Sunday, February 28, 2021

தீப்பெட்டி - ஆஷாபூர்ணா தேவி

 




நான் எப்போதும் பெண்களை தீப்பெட்டிகளுடன் ஒப்பிடுவேன். ஏன்? தீப்பெட்டிகளின் தன்மைதான் அதற்குக் காரணம் – நூறு இலங்கைகளை எரித்துவிடும் அளவிற்கு அதனிடம் தீமருந்து இருந்தும் அவை சமையலறையில், உக்கிராணத்தில், படுக்கையறையில் அங்கிங்கும் எங்குமென அப்பாவியாகச் சாந்தமாகக் கிடக்கும் – பெண்களும் அச்சு அசலாக அதே போலத்தான்.

உங்களுக்கு ஓர் உதாரணம் வேண்டுமா?

நம் முன்னே இருக்கும் இந்த மிகப்பெரிய மூன்றடுக்கு வீட்டை நன்கு கவனமாகப் பாருங்கள் – 

ஞாயிறு காலை.

சலவைக்காரன் வந்து காத்துக் கொண்டிருக்கிறான்.

அஜீத்தின் அழுக்கு மூட்டைக் குவியலை சலவைக்காரனிடம் கொடுப்பதற்கு சில கணங்களுக்கு முன்னால் நமீதா அதன் பாக்கெட்டுகளை கடைசியாக ஒரு முறை சோதித்தபோதுதான் அக்கடிதத்தைக் கண்டுபிடித்தாள்.

கசங்கி முறுங்கிச் சுருட்டியிருந்த அக்கடித உறையின் வாய்ப்புறம் கிழிந்திருந்தது, அதன் மேல் நமீதாவின் பெயர் இருந்தது.

…த்தூம்! நமீதாவின் நாடி நரம்புகளிலெல்லாம் தீப்பற்றிக் கொண்டது. தன் கையிலிருந்த துணிகளைக் கீழே போட்டுவிட்டு அக்கடிதத்தைப் பிரிப்பதற்காக படுக்கையின் மீது அமர்ந்தாள்; அதில் குறிப்பிட்டிருந்த தேதியைத்தான் அவள் முதலில் பார்த்தாள். அதிலிருந்த தேதியை வைத்துப் பார்த்தால் அக்கடிதம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வந்திருக்க வேண்டும்.

அவள் உறையைத் திருப்பி தபால் முத்திரையிலிருக்கும் தேதியோடு ஒப்பிட்டுப் பார்த்தாள்; அவள் கணிப்பிற்கு அதுவும் சாட்சியென நின்றது.

ஆமாம், இக்கடிதம் மூன்று நாட்களுக்கு முன்னால் வந்திருக்கிறது.

அஜீத் அதைப் பிரித்திருக்கிறான், படித்திருக்கிறான், பிறகு அதை மடித்துச் சுருட்டி கசக்கி தன் பாக்கெட்டுக்குள் போட்டு அதை அப்படியே விட்டுவிட்டான். நமீதாவிடம் இதை ஒருமுறையேனும் குறிப்பிட வேண்டும் என்ற அவசியத்தையே அவன் உணரவில்லை. 

த்தூமென கொழுந்துவிட்டு மேலெழுந்த தீ ஜூவாலை இப்போது அவளது மனத் தந்தி ஒவ்வொன்றையும் மீட்டி சீறொலியெழுப்பி நின்று எரிந்தது. 

அதற்குக் காரணம் இச்சம்பவம் ஏதோ ஒரு நாள் நிகழ்ந்துவிட்ட விபத்து அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது.

அஜீத்தின் சுபாவமே அப்படியானதுதான்.

தபால் பெட்டியின் சாவியை, இக்கூட்டுக் குடும்பத்தின் ஐம்பத்திரண்டு கைகளின் இடைவெளிகளில் நுழைந்து பிடித்து அதை எப்படியோ இவன் தனது உடைமை ஆக்கிக்கொண்டிருக்கிறான். நமீதாவின் பெயரிடப்பட்ட உறையுடன் கடிதம் அதில் எப்பொழுது இருந்தாலும் அதை அவன் முதலில் எடுத்து பிரித்துப் படித்துவிட்டுதான் அவளிடம் கொடுப்பான். பல சந்தர்ப்பங்களில் அவளிடம் அதை அவன் கொடுக்காமலே போயிருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. குறைந்தபட்சம் அப்படியொரு சந்தேகம் நமீதாவின் மனதில் வேர் ஊன்றியிருக்கிறது, மிகவும் ஆழமாகவே.

இருப்பினும், சற்றேனும் தன் மனைவி மீது சந்தேகப்படும்படியான ஒரு கடிதத்தைத் தன்னால் கண்டுபிடிக்க முடிந்தது என்று அஜீத்தால் மெய்யான ஒரு வாதத்தை இந்நாள் வரையிலும் முன் வைக்க முடியவில்லை.

ஆனாலும்… ஆனாலும் இந்த அசிங்கமான பழக்கம் அவனை விட்டு விலகிப் போகவில்லை.

நமீதாவின் கோபத்தினாலோ, அவள் இதை தனக்கெதிரான குற்றமாக உணர்வதினாலோ, அவளின் கசப்பூட்டும் வசவுகளினாலோ, அவனை வெட்கமுறச்செய்யும் அவளது முயற்சிகளினாலோ, அவளின் கேலிச் சொற்களினாலோ – எதனாலும் இப்பழக்கம் நிற்கவில்லை.

அவள் இதைப் பற்றிய பேச்சை எடுத்தால், அவன் முதலில் சிரிப்புடன் அதைப் புறந்தள்ள முயற்சி செய்வான். சிரிப்பு அவனுக்குக் கை கொடுத்துக் காப்பாற்றவில்லையென்றால் அவளைத் திட்டத் தொடங்குவான்.

அவள் ஒரு நிமிடம் அப்படியே அசையாமல் அமர்ந்து அக்கடிதத்தை முழுமையாகப் படித்தாள்.

அதில் பெரிதாக எதுவும் இல்லை, நமீதாவின் அம்மாவிடமிருந்து வந்திருக்கும் ஒரு கடிதம்.

அது அவரின் வழக்கமான மன்றாடல் – அந்த நற்பெண்மணி பல்வேறு புகார்களும் தனது இன்னல்களும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போவதை ஒரு செய்தியென மீண்டும் ஒருமுறை பதிவு செய்திருக்கிறார். துன்பத்திற்கு மேல் துன்பம், அவர் அறையின் மேற்கூரை விரிசலுற்று மழை நீர் இடைவிடாது நீரோடை போல ஒழுகுகிறது; இது உடனடியாக சரி செய்யப்படவில்லையென்றால், எடை மிகுந்த கூரை உடைந்து விழுந்து அதனடியில் நொறுங்கி அவர் உயிர் விடக் கூடும். நிச்சயமாக அப்படியான ஒன்று தனக்கு நேரும் என்ற அச்சம் அவருக்கில்லைதான். காரணம், அவர் மகள் ஒரு மகாராணி, அவர் மருமகன் பரந்த இதயம் கொண்ட பெரிய மனதுக்காரன். எனவே – இத்யாதி இத்யாதிகள்…. 

கணவனோ மகனோ உடனில்லாத நிராதரவான ஒரு விதவை, தன் மகளின் தோற்றத்தை மட்டுமே பலமாகக் கொண்டு வசதியான குடும்பத்தின் வீட்டிற்குள் அவளை அனுப்பி ஒப்படைத்ததில் வெற்றி கண்டவள். ஆனால் அந்த நற்பெண்மணி கிடைக்கும் சிறிய சந்தர்ப்பங்களில் கூட இவ்விஷயத்தில் தன்னுடைய சாதூர்யத்தை சுட்டிக் காட்டி பெருமைப்பட்டுக் கொள்வதை நிறுத்துவதேயில்லை. அப்படியான சந்தர்ப்பங்களையும் அவர் எப்படியும் தேடிப் பிடித்துவிடுகிறார்.

நமீதாவின் அம்மாவிடமிருந்து புதிய கடிதமொன்று வரும்போதெல்லாம் அஜீத் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொல்வான், “அதை ஏன் சிரமமெடுத்து படிக்கனும்? நான் போய் மணியார்டரை அனுப்பிடறேன்”.

