Friday, February 14, 2020

வானம் கொட்டட்டும்





கடந்த சில வருடங்களாகவே, குறிப்பாக முகநூலிலிருந்து வெளியேறிய பிறகு திரைப்பட விமர்சனங்கள் எழுதுவதை தவிர்த்து வந்தேன். திருவனந்தபுர திரைவிழாவில் பார்த்த மிகச் சிறந்த கலைப்படங்களைப் பற்றியாவது எழுத வேண்டும் என்று நினைத்து அதுவும் டிவிட்டரோடு நின்றுவிட்டது. புனரமைக்கப்பட்ட இத்தளத்தில் இனி குறிப்புகளாகவாவது எழுத வேண்டுமென்று விழைகிறேன்.


நண்பர் தனா இயக்கிய முதல் திரைப்படமான "படைவீரன்" வெளியான அன்று முதல் காட்சியை நண்பர்கள் படை சூழ சென்று பார்த்தோம். காட்சியமைப்புகளின் தெளிவிலும் வண்ணங்களின் குழைவிலும் தானொரு மணி ரத்னத்தின் மாணவன் என்பதை பதிவு செய்திருந்தார்.  ஆனால் கதாப்பாத்திர தேர்வில் தொடங்கி திரைக்கதையாக்கம் வரை செறிவற்று அமைத்ததில் ஒரு இயக்குனராக தோல்வியடைந்திருந்தார். முதற்படம் உருவாக்குவதில் இருக்கும் அழுத்தங்களையும் மீறி பாறையிடுக்கில் பீறிடும் அருவியைப் போல சிறந்த இயக்குனர்கள் எப்படியாவது தங்களை வெளிக்கொண்டு வந்துவிடுவார்கள். அப்படியானதொரு கவனத்தை  தன்னுடைய  இரண்டாவது படத்தில்தான் உருவாக்கியிருக்கிறார் தனா.

இப்படம் ஒருவகையில் முக்கியமானது என்பதை ஒரு சில புள்ளிகளில் தொகுத்துக் கொள்ளலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஜெயமோகன் அவர் தளத்தில் முன் வைத்திருந்த குறிப்புகளை ஒட்டிதான் என்னுடைய எண்ணங்களும் அமைகிறது.

முதலில், படைவீரனில் முதன்மையான சறுக்கலை எங்கு சந்தித்திருந்தாரோ அங்குதான் தனா இதில் பலமாக எழுந்து நின்றிருக்கிறார். பாத்திரங்கள் வடிவமைப்பிலும் அதற்கான நடிகர்களின் தேர்வுமே இப்படத்தின் முதல் சிறப்பு. ராதிகாவும் ஐஸ்வர்யா ராஜேஷும் விக்ரம் பிரபுவிற்குமே கூட அவர்களின் உருவுக்கு ஏற்றபடி கதைப் பாத்திரம் உருகொண்டெழுவதைப் போல ஒரு தோற்றம் உருவாவது ஆச்சர்யமே. தன்னந்தனியனான ஒரு வயதான அண்ணனை பாலாஜி சக்திவேல் தன் எடை தாங்கிய நடையிலேயே அன்பு செய்ய வைக்கிறார். சரத்குமார்-ராதிகா ஒரு சாமர்த்தியமான தேர்வு, வசதியானதும் கூட. அவர்களிடையேயான அன்னியோன்யத்தை நிரூபிக்க ஒரு காட்சி கூட வீணாக்கத் தேவை ஏற்படவில்லை இயக்குனருக்கு. சிறை மீண்டு வந்த பிறகு சரத்குமாருக்கு சாதகமாக தன் பிள்ளைகளை எதிர்த்து ராதிகா நிற்பது நியாயமாகவே தோன்றியது, எந்தக் காரணமும் கூறப்படமாலேயே. சாந்தனு, ரெட்டி, ரெட்டியின் மகன் என அவர்களின் தோற்றமே அவர்களுக்கான கதைகளை எழுதிக் கொள்கிறது. இதனால், இத்தனை நடிகர்கள் குழுமியிருக்கும் இக்கதையில் எல்லோருக்குமான கதாப்பாத்திர வளர்ச்சியைப் பற்றி கவலைப்பட அவசியமில்லாமல் போகிறது. மையப் பாத்திரங்களின் உருமாறும் உறவுகளின் தன்மைகளே தனித்துவமாக மேலெழுந்து வருகிறது. அதுவே இப்படத்தின் ஆகப்பெரிய சிறப்பம்சமாக எனக்கு தோன்றுகிறது.

