Monday, December 25, 2023

கிருமி கதைகள் - முன்னுரை

 



கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கியிருந்தபோது அமெரிக்க அறிவியல் பத்திரிகையொன்றில் முக்கியமான ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மக்களை அச்சுறுத்தும் வண்ணம் அல்லாமல் ஆனால் மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை அது விடுத்திருந்தது. ‘இந்த நோய்த் தொற்று, மின்னல் ஓட்டப்பந்தயத்தைப் போல வேகமாகப் பரவி உடனே காணாமல் போய்விடாது. இது மராத்தான் ஓட்டத்தைப் போன்றது. இன்னும் பல ஆண்டுகளுக்கு நாம் இந்தக் கிருமியை எதிர்நோக்க வேண்டியிருக்கலாம். உடல் உறுதியும், ஊட்டச்சத்துகளும், துணை மருந்துகளும் மட்டுமே போதாது, மனவலிமையே பிரதான கேடயமாகச் செயல்படும்’ என்ற அறிவிப்பை அக்கட்டுரை முன்வைத்தது. இதுவரை மானுட வரலாற்றில் நிகழ்ந்த அத்தனை நோய்த்தொற்றுகளையும் அக்காலகட்டங்களில் நிலவிய சமூக வழக்கங்களையும், கலாச்சார செயல்பாடுகளையும், தொழில்நுட்பத் திறன்களையும் கணக்கில் கொண்டு 2020ம் ஆண்டின் பெருந்தொற்று இப்படித்தான் இருக்கும் என்ற கணிப்பை வழங்கியது. நண்பர்களில் பெரும்பாலானோர் இது மேலுமொரு மேற்கத்தியக் கருத்தியல் மோசடி என்றே உதாசீனம் செய்தனர். உண்மையில் இக்கட்டுரை ஓர் இந்திய அறிவியல் கூடத்திலிருந்து வெளிவந்திருந்தாலும் நாம் இப்படித்தான் புறக்கணித்திருப்போம் என்பதை பிற்பாடு உணர்ந்துகொண்டேன். இச்சமயத்தில்தான் இந்திய அரசாங்கம் மூன்று நாளில் நோயை ஒழித்து வாகை சூடுவோம் என்று பிரகடனம் செய்தது. கண்களால் மட்டுமல்ல கற்பனையில் கூட இந்த எதிரியை உருவகித்திட முடியாது என்று உணரத் தொடங்கியதும் கைதட்டல்களும் பாத்திர உருட்டல்களும் பாடல்கள் பாடியே கிருமியை மிரளச் செய்வதுமென பல்வேறு உத்திகளை கையாளத் தொடங்கினோம். ஒன்றன் பின் ஒன்றான அலைகளில் வீழ்ந்து இப்போது அலையின் நிச்சயமின்மைக்கு ஒப்புக்கொடுத்து அதன் மீதே பயணிக்கக் கற்றுக்கொண்டோம்.


மீண்டும் மீண்டும் இங்கு நிறுவப்படும் ஒன்று இருக்குமென்றால் அது மனிதர்கள் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்வது இல்லையென்பதுதான். அத்தனை அழிவுகளையும் மனிதன் கண்டு, தோற்று, தேறி, மீண்டு வந்து நின்றபோதும் மீண்டுமொரு அழிவிற்குத் தன்னை எப்படியேனும் தயார்ப்படுத்திக் கொள்கிறான். ஆயுதங்களும் போர்களும் பிரிவினையும் வெறுப்பும் வஞ்சமும் மனிதர்களின் கூட்டு நனவிலியில் சுழன்றபடியே இருக்கின்றன. வெளியேறும் வழி இல்லை. மறுபுறம் இது மானுட மனத்தின் நேர்நிலைத் தன்மையையும் சுட்டுகிறது. இது மீண்டும் நிகழாது, இதைத் தன் வலிமையால், அறிவுத்திறத்தால், அறிவியலின் கரத்தால் வென்றிட முடியும் என்பதே அகத்தில் எழும் முதல் ஒளியாக இருக்கிறது. அதுவே மானுடத்தை உந்திச் செல்லும் விசையும்கூட. 


