாவில் யதார்த்தப் படங்கள் தோன்றுவது மிகவும் முக்கியம். அப்படியொரு சூழல் அநேகமாக தமிழில் இல்லாமலே இருந்தது. மலையாளத்தில் மாஸ் படங்கள் வரும் அதே நேரத்தில் ஈ.மா. யோ. வரும். ஆனால் அநேகம் பேரை சென்றடைவது "கும்பளாங்கி நைட்ஸ்" போன்ற இடை நிலைப் படங்களே. தமிழில் அப்படியான இடை நிலைப்படங்களின் தொடக்கத்திற்கு வானம் கொட்டட்டும் படத்தின் வெற்றி அமையலாம்.  தனாவிற்கு வாழ்த்துக்கள்.


Saturday, April 18, 2015

வண்ணங்களின் வரையறை!!

இளவயது ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களையும் அழகியல்களையும் எவ்வளவு சொல்லியும் தீராது. அது பலசமயம் வெறும் அர்த்தமற்ற வேகம் என்றபோதிலும்.
ஒரே கான்வாஸில் விதவிதமான ஓவியங்களை தீட்டுவதில் மணிரத்னம் மிக கைதேர்ந்தவர். அதிலும் இந்தமுறை வீடியோ கேம் வகை காதல். அதீத வண்ணங்களால் ஆன கதாபாத்திரங்கள். எதையுமே சட்டென தேடி தாவி ஓடி பிடித்து வென்றுவிட முடியுமென ஒரு முனைப்பு. செத்து செத்து விளையாடும் விளையாட்டு தானே...நிரந்தரமான எந்த முடிவிற்கும் தயாராகாத மனநிலை. இது காதாலா என்று கூட முடிவெடுக்க முடியாத ஒரு உறவு தாராவிற்க்கும் ஆதிக்கும். திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அதற்கு ஒரு காரணத்தை புனைய இக்கதை முனைந்தாலும் அது அவசியமற்றதும் கூட.
வேறு வேறு நாட்டிற்கு செல்லும் கனவுகளோடு கடைசி சில மும்பை மாதங்களை ஒன்றாக கொண்டாட முடிவெடுத்து வாழும் வீட்டின் அடுத்த அறையில் நீண்ட தாம்பத்தியத்தை ஒரு கனிந்த பழத்தைப் போல நிதானமாக சுவைத்து மகிழும் கணபதி தம்பதியினர். பல காட்சிகளில் இவர்களின் அறைக் கதவுகளின் மெல்லிய இடைவெளியின் ஒளியில் காதலின் முற்றிலும் முரணான இரு வேறு கோணங்கள் பரிமாரிக்கொள்ளப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை இழந்து வரும் மனைவியின் வியாதியை தனது மீதி வாழ்க்கையாக கொள்ளும் கணவனின் காதல்; இழப்பதற்க்காகவே நினைவுகளை சேகரிக்கும் ஒரு கலர்ஃபுல் காதல். சிறு பிரிவுகள் சிறு கூடல்கள்; இரண்டிலுமே நாடகமற்ற விளையாட்டுகளும் கனவுகளும் "சின்னஞ் சிறு ரகசியங்களும்"!