கோட்டுரு படங்களில் மைய கோட்டை தொட்டு தொட்டு விலகிச் செல்லும் ஒலி அலைகளைப் போல இக்கதையின் மைய உறவுகள் பட்டும் படாமலும் தங்களை அமைத்துக் கொள்கின்றன. நகரத்திற்கும் கிராமத்திற்குமான வேறுபாட்டை இந்த விலகல் அடிக்கோடிடுகிறது. அண்ணனை அரிவாளால் தாக்கிய இருவரை கொன்றேவிடுகிறான் தம்பி போஸ். சிறையிலிருக்கும் போஸை பழி தீர்ப்பதற்காக 16 வருடங்கள் காத்திருக்கிறார்கள் இறந்தவனின் மகன்கள். இப்படி உறவுக்காக உயிரையும் வாழ்க்கையையும் தொலைக்கும் கிராம வாழ்க்கையிலிருந்து தன் குழந்தைகளோடு    வெளியேறும் சந்திரா எந்த உறவுகளையும் மீண்டும் நாடிப் போவதில்லை. உண்மையில் சந்திராவின் குடும்பத்தினரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. செல்வாவிற்கும் மங்கைக்கும் இடையிலான அண்ணண் தங்கை உறவு கூட விளையாட்டாகவேதான் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் பலமாக துணை நிற்கிறார்கள் என்றாலும் வெகு இயல்பாக வாழ்வின் வேக ஓட்டத்திற்கு ஊடாக அவர்களின் உறவு அடுத்த கட்டங்களுக்கு துள்ளிச் செல்கிறது.

மங்கை, கல்யாண் ரெட்டி, ராமன் இவர்களுக்கிடையிலான உறவு தமிழ் சினிமாவிற்கு புதுமையான ஒன்று. இன்ன மாதிரி என்று எந்த வரையறையும் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் முடியும் சாத்தியத்தோடே முன்னகர்கிறது. ஒரு காட்சி இதை மிகச் சிறப்பாக பதிவு செய்கிறது. கல்யாண் ரெட்டியுடன் மங்கை பேருந்தில் சென்றுக்கொண்டிருப்பதை அண்ணன் செல்வா பார்த்து துரத்துகையில், மங்கை அவனிடமிருந்து தப்பித்து தெருக்களின் வழி ஓடி ஏதேச்சையாக பைக்கில் அங்கு வரும் ராமனுடன் தொற்றிக் கொண்டு தப்பி விடுகிறாள். கல்யாணிற்கும் ராமனுக்கும் இடையிலான மங்கையின் ஓட்டத்தில் இடையே அண்ணன். ஆனால் அந்த சிறிய துரத்தலை மீறி செல்வா எந்த விதத்திலும் மங்கையின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. மங்கையுமே ஏன் ராமன் இன்னும் தன்னிடம் காதலை சொல்லவில்லையென்றோ கல்யாண் ரெட்டி ஏன் தன்னிடம் சொல்லாமல் தன்னை பெண் பார்க்க வந்து நிற்கிறான் என்றோ எந்தக் கேள்வியும் கேட்டுக் கொள்வதில்லை. அதன் போக்கில் வாழ்வின் மீது காலாற நடக்கிறார்கள். இப்படியான ஒரு உறவுதான் ப்ரீதாவிற்கும் செல்வாவிற்கும் இடையிலும். செல்வா தன் தொழிலில் தன்னுடைய வெற்றியை போஸிற்கு காட்டும் காரணியாகவே ப்ரிதாவின் பாத்திரம் அமைந்திருந்தாலும் இவர்கள் எவர் இடையிலும் சிடுக்குகள் இல்லாமல் இருப்பதற்கு உறவின் அழுத்தங்கள் அற்று இருப்பதே காரணமாக அமைகிறது.