நமீதாவின் தலை வெட்கத்தாலும் அவமானத்தாலும் தரை நோக்கித் தொங்கும். அதனால், சில காலம் முன்பு, கட்டுமீறிய கோபத்திலும் வருத்தத்திலும் நமீதா தனக்கு தபால் அட்டைகள் அனுப்பக் கூடாது என்று அம்மாவிற்கு தடைவிதித்திருந்தாள். அதன் பிறகு ரகசியமாக எப்போதெல்லாம் தன்னால் பிடித்திழுத்துச் சேர்த்து வைக்க முடிகிறதோ அப்போது தன் அம்மாவிற்கு அச்சிறு பணத் தொகையை அனுப்பி வைக்கலாம் என்று நினைத்திருந்தாள். இந்நிலையில் – வந்திருக்கும் உறையிட்ட கடிதத்திலும் இதே கதைதான்.

சட்டென்று நமீதா தன் தாயின் மீதான கோபத்தால் தீப்பிழம்பாக மாறினாள். 

ஏன், ஏன் அவர் இப்படி எப்போதும் பிச்சை எடுக்கிறார்?

ஏன் நமீதா தன்னுடைய சுயமரியாதையையும் கண்ணியத்தையும் காப்பாற்றிக் கொள்ள அவர் விடுவதில்லை? இல்லை, இந்தமுறை கடிதமெழுதி மிகத் தெளிவாக தன் அம்மாவிடம் சொல்லிவிடவேண்டும்: “என்னால் இனி எதுவும் செய்ய முடியாது, என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதே.”

சரியாக அப்போதுதான் தன் சாவகாசமான ஞாயிற்றுக்கிழமைக் குளியலை முடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தான் அஜீத். இத்தனை நாள் உளக்கொதிப்பாக இருந்து தற்போது அவமதிப்பினால் கூர் தீட்டப்பட்ட அவளின் கடுஞ்சினம் அவன் மேல் வன்மையாகப் பாய்ந்து தாக்க விரும்பியது. “இந்த லெட்டர் எப்போ வந்தது?”, நமீதா கர்ஜித்தாள்.

அஜீத் தன்னுடைய பிழையின் அளவை மதிப்பிட்டபடி தலை சாய்த்து அவளை நோக்கினான்.

‘இதற்காக இன்னும் கொஞ்சம் கைக்காசு’ என்று நினைத்துதான் அக்கடிதத்தை நமீதாவிடம் கொடுக்கவேண்டியதில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தான்; அதைக் கிழித்துத் தூர வீசிவிடுவதாகத்தான் இருந்தான். மிகப் பெரிய தவறு செய்துவிட்டான்.  

அதற்காக அஜீத் வருந்தி தலைகுனியப் போவதில்லைதான்.

நினைவுகூரக் கடுமையாக முயற்சிப்பவனைப் போன்ற பாவனையில் சொன்னான், “லெட்டரா? எந்த லெட்டர்? ஓஹோ… ஆமா ஆமா… உன் அம்மாவிடமிருந்து ஒரு லெட்டர் வந்தது உண்மைதான். உன்னிடம் கொடுக்கனும்னு இருந்தேன், எப்படியோ முடியாமப் போச்சு.”

“ஏன் உங்களால் கொடுக்க முடியாம போச்சு? ஏன்? ஏன்? பதில் சொல்லுங்க, ஏன் அதை எங்கிட்ட கொடுக்க முடியாமப் போச்சு?”

“ஏன் இப்படி நச்சரிக்கிற?”, அஜீத் சொன்னான். “நான் மறந்துட்டேன் – வேறென்ன?”

“பொய்!” நமீதா பாம்பைப்போலச் சீறினாள்.

“ஏன் நீ உன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுற? மனிதர்களுக்கு மறதியே வராதா?”

“இல்லை, வராது! என் லெட்டரை நீங்க ஏன் திறந்தீங்க?”

இந்தக் குற்றச்சாட்டை அஜீத் காற்றில் கலைத்துவிட முயற்சித்தான். “நான் திறந்தா என்ன? என் சொந்த மனைவியோட லெட்டரை..”

“பேசாமயிருங்க, கொஞ்சம் பேசாம இருங்க… நான் பேசறேன். என்ன காரணத்துக்காக நீங்க எனக்கு வரும் லெட்டரையெல்லாம் திறக்கணும்? கூடாதுன்னு உங்களிடம் நான் ஒரு ஆயிரம் முறையாவது சொல்லியிருக்கேன் இல்லையா?”

நமீதாவின் கோபத்தை கண்டு அஜீத் அஞ்சுவதில்லை ஆனால் அவளுடன் சண்டையிடுவதற்கு அச்சப்படுவான். அதனால் அவன் ஒரு அசட்டுத்தனமான சிரிப்பைக் காட்டிச் சொன்னான், “நீ இதைத் தடுக்கிறாய் என்றால் நிச்சயமா அதுல ஏதோ இருக்கு. உனக்கு யாரும் ரகசியமா காதல் கடிதங்கள் அனுப்புவதில்லை என்பதை நான் உறுதிபடுத்திக்க வேண்டாமா?”

“போதும் நிறுத்துங்க! என்னவொரு கீழ்த்தரமான அசிங்கமான மனுஷன் நீங்க!”

இதற்குப் பிறகு தன்னுடைய பொய்யான புன்னகையை அஜீத்தால் தொடரமுடியாது. அவனும் விஷமேறிய கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டான். அவன் சொன்னான், “ஓ அப்படியா! இரவும் பகலும் மருமகனிடம் உள்ளங்கைகளை விரித்து பிச்சை கேட்டுப் புலம்புறவங்க உயர்குடி மக்கள்! சாணி அள்ளுபவனின் மகள் மகாராணி ஆகிட்டாள், அப்புறம்…”

“வாயை மூடு!” நமீதா உரக்கக் கத்தினாள்.

அவர்களின் அறை மூன்றாவது மாடியில் இருக்கிறது, அந்த வகையில் அது ஓர் ஆசீர்வாதம்தான். இல்லையென்றால் அந்தக் கத்தலுக்கு அத்தனை பேரும் என்னவென்று பார்க்க வந்திருப்பார்கள்!

“வாயை மூடணுமா?” அஜீத் இரைந்தான். “எதுக்கு மூடணும்? நான் இப்போ தெளிவாவே சொல்றேன்! நான் அப்படித்தான் உனக்கு வரும் லெட்டரையெல்லாம் பிரிப்பேன். எனக்கு என்ன தோணுதோ, எது விருப்பமோ அப்படித்தான் செய்வேன். நீ என்ன பண்ணுவ? உன்னால எதாவது பண்ண முடியுமா?”

“என்னால முடியாதா? என்னால எதுவுமே பண்ணமுடியாதா?” கிட்டத்தட்ட மூச்சுத் திணறலில், நமீதா ஒவ்வொரு வார்த்தையாகத் தெளிவாக உச்சரித்தாள்: “என்னால எதாவது செய்ய முடியுங்கிறதை நீங்க பார்க்க விரும்புறீங்களா?”

அவள் உடனடியாக திகைப்படையச் செய்யும் செயல் ஒன்றைச் செய்தாள். மேஜையின் மேலே அஜீத்தின் சிகரெட்டுகளுக்கு அடுத்து இருந்த அவனின் தீப்பெட்டியை வெடுக்கென எடுத்தாள், விஷ்ஷ்ஷ்ஷ்.…! ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து தன் புடவையின் மீது வைத்தாள்.

ஒரு பணக்கார மனைவியின் மிக நேர்த்தியான புடவை முந்தானை சட்டெனத் தீப்பற்றிக் கொண்டது. 

அடுத்த கணமே, “உனக்கென்ன பைத்தியம் பிடிச்சு போச்சா?” என்று சொன்னபடி அஜீத் அவள் பக்கம் பாய்ந்து எரிந்து கொண்டிருக்கும் சேலைப் பகுதியைத் தன் கைகளுக்கிடையில் இழுத்துத் தட்டி நெருப்பை அணைத்தான். 

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவன் இப்போது கொஞ்சம் பயந்து போயிருந்தான். அவன் நமீதாவின் முகத்தை நடுக்கத்துடன் பார்த்தான். பிரகாசமாக, சுடரும் சிவப்பில் நெருப்பொன்று அங்கே இன்னும் எரிவதைக் கண்டான். 