முதல்முறையாக ஆதியும் தாராவும் ஒரு அறையில் கழிக்க நேரும் ஒரு இரவின் பாடலில் "பறந்து செல்லவா.." என தாராவின் தொலைதூர கனவுகள் இவர்களின் இடையில் ஒரு பாதுகாப்பான தடையை உருவாக்கினாலும் அடுத்த சந்தர்ப்பத்தில் "நானே வருகிறேன்.." என இடைவெளிகளை கடந்து ஒன்று கூடுகிறார்கள். ஒன்றாக மிச்ச காலத்தை கழிக்க நினைத்து குடிபுக அனுமதி கேட்கும் காட்சியை தொடரும் பாடல் - "மலர்களை கேட்டேன் வனமே தந்தனை..தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை.." பாடல்களின் வரிசையும் வரிகளும் கதையின் ஓட்டத்தை நியாயப்படுத்தும் இந்த அழகு கடைசியாக எந்தப் படத்திலும் வந்ததாக நினைவில்லை. மணியின் படங்களையே இதற்க்காக மீண்டும் ஒரு முறை பார்க்க ஆவல் மேலிடுகிறது. ஆச்சரியமாக, "ஹே சினாமிகா.." பாடலின் ஒரு வரி - "சீரும் சினாமிகா" ஆங்கில சப்-டைட்டிலில் "Seething Sinamika" என்று அர்த்தமும் எதுகை மோனையும் கூட கெடாமல் வந்திருந்தது!!!
சிறு முறைப்புகளுக்கு பிறகு ஆதியிடம் கணபதி உரிமை கொள்ளும் காட்சி பிரஷர் குக்கர் நீராவி படர்ந்து தெளிவது போல காட்சிப்படுத்தியிருப்பது ஒரு உதாரணம். மணியும் பி.சி.யும் விளையாடியிருக்கிறார்கள். சீண்டுவதர்க்கென்றே ஆங்காங்கே "அலைபாயுதே" காட்சிகளை நினைவுபடுத்தும் கோணங்களும் உண்டு. பேருந்து பின் சீட் பயணம், எலெக்ட்ரிக் டிரெயின் என பழகிய இடங்களே. உண்மையில் அலைபாயுதே போலவே இதிலும் இரண்டு ஜோடிகள். ஏதோ ஒரு வகையில் ஒருவரின் வாழ்க்கையை இன்னொரு காதல் மாற்றியமைக்கிறது. அனால் முந்தையதில் பிரியாமல் இருப்பதற்காக தாலி கட்டி கல்யாணம் செய்து பின்பு பிரிவின் விளிம்பில் ஊசல்; இதில் பிரிவு நிச்சயம் என திருமணமற்ற உறவின் விளிம்பில் காதல். மிகச் சிறிய ஒரு கோடு. ஆனால் இந்தமுறை அழுத்தம் திருத்தமாக, விலாவரியாக வரைந்திருக்கிறார் மணி.
விதவிதமான பயணங்களில் வாழ்க்கை. எதை நோக்கியோ சென்றுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத திசையில் திரும்பி சலசலத்து ஓடும் நதி இது. வெவ்வேறு நிறங்களாக பிரிந்து தான் சென்று சேரும் இடங்களை தேடி அலைந்துக் கொண்டிருந்தாலும் இந்த வண்ணங்கள் அறுபடும் ஓரிடத்தில் காதல் மீண்டும் தூய ஒளியாக மட்டுமே எஞ்சுகிறது.

Friday, February 6, 2015

என்னை அறிந்தால்...


தன் அப்பாவை கொன்ற மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கும் ஒரு தாதாவை கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஒரு போலீஸ்தான் கொல்ல முடியும் என்பதை உணர்ந்த சிறுவன் கோட்டுக்கு எந்தப் பக்கம் போனான் என்பதுதான் கதை... இல்லையில்லை. ....பதுதான் "ஒரு" கதை. நாட்டுக்காக நண்பனாக நடிக்கப்போய் தன்னால் ஏமாற்றப்பட்ட இப்போது வில்லனாகிவிட்ட அந்த நண்பனிடமிருந்து தன்னையும் வீட்டையும் நாட்டையும் காப்பாற்றுவது இன்னொரு கதை. தன் மனைவியாகப் போகும் ஒரு பெண்ணை மனைவியாகப் போகும் நாளில் (அதாவது திருமண நாளில்) கொன்ற அதே நண்ப வில்லனை பழிவாங்குவதும் ஒரு கதை. உடல் உறுப்பு கடத்தலுக்காக குறிவைக்கப் பட்டிருக்கும் ஒரு அழகான பெண்ணை பறந்து பறந்து காப்பாற்றுவதும் மற்றொரு கதை. அந்த கடத்தலுக்கு தலைவனாக அதே நண்ப வில்லனே அமைவது ஒரு தனி கதை. இதில் வேறு ஏதேனும் கதைகள் விடுபட்டிருந்தால் சகலரும் மன்னிப்பாராக.
படங்களில் கதைகள் இல்லையென யார் சொன்னது. கௌதம் மேனன் இயக்கிய எல்லா படங்களின் கதைகளும் இதிலேயே உள்ளது. ஒரு கேட்டலாக் மாதிரி. ஹாரிஸ் அமைத்த எல்லா பாடல்களின் மாதிரியும் இதிலேயே உள்ளது என்பது சொல்லமலே புரிவது!

