#ரயில் திரைப்படத்தின் காட்சிகள் ‘மால்’ திரையரங்குகளின் சனிக்கிழமை பட்டியலிலிருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டிருந்தன. மற்ற அரங்குகளில் ஒரு டிக்கெட் கூட விற்கப்படாமலிருந்தது. அக்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டிருக்கும். ஞாயிறு மதியம் ப்ராட்வே திரையரங்கின் ஒற்றை திரையிடலுக்குப் பதிவு செய்து படம் பார்த்தேன். உடன் ஏழு பேர் இருந்தனர்.
வெற்றிப் படங்களில் பெரும் பங்காற்றியவர், விகடன் வாசிப்பவர்களிலிருந்து மெகா சீரியல்கள் தொடர்ந்து பார்ப்பவர்கள் வரை பலருக்குப் பரிச்சயமாகியிருக்கக்கூடியவர் பாஸ்கர் சக்தி. இருப்பினும் இப்படம் வெளிவந்ததே சினிமாவில் குடியிருக்கும் தமிழ்ச் சமூகம் அறியாமல் இருப்பது ஆச்சரியம்தான். எந்நேரமும் சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் சமூகம்கூட வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் படங்களைப் பற்றித் தேடித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் காட்டுவதில்லை. எதைப் பற்றிய பேச்சு சமூக வெளியில் நிலவுகிறதோ அதையொட்டியே தன் கேளிக்கையையும் அமைத்துக் கொள்ளும் தன்மையினராகிவிட்டேம். அலையில் அடித்துப் போகும் வசதி இனிது. 9 மணி ‘போக்கிரி’ காட்சி அரங்கம் நிறைந்திருந்தது.
#ரயில் கலைப்படம் அல்ல, வணிகப்படமும் அல்ல. இடைநிலை திரைப்படத்திற்கான யதார்த்த வடிவமும் திரைக்கதை வசதிக்கான நகைச்சுவையும் எளிதான முடிச்சுகளும் கொண்டது. புதிய முகங்கள் தன்னியல்பாக வசனங்கள் பேசி நடிப்பதைக் காண்பதே அழகு. காது கேளாத பாட்டியும் நாயகனின் மாமனாரும் தங்கள் வீட்டில் உலவுவதைப் போலத் திரையில் இயல்பாகத் தோன்றுகின்றனர். முக்கிய பாத்திரங்கள் நன்றாக நடிக்கிறார்களே என்று நினைக்கும்போதே இவர்கள் தங்களின் இருப்பினாலேயே ‘நடிகர்களை’ மிஞ்சி விடுகிறார்கள். ரமேஷ் வைத்யாவை அறிந்தவர்கள் திரையில் அவரை வேறொருவராகக் கண்டிருக்க வாய்ப்பு இல்லை. பெரிய திரையில் இப்படத்தைக் காண்பதற்கான நியாயத்தை தேனி ஈஸ்வர்தான் முதன்மையாக வழங்குகிறார். அத்தனை காட்சிகளுமே இரண்டு அடுக்குகளிலானவை. ஊரின் மையக் கோபுரமும் வீட்டின் ஆடுகளும் கண் நிறைப்பவை. துபாய் நண்பர் உரையாடும் காட்சி இப்படத்தின் பலவீனமான காட்சிகளில் ஒன்று. ஆனால் அவர்களுக்குப் பின்னால் நெளிந்தலைந்து உறைந்திருக்கும் மரம் ஒரு நவீன ஓவியம். அடுத்ததாக பாஸ்கர் சக்தியின் வசனங்களுக்கு ஆங்காங்கே நாங்கள் எட்டு பேருமே கைதட்டினோம்.
பாத்திரங்களும் களமும் கதையின் மையச் சிக்கலும் ஒவ்வொன்றாக அறிமுகம் ஆவதால் முதல் பாதி ஆர்வத்தை இறுக்கி நிறுத்திவிடுகிறது. இரண்டாம் பாதியின் முதல் சில நிமிடங்கள் கூட நாயகனின் குற்ற உணர்வு பேய்ப் பயமாக வெளிவரும் இடங்களும் ஊரே இணைந்து வடக்கனுக்கு மரியாதை செய்யும் இடங்களும் கூட காட்சிகளாகவும் உணர்வுகளாகவும் நிறைவையே அளிக்கின்றன. ஆனால் அதற்குப் பிறகு திரை நேரத்தை நிறைக்கும் வகையில் தொடரும் மிகை உணர்ச்சி வெளிப்பாடுகளும் எதிர்பார்த்த முடிவிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததிலும்தான் இப்படம் தொடக்கத்தில் கொடுத்த உணர்வுகளின் எதிர் நிலைக்கு நம்மை நிறுத்திவிடுகிறது. வடக்கனோ நாயகனோ எவர் மீதும் ஆழமாக ஊடுருவ இக்கதை முயலவில்லை. இரண்டாம் பாதி தொடக்கத்தில் ‘பை’ காணவில்லை என்ற முடிச்சு விறுவிறுப்பைக் கூட்டக்கூடிய சிறப்பான திரைக்கதை உத்திதான். ஆனால் அம்முடிச்சையே மறக்கடிக்கச் செய்யும் வகையில் மிகையுணர்வு கொந்தளிப்புகள் நீண்ட காட்சிகளாகியிருக்கின்றன. குழந்தையின் மூலமாக பானிபூரியின் ருசியை அறியும் நாயகன் அவள் மூலமாகவே வடக்கனின், வடக்கன்களின் நியாயத்தையும் உணர்ந்திருக்கலாம். ஆனால் துபாய் நண்பனும், வடக்கன் தந்தையும் வரிசையாக நின்று நாயகனுக்குப் பாடம் எடுக்கிறார்கள். குற்ற உணர்ச்சியும் தோளிலும் வயிற்றிலும் இருக்கும் குழந்தைகளுமே அந்நாயகன் மாறுவதற்கு போதுமான நியாயங்கள்தான். வடக்கனின் உயிர் சாணியில் பூத்த பச்சையைப் போல மீண்டும் துளிர்ப்பதை அவன் உணர்ந்திருப்பான்தானே. அவனும் நல்லவனே! அடுத்ததாகப் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்றவிடாமல் தடுக்கிறது. எழுப்பி எழுப்பி வெளியே தள்ளுகிறது. ஏற்கனவே கொப்புளித்து ஒழுகும் அழுகைக்குப் பலத்த சப்தத்தைச் சேர்த்துவிடுகிறது.