அந்த நெருப்பை தன் கைகளால் தட்டி அணைக்கும் தைரியம் அவனுக்கு இல்லை, அதனால் அவன் அதன் மீது நீரை ஊற்ற முயன்றான். மிகுந்த சிரமத்துடன் அவன் இயல்பாகப் பேசுவதற்கு முயற்சி செய்தான். “உனக்கு கோவம் வந்துட்டா சுய நினைவை இழந்துடற, இல்லையா? ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கோவம்! ஊஃப்ப்ப்….”

அதற்கு நமீதா என்ன சொல்லியிருப்பாள் என்று யாரால் ஊகிக்க முடியும், அந்த நேரத்தில் நாத்தனார் ரினி அறைக்குள் அடியெடுத்து வைத்துவிட்டாள்.

உள்நுழைந்ததுமே துளைக்கும் தொனியில் சொன்னாள், “அண்ணி, எவ்வளவு நேரம் டோபி உங்களுக்காகக் காத்திருக்கிறது? உங்க துணி எதுவும் அவனிடம் கொடுக்கப்போவதில்லைன்னா அதையாவது அவனிடம் சொல்லி அனுப்புங்க!”

ஒன்றிரண்டு நொடிகளுக்கு நமீதா அசையாது அப்படியே நின்றாள், கீழே அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் சலவைக்காரனின் முகத்தை நினைவுக்குக் கொண்டுவந்திருப்பாளாக இருக்கலாம். பிறகு அழுக்குத் துணிகளை எடுத்து அவற்றைப் பிரிக்கத் தொடங்கினாள். “நான் இப்போ வரேன்னு அவனிடம் சொல்லு. துணிகளை எடுத்து வரேன்.”

நமீதா எப்போதும் தன் மனதிலிருப்பதைப் பேசிவிடுபவள், அதனால் அவள் முகத்திற்கு நேரே அவளை யாரும் தாக்கிப் பேச முடியாது. ஆனால் கூரான சொற்களால் அவளை லேசாக நெருடுவார்கள். அவளது இரண்டாவது நாத்தனார் காலைநேர வேலைகளினால் கிட்டத்தட்ட முழுதாக சோர்வடைந்திருந்தாள், இவளைப் பார்த்ததும் வியர்வை அப்பிய தன் முகத்தில் கோணலான ஒரு புன்னகையைக் காட்டிச் சொன்னாள், “நல்லது, எப்படியோ குறைந்தபட்சம் கீழே இறங்கி வரலாம்னாவது முடிவு பண்ணிட்டீங்களே! ஆண்டவா! உங்களுக்கு நேரங்காலமே கிடையாதே, ஒரு சின்ன வாய்ப்பை எப்படியாவது பிடிச்சு உங்க ரூமுக்கு போய் கணவனோடு கொஞ்சிக் குலவத் தொடங்கிடுவீங்களே. காதல் பேச்செல்லாம் எப்பவுமே பழசாகிடாது போல?”

நிலைமையை எடை போட நமீதா ஒருமுறை தன்னைச் சுற்றிப் பார்த்தாள். காலை நேர அதிரி புதிரிகளையும், இரண்டு பக்கமும் நெருக்கும் மனிதக் கூட்டத்தையும் பார்த்தாள். அவள் குரலில் பதற்றம் இருக்கக் கூடாது. அதனால் அவளும் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்து மிகவும் மென்மையான குரலில் சொன்னாள், “ஓ… அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க எப்போவாது வந்து எட்டி பார்க்கணும். எங்க பேச்செல்லாம் எப்பவுமே சண்டைப் பேச்சுகள்தான், தெரியுமா உங்களுக்கு?”

இரண்டாவது அண்ணி ஹூஹூ என்று சிரித்துச் சொன்னாள், “போதும் நிறுத்து ஓரவத்தி, ஆனைய இடுப்பில கட்டி முறத்தாலே மறைப்பாளாம். நாங்க ஒன்னும் கழுதைப் புல்லை தின்னு வளரலை. நாங்க எதுக்கு எட்டி பார்க்கனும்? இருபத்தி நாலு மணிநேரமும் நீயேதான் எங்க கண்ணு முன்னாலே காட்டுறியே – “

தன் வெளுப்பான முகத்தில் கவர்ச்சியான சிவப்பு தோன்றச்செய்யும்படியான ஒரு சிரிப்பைச் சிரித்தாள். அப்படியான ஒரு சிரிப்பை சிரித்து முடித்ததும் சொன்னாள், “மேலே சொல்லுங்க. ரொம்ப குறும்பான விஷயங்களைத்தான் நீங்க பேசுவீங்க…”

எப்போதும் வேலையாயிருக்கும் பெரிய அண்ணி அங்கிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். “காய் கறியெல்லாம் வெட்டி முடிச்சிட்டீங்களா இல்லை வெட்டியா கதை பேசிகிட்டு இருக்கீங்களா?” சட்டெனெ ஓட்டத்தை நிறுத்தி பிறகு கேட்டார். “அதென்ன? ஓ அதென்ன அபசகுனம்? சின்னவளே உன் முந்தானை ஏன் இப்படி கரிஞ்சு போயிருக்கு?”

நமீதாவும் வேலையைத் தொடங்கியிருந்தாள், ஆனால் ஒரு நொடிதான். அடுத்த கணமே, தன் முந்தானையை வேகமாக பின்னால் மடித்துவிட்டுச் சிரித்தபடி சொன்னாள், “ ஓ… அதை ஞாபகப்படுத்தாதீங்க!  நீங்கள் என்னை எச்சரித்தபடியே நடந்துபோச்சு. உங்க பேச்சை நான் கேட்கலை, இப்போ என்ன ஆச்சு பாருங்க! அடுப்பிலேர்ந்து தண்ணீ கொதிக்கும் பாத்திரத்தை முந்தனையால பிடிச்சு தூக்கினேன் இப்படி ஆகிடுச்சு.”

நமீதா உருளைக்கிழங்குகள் இருந்த கூடையை தன் பக்கமாக இழுத்து அவற்றை உரிக்கத் தொடங்கினாள். தன் மனதில் அம்மாவிற்கு ரகசியமாகக் கொஞ்சம் பணத்தை அனுப்பவது எப்படி என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள். அவள் அம்மாவிற்கு அவளால் நிச்சயமாக இப்படி எழுதி அனுப்ப முடியாது: “என்னால் இனி எதுவும் செய்ய முடியாது, என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதே.” 

அங்கே முழுக் கிராமத்திற்கும் தெரியும் நமீதா ஒரு ராணியென்றும், அவள் கணவன் பரந்த இதயம்கொண்ட பெரிய மனதுக்காரனென்றும். 

இதனால் – மிகச் சரியாக இதனால்தான் நான் பெண்களை தீப்பெட்டிகளுடன் ஒப்பிடுவேன். எத்தனையோ பொங்கிச் சீறும் தீயைப் பற்ற வைக்க தங்களிடம் தேவையான மூலப்பொருட்கள் இருந்தாலும் அவை தாமாகப் பற்றிக்கொள்வதில்லை, ஆண்களின் பெருந்தன்மை பெரிய மனது என்ற முகமூடிகளையும் கொழுந்துவிட்டு எரித்துவிடுவதில்லை. தங்களைப் போர்த்திருக்கும் வண்ணமயமான ஓடுகளைக் கூட தீயிடுவதில்லை. 

அவை தங்களையே எரித்துக் கொள்ளாது – ஆண்களுக்கும் இது தெரியும்.

அதனால்தான் அவர்கள் அவற்றை அக்கறையில்லாமல் சமையலறையிலும் உத்திரத்திலும் படுக்கையறையிலும் அங்கும் இங்கும் எங்குமென கிடத்தி வைத்திருக்கிறார்கள்.  

சற்றும் எந்த பயமுமின்றி தங்கள் பாக்கெட்டுகளுக்குள்ளும் போட்டுக் கொள்கிறார்கள்.

தன்னிரங்கல் - ஆஷாபூர்ண தேவி

 வங்காள சிறுகதை:




அபினாஷ் தூங்கிக்கொண்டிருக்கும்போது நள்ளிரவில் திடீரென மோசமானதொரு அசெளகரியத்தை உணர்ந்தார். 

