Sunday, August 21, 2022

சொல்முகம் - சு. வேணுகோபால் கருத்தரங்கு, ஒரு நிகழ்வுப் பதிவு

 




2019ம் ஆண்டு ஊட்டி காவிய முகாம் முடித்து மலை இறங்கிக் கொண்டிருந்தபோதுதான் கோவையில் ‘சொல்முகம்’ வாசகர் குழுமம் துவங்குவதற்கான முதல் எண்ணம் எழுந்தது. உலகெங்கிலும் தனித்து சிறு வாசகர் குழுக்களின் முன்னெடுப்பில் இயங்கிவரும் ‘புக் கிளப்’ வடிவத்தில் அது இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கான அவசியத்தை நம் காவிய முகாம் தெளிவாகச் சுட்டியது.  மாதம் ஒருமுறை ஒரு நாவலைத் தேர்ந்தெடுத்து அதன் மீது கூட்டு வாசிப்பைச் செலுத்தி, வாசிப்பு கோணங்களைப் பகிர்ந்து கொள்வதே இக்குழுமம் உருவானதின் அடிப்படை. வாசித்தவற்றைக் கூர்மையாகத் தொகுத்துக் கொள்ளவும், தொகுத்த எண்ணங்களைச் செறிவாக வெளிப்படுத்தவும் பழகும் விதமாக இக்கூடுகைகள் அமைய வேண்டும் என்பது எங்களின் கூடுதல் விழைவு.



தரையிறங்கி கோவையைத் தொட்ட நிமிடத்திலேயே ஒத்த மனமுடைய நண்பர்களைக் கூட்டு சேர்க்கத் துவங்கினோம். இந்த ஜூலை 2022ல் சொல்முகம் வாசகர் குழுமம் மூன்று வருடங்களை நிறைவு செய்து, நான்காம் ஆண்டிற்குள் நுழைந்தது. ஒரு அமைப்பு தொடர்ந்து தொய்வின்றி செயல்படுவதற்கு புதிய முன்னெடுப்புகள் அவசியமாகிறது. ‘சொல்முகம்’ தொடர்ந்து இயங்கும் என்ற உறுதியை அடைந்தவுடன், அடுத்த கட்டமாக வெண்முரசுக்கென ஒரு அமர்வைக் கூடுதலாக இணைத்துக்கொண்டோம். இதுவரை 19 வெண்முரசு கூடுகைகளை ஒருங்கிணைத்திருக்கிறோம்.

நான்காம் ஆண்டிற்குள் நுழையும் இத்தருணத்தில் வருடத்திற்கு இரண்டு கருத்தரங்குகளை இவ்வாசகர் குழுமம் நடத்த வேண்டும் என்ற முடிவைத் தன்னியல்பாகவே அடைந்தோம். ஒரு படைப்பாளியின் அத்தனை படைப்புகளையும் வாசித்து, அவர் முன்னிலையில் ஒரு சிற்றுரையை வழங்கிவிட முடியும் என்ற நம்பிக்கையை இம்மூன்று ஆண்டுகளில் இடைவிடாது நிகழ்ந்த கூடுகைகள் அளித்திருந்தன. ஆகஸ்ட் 7 அன்று எழுத்தாளர் சு. வேணுகோபால் அவர்களின் படைப்புகளை முன்வைத்து எங்கள் முதல் கருத்தரங்கத்தை நிகழ்த்தினோம்.

‘புக் கிளப்’கள் பெரும்பாலும் குழுமத்தின் ஏதாவது ஒரு நண்பரின் வீட்டில் நிகழும். முதன்மையாக, இலக்கியத்தை முன்வைத்து ஒரு நட்பு கூடலாகவே அது அமையும். அவ்வகையில் சொல்முகம் முதலில் முளைக்க வேண்டிய இடத்தை நம் நண்பர் வட்டத்திலேயே அது கண்டுகொண்டது. டைனமிக் நடராஜன் அவர்கள் தன் தொண்டாமுத்தூர் பண்ணை வீட்டில் எங்கள் கூடுகைகளை அமைக்க ஆர்வமுடன் முன்வந்தார்.