கௌதமிற்கு எப்போதும் அழகிய கனவுகள் உண்டு. என்னதான் ஆங்கிலத்தியே பேசும் அம்மா இருந்தாலும் குடும்பம் பெருங்கடனில் இருக்கும்போது உள்ளங்கையிலேயே அளந்து அமெரிக்காவிற்கு மகனை காதலிப்பதற்காக அனுப்பி வைக்கும் அப்பா போல. அஜீத்தும் குழந்தையை கூட்டிக்கொண்டு நான்கு வருடம் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார். போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக வருகிறார். ஆனால் போலீஸ் ஷு மட்டும் தான் போடுவார். யூனிபார்ம்லாம் இல்லை. ஏன்னா அவர் தான் போலீஸ்லியே சேரலையே. வெறும் போலீஸ் துணையோடு வில்லன்களை பந்தாடுகிறார். நாட்டுக்கு இப்படி நாலு வேலையை ராஜினாமா செய்த போலீஸ் இருந்தால் எப்படி இருக்கும். சம்பளம் மிச்சம். நாலு வருடம் ஊர் ஊராக செலவு செய்து சுற்றி வந்த பின்னும் அனுஷ்காவுக்கு காவலானாக பாஸ்டன் வரை போய் வருகிறார். இதிலெல்லாம் லாஜிக்கே இல்லை என்பது கதாசிரியருக்கு தெரியாதா என்ன. இருந்தாலும் கனவுகள் அல்லவா. கனவுகளுக்கு ஏது லாஜிக். (ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்த "இசை" எப்படியெல்லாம் உதவுது.)





அஜீத் அழகாக இருக்கிறார், காபி விளம்பரத்தில் பார்த்தது போலவே. படம் முழுவதும் விளம்பரம் போலவே எழுந்துட்டேன் வந்துட்டேன்னு எங்கிருந்தாவது எழுந்து எழுந்து வந்து கொண்டே இருக்கிறார். ஆனாலும் படம் பார்க்க போதிய காரணமாக அவர் மட்டுமே இருக்கிறார். திரிஷாவிற்கும் அனுஷ்காவிர்க்கும் சம அளவில் வேலையின்மை. பாராட்டுக்கள். பரதநாட்டியம் என்ற பேரில் திரிஷாவின் மேடை நாடகம் ஒன்று வருகிறது. என்னதான் அது!?