தன் மகன்களுக்காக ஊரைவிட்டு வெளியேறியதாலேயே தாய் பாசத்தை  இரண்டு பாடல்களிலாவது சித் தன் அடித் தொண்டையிலிருந்து பிழிவதற்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தும் அது தவிர்க்கப்பட்டிருப்பது உயிர் வதையிலிருந்து விடுதலையாவதற்கு ஒப்பானது. மாறாக சந்திரா தன் கணவன் திரும்பிய பிறகான ஒரு சந்தர்ப்பத்தில் "எனக்கென நீ என்ன செய்தாய்?" என்று தன் மகனைப் பார்த்து கேள்வி கேட்கும் ஒருவராகத்தான் இருக்கிறார். விடுதலையான தன் கணவனின் மீது அன்பையும் பொறுப்புகளையும் அள்ளிக் கொடுக்கும் சந்திரா அவர் சிறையிலிருந்தபோது சென்று சந்தித்தது சொற்ப சந்தர்பங்களில் மட்டுமே. இப்படி மைய உறவுகள் அத்தனையும் நகரம் தந்த விடுதலையின் மீதேறி, வாழ்வை புதிய கலங்களில் இனி சமைக்க வேண்டிய தேவையின் காரணம் கொண்டு தங்களுக்குள் பின்னிப் பிணையாமல் இலகுவாகவே தொட்டுச் செல்கிறது. இது தமிழ் சினிமாவின் நவீன யதார்த்த பின்னணியில் அமையும் பெரும் முன்நகர்வு. படத்தின் முதல் காட்சியிலேயே இயக்குனர், விலங்கு மனிதன் உறவுகள் வன்முறை ஒன்றுக்கொன்று முயங்கி கிடக்கும் கிராமத்தை சொல்லிவிடுகிறார். மிச்ச படம் இதன் எதிர்வினையே. விளையாட்டாக இதையும் சொல்லலாம்: இப்படத்தின் பாடல் வரிகளும் இசையை தொட்டும் தொடாமலேயேதான் கடக்கிறது!

மிகவும் சன்னமாக சாதி மத அழுத்தங்களிலிருந்து நகரம் தரும் விடுதலையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சந்திரா வாழும் தெரு ஒரு முஸ்லீம் தெரு. அவருக்கு வேலை கொடுத்து உதவுவது ஒரு முஸ்லீம். செல்வாமீது காதல் கொள்ளும் ப்ரீத்தா ஒரு கிறித்துவர். சாதியும் குடும்பப் பகைகளும் உயிர் பலி கேட்கும் ஒரு சூழலிலிருந்து அவர்கள் வந்து சேர்ந்து வளரும் இடம் மிக முக்கியமானது. அது அதிக சத்தமின்றி சொல்லப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த மைய கருவை சொல்லும் முயற்சியில்தான் தன் முதல் படத்தில் தோல்வி கண்டிருந்தார் தனா. அந்த வகையில் இத்திரைப்படம் அவரின் கவனம் கொள்ளத்தக்க பாய்ச்சல்தான்.