பெருந்தொற்று போன்ற பேரழிவுகள் பெருத்த சத்தமின்றி நிகழ்பவை. உகிர்கள் உதிர்ந்து அழிவதைப் போல பூமியிலிருந்து உயிர்கள் மெல்ல மறைந்துபோகும். இழப்பும் அதன் வலிகளும் யானையின் பெருத்த நடையைப் போல அழுத்தமாகவும் ஆழ்ந்த தடத்தினையும் விட்டுச் செல்லும். ஆனால் எந்தப் பேரழிவிற்குப் பிறகும் ஒரு சில நன்மைகள் முளைக்கவே செய்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் போரின் விளைவாகப் பிறந்திருக்கின்றன, நோய்த்தொற்றுகளின் முடிவில் உயிர்காக்கும் மருந்துகள் உருவாகின, தனிமனித ஒழுக்கத்தின் மீதான கவனம் அதிகரித்திருக்கின்றன. கவண் எறியைப் போல பின்னடைவிற்குப் பிறகான செல்திசை பன்மடங்கு விசையுடன் கூடிவிடுகிறது உயிரினத்திற்கு. போர்கள் மக்களைக் குழுக்களாகப் பிரித்து ஒரு அடையாளத்தைத் தொற்றிக் கொள்ளச் செய்கிறது. அவ்வடையாளத்தின் பின்னே தனித்தவர்களையும் ஒன்று திரட்டுகிறது. ஒரு குறிக்கோளைக் கற்பித்து அதன் பொருட்டு உயிர் துறப்பது உயரிய கொள்கையின் சின்னமாக நிறுவுகிறது. தனி மனிதனின் தியாகச் சிந்தனையையும் தீரத்தையும் தூண்டிவிடுகிறது. ஆனால் இவை அத்தனையையும் சிதறடிக்கிறது பெருந்தொற்றுக்கெதிரான போராட்டம். மானுடரை வெல்லும் ஒரு எதிரி அருவமற்றது என்பது நிம்மதியிழக்கச் செய்கிறது. மனிதனைச் சிறியவனாக, சக்தியற்றவனாக ஆக்கிவிடுகிறது. 


உலக இலக்கியங்களில் போர்கள் மிக விரிவாக சித்தரிக்கப்பட்டிருப்பது எளிய வாசகர்கள் கூட அறிந்ததே. போர்களின் பின்னணியில் தேசத்தின் வரலாறுகளும், தனி மனிதனின் அலைக்கழிப்புகளும் காதல் காவியங்களும் கூட படைக்கப்பட்டிருக்கின்றன. இன்றளவும் சிறந்த இலக்கியப் படைப்புகளாக அவையே முன்நிற்கின்றன. ஆனால் நோய்த்தொற்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களும் சிறுகதைகளும் ஒப்புநோக்க மிகக் குறைவே. பல நாவல்களில் நோய்களும் அது உண்டு குவித்த உயிர்களின் கதைகளும் வந்திருந்தாலும், முழுக்க தொற்றுநோயின் பின்னணியில் உருவாகிய படைப்புகள் சொற்பமே. அல்லது அவை கேளிக்கை எழுத்தாகவோ அறிபுனைவாகவோ மிகுபுனைவாகவோ பொழுதுபோக்கு கதைகளாக எழுதப்பட்டிருக்கின்றன. இவ்வகை எழுத்துகள் ஆங்கிலத்தில் மிகப் பிரபலம்.