சிற்சில காதல் கணங்கள், உச்ச கட்ட ஹீரோ வில்லன் சேசிங், எட்டி பார்க்கும் நாசர் பாத்திரம், தெள்ளத்தெளிவான கேமரா கோணங்கள் உடல் உறுப்பு கடத்தல் என ஆங்காங்கே என்னை அறிந்தால் தெரிகிறது. த்ரிஷா அஜித் எபிசொட் மட்டும் அப்படி ஒரு ஆழம். இதை மட்டுமே படமா எடுத்து எங்க உயிரை ப்ரீயா விட்டு இருக்கலாமேன்னு தோன்றாமல் இல்லை.. யாருடைய கோணத்தில் கதை சொல்லப்படுகிறது என்பதிலும் அவ்வளவு குழப்பம். க்ளோஸ் அப் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் எது உரையாடல் எது மனக்குரல் என கண்டுபிடிப்பது கஷ்டம். முக்கிய வசனத்தை (எல்லோருமே கொஞ்சம் முக்கி முக்கி தான் பேசுறாங்க) கூட "ஏதோ மனசுல நினைச்சுகிட்டாங்க போல" என தவறாக புரிந்து கொள்ளும் அபாயம் உண்டு. நடிகர்களின் வாயையே பார்க்க வேண்டியது அவசியம். அனுஷாவிற்கு கூட கௌதம் மேனோனே டப்பிங் கொடுத்துட்டரோ என்ற சந்தேகம் எனக்கு மட்டும் தானா? எல்லோருமே அவரைப் போல பல்லைக் கடித்துக் கொண்டு வாயின் கொஞ்ச இடைவெளியில் தான் பேசுகிறார்கள். படம் முழுதும் ஏதோ ஒரு பாத்திரம் மாறி மாறி தன் குரலில் கதையை நர்ரேட் செய்துக்கொண்டே இருக்கிறது. படம் முடிந்ததும் வேறு வழியில்லாததால் கௌதமே நர்ரேட் செய்து "இப்போது படம் முடிந்தது" என்கிறார்.

கொடுத்த காசுக்கு துவம்சம் செய்திருப்பது ஹாரிஸ் மட்டுமே. தனித்தனியாக ஒவ்வொருத்தர் காதுக்குள்ளும் வந்து வாசி வாசியென்று ....சிக்கிறார். அடிக்கும் அடியில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கலெல்லாம் "என்னை எழுப்பினால்" என எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

Friday, April 4, 2014

‪‎மான்கராத்தே‬


ட்ரெயிலர் பார்த்து யூகித்த கதை அப்படியே மார்ஜின் மிகாமல் எழுதப்பட்டு படமாகியிருக்கிறது. அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க்க வேண்டும் என்பதாலோ கதை என முருகதாஸ் பெயர் வைத்து டைட்டில் போட்டதாலோ முதல் பத்து நிமிடமும் கிளைமாக்ஸ் சண்டைக்கு  முன்னதான பத்து நிமிடமும் ஆச்சர்ய அட்ராசிட்டி!

ஓபனிங் சாங், முட்டிகால் டான்ஸ் என சிவகார்த்தி ஒரு "காமெடி" விஜய் ஆக ஏக வாய்ப்பு. (பத்ரியும் ஒரு காமெடி படம் தானே? #டவுட்) அனால் இன்னொரு சந்தானம் ஆகாமல் இருந்தால் சரி. உண்மையில் ஒருசில ஒன் லைன்கள் தவிர சிவா வராத திருக்குறள் இன்டர்வியூ காட்சிதான் அதகளம்.

காதலிக்காக உயிரையே விட துணிந்தாலும் உயிரை விடவே முடியாத சிவா, படிக்காத பொறுப்பில்லாத தறுதலை பிள்ளையானாலும் நல்ல பிள்ளை! "எனக்கெல்லாம் இந்த  
மாதிரி
பொண்ணு கிடைக்குமா"னு சீரியஸாவே வில்லனிடம் புலம்பும் அளவுக்கு வெள்ளை சாயம் பொம்மை ஹன்சிகா. அப்புறம் மூணு பாட்டு ஒரு இடைவேளை ரெண்டு பாட்டு ஒரு சண்டை!