நகரத்தின் சலசலப்புகளிலிருந்து விலகி ஒரு பசுமையான சூழ்நிலையில் மாதமொருமுறை கூடினோம். காழ்ப்புகளும் கசப்புகளும் இருக்கக் கூடாது என்பது முதல் விதி. வேறெந்த அரட்டையுமின்றி தேர்ந்தெடுத்திருந்த நாவலைக் குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும் என்ற ஒழுக்கத்தையும் நேரக் கட்டுப்பாட்டையும் ஊட்டி காவிய முகாமின் வடிவத்திலிருந்து பெற்றுக்கொண்டோம். தமிழிலக்கிய முன்னோடிகள் பரிந்துரைத்த செவ்வியல் ஆக்கங்களை மட்டுமே எங்கள் வாசிப்பிற்குத் தேர்ந்துகொண்டோம். அதனால், இந்த நாவலை ஏன் வாசிக்க வேண்டும் என்ற அடிப்படையான விவாதத்தில் நேரம் செலவழிப்பது தவிர்க்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கான வாசிப்பு பட்டியலை முன்னரே தயாரித்து பகிர்ந்துவிடுவதால் புத்தகங்களை வாங்கவோ, இரவல் பெற்று வாசித்து முடிக்கவோ போதிய நேரம் வாய்க்கிறது. எண்ணிக்கை கூடினாலும் குறைந்தாலும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறு காலை அமர்வுகள் உறுதியாக நிகழும் என்ற நிலையை சொல்முகம் அடைந்திருக்கிறது.

விஷ்ணுபுரம் பதிப்பகம் அமைந்தவுடன் எங்கள் கூடுகைகள் இப்புதிய இடத்திற்கு இயல்பாகவே இடம்பெயர்ந்தது. புத்தகங்கள் சூழ அமர்ந்து இலக்கியம் பேசுவது அலாதியானது. போக்குவரத்து வசதி கூடிய இடம் இது என்பதால் புதிய வாசகர்கள் வரத் துவங்கினர். எழுத்தாளர் ஜெயமோகன் தன் தளத்தில் அறிவிப்பை வெளியிடும் ஒவ்வொரு முறையும் ஒரு புதியவராவது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களுடன் இணைந்து விடுகிறார். புது வாசகர்களுக்கும், இலக்கிய பேச்சுகளுக்குச் சற்றும் சாத்தியமில்லாத சூழலில் வாழும் வாசகர்களுக்கும் உற்ற தோழமையைக்  கண்டுகொள்ளும் விதமாக சொல்முகம் கூடுகைகள் இயங்கி வருகின்றன. மேலும், இவ்வாசகர் குழுமத்தின் பல நண்பர்கள் இன்று எழுத்தாளர்களாகவும் எழத் தொடங்கியிருக்கின்றனர்.



இலக்கிய கருத்தரங்கங்களைக் கோவையில் வாழும் படைப்பாளிகளிலிருந்து துவங்க வேண்டுமென்று திட்டமிடப்பட்டது. சமீபத்தில் ‘நுண்வெளி கிரகணங்களை’ வாசித்து விவாதித்திருந்தமையாலும் நமக்கு அணுக்கமான படைப்பாசிரியர் என்பதாலும் சு. வேணுகோபால் அவர்களை அழைத்து அவர் படைப்புகளின் மீது முதல் கருத்தரங்கம் நிகழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது. சொல்முகத்தின் முதல் கூடுகைக்கு தாமாகவே வந்திருந்து எங்களுக்கு ஊக்கமளித்தவர் சு. வே.

கோவை புத்தக விழாவின் ஒரு அரங்கில் இக்கருத்தரங்கத்தை நிகழ்த்த விரும்பி சு. வே. அவர்களை அழைத்தோம். கொண்டாட்டத்தின் மத்தியில், இக்கருத்தரங்கு கடலை பொறி கூட்டத்திற்கு மெல்லுவதற்கு மேலுமொன்றாகவே அமையும். சொல்முகத்தின் தனிப்பட்ட கூடுகையாகவே இதை அமைத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார். சென்ற முறை கோவை புத்தக விழாவில் கலந்துரையாடலை நிகழ்த்தியது ஒரு வகையில் சுவாரசியமான அனுபவமாக இருந்தது. குர் அதுலைன் ஹைதரின் ‘அக்னி நதி’ கலந்துரையாடல் என்று பெரிய விளம்பர பலகை ஒன்று புத்தக விழாவின் வாயிலில் வைக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் ஹைதரை எப்போது காண முடியும் என்று கேட்டு ‘வாசகர்கள்’ வரிசையில் வரத் துவங்கினர். எழுத்தாளர் இல்லாமல் நீங்கள் மட்டும் பேசி என்ன செய்யப் போகிறீர்கள் என்று சிரித்துவிட்டுச் சென்றனர். உச்சமாக, நன்கறிந்த ஒரு எழுத்தாளர், நண்பர் ஒருவரிடம் குர் அதுலைன் ஹதரை எப்போது வந்தால் நேரில் சந்திக்க இயலும் என்று கேட்டிருக்கிறார். சென்ற வாரம்தான் அவருடன் தான் தொலைப்பேசியில் உரையாடியதாகவும் கூறியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் மாய யதார்த்தப் புனைவெழுத்தாளரும் அல்ல.