அவர் விழித்துக்கொண்டார். தன் கை கால்கள் வியர்வையில் நனைந்திருப்பதை உணர்ந்தார், அவர் கழுத்தின் கீழிருந்த தலையணை ஈரத்தில் தோய்ந்திருந்தது. எழுந்து உட்கார முயன்றார், அவரால் முடியவில்லை. தலையைத் தூக்கித் தலையணையைத் திருப்பி போடுவது நல்லது என்று நினைத்தார் ஆனால் தன்னால் அதை தற்போது செய்ய இயலாது என்பதை உணர்ந்துகொண்டார். அவரால் கைகளையோ கால்களையோ அசைக்க முடியவில்லை, அவை கல்லைப்போல மரத்துப் போயிருந்தன. 

கிட்டத்தட்ட அறுபதை நெருங்கிவிட்ட நிலையில், தன் வாழ்க்கையில் அத்தனையையும் பார்த்துவிட்டார்— இந்த உணர்தல் அவர் மூளையின் ஒவ்வொரு நரம்பிலும், ஒவ்வொரு அணுவிலும், ஒவ்வொரு திசுவிலும் கூர்முனை வாள் ஒன்றை நுழைத்ததைப்போல ஒரு கேள்வியைச் சொருகியது.

எனக்குப் பக்கவாதம் வந்துவிட்டதா? என் நெஞ்சில் மூச்சை நிறுத்தும் இந்த வலி? இந்த வியர்வை, கைகளிலும் கால்களிலும் இந்த உணர்வின்மை – இது எல்லாமே பக்கவாதத்திற்கான அறிகுறிகள்தான்!

சமநிலையிழந்து, பயத்தில் அபினாஷ் யாருடைய பெயரையோ கூவி அழைக்க முயன்றார் – அது அவருடைய மூத்த மகனின் பெயராகவோ அல்லது இளைய மகனின் பெயராகவோ, அவரது பேத்திகளில் ஒருவராகவோ, அல்லது ஷைலோபாலாவாகக்கூட இருக்கலாம்! இல்லை, அது ஷைலோபாலாவாக இருக்க முடியாது, அவர் ஷைலோபாலாவை பெயர் சொல்லி எப்போதாவது அழைத்திருக்கிறாரா என்ன, அவரது உதடுகளிலிருந்து அப்பெயர் எப்படி வெளிவரும்? இத்தனை நாள் பழக்கத்தில் இல்லாத ஒன்றை, இது இறுதி மணித்துளி என்றாலும்கூட செய்துவிடமுடியாது. அதனால்தான் மாமுனிகள் நாமங்களை எப்போதும் உச்சரித்துத் தொடர்ந்து ஒத்திகை செய்யவேண்டும் என்கிறார்கள்.

அபினாஷ் அதைப் பயிற்சி செய்தவரில்லை, அதனால் தனக்குப் பழக்கமான ஒரு கூப்பாட்டை எழுப்பினார். அவர் யாரை வேண்டுமானாலும் அழைத்திருக்கலாம், ஆனால் அது யாருடைய காதுகளையும் சென்று சேரவில்லை: அவரது கூச்சல் உள்ளுக்குள்ளேயே இடித்து மோதிச் சுருண்டது; அவரது தொண்டையிலிருந்து ஒரு சப்தமும் வெளிவரவில்லை.

அபினாஷை முடக்குவாதம் தாக்கிவிட்டது என்று இதற்கு அர்த்தம். அவர் சற்றும் எதிர்பார்த்திராதபோது ஒரு திடீர் தாக்குதல். படுக்கையில் படுக்கும்வரை, அவ்வளவு ஏன்… தூக்கத்தில் வீழ்ந்த அந்தக் கணம் வரை கூட ஆரோக்கியமாகவும், இயல்பாகவும், நிதானமாகவும் இருந்த அபினாஷை இது எப்படியோ பிடித்துக்கொண்டது. 

பகலில் அவரது அன்றாட வழக்கங்களை எந்த மாற்றமுமின்றிதான் பின்பற்றினார். உடலில் எவ்விதமான வித்தியாசத்தையும் அவர் உணரவில்லை. அதிகாலையில் எழுந்து பூங்காவில் ஒரு நடை சென்றார். வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், எப்போதும்போல், பால் மையத்திற்குச் சென்று பால்காரனுக்கு அவனுடைய கடமைகளை நினைவுபடுத்தித் தன் கண் முன்னாலேயே அவனை பசுவிலிருந்து பால் கறக்கச்செய்து இளைய பேரனுக்காகப் பால் வாங்கிக்கொண்டு வந்தார். 

அப்பேரனின் பெற்றோர்களான அபினாஷின் இளைய மகனும் அவன் மனைவியும் இதைச் செய்யுமாறு அவரிடம் கேட்கவில்லைதான். அவர்கள் பாக்கெட் பாலைத்தான் பயன்படுத்துகிறார்கள். அபினாஷ் அவராகவேதான் இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அலுமினியப் பாத்திரத்தைக்கூட அவர் நடை செல்லும்போதே எடுத்துச் சென்றுவிடுவார். அதைப் பார்த்துச் சிரிப்பவர்களைத் தான் கண்டுகொள்வதில்லை என்று பெருமையாகத் தன் பேத்திகளிடம் சொல்வார். 

அது போகட்டும், இன்றும்கூட வீட்டிற்குத் திரும்பி வந்ததும் தேநீரோடு சிற்றுண்டி சாப்பிட்டார், செய்தித்தாளை வாசித்து முடித்ததும் பெரிய கோப்பையில் இரண்டாவது தேநீரோடு கொஞ்சம் மசாலா தடவிய உருளைக்கிழங்குகளையும் அல்வாவையும் சாப்பிட்டார். தனது வயதான காலத்தில் காலை வேளைகளில் அவர் அதிக பசியுடன் இருப்பதைப் போலத் தெரிகிறது, ஆனால் அவர் எதையும் வெளிப்படையாகக் கேட்பதற்கு வெட்கப்பட்டார். சில சமயங்களில் நந்திதாவின் காலையுணவிற்கென்று தயாராகிக் கொண்டிருப்பதை வாசனையை வைத்தே சட்டெனக் கண்டுபிடித்துவிடுவார். 

அபினாஷ் வழக்கமாக ரொட்டியையும் உருளைக்கிழங்கு கறியையும் தன் காலையுணவாக எடுத்துக்கொள்வார்; அவருடைய மகன்கள் பூரியும் இனிப்பும் உண்பார்கள்; அவருடைய பேத்திகளால் பெரிய பூரியை வேகமாகச் சாப்பிட முடியாது, அதனால் அவர்களுக்கு விழுங்குவதற்குச் சுலபமானவை எதையாவது கொடுக்க வேண்டியிருக்கும். முட்டை வறுவல், நிம்கி, அல்வா, மசாலா உருளைக்கிழங்குகள் போன்றவை…

சில சமயங்களில் இந்த சமையல் நறுமணங்கள் சமையலறையிலிருந்து காற்றுவழி மிதந்து வந்து அபினாஷைத் தொந்தரவு செய்யும். அதன் பிறகு கையில் செய்தித்தாளை வைத்துக் கொண்டே உள் அறைகளை நோக்கி நடந்து செல்வார் — ‘இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டியா? மோடிஹாரி அருகே பேருந்து விபத்தில் கல்யாண கும்பல் ஒன்று இறந்துபோய்ட்டாங்களாம்!’… அல்லது, குரலை உயர்த்திச் சொல்வார், ‘என்ன ஆச்சுனு கேள்விப்பட்டியா? நேற்று ஒரு மிகப் பெரிய நெருப்பு –‘