இதில் வித்தியாசம் என்னவென்றால் நண்பர்களுக்காக ஒரு ஹீரோ தயாராகிறான். உண்மையில் குத்துச் சண்டை வீரனாகி வெல்வதெல்லாமே அந்த கும்பளுக்காகதான். நண்பர்கள் நண்பர்களாவதே ஹீரோ ஹீரோ ஆன பிறகுதான் என்பது உட்கதை. (வெள்ளித்திரையில் கண்டபின் இதை படிக்கோணும்)


அநியாயத்திற்க்கு கேட்ட பார்த்த பழகிய காட்சிகள் வசனங்கள். லிப்ட் திறந்தால் ஹன்சிகா நிற்பதும் வம்சி வீட்டு காலிங்க்பெல் அடிப்பது சிவா என்றும் ரைட்டர் இங்க் நிரப்பும் முன்னரே இங்க தெரிந்த விஷயம். வலிய வலிய வட்டி கட்டியாவது வம்சி வில்லனாகிறார். சதீஷ் மட்டும் சிரிக்க வைப்பதோடு இயல்பாகவும் தோன்றுகிறார். சூரி வரும் காட்சிகளில் அவர் இதற்கு முன்னால் நடித்த படங்களை நினைத்து சிரித்து வைக்கிறோம். ரம்மியமான லைட்டிங் கலர்புல் லேஅவுட் என காமிரா தான் புள்ளிமான். பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்க பின்னணியில் தன்னால் இயன்ற அளவுக்கு பெஃப் ஏற்றுகிறது இசை.

பின்பாதியில் நிலைகுலையுமளவு சும்மா குத்து குத்தென்று குத்தி எடுக்கிறார்கள். அவசரகதியில் அவசியமே இல்லாமல் ஒரு டாஸ்மாக் பாட்டு. அணிருதும் முருகதாசும் வேறு காட்சி கொடுத்து சிறப்பு சேர்க்க... மிடில..! குறைந்தபட்சம் மான் கராத்தே என்றால் என்னவென்றாவது கோச் சொல்லுவாரென்று பார்த்தல் அதை வேடிக்கை பார்க்கும் யாரோ சொல்லி தொலைக்கிறார். இசை விமர்சகர் ஷாஜி முழு நேர நடிகர் ஆகிவிட்டாரா என்ன! மான் கராத்தேவெல்லாம் ஹீரோ இமேஜ்க்கு ஒத்து வராது என்பதால் அது டைட்டிலில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

எதைப்பற்றியும் யோசிக்காமல் சிவகார்த்தியை நம்பி படம் எடுக்கும் அளவிற்கு மார்க்கெட் உயர்ந்திருப்பது சந்தோஷம். 600 திரையரங்குகள் திரையிடும். டிவிக்களில் கூவி கூவி விற்க குடும்ப சகிதம் பார்த்து சிரிக்க, அடுத்த வாரம் இதன் வெற்றி விழா கொண்டாடப்படும்.

Saturday, January 14, 2012

நண்பன்

ஹிந்தியின் ஹிட்டை சரி தவறுகளோடு அச்சு பிசகாமல் தமிழுக்கு தாரை வார்த்து தப்பித்துக் கொண்டார் ஷங்கர்.
அங்கங்கே தனக்கே உரிய டச்சுடன். (Duplicate சாவி உண்மை தெரிய வரும் காட்சியில் சத்யராஜ் இரண்டு ரிமோட்டுடன் இரண்டு டிவி பார்ப்பது). தமிழ் வசனத்தில் extra மெருகு. அமீரின் எனர்ஜி மிஸ்ஸிங் என்றாலும் விஜய் இயல்பாகவே பொருந்துகிறார். சத்யனும் சத்தியராஜும் toppers.Dolly ஷாட்டை தாறு மாறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் . Why this Dolly வெறி? All is "again" well. - Jan 13, 2012

Sunday, November 27, 2011

மயக்கம் என்ன



சரியும் தவறும் பொருள் மயக்கம் கொள்ளும் செல்வாவின் கதைகளில். வெளிநாட்டு டிவிடியோ கற்பனையோ சிரத்தையாய் சுரண்டாமல் சுற்றி நிகழும், பொதுவில் கவனம் பெறாத சின்ன சுவாரசியங்களையே களமாக்குவது மீண்டும் கைகூடியிருக்கிறது.