சொல்முகத்தின் மூன்று வருடச் செயல்பாடுகளையும் சு. வேணுகோபாலைக் குறித்து விரிவான ஒரு அறிமுகத்தையும் கூறி கருத்தரங்கை துவக்கி வைத்தார் நவீன் சங்கு. சு.வே. தன் முதல் நாவலை எழுதியதின் பின்னணியினை அறியாதவர்களுக்குச் சுவாரசியமான துவக்கமாக அமைந்தது அவ்வறிமுகம். ஒரு பேராசிரியரைப் போன்ற தோரணையில், அதற்கேயுரிய நிதானத்துடன் ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’ சிறுகதைத் தொகுப்பின் மீதான தன் பார்வையைப் பகிர்ந்தார் பூபதி. இத்தொகுப்பிலிருக்கும் சிறுகதைகளை எவ்வாறு பகுத்துக்கொண்டு வாசித்தால் இக்கதைகளுக்கு இடையே ஊடுறும் பொது இழையைக் கண்டுகொள்ள முடியும் என்பதைச் சுட்டி தன் உரையை அமைத்திருந்தார். இதற்கு நேரெதிராக, ‘களவு போகும் புரவிகள்’ தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றும் எவ்வாறு  தனித்து வேறுபடுகிறது என்பதை விளக்கி விக்ரம் பேசினார். பின்னர், சு.வே தன்னுடைய ஏற்புரையில் இந்த இரண்டு பார்வையும் சரியானதே, அத்தன்னுணர்வுடன்தான்   இக்கதைகள் தொகுக்கப்பட்டது என்றும் கூறினார். ‘களவு போகும்…’ தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் வெளிப்படும் நகைச்சுவை அம்சங்கள் சு.வே. கதைகளில் மிக அரிதாகவே தென்படுவது என்ற பார்வையைக் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எவ்வளவு இருண்மையான சூழலுக்குள் தள்ளப்பட்டாலும் அப்படி மொத்தமாக வாழ்வு நம்மை கை விட்டுவிடாது என்ற நம்பிக்கையை, கண் தொடும் தூரத்தில் ஒரு வெளிச்சம் நிச்சயம் தென்படும் என்ற உறுதியை ‘வெண்ணிலை’ தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அளிக்கின்றன என்பதை தன் சிற்றுரையில் காளீஸ்வரன் வரிசைப்படுத்திக் கூறினார். உமா கிட்டத்தட்ட ஒரு பெண்ணியப் பார்வையில் ‘தாயுமானவள்’ தொகுப்பை அணுகினார். சு.வே கதைகள் அத்தனையிலும் பெண்களின் மீதும் பெண்மையின் மீதும் அவர் கொண்டிருக்கும் கரிசனம் உரத்து ஒளிப்பதை, அவரின் பெண் கதை மாந்தர்களின் மூலமாகவே நிறுவினார். சு.வே யின் குறுநாவல்கள் குறித்து ஒரு உரையை ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் முன்னரே மலேசிய வாசகர்களுக்காக வழங்கியிருக்கிறார். ஆனால் சொல்முகம் உரையில், இந்த இடைப்பட்ட காலங்களில் முன்னிலும் மேம்பட்ட ஒரு வாசகப் பார்வையை அடைந்திருப்பதைத் தொட்டு பேசினார். இலக்கியத்தில் வெளிப்படும் ஆண்-பெண் உறவுகளின் முக்கியத்துவத்தையும், ‘கூந்தப்பனை’ குறுநாவல் தொகுதியில் அது வெளிப்படும் அழகியலையும் தன் உரையின் மையமாகக் கொண்டு செறிவாக அவ்வமர்வை நிகழ்த்தினார்.