1353ல் ‘கறுப்பு மரணத்தை’ அடிப்படையாகக் கொண்டு பொக்காஸியோ எழுதிய ‘The Decameron’ பெருந்தொற்று குறித்து எழுதப்பட்ட முதல் இலக்கியப் படைப்பு. நோய் பரவல் குறித்த அத்தனை எழுத்துகளுக்கும் அப்படைப்பே முன்னோடி. கொள்ளை நோயிலிருந்து தப்பிக்க வீடடைந்த பத்து மனிதர்கள் கூறும் நூறு கதைகளின் தொகுப்பு. கொரோனா காலத்தில் சமகால எழுத்தாளர்கள் பெருந்தொற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதிய சிறுகதைகளை ‘The Decameron Project’ என்ற பெயரில் தொகுத்தது நியூ யார்க் டைம்ஸ். அத்தொகுப்பிலிருந்து இரண்டு சிறுகதைகளும் இரண்டு குறுங்கதைகளும் இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அதன் பிறகு மிகப் பிரபலமான நாவல் ஆல்பர்ட் காம்யூவின் ‘The Plague’. கொரானா காலத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட நாவலாக இதைக் குறிப்பிடுகின்றனர். மார்க்குவேஸின் ‘Love in the time of Cholera’ இவ்வகை நாவல்களில் பிரபலமாக அறியப்பட்ட ஒன்று. டேனியல் டெஃபோவின் ‘A Journal of the Plague Year’ மற்றும் ஒஸே ஸரமாகோவின் ‘The Blindness’ ஆகியவை மக்கள் மீண்டும் தேடி எடுத்து வாசிக்கும் நாவல்களாக இருக்கின்றன. மேரி ஷெல்லி, ஜாக் லாண்டன் போன்றவர்களின் சில படைப்புகளும் இவ்வகையில் கொள்ளத்தக்கதே.


                                                            ***


ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் சிறுகதையின் அலை ஒன்று தொடங்கியது என்றே கூறத்தக்க வகையில் பல நூறு சிறுகதைகள் எழுதப்பட்டன. பல புது சிறுகதையாசிரியர்கள் தோன்றினர். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினர். எழுத்தாளர் ஜெயமோகன் தினமும் ஒரு சிறுகதையென நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை வெளியிட்டார். ஆனால் அக்கதைகள் நோய்த்தொற்று குறித்தோ நடப்புச் சூழலையோ சுட்டும் விதமாக அமையவில்லை. ஊரடங்கின் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கே தன்னை புனைவுலகில் ஈடுபடுத்திக் கொண்டதாகவும், கொண்டாட்டமாக இந்நாட்களைக் கழிப்பதற்கு இச்சிறுகதைகளே தனக்குச் சிறகுகள் கொடுத்ததாகவும் குறிப்பிட்டார். உண்மையில் அத்தனை பேரழிவு காலங்களிலும் இலக்கியவாதிகள் அப்படித்தான் இருந்திருக்கின்றனர். எந்த பேரழிவு இலக்கியமும் அது நடக்கும் சூழலில் எழுதப்பட்டவை அல்ல. ஒரு மரணம் வாழ்வை விசாரணை செய்யத் தூண்டுகிறது. மாறாக ஆயிரக்கணக்கான மரணங்கள் ஒற்றைச்செய்திப் பதிவாக எஞ்சி விடுகிறது. பேரழிவு தரும் சலிப்பு எழுத்தாளர்களின் மனநிலைக்கு நேர் எதிரானது. அத்தனை படைப்பாளிகளும் இது நேரும் உலகில் தான் இல்லை என்று நம்ப விரும்புகின்றனர். மனோதிடத்தைக் காப்பதற்குக் கலையும் இலக்கியமுமே ஒரே வழி. 


பெருந்தொற்று குறித்தான சிறுகதைகள் மிகச்சிலவே எழுதப்பட்டிருக்கின்றன. சிறுகதை வடிவத்தின் முன்னோடியான எட்கர் ஆலன் போதான் பெருந்தொற்று சிறுகதைகளையும் துவக்கி வைத்திருக்கிறார். ‘செந்நிற மரணம்’ எனும் சிறுகதை உருவகக் கதை வகைமையிலும் முதன்மையானது. நோய்த்தொற்று சிறுகதைகளைத் தேடி வாசித்தபோது ஒன்று புலனானது. சிறந்த படைப்பாளிகள் அத்தனை பேரும் பேரழிவையும் தொற்று நோய்களையும் நேரடிச் சித்திரங்களாகக் கதைகளில் படைக்கவில்லை. அக்கதைகளில் நோயும் வலியும் அழிவும் மனம் உருக்கும் நாடகத் தருணங்களாக வெளிப்படவில்லை. யதார்த்தச் சித்திரங்கள் அநேகமாக எந்தச் சிறந்த சிறுகதைகளிலும் இல்லை. மாறாக இப்படைப்பாளிகள் நோயையும் கிருமியையும் உருவகங்களாகச் சித்தரித்திருக்கின்றனர். மனித மனதின் வக்கிரங்களின் புறத்தோற்றமாகவே உருவகித்திருக்கின்றனர். அல்லது, கிருமியை வாழத் துடிக்கும் ஒரு உயிரியாகக் கருதியுள்ளனர். ஒரு கிருமியின் அகத்திற்குள்ளும் ஊடுருவும் மனம் படைத்தவர்களாகத் தலைசிறந்த இலக்கியவாதிகள் வெளிப்பட்டிருக்கின்றனர். இவ்வகையான கதைகளே இத்தொகுப்பை உருவாக்க உந்துதலாக இருந்தன. 