நிச்சயமாக இப்படிச் செய்திகளை இவர் அள்ளி வழங்குவது ஷைலோபாலா என்ற இலக்கை நோக்கித்தான். அவரால் செய்தித்தாளில் வரும் அரசியல் மற்றும் அதன் சூழ்ச்சிகள் போன்ற உண்மையான செய்திகளைப் பற்றியெல்லாம் அவளிடம் பேசமுடியாது, நாட்டின் பிரச்சினைகளையெல்லாம் தலைவலிகளாகத் தூக்கிச் சுமக்க அவளுக்கு நேரம் கிடையாது. விலைவாசி உயர்ந்தால் அரசு அதிகாரிகளைக் கோபத்தாலேயே எரித்துவிடுவாள், ஓரளவு குறைந்தாலும் மகிழ்ந்துவிடுவாள். அவள் எதையாவது உற்றுக் கவனிப்பாள் என்றால் அது இதுபோன்ற விபத்துகள் பேரழிவுகள் பற்றிய செய்திகளைத்தான்… எனவே செய்ய வேண்டியது என்ன, இந்தத் தலைப்புகள் மட்டுமே விவாதிக்கப்படவேண்டும். ஆனால் சிலநேரங்களில் ஷைலோபாலா ஏதாவது அவசரத்தில் இருக்கும்போது இப்படிச் சொல்லிவிடுவாள், ‘இதைப் பற்றியெல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க, விட்டுடுங்க… எனக்கு வருத்தமாகிடும், அதுவும் இவ்வளவு விடிகாலையில…’

‘வருந்துவேன்’ என்று சொல்வதெல்லாம் வெறும் சாக்குதான் என்பதை அபினாஷ் புரிந்து கொண்டிருக்கிறார்; அவள் வேலையாக இருக்கும்போது இந்தச் செய்திகளைக் கேட்பதற்குக் கூட அவளுக்கு நேரம் கிடையாது. பிறகு சொல்வார், “வெறும் உயிரோடு இருப்பதே தனித்துவமான விஷயம் என்பது போலாகிவிட்டது ஜனங்களுக்கு என்று இதனாலதான் நான் அடிக்கடி சொல்றேன்.” சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அங்கிங்கென உலாத்திவிட்டு மீண்டும் அருகில் வந்து கேட்பார், “அதென்ன, நல்ல வாசமா இருக்குதே! அல்வா கிண்டுறியா? … உருளைக்கிழங்குகளை வறுக்கிறாயா? முட்டை வறுவல் செய்யுறதைப் போல வாசம் வருதே. எதுல நீ இதையெல்லாம் வறுக்கிறாய்? நெய்யிலா இல்லை கடுகெண்ணெய்யிலா? நல்ல மணமா இருக்கு.”

அவரின் இந்தச் சாடைக் குறிப்புகளினாலோ அல்லது ஷைலோபாலாவின் சலுகையாகவோ அபினாஷ் தன்னுடைய இரண்டாவது தேநீர் கோப்பையோடு இரண்டாவது காலையுணவையும் பெற்றுவிடுவார். இன்றும்கூட அவர் அதை மிகுந்த மகிழ்வுடன்தான் அனுபவித்து உண்டார்.

அபினாஷ் தன்னுடைய மனதில் இன்றைய காட்சிகளை ஓடவிட்டுப் பார்த்தார்; எங்கேயாவது பலவீனத்தின் அடையாளம் உடலில் தென்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினார். ஆனால் அப்படி எதையும் அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

இன்று காலையுணவிற்குப் பிறகு அவர் வழக்கம்போல சந்தைக்குச் சென்றார். அதுவும்கூட தினசரி செய்வதுதான்: அவரது மூத்த மகன் காலையில் வேலைக்காரனுடன் கடைத்தெருவிற்குப் போய்ப் பொருட்களை வாங்கி வருவான். அப்படியிருந்தும், ஏதோ அப்பணியை முழுமையாக முடித்துவைப்பதுபோல், மகன்கள் வேலைக்குக் கிளம்பியபிறகு அபினாஷ் சந்தைக்கு மீண்டுமொருமுறை சென்று வருவார். சாப்பிட முடியாதவை, யாரும் தொடக்கூட விரும்பாத சிலவற்றை வாங்கிவந்து அதைப் பெருமையாகக் காட்டுவார்… வாழைத்தண்டுகள், சிறிய கீரைகள், முளைவிட்ட வள்ளிக்கிழங்குகள், துண்டு மீன்கள் – – இதையெல்லாம் யாருமே சாப்பிடுவது கிடையாது. யாரும் சாப்பிடுவது இல்லையென்றால் பிறகு ஏன் இவையெல்லாம் சந்தையில் விற்கப்படுகிறது? எது எப்படியோ, யாரும் சாப்பிடவில்லையென்றால் அபினாஷே அத்தனையையும் சாப்பிட்டுவிடுவார். இதையெல்லாம் உண்பதால் வயிற்றில் அமிலத்தன்மை உண்டாகிறதென ஷைலோபாலாகூட சொல்லத் தொடங்கிவிட்டாள். அதெல்லாம் சுத்த முட்டாள்தனம்; அவள் தன் மகன்களிடமும் மருமகள்களிடம் நல்ல பெயர் வாங்க, அவர்களின் நவீனப் போக்கோடு தன்னை இணைத்துக்கொள்கிறாள், அவ்வளவுதான். அபினாஷ் அவர்களோடு ஒத்துப்போவதில் ஆர்வம் காட்டுவதில்லை. உண்மையில், இதைப் பதிய வைக்கும் விதமாக இன்று காலை தன் மருமகள்கள் முன்னால் அநாகரிகம் என்று அவர்களால் கருதப்படும் சோர்சோரியை தட்டு நிறைய வைத்து உண்டார்.

அதன்பிறகு அன்று மாலை பிஸ்கட்டுகளுடன் தேநீர் அருந்தினார்; தன் இளைய பேத்தியைப் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்ப அழைத்து வரும் கடமையை ஆற்றினார்; தன் இளைய பேரனுடன் பூங்காவிற்குச் சென்றார். தினசரி வேலைக்காரி நடை வண்டியில் அவனை வைத்து தள்ளிக்கொண்டு பூங்காவிற்குப் போகும்போது அபினாஷும் உடன் செல்வார். வேலைக்காரியின் கைகளில் இப்பொறுப்பை விடுவதை அவர் ஒப்புக்கொள்வதில்லை. “எத்தனையோ குழந்தைகள் அடுத்தவர்களோடு பூங்காவுக்கு போறாங்க, ஆனால் யாரோட தாத்தாவும் பாதுகாப்புக்குக் கூடவே போறதில்லையே?” என்று அவர் மருமகள் சிரிப்பைப் பொத்திக்கொண்டு கூறுவாள்.

அவள் என்ன சொன்னாலும் அபினாஷ் எப்படியும் செல்வார், அவர் இன்றும் சென்றார். அதற்குப் பிறகு? அதற்குப் பிறகு வேறென்ன, அவருடைய மகன்கள் ஒருவர் பின் ஒருவராக வீட்டிற்குத் திரும்பினர், அவர்களுக்கு தேநீர் தயாரானது, வழக்கம் போல அவர்களுடன் அவரும் கொஞ்சம் சாப்பிட்டார். சிறிது நேரம் அது இதுவென்று பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவுணவை முடித்துவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டார். இத்தனைக்குமிடையே அபினாஷ் சென் என்று அழைக்கப்படும் அந்த மனிதன் ஆழமான புதைகுழியில் காலை வைத்துவிட்டு அதில் தற்போது மூழ்கிக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் எப்போதாவது தென்பட்டதா?

அபினாஷ் சத்தம் போட மீண்டும் முயன்றார், ஆனால் தொண்டையிலிருந்து எந்தக் குரலையும் அவரால் மேலே உயர்த்த முடியவில்லை. முடக்குவாதம் அவர் முழு உடலையும் ஆட்கொண்டுவிட்டது என்பதுதான் அதற்கு அர்த்தம். ஆனால் அந்த அரக்கன் அவருடைய நாக்கை கூட விட்டுவைக்கவில்லை. 

‘பக்‌ஷாகாட்’, முடக்குவாதம்! இந்த நோய்க்கான பொதுப் பெயரை நினைவிற்குக் கொண்டு வராமல் ஆயுர்வேத மருத்துவத்தின் பக்கங்களிலிருந்து அதிகம் புழக்கத்தில் இல்லாத ஒரு வார்த்தையைக் கையில் எடுத்துக் கொண்டார். “பக்கவாதம்” என்ற வார்த்தையை விட இது அச்சமூட்டுவதாக இருக்கிறது. மிகக் கடுமையான தொனியில் இது ஒலிக்கிறது என்பதானால் இருக்கலாம். ஒருவரது துக்கத்தை எடை போடுவதற்கு அதுவும் அவசியமானதுதான். 