நட்பு மருவி காதல் மயக்கமும் கனவு, நம்பிக்கை தோற்று வெறுமையின் போதை மயக்கமும் உணர்ச்சி பிழம்பான அவனுக்கும் திடமான அவளுக்குமான வாழ்க்கையில் தோற்றுவிக்கும் சம்பவங்கள் நிதானமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆரவாரமும் அமைதியும் விதவிதமான வண்ணங்களில் சுகம் இழையோடும் இசை பின்ணணியில் அழுத்தமாக அழகாக பதிகிறது. வித்தியாசமான கருக்களின் கதவுகளை திரையில் திறக்க பயன்படுவதற்க்காகவே தனுஷிற்க்கும் அவர் தோற்றத்திற்க்கும் நன்றிகள். தேவையற்ற “உம்”மென்றிருந்தாலும் கதறும் கண்களிலாலேயே கவனத்தை கடத்திச் செல்கிறார் ரிச்சா. 

தெளிவில்லாத யாமினியின் கதாபாத்திர பின்ணணி, மிக நீண்ட அமைதியான காட்சிகள், ”இது இயல்பான படமாக்கும்” என்பதற்க்காகவே வலிந்து திணிக்கப்பட்ட தேவையற்ற வசனங்கள் என பொறுமை சோதிக்கும் குணங்களையும் மீறி கதாபாத்திரங்களின் உளவியல் அடிப்படையிலேயே காட்சிகளை பிண்ணி அதிர்வுகளையும் அழகாக்கியிருக்கிறார் - வெல்கம் பேக் செல்வா. - Nov 26, 2011

Friday, September 2, 2011

மங்காத்தா




நாளுக்கு நாள் வெங்கட் பிரபுவின் ஹ்யூமர் சென்ஸ் அதிகமாகிக் கொண்டே போகிறது. நாலஞ்சு பேரை வெச்சு திரையில் காமெடி செய்துக்கொண்டிருந்தவர் இம்முறை படம் பார்க்க வந்தவர்களையே வெச்சு முயற்ச்சித்திருக்கிறார். இதற்க்கு அர்ஜுனும் அஜீத்தும் உடந்தை! 
500 கோடி கொள்ளையடிக்க அரை வேக்காடுகளை பணயம் வைத்து உள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் இருவர் ஆடும் மங்காத்தா. ரொம்ப தெளிவான, இயல்பான screen presence, உடம்பையும் வயதையும் மறைக்காத தைரியம் - அஜீத் மட்டுமே பாஸ்! 
கொத்து புரோட்டா திரைக்கதையை கையாண்டதிலும், 4 அழகான நடிகைகளை சேர்த்துக் கொண்ட புத்திசாலித்தனம் “இவனுங்க என்ன சொன்னாலும் கேட்பானுங்க” என்ற over confidence இல் தொலைந்து போனது! முழுசா உள்ளேயும் இல்லை சுத்தமா வெளியேயும் இல்லை! - Sep 1, 2011

Monday, August 22, 2011

நான் மகான் அல்ல

ஆத்திர அவசரத்திற்க்கு ரவுடிகளாகும் நான்கு கல்லூரி மாணவர்களை படத்தின் பிரதான வில்லன்களாக்கிய திரைக்கதையினால் சுசீந்திரனுக்கு இது 2nd ஹிட். வழக்கமான காட்சிகளில் கூட பழக்கமில்லாத வசனங்கள் படத்திற்க்கு “சக்தி”.சிரமம் இல்லாமல் பின்னனியில் யுவன். முதல் பாதி காதலும், பின்பாதி சண்டைகளும் தனித்தனியே அழகு. ஆனால், தலைகளும் கொலைகளும் விழும் படங்கள் ‘வெண்ணிலா...’ இயக்குனரிடமிருந்து வருவது ஏமாற்றம். நான் மகான் அல்ல - “பொல்லாதவன்” - August 21, 2010