கொரோனா காலத்தில் சிறுகதைப் போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வழியாக பெருந்தொற்று சிறுகதைகள் சில தமிழில் வெளிவந்தன. அக்கதைகளிலிருந்து இவை முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கும் என்று கருதுகிறேன். சூழலிலிருந்து தள்ளி நின்று பெரியவற்றைத் தரிசிக்கும் கண் வாய்த்திருக்கிறது இப்பெரும் படைப்பாளிகளுக்கு. கவியுருவகக் கதைகளும் யதார்த்தக் கதைகளும் கலந்து உருவாகியிருக்கிறது இத்தொகுப்பு. மானுடம் துவங்கிய காலம் முதலே மனிதர்கள் எதிர்கொண்ட இயற்கை போராட்டங்களும் அதில் கசந்து அவதியுறும் நம்பிக்கைகளும் அழிவுகளும்கூட ஒன்று போலவே இருப்பதை இக்கதைகள் தொட்டுக் காட்டுகின்றன. நிகழ்காலத்தின் கேள்விகள் அத்தனைக்கும் வரலாறும் அதில் பூத்து முகிழ்த்த இலக்கியங்களுமே விடைகளைத் தாங்கி நிற்பது ஆச்சரியமானதுதான். வாழ்க்கைக் கதைகளை அனுபவித்து அறிவதுதான் வரலாற்றைச் சற்றேனும் உண்மைத்தன்மையுடன் அணுகி உணர நமக்கிருக்கும் வாய்ப்பு.


‘கிருமி கதைகளில்’ கிருமி நேரடி பொருள் கொள்வதில்லை. கிருமி என்ற சொல்லே இன்றைய சூழலில் பல்வேறு அர்த்த சாத்தியத்தைக் கொண்டுள்ளது. இக்கதைகளில் நிறைந்தும் மறைந்தும் இருக்கும் கிருமிகளை உணர்வதின் மூலமாக மானுட வாழ்வின் சாரத்தைப் பற்றிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இம்மொழியாக்கச் சிறுகதைகளை வெளியிட்ட யாவரும், கனலி, அகழ் ஆகிய மின்னிதழ்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். கோவை சொல்முகம் வாசகர் வட்ட நண்பர்களுக்கும், வாசித்து கருத்துகளைப் பகிர்ந்த நண்பர்கள், என் தாய் தந்தையர், தங்கை ரேவதி, தோழி ஷீலா பார்த்தசாரதி, மீனாம்பிகை, எழுத்தாளர்கள் இரம்யா, ஜி.எஸ்.எஸ். நவீன், பாலாஜி பிருத்விராஜ் ஆகியோருக்கும் என் நன்றிகள். இக்கதைகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பான சித்திரங்களை அளித்திருக்கும் ஓவியர் சீராளன் ஜெயந்தன் அவர்களுக்கு என் அன்பு. இத்தொகுப்பை வெளிகொண்டு வர தொடர்ந்து ஆர்வம் காட்டி ஊக்குவித்த எழுத்தாளர் ஜீவ கரிகாலனுக்கும், யாவரும் பதிப்பகத்தாருக்கும் உளமார்ந்த நன்றிகள். பெருந்தொற்று காலத்தில் இயற்கையை நெஞ்சுரத்துடன் நேர் நின்று நோக்கியவர்களுக்கும் இயற்கையைத் தனதாக்கிக் கொண்டவர்களுக்கும் இத்தொகுப்பைச் சமர்ப்பிக்கிறேன்.


நரேன்

No comments:

Post a Comment