இது கோடைக்காலம்தான் என்றாலும் மாலையில் வீசிய பலமான வடமேற்கு இளங்காற்றுக்குப் பிறகு குளிரத்தொடங்கி விட்டது, அபினாஷிற்கு சட்டென ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்பதால் தன் தலைக்கு மேல் இருந்த ஜன்னல்களை அடைத்து வைத்திருந்தார். அவருக்கு முன்னால் மேஜையின் மீதிருந்த மின்விசிறி சத்தமின்றி நிதானமாகச் சுற்றிக்கொண்டிருந்தது. மிகக் குறுகலான அறை அது, உண்மையில் அதைப் படுக்கையறை என்றே கணக்கில் கொள்ள முடியாது. அதனால் கூறையில் மின் விசிறி பொருத்தப்படவில்லை. அதற்கு அவசியமுமில்லை, மற்ற ஜன்னல்களையும் திறந்து வைத்திருந்தால் ஆளையே தூக்கிக் கொண்டு போகுமளவிற்குப் பலமான காற்று வீசும்; இன்று அந்த ஜன்னலின் ஒரு பக்கம் மூடப்பட்டிருந்தது. 

ஷைலோபாலா படுக்கைக்குச் செல்லும் முன்னால் இதையெல்லாம் கவனித்துக் கொள்வாள். அவள் வெகுதொலைவு சென்றுவிடப் போவதில்லைதான், உடல் நீட்டி அவள் படுக்குமிடம் அடுத்த அறையிலேயேதான் இருக்கிறது. இந்த அறையோ மிகச்சிறியது, அடுத்த அறைக்கும் இதற்குமிடையே ஆன தூரமும் மிகக் குறைவே. இவ்விரண்டு அறைகளுக்கான கதவுகளும் எப்போதும் திறந்தேதான் இருக்கும். வாசற்படியில் ஒரு திரைச்சீலை மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கும்… இருப்பினும், இந்த இடைப்பட்ட தூரம்தான் அளவிடமுடியாது எவ்வளவு நீண்டிருந்தது.

அபினாஷின் மூத்த மகனின் மகள்கள் வளர்ந்தபிறகு அவர் தனது நீண்ட நாள் பழக்கமான, அவரது தனக்கே தனக்கான பொக்கிஷம் ஒன்றை இழந்துவிட்டார்: ஷைலோபாலாவின் அருகாமை. மிக அற்பக் காரணத்திற்காக அவர் அதை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது: அப்பெண்களின் பெற்றோருக்கு இவ்வீட்டிலுள்ள பங்கென்பது ஒரேயொரு அறைதான். வளர்ந்த இரண்டு சிறுமிகளுடன் ஒரே அறையில் தூங்குவது அவ்வளவு உகந்ததல்ல, எனவே நடைமுறைக்குத் தக்க ஒழுங்கு முறைகளைக் காப்பாற்றும் பொருட்டு ஷைலோபாலாவே இத்தகைய ஏற்பாட்டைச் செய்தார்.

இந்தத் தொன்மையான வீட்டில், தன் திருமண வாழ்வின் முதல் இரவில் மலர்கள் தூவிய படுக்கை விரிக்கப்பட்டிருந்த, இதுவரையிலும் தன் எல்லா நாட்களையும் கழித்த அந்த அறையிலிருந்து அபினாஷ் பெயர்த்து வெளியேற்றப்பட்டார். அவர்களின் திருமணத்தன்று அவர்களுக்குக் கிடைத்த மிகப் பழமையான ஜோடி கட்டிலில் தற்போது ஷைலோபாலா தனது இரண்டு பேத்திகளோடு மிகுந்த மகிழ்ச்சியோடு தூங்க, அபினாஷோ இந்தக் குறுகிய அறையில் குறுகிய கட்டிலில் கிடக்கிறார்.

இந்த ஏற்பாடு முதன்முதலில் விவாதிக்கப்பட்டபோது, அபினாஷின் தலையில் பெரிய இடியொன்று விழுந்தது, ஆனால் ஷைலோபாலா முன்னரே எச்சரிக்கை செய்திருந்தாள்: “நல்லா கவனமா கேளுங்க, இதுக்கு எதிரா ஒரு வார்த்தை கூட சொல்லிடாதீங்க. அப்புறம் கடைசி வரைக்கும் இது தாளமுடியாத அவமானமாகிடும்.” அதனால் அபினாஷ் தனது உதடுகளை சாவியிட்டு பூட்டிவிட்டார். தன்னுடைய துக்கம், கோபம், தற்பெருமை, பேரவமானம் அத்தனையையும் அவரது மனதின் ஓரத்தில் ஒதுக்கிப் பதுக்கப்பட்டுவிட்டது.

 அவருடைய மூத்த மகன், “ஒரு வகையில உண்மையிலேயே இந்த அறை சிறப்பானதுதான் என்று நினைக்கிறேன். தெற்கு பக்கமா ஒரு பெரிய ஜன்னால் இருக்கு, மத்த அறையில் இதுபோல இல்லையே” என்று சொன்னபோது, அபினாஷ் செய்தித்தாளை உயரே தூக்கி தன் முகத்திற்கு நேரே பிடித்துக்கொண்டார். 

“அந்த அறை எப்பவுமே குப்பைக்கூளமாக இருந்ததால அது எவ்வளவு அழகானது என்பது தெரியாமலே போயிடுச்சு. கிழக்கிலும் தெற்கிலும் இருக்கும் ஜன்னல்களைத் திறந்து வெச்சா, வீசும் மென்காற்று உங்களை அப்படியே தூக்கிடும் இல்லையா அப்பா,” என்று தன் மருமகள் சுட்டிக்காட்டியபோது, அபினாஷ் சொன்னார் – “மருமகளே, உன் சலவைக்காரன் எப்போ வருவான்?”

நிச்சயமாக ஷைலோபாலா இதையெல்லாம் புரிந்துகொள்வாள், அபினாஷின் வெளியேறும் மூச்சில் சிறு மாற்றம் இருந்தாலும் அதை ஷைலோபாலா தன் ஒவ்வொரு எலும்பினூடாகவும் உணர்வாள். ஆனால் தான் புரிந்துகொண்டதாக அவள் காட்டிக்கொள்வதில்லை. இதையெல்லாம் காணும் ஞானம் தனக்கில்லை என்பதைப் போல பாசங்கு செய்யப் பழகிக்கொண்டாள். இருப்பினும், தற்போது அபினாஷ் தன்னுடைய கடைசிக் கடுந்துயரக் குரலை எழுப்பி அவர்களது காதுகளை எட்ட முயற்சித்தார். அவர் சொல்வதையெல்லாம் அக்கறையோடு கவனிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று நினைப்பவர்களின் காதுகள் அவை.

ஆனால் அது அவர்களை எட்டவில்லை. அவரது உச்சபட்ச முயற்சியும் கூட பலனற்றுப் போனது; அவருக்கு வியர்வை திரண்டது. துக்கத்திலும் வலியிலும் அவர் சத்தம் போட்டுக் கத்த முயன்றார். ஆனால் அவரது தொண்டையிலிருந்து ஒரு முனகல் சத்தம் மட்டுமே வெளிப்பட்டது, ஏதோவொரு காட்டு விலங்கின் அழுகுரலினைப் போல. 

தற்போது அபினாஷிற்கு அவரது மூத்த பேத்தியின் குரல் கேட்டது, “பாட்டி…ஓ பாட்டி… தாத்தா வித்தியாசமா ஏதோ சத்தம் போடுறார்.”

அப்படியானால்,ஷைலோபாலா இன்னமும் ஆனந்தமான ஆழ்துயிலில் தன்னை இழந்துவிட்டிருக்கிறாள், அவரின் குரல் உறக்கத்தின் ஆழத்தில் இருக்கும் அவளைப் போய்த் தொடவில்லை… ஒஹ், அபினாஷ் இங்கே சில அடி தூரத்தில் மரண வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறான்,  ஆனால் ஷைலோபாலாவோ… 

அதன் பிறகு அவரது மார்பில் ஏதோவொன்று உருண்டு திரண்டது… நல்லதுதான், ஷைலோபாலாவும் அவள் மகன்களும் தங்களின் நிம்மதியான உறக்கத்திலிருந்து விழித்ததும் இந்த அபினாஷின் செத்துப்போன முகத்தைக் காணட்டும். தன் மனைவி மகன்களின் மீது அவர் இப்படியொரு சாபத்தை மனதில் உருவாக்கிய அதே நேரத்தில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தோடியது.