வானம் கொட்டட்டும் ஒரு சிறந்த படமாக அமையாமல் ஒரு நல்ல படமாக நின்று விட்டதிற்கு முதன்மையாக மூன்று காரணங்களை கூற முடியும். இது ஒரு வெகுஜன சினிமாதான் என்றே எடுத்துக் கொண்டாலும் சமரசங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை கருத்தில் கொண்டாலும் இப்படத்தின் முடிச்சுவுகள் அவிழும் இடங்கள் அது பிண்ணப்பட்ட தரத்தில் இருந்து வெகுவாக கீழிறங்கியிருக்கிறது. உதாரணமாக மங்கையின் இன்னவென்று சொல்ல முடியாத ஒரு முக்கோண உறவை முடிக்க எண்ணி மிகவும் பழக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து முடித்திருப்பது. "இராமன் தன் காதலை இன்னும் சொல்லவில்லையே" என்ற இடத்திலேயே மங்கையின் சாய்வு எவர் மீது என்பது புலனாகிவிட்டபோது, அந்தக் கதை இப்படி வசதியாக முடிய வேண்டிய அவசியமில்லை. ராமனுக்கு தன் காதலை சொல்லும் தைரியத்தை வரவழைக்கும் ஒரு சூழல் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. ராமனுக்கு நேர்மாறாக  வெளிப்படையாகப் பேசும் கல்யாண் இப்படி மங்கையிடம் சொல்லாமல் தன் பெற்றோரை அழைத்து வருவானா? இந்த முக்கோண உறவு இப்படத்தில் முடிவுறாமல் இருந்திருந்தாலும் இன்னமும் அழகானதாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். ப்ரீதாவிற்கும் செல்வாவிற்கும் முத்தத்தில் தொடங்கும் காதலும் இப்படித்தான். அவர்களுக்கென ஒரு டூயட் கூட படத்தில் இல்லாதபோது இரண்டரை மணி நேரத்தில் அவர்கள் காதலர்களாக மாற வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்கு இன்னமும் நேரம் இருக்கிறது. சிறையிலிருந்து திரும்பி வந்த போஸ் உதவ எண்ணி செய்யும் காரியங்கள் விபரீதத்தில் முடிவது இக்கதையின் புதுமையான ஒரு கோணம். ஏற்கனவே விலகி நிற்கும் பிள்ளைகளுக்கு நியாயம் சேர்ப்பவை. கணவன் என்பதால் சந்திராவும் தம்பி என்பதால் வேல்சாமியும் அவர் பக்கம் நிற்கலாம், அந்த அவசியம் அவர் வாசமின்றி வளர்ந்த பிள்ளைகளுக்கு இல்லை. ஆனால், "கோல்டன் ப்ரூட்ஸ்" லாபகரமாக மாறுவதும் கல்யாணிடம் சத்தம் போட்டதாலேயே அவன் பெற்றோர்களை அழைத்து வருவதும் ஒரு வெகுஜன சினிமாவாக, அதுவும் "எல்லோருக்கும் பிடிக்கும்" சினிமாவாக மாற வேண்டிய அவசரத்தில் செய்யப்பட்டவையாகவே இருக்கிறது.

இரண்டாவதாக திரைக்கதை ஒரு சிறுகதைக்கு ஒப்பானது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதன் பயணம், நோக்கம் தெளிந்துவிட வேண்டும். ஓட்டத்தினுடாக இதில் ஏற்படும் அலைபாய்தல்கள் படத்திலிருந்து கவனத்தை சிதறடிக்கவே செய்யும். வன்முறைக்கு எதிராக தொடங்கும் இப்படம் அதை அழுந்தப் பதிய தவறவிடுகிறது. விடுதலையான போஸ் சிறை வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாக இல்லை. மீசையை முறுக்கி புல்லட்டில் சென்று காதல் பஞ்சாயத்து செய்யவே விரும்புகிறார். அப்பாத்திரம் அப்படிதான் அமையும் என்றே கொண்டாலும் இறுதி வசனத்தில் ஒரு கொலை செய்ததின் மூலம் சிறையில் தன் வாழ்க்கை அழிந்ததே என்று வருத்தப்படுகிறார் அன்றி வன்முறையையும் வன்முறையின் மீதான தன் இனத்தின் பற்றையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. வேல்சாமியும் கூட "நம்ம ஊர் போலீஸா இருந்தா ஈஸியா வெளியே கொண்டு வந்து விடுவேன்" என்ற ரீதியிலேயே பேசுகிறார். இதே வசதி பாஸ்கரனுக்கு கிடைக்குமென்றால் அவனும் போஸை கொலை செய்து விட்டு வெளியில் வந்துவிடலாமா? பாஸ்கரன் இப்படத்தின் மிக முக்கியமான பாத்திரம். முதல் காட்சியில் இரத்தம் தெறிக்கும் முகத்துடன் அறிமுகம் ஆகும் இவனை நோக்கித்தான் இடைவேளை காட்சி உறைகிறது. ஆனால் கதையோட்டத்தில் அவனுக்கான இடம் கொடுக்கப்படவில்லை. அவனின் நியாயத்தின் ஒரு துளி குருதி கூட படத்தின் இறுதியில் நம் மீது தெறிக்கவில்லை. அவன் நியாயம் தோற்கும் இடம் அல்லவா அது. போஸின் ஒரு வரி அவன் பித்து பிடித்து திரிந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்து விடுமா? கதைக்குள் சரியான வளர்ச்சியற்ற ஒரு எதிர் பாத்திரம் படத்தின் சமன் குலையச் செய்யும். பார்வையாளர்களை வெளியே தள்ளும்.