இருப்பினும் இப்படத்தைத் திரையில் காண்பதற்கான பலமான காரணங்களாகத் திரையில் தோன்றும் பல்லாயிர மானுட வாழ்வின் ரேகைகள் பதிந்த முகங்களும், தன்னியல்பாக ஒவ்வொரு வரியிலும் உண்மைகளைச் சுட்டும் வசனங்களும் கதை வெளியின் நிறங்களையும் பொழுதுகளையும் உயிர்களையும் வெவ்வேறு அடுக்குகளாக நிறைத்து வைக்கும் காட்சி சட்டகங்களும் மிகப் பெரியதாக நிற்கின்றன. எட்டு பேர் அமர்ந்து படம் பார்த்த அரங்கில் இரண்டு சுவாரசியமான சம்பவங்களைக் காண நேர்ந்தது.
இடைவேளையில் ஒரு வயதானவர் தன் மகனிடம் செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். அவரிடமிருந்தது அவ்வளவு ‘ஸ்மார்ட்’ இல்லாத ஃபோன் என்பதால் மகனின் சொற்களும் தெளிவாகவே கேட்டன. 'சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வராம எங்க திரிஞ்சுகிட்டு இருக்க? எங்கேயாவது சுத்திகிட்டேதான் இருக்கனுமா? செஞ்சு வெச்ச சாப்பாட்ட எப்பதான் வந்து சாப்பிடுவ’ என உரக்க திட்டிக்கொண்டிருந்தான். அவன் பின்னால் அவன் மனைவி நிற்பதைக் கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை. ‘பாஸ்கர் சக்தி’ இன்புளூயன்ஸாக இருக்கலாம். இங்கிருந்து அப்பா பதில் சொல்லிக்கொண்டிருந்தார். ‘இதோ வந்திடறேன்பா. இங்கதான் இருக்கேன். வந்து சாப்டுக்கறேன். ஒரு சின்ன வேலைதான். வந்திடறேன்.’ அவர் பதில் சொல்லி அழைப்பை அணைக்கும் முன்னர் அட்மாஸ் சப்தத்தில் படம் போட்டு இவரைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாதே என்று வேண்டிக்கொண்டேன்.
கண் பார்வையற்ற 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியுடன் அப்பா படம் பார்க்க வந்திருந்தார். எனக்கு முன்னால்தான் கை பிடித்து படிக்கட்டுகளில் ஏறி என் முன் இருக்கையில் அமர்ந்தனர். நடக்கும்போது இருட்டில் தடுமாறும் தந்தையைப் பெண் கைப்பிடித்து அழைத்து வருகிறாள் என்றே நினைத்திருந்தேன். அவர்கள் அமர்ந்ததும்தான் அப்பெண்ணிற்குக் கண் பார்வை இல்லையென உணர்ந்தேன். இருக்கையில் அமர்ந்தபடி அவர்கள் ‘செல்ஃபி’ எடுக்கும்போது அவள் தலை திசை மாறியிருந்தது. அதற்கேற்ப அத்தந்தை அசைந்து நகர்ந்து தன்னைப் பொருத்தி பின் படம் எடுத்துக்கொண்டார். அதிலிருந்து என் கவனம் இணையாக அவர்கள் மீதும் இருந்தது. வசனங்கள் இல்லாத காட்சிகளைத் தந்தை அவள் காதருகே குனிந்து விளக்கிக் கொண்டிருந்தார். ‘அவனும் நல்லவன்தான் இவனும் நல்லவன்தான் ஆனா அவிங்க ரெண்டு பேரும் சேர்ந்தா என்னவேனாலும் பண்ணுவாங்க’ என்ற வசனத்தின் போது தனிச்சையாக கைகளைத் தட்டினாள். ‘செத்துட்டானாப்பா’ என்று கேட்டாள். ‘பையை அவனே இப்போ வெளியே எடுக்கிறாம்மா’ என்று தந்தை சொன்னபோது தலை நிமிர்த்தி கைதட்டினாள். படம் முடிந்து அவர்களும் அவர்களின் பின்னால் நானும் சிறு சிறு நடைகளாக அடிவைத்து வெளியே வந்தோம். எதன் பொருட்டு இப்படத்தை இன்று தேர்ந்தெடுத்து வந்தார்களோ தெரியவில்லை ஆனால் இப்படம் பார்த்த அனுபவத்தை என்றென்றைக்கும் மறக்கவியலதாக ஒன்றாக்கிவிட்டுச் சென்றனர் அப்பனும் மகளும்.
வாசலில் அதிரடியாக உள்ளே நுழைந்து சுத்தம் செய்வதற்குப் பாயக் காத்திருந்த தென்கிழக்கு முகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடி வெளியே வந்தேன். சட்டென அப்போதுதான் நினைவிற்கு வந்தது சீட்டுக்கு அடியில் தள்ளி விட்டு வந்த காலி சாப்பாட்டுத் தட்டுகளும் கோப்பைகளும்!
No comments:
Post a Comment