ஆனால் அபினாஷின் சாபம் பலிக்கவில்லை. அடுத்த கணமே ஷைலோபாலவின் சற்றுமுன் விழிப்புற்ற குரல் கேட்டது – – “ஓஹ்… மா… இது என்னது!”

அதன் பிறகு திரை விலகியது, அதன் அருகில் ஷைலோபாலாவின் தலைவிரி கோலமான தோற்றம் தென்பட்டது. 

அபினாஷ் கண்களை மூடிக்கொண்டார். கண்ணீர் மல்கிய தன் கண்களை ஷைலோபாலாவிடம் காட்டுவதற்கு அவருக்கு விருப்பமில்லை. அபினாஷ் கண்களை மூடிக் கொண்டிருந்தாலும், அவருடைய இரண்டு பேத்திகளும் அறைக்குள் வந்திருப்பதையும், அவர்களில் இளையவள் உரத்த குரலில் — “பாபி பாபி, காகு காகு” என்று சத்தமிட்டபடி ஓடுவதையும் அவரால் உணரமுடிந்தது. 

ஷைலோபாலா அவரின் குறுகலான கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அவரது வலதுகை மணிக்கட்டைத் தாங்கி அதில் நாடித்துடிப்பைப் பரிசோதிப்பதை அவர் உணர்ந்தார். அவள் ஒரு ஆயுர்வேத மருத்துவரின் மகள், உடல் ஆரோக்கியம் குறித்த விஷயங்களில் தீர்க்கமான, உள்ளார்ந்த புலனுணர்வு கொண்டவள்; அந்த அறிவை உடனடியாக பயன்படுத்தக் கூடியவள். யாருக்காவது உடல் நலமின்றி போகும்போதெல்லாம் ஷைலோபாலா செய்யும் முதல் விஷயம் அவர்களின் நாடித்துடிப்பைத் தொட்டுப் பார்ப்பதுதான். 

ஷைலோபாலா அவரது கையை மெல்லத் தாழ்த்தி கவனமாகப் படுக்கையின் மீது வைத்ததையும், இப்போது அவரை நெட்டித் தள்ளி “உங்களுக்கு கேட்குதா” என்று சத்தமாக அழைப்பதையும் அவர் உணர்ந்தார். “ஓ… உங்களுக்கு கேட்குதா இல்லையா? என்ன பண்ணுது உங்களுக்கு? எங்க வலிக்குது? ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா?”

அபினாஷ் நினைத்தால் அவரால் தன் கண்களைத் திறக்க முடியும், கண் இமைகள் முடங்கிப் போய்விடவில்லை. ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. வேதனை மிக்க இக்குரலை அவர் அனுபவிக்கத் தொடங்கிவிட்டார். “உங்களுக்கு கேட்குதா? அய்யோ என்ன வலி என்று சொல்லுங்க?” … அதோடு ஷைலோபாலாவின் அன்பான தொடுதலும் கூட. ஆனால் கனவினைப் போன்ற இந்த இன்பம் நெடுநேரம் நீடிக்கவில்லை, அவரது இரண்டு மகன்களும் அறைக்குள் நுழைந்தனர். அபினாஷ் தனது கண்களை மூடியிருந்தபோதிலும் ஒருவன் சில்க் லுங்கியிலும் மற்றொருவன் கோடுபோட்ட பைஜாமாவிலும் இருப்பதை பார்க்க முடிந்தது. அடியெடுத்து வைத்து அப்பாவின் படுக்கையை நெருங்கி வந்து குனிந்து முகத்தைக் கீழே இறக்கி சத்தம் போட்டு அவரை அழைத்தனர், “அப்பா… அப்பா…” பிறகு குரலைத் தாழ்த்தி கேட்டனர், “என்ன ஆச்சு?”

 ஷைலோபாலவின் பதில் அவருக்குக் கேட்டது, “தெரியல. ரிங்க்கு என்னை எழுப்பி தாத்தா ஏதோ வித்தியாசமா சத்தம் போடுறார்னு சொன்னா. நான் வந்து அவரை கூப்பிட்டுப் பார்த்தேன், அவர் பதிலெதுவும் சொல்லலை.”

ஆனால் ஏன் அவளது குரல் இப்படி மாறிவிட்டது. ஏன் அவளது குரலில் துக்கம் பீறிட்டு வெடிக்கவில்லை? ஒரு கணத்திற்கு முன்னால் இருந்த வருத்தம் கூட இப்போது போய்விட்டது, அவள் மிகவும் நிதானமடைந்துவிட்டதைப் போலத் தெரிகிறது. அதன் அர்த்தம் அவள் தன் மகன்களுக்கு முன்னால் அழுதுவடியக்கூடாது என்பதே. அதாவது தன் கணவனுக்காகக் கவலைப்படுவதென்பது ஷைலோபாலாவைப் பொறுத்தவரையில் ஒரு தாழ்வான செயல். ஆமாம், சரிதான், அபினாஷ் முன்பொருமுறை கூட இதை கவனித்திருக்கிறார். 

மூத்த மகன் மீண்டும் அழைத்தான்: அபினாஷ் அசையவில்லை. மகன்கள் மருத்துவரை அழைப்பதைப் பற்றிய உரையாடலைத் தொடக்கினார்கள். 

கண்களின் மீதிருக்கும் இந்த இரண்டு சிறிய இலைகள் இப்படியொரு பாதுகாக்கும் சல்லடைத் திரையாக இருக்குமென்றும் அதன் மறைவில் ஒருவர் இந்தளவு பதுங்கிக்கொள்ளமுடியும் என்பதும் யாருக்குத் தெரியும்.

பெருத்த வருத்தத்துடன் அபினாஷ் தன்னுடைய நெஞ்சில் ஏற்பட்ட கடுமையான வலி தற்போது குறைந்துவிட்டது என்பதை உணர்ந்துகொண்டார், தன்னால் இப்போது பேசமுடியும் என்று தோன்றியது அவருக்கு. “தயவுசெய்து வேண்டாம்பா …இந்த நடுவிரவில் டாக்டர்-கீக்டர் என யாரையும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் அப்பா இப்போது இறக்கப்போவதில்லை” என்று கூறி ஒற்றை மூச்சில் அவர்கள் கவலை அத்தனையையும் அவரால் ஊதித் தள்ளிவிடமுடியும். 

அவரது நிலைமை சற்று முன்னேறிவிட்டது, அவரால் இப்போது பேச முடியும் என்றும் நினைத்தார். ஆனால் அபினாஷ் பேச முயற்சிக்கவில்லை, பற்களை ஒன்றாக இறுக்கி ஒட்டி, கண்களை அடைத்து அசையாமல் அப்படியே படுத்திருந்தார். 

அது ஒரு திகிலூட்டும் முன்னுணர்தல்தான், ஆனால் அவருக்கு உறுதியாகத் தெரியும் – அவர் இப்போது வாய்திறந்து பேசினால் அவர்களின் முன்னால் மிகவும் தாழ்வுற்றவராக மாறி இளக்காரமானவராகத் தெரிவார். இல்லை, அவருடைய மதிப்பு இப்போது சட்டெனக் குறைந்துபோவதில் அவருக்கு விருப்பம் இல்லை. அதற்குப் பதிலாக அவர் அப்படியே கண்களை மூடிப் படுத்துக் கிடக்க, மருத்துவர் வந்து பரிசோதனைகள் செய்து, அவரை பெயர் சொல்லி அழைத்துப் பார்த்தும் பதிலெதுவும் வராததால் தன்னுடைய அனுமானங்களைச் சைகைகளாலும் அசைவுகளாலும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவார். ‘இது மூளையில் ஏற்பட்டிருக்கும் இரத்தக்கசிவாக இருக்கலாம்.’ அவர் உத்தரவு கொடுப்பார்: ‘அவரை படுக்கையிலேயே வைத்திருங்கள். முழுமையான ஓய்வு வேண்டும்.’ 