மூன்றாவதாக, இப்படத்தின் தொழில் நுட்ப அம்சங்கள் மெட்றாஸ் டாக்கீஸ் தரத்தில் இருந்தாலும் சித் ஸ்ரீராமின் பின்னணி இசை பெரும் சோர்வையே கொடுத்தது. மணி ரத்னத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பான 'பாடல்களை பிச்சு பிச்சு போடும்" உத்தி நன்றாக கை கொடுத்தாலும் பின்னணி இசை அவரின் முதிரா அனுபவத்தையே உணர்த்தியது. பின்னணி இசையின்றி படங்கள் பார்த்து பழகிவிட்ட என் போன்றோருக்கு பெரும் சித்திரவதையாகவே இருந்தது. (விகடன் பாணியில் 'சித்'திரவதை என்று போட்டிருக்க வேண்டுமோ) உதாரணமாக ஒரு காட்சி மட்டும். தந்தையை இழந்து ப்ரீத்தா தனிமையில் அமர்ந்திருக்கிறாள். வாழ்வின் பெருந்துணையை இழந்திருக்கும் அவளிடத்தில் செல்வா நெருங்கிச் செல்கிறான். பார்வையாளனுக்கு ஒரு சின்ன ஆர்வத்தை அந்த அமைதி கொடுக்கிறது. அவர்கள் உறவு அடுத்த கட்டத்தை அடையப் போகும் இடம் அது. ஆனால் ஒரு சொல் அங்கு உதிர்க்கப்படும் முன்னரே பின்னணி இசை எழுகிறது. அதுவும் படம் முழுதும் பல்வேறு இடங்களில் இசைக்கப்பட்ட அதே இசை. இது என்ன மாதிரியான காட்சி என்பது அந்த நொடியே புரியவைக்கப்படுகிறது. தன்னுணர்வின்றியே பார்வையாளனுக்கு பெரும் அயர்ச்சியை இது கொடுத்து விடுகிறது. பிறகு அவன் செய்ய வேண்டியதெல்லாம் அக்காட்சி முடியும் வரை காத்திருப்பதுதான், திரையில் நடப்பவற்றிற்கு எந்த ஒட்டுதலும் இல்லாமல். இப்படி பல காட்சிகளை ஒரு படி கீழே இழுத்துக் கொண்டேயிருக்கிறது பின்னணி இசை. சித் ஸ்ரீராமின் ஓசைகள் புதிதாக இருப்பது உண்மையென்றாலும் இப்படத்திற்கு அது உதவவில்லை. துண்டு பாடல்களாக வருவன சிறப்பாகவே இருப்பதும் உண்மைதான்.

வெகுஜன சினிமாவில் யதார்த்தப் படங்கள் தோன்றுவது மிகவும் முக்கியம். அப்படியொரு சூழல் அநேகமாக தமிழில் இல்லாமலே இருந்தது. மலையாளத்தில் மாஸ் படங்கள் வரும் அதே நேரத்தில் ஈ.மா. யோ. வரும். ஆனால் அநேகம் பேரை சென்றடைவது "கும்பளாங்கி நைட்ஸ்" போன்ற இடை நிலைப் படங்களே. தமிழில் அப்படியான இடை நிலைப்படங்களின் தொடக்கத்திற்கு வானம் கொட்டட்டும் படத்தின் வெற்றி அமையலாம்.  தனாவிற்கு வாழ்த்துக்கள்.


1 comment:

  1. விரிவான முதிர்ந்த நியாயமான விமர்சனம்.

    ReplyDelete