‘நுண்வெளி கிரகணங்கள்’ நாவலை சு.வே. எவ்வாறு தன் படைப்பாற்றலின் உச்சத்தில் உருவாக்கியிருக்கிறார் என்பதைத் தொட்டு தொடங்கினார் பாலாஜி பிருத்விராஜ். இந்நாவலில் செளடம்மா ஒரு தொன்மமாகவும், மண்ணில் கால் பாவிய பாத்திரமாகவும் இணையாக உலவுகிறது. தமிழிலக்கியத்தில் தோன்றிய முக்கியமான பெண் பாத்திரங்களில் செளடம்மாவும் ஒன்று என தன் ஒப்பீட்டை முன்வைத்தார். ‘உறுமி’ சத்தம் ஒரு தெய்வீக இருப்பாகவே இந்நாவல் முழுவதும் அமைந்திருப்பதை பல்வேறு புனைவுத் தருணங்கள் மூலமாக உணர்த்தினார் பாலாஜி. சு.வே அவர்களின் இதர படைப்புகளான ‘நிலம் எனும் நல்லாள்’, ‘பால்கனிகள்’, ‘இழைகள்’ மற்றும் சமீபத்திய நாவலான ‘வலசை’ ஆகியவற்றின் முக்கிய பாத்திரங்கள், அடிப்படை மனிதப் பண்புகளின் பிறழ்வில் சரிவதும் அதிலிருந்து மீண்டு வரும் கணங்களையும் மையமாக என்னுடைய சிற்றுரையை அமைத்திருந்தேன். ‘நிலம் எனும்…’ நாவலின் இறுதியில் பழனிக்குமார் சினை ஆட்டின் வயிற்றினுள் இறந்து கிடக்கும் கன்றுகளை வெளியேற்றி ஆட்டின் உயிரை மீட்டெடுக்கும் காட்சி உலகளவிலேயே உச்ச இலக்கிய தருணங்களுக்கு இணையாக வைக்கக்கூடிய உணர்வுத் தீவிரமும் காட்சி விவரணையும் கொண்டது. மேலதிகமாக, கவியுருவகக் காட்சியாக பல்வேறு அர்த்த சாத்தியங்களையும் அளிக்கக் கூடியது.



‘குவிஸ்’ செந்தில் சு.வே அவர்களின் ஆளுமை குறித்தும், அவர் படைப்புகளில் வெளிப்படும் மொழியழகு, நடை மற்றும் சொல்லாட்சி குறித்தும் ஒரு சிற்றுரையாற்றினார். அதில் ‘தமிழ் இலக்கிய சிறுகதை பெருவெளி’ என்ற தொகுப்பை வெளியிடும் பணிகளில் தனக்கு வாய்த்த அனுபவங்களைக் குறித்தும் பகிர்ந்துகொண்டார். இரண்டு சிற்றுணவு இடைவெளிகளே மதிய உணவை மறக்கச் செய்திருந்தன. இதனால், எப்போதும் போல் காட்டாற்று வெள்ளமென தன் படைப்புகளைப் பற்றி சு.வே தன் ஏற்புரையை வழங்கி முடித்த போதும் வந்திருந்த நண்பர்கள் மேலும் அரை மணி நேரம் அரங்கிலேயே தங்கி அவருடன் உரையாடிவிட்டு பின் கலைந்தனர். ‘நுண்வெளி…’ நாவல் எழுதிய அனுபவம் குறித்தும் அதற்குப் பின் தான் எழுதிய அத்தனை படைப்புகளின் ஆதி உணர்வையும் தன்னிலிருந்து வெளிப்படும் புனைவுலகை தான் கையாளும் விதத்தைக் குறித்தும் மிக உற்சாகமாக உரையாடினார் சு.வே. அவர்களை ஒரு படைப்பாளியாக மட்டுமோ அல்லது நன்கு பழகும் ஒரு மனிதராக மட்டுமோ அறிந்திருந்த இரு சாராருக்கும் அம்மதியத்தில் வெளிப்பட்ட சு.வே. முற்றிலும் புதியவராகவே தோன்றியிருப்பார். மீனாம்பிகை சு.வே விற்கு நினைவுப் பரிசை வழங்க, ரத்தீஷ் நன்றியறிவித்தார். தன்னையறியாமலேயே இறுதியில் ஜெயமோகனுக்கும் நன்றி என்றார்.



உரையாற்றிய நண்பர்களில் ஒருவர், பதினாறு ஆண்டுக்காலம் தன் நிறுவனத்தில் பலப் பல பதவி உயர்வுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும் ஒரு நேர்மையான மூத்த படைப்பாளியின் முன்னிலையில் சிற்றுரை ஆற்றிய உணர்வு அளிக்கும் முழுமையை இதற்கு முன் அனுபவித்ததில்லை என்றார். உள்ளம் உவந்து ஈடுபடும் செயல்கள் அளிக்கும் அளப்பரிய உவகையும் மன நிறைவும் உலகியல் வெற்றிகளால் அளந்துவிட முடியாதவை!