அதன் பிறகு என்ன? அவரது மகன்களால் இனி தன் அப்பாவின் மேல் அக்கறையில்லாமல் இருக்க முடியாது. ஷைலோபாலா? இது ஷைலோபாலாவிற்கு ஒரு பொருத்தமான தண்டனையாக இருக்கும். பேத்திகளுடன் அவளுடைய படுக்கையில் படுத்து நிம்மதியாக உறங்குவதற்கு முன்னர், ஏனோதானோவென அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு கடமையாக, வெறும் உதட்டுச் சேவையாக, மின்விசிறியை இயக்கவோ அல்லது ஜன்னலை மூடவோ, ஒருமுறையோ இருமுறையோ மட்டும் இவருடைய அறைக்குள் வந்து போவது இனி நடக்காது. அவளது ஆற்றல் அத்தனையும் அவளது வாழ்விற்காகவென மட்டுமே செலுத்துவதும் இனி தொடராது. 

அவரது சல்லடைத் திரைக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டு அபினாஷ் மருத்துவருக்காகக் காத்திருக்கத் தொடங்கினார். ஆனால் அவரது காத்திருப்பு வெற்றிகரமானதாக அமையவில்லை. தான் சொல்லியிருக்க வேண்டிய வார்த்தைகளை அப்படியே ஷைலோபாலாவின் குரல்களில் கேட்டார் அபினாஷ், “இருக்கட்டும் விடு, கோக்கா. டாக்டரைத் தேடி இப்பவே அவசரமா போக வேண்டிய அவசியமில்லை.”

இளைய மகன் சொன்னான், “டாக்டரிடம் காட்டாமல் இருப்பது சரியா இருக்குமா?”

“ஆமாம். அவர் ஏதோ ஒரு கெட்ட கனவை கண்டிருப்பார்னுதான் நினைக்கிறேன். அதைப் பற்றிப் பேச அவருக்கு விருப்பமில்லை அவ்வளவுதான் – வேறெதுவும் இல்லை. அவரோட நாடித்துடிப்பும் நல்லாத்தான் இருக்கு.” அவள் ஒரு மருத்துவர் வீட்டுப் பெண், அதைப்பற்றிய பெருமையை வெளிப்படுத்துவதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் அவள் தவிர்ப்பதில்லை. ஓ… என்னவொரு வெட்கமில்லா கொடூரம். தன் மகன்களின் மீதான தன்னுடைய செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இப்படியொரு இரக்கமற்றதனமா?

அவருடைய கை கால்கள் ஆத்திரத்தில் பற்றியெரிந்தன, வார்த்தைகள் கொத்தாக அவர் மனதில் மேலெழுந்தது, ‘உன்னுடைய பெருத்த ஆணவத்தை நான் காண்கிறேன்! திடீரென அனைத்தும் அறிந்தவள் ஆகிவிட்டாய்! நாடித்துடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது! அதை நன்றாகவே இருக்கச் சொல்லிக் கேட்டவன் எவன்?’ அவரது தாறுமாறான நாடித் துடிப்பிற்கேற்ப அவரது கண்கள் மீண்டும் நிறைந்தன. உப்பு நீரினால் உறைக்கத் தொடங்கின, ஆனாலும் அவர் அவற்றைத் திறக்கவில்லை. 

ஷைலோபாலாவின் கவலையற்ற குரல் மீண்டும் கேட்டது, “மின்விசிறியைப் போடு ரிங்கு. ஜன்னலை முழுசா திறந்து வை… பாருங்க, நான் பேசுறது கேட்குதா- – தண்ணீ கொஞ்சம் குடிக்கிறீங்களா?”

தண்ணீர்! அவ்வார்த்தையின் ஒலி அவருக்குள் ஆர்வத்தைத் தூண்டியது, சோர்ந்திருக்கும் அவரது ஒவ்வொரு நரம்பின் எதிர்பார்ப்பு அது. இத் தருணத்தில் அவருக்கு உண்மையிலேயே தேவையானது தண்ணீர்தான் என்பதை உணர்ந்துகொண்டார். இனியும் கண்களை மூடிக்கொண்டிருப்பது உதவாது. எந்த பதிலும் இல்லையென்றால் அவர்கள் தண்ணீர் கொண்டுவர மாட்டார்கள் – – ‘அவரை விடு. தொந்தரவு செய்ய வேண்டாம். அவர் விழித்ததும் தண்ணீர் குடிக்கட்டும்.’ அபினாஷ் கண்களைத் திறந்தார். 

மூத்த மகன் கேட்டான், “அப்பா, தண்ணீ கொஞ்சம் குடிக்குறீங்களா?”

அபினாஷ் தன்னுடைய மூத்த மகனிடமிருந்து இப்படியான ஒரு குரலைக் கேட்டு எத்தனை நாட்கள் ஆகின்றன? கருணை நிறைந்த மென்மையான, அன்பான, இரக்கம் சொறியும் குரல். அவர் தலையசைத்தார் – ‘ஆமாம்’. மூத்த பேத்தி உடனடியாக தண்ணீர் கொண்டு வந்தாள். இதுவும் புதிதுதான். அனைவருக்கும் தெரியும்: தாத்தாவைக் கவனித்துக் கொள்வது எப்போதும் பாட்டியின் பொறுப்புதான்.    

இளைய மகன் சொன்னான், “என்ன ஆச்சு, திடீர்னு?” இந்தத் தொனியும்கூட பல ஆண்டுகள் தொலைவிலிருந்து மிதந்து வருவதாகத் தோன்றியது. 

அபினாஷ் தனது உள்ளங்கைகளைத் திறந்து வைத்துச் சொன்னார், “எனக்குத் தெரியலை! திடீரென எப்படியோ, நான் கொஞ்சம்…”

அப்போதுதான் தனது கைகளை இயல்பாக அசைக்க முடிகிறது என்று அவருக்கு உரைத்தது. அவரால் பேச முடிகிறது என்பதும். மறைவாய் அவர் தன்னுடைய பாதத்தை அசைக்க முயற்சி செய்தார்; அதுவும் நகர்ந்தது. அப்படியென்றால், அபினாஷ் சென் என்றழைக்கப்படும் இம்முதிய மாமனிதர் நன்றாகத்தான் இருக்கிறார்.

இளைய மகன் கேட்டான், “இப்போ சரியாயிடுச்சா? இல்லை டாக்டரை கூப்பிடவா?”

மருத்துவரை அழைக்க வேண்டுமா என்பது ஒரு நோயாளியிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி அல்ல. அது அபினாஷை ஆழமாகக் காயப்படுத்தியது. மீண்டும் ஒருமுறை அவர் கண்கள் கண்ணீரால் நிறைந்தது, அவர் தலையசைத்தார், “வேண்டாம்.”

“அப்படினா கொஞ்சம் முயற்சி செய்து உங்களை நிதானமாக்கிட்டு தூங்க போங்க. கைகளை உங்க நெஞ்சு மேல வெச்சு தூங்கவேண்டாம், அது சில நேரங்களில் இப்படியான ஏதாவது உண்டு பண்ணும்.”

ஷைலோபாலா படுக்கையின் ஓரத்திலிருந்து எழுந்து கசங்கிய விரிப்பை தன் கைகளால் சரி செய்தபடி சாதாரணமாகச் சொன்னாள், “கோக்கா, நீ உங்கிட்ட இருக்கும் மாத்திரைகள்ல ஒன்னை கொண்டுவந்து கொடேன், அந்த அஜீரண மாத்திரைகள்? இது ஒருவிதமான அஜீரணம்னுதான் நினைக்கிறேன்.”

“இது எதிர்பார்த்ததுதான்,” கோக்கா எந்தத் தயக்கமுமின்றி இயல்பாகச் சொன்னான். “இங்கே உள்ளே நுழையும்போது நானும் அதையேதான் நினைச்சேன் – – தனக்கு வயசாகிட்டே போறதை அவர் பொருட்படுத்தறதே இல்லை, சாப்பிடறது குடிக்கிறது போன்ற விஷயங்கள்ல அவர் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கனும். குறைந்தபட்சம் இரவிலாவது அவர் மாம்பழங்களைப் போல எதையாவது சாப்பிடாமல் இருக்கறது நல்லது. சில நேரங்கள்ல அவர் சாப்பிடுறதைப் பார்த்தா எனக்கு கவலையா இருக்குது.”

ஒரு பயங்கர நிலநடுக்கம் அபினாஷை உள