Tuesday, August 9, 2011

வெப்பம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கினாலும் தயாரிச்சாலும் படங்கள்லாம் இப்படித்தான் இருக்குமா, சட்னி தொட்டு பீட்ஸா சாப்பிடறமாதிரி! - Aug 8, 2011

Sunday, July 17, 2011

தெய்வத்திருமகள்

எதிர்பார்த்தபடியே எதிர்பார்த்தபடி அமைந்திருந்தது அத்தனையும் - விக்ரமின் தேசிய விருது நடிப்பு, நெகிழ்ச்சியூட்டும் தந்தை மகள் பாசம், ரசனைமிக்க குழந்தை குறும்பு, அனுஷ்காவும் அமலா பாவுலும் - இவையெல்லாமே படம் பார்க்கும் முன்னரே அறியமுடிந்தது. ப.பா.பி. - நீரவ் ஷா வின் அடர்த்திவண்ண காட்சிகள், விக்ரமை மிஞ்சும் சிறுமி சாராவின் பாவனைகள், விஜய்யின் புத்திசாலித்தனமான வசனம். இருந்தும், முன்பாதி அழகியலை வெரும் நாயகன் நாயகி வில்லன் என்றமைப்பில் அழுந்தி ஆறப்போடும் பின்பாதி, நீதிமன்ற காட்சிகளும் நீண்ட நட்சத்திர ஹோட்டலில் தேடல்களும் சுவை குறைந்து அயற்ச்சி, கதையையே நியாயப்படுத்தாமல் அந்நியப்படுத்தும் முடிவு. I am ”தெய்வத்திருமகள்” - July 16, 2011

Saturday, June 18, 2011

அவன் இவன்


வாழ்ந்து கெட்ட ஜமீனும் களவாடி கெடுக்கும் ஒரு குடும்பமும் வீதி விதி எதையும் பாராமல் எதன் மீதும் எகிறிகுதிக்கும் அவர்கள் வாழ்க்கையும் விளையாட்டாகவே சொல்லப்பட்டிருக்கிறது, முக்கால் வாசி. 
எஸ்.ரா எழுதி எழுதி கொடுக்க விஷாலும் ஆர்யாவும் பேசி பேசியே தள்ளியிருக்கிறார்கள். 

முதல் பாதி முழுதும் சரளமான வார்த்தைகளும் தெனாவட்டு உடல் மொழியும் எவ்வளவு ரசித்தாலும் காட்சிகளின் நீளம் சோர்வு கொள்ளவே வைக்கிறது. பாலா படங்களில் இதுவரை இது நிகழ்ந்ததில்லை. ஆர்யாவுக்கும் விஷாலுக்கும் இது நிச்சயம் “பாலா” பாடம். குட்டிகரணம் அடித்தாவது இப்படத்தில் இடம்பெருகிறார்கள் நாயகர்களுக்கான நாயகிகள். எம்.வி.குமார் அசாத்தியம். இன்ஸ்பெக்டரும் குண்டு பையனும் இன்னொரு அவன் - இவன் கள்.

  பின்பாதியில் மாறுபடவேண்டிய - இரு திசையாயினும் ஒரெ பாதையென - குணங்களின் அழுத்ததிற்க்காக முதல் பாதி முழுதும் இலகுவாகவே சொல்லப்பட்டிருப்பது புரிந்தாலும் போலீஸ் உட்பட அத்தனை பாத்திரங்களையும் வெரும் கேளியாகவே கையாண்டிருப்பது அநியாயம். காணாமல் போகும் கோடி மதிப்புள்ள வண்டியை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. சிரிக்க வைக்கும் முயற்சியிலும் முழு வெற்றியில்லை.
  அவசரத்தில் அள்ளி தெளித்திருந்தாலும் இது பாலாவின் கோலம் என பின்பாதியில் அழுந்த பதிகிறது. செந்நிற மழையில் பின்னிரவு காட்சிகளும் அதை தொடரும் சானம் கரையும் மண் தரையில் மழை கலந்தோடும் உக்கிரமும் உள்ளபடியே சொல்ல பாலாவால் மட்டுமே சாத்தியப்படும்.

  தோள் உரசி தொடை தட்டி “அதாவது என்ன ஆச்சுனா...” என கதை சொல்லுவதில் - அது எவ்வளவு சோடையாயினும் - பாலாவிற்க்கு நிகர் அவரே! - June 17, 2011

Saturday, April 23, 2011

கோ

 கொஞ்சம் தாமதமாக (திட்டமிட்டோ???) சமீபத்திய தலைப்புச் செய்திகளை போட்டு பொறித்தெடுத்த பொலிடிகல் பொடிமாஸ்! திகீர் climax திருப்பத்திற்க்காக தான் விதைத்த நம்பிக்கையை திரைக்கதையே புண்ணாக்கினாலும் கொஞ்சம் நீருற்றி விடை பெறுவதால் சுவைக்கும் இந்த சத்தான மசாலா. K.V.ஆனந்த் - சுபா கூட்டணியில் மீண்டுமொரு நல்ல entertainer. Once கோ! - Apr 22, 2011

Tuesday, March 29, 2011

கடவுள் வர்றார்...


ஹாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் கடவுளர்கள் தோன்றி “will" உண்டு வினையில்லை என்று உணர்த்த காதலர்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். (”The Adjustment Bureau" - Bureauவில் ஒரு பெண் கூட இல்லாதது தேவலோக துரோகம், ”சீடன்”). எனர்ஜி வசனங்களை தவிர முந்தையதில் கொஞ்சம் விருவிருப்பும் பிந்தையதில் பாச பருப்பும். சக மனிதன் நமக்கு கடவுளானால் நாமும் யாருக்கோ கடவுளாவோமோ? நாம ஒன்னும் அவ்ளோ நல்லவனில்லையே...! - Mar 28, 2011

Monday, February 7, 2011

யுத்தம் செய்

தமிழில் இதுவரை வந்த “crime, murder mystery" வகையறா படங்களில் இதுவே சிறந்தது என்று தோன்றுகிறது! நாடகத்தனம், மிகையுணற்ச்சி, குத்துப்பாட்டு என நெருடல்கள் இதிலும் உண்டு. ஆயினும், சுருள் வளை கதைக்குள் மைய நேர்கோடாய் திரைக்கதை, குருவை நினைவுருத்தும் P.C. மாணவனின் camera, சத்தம் கூடுதலாயினும் இளமை பின்ணனி என ஒரு crime கதையை “வேட்டையாடி விளையாடு”வதெப்படி என அறிவுருத்தும் சத்தான தமிழ் சினிமா! - Feb 6, 2011

Saturday, December 25, 2010

மன்மதன் அம்பு

உல்லாச பயணமா ஊர் சேரும் பயணமா என்றே தெரியாது போன்றதொரு குழப்பத் திரைக்கதை; எல்லோரும் கமல் போலவே பேச, தளும்பும் வசனம்; LiveRecording ஈடு கொடுக்க கழுத்தை நெரிக்கும் close ups-தொண்டை கிழியும் நாடகத்தனம்; ஒன்றிரண்டு கிச்சு கிச்சுக்களை தவிர மற்றவை ’crazy’இல்லாது போன சக்கை! சற்றே அழுத்தமான மென் சோகமும் அர்த்தமேயில்லாத காமெடியும் ஒன்றிணையவேயில்லை-“உலக நாயகன்” கமலும் இயல்புவாத சினிமாவும் போல-மன் மதன் ‘கொ’ம்பு! -Dec 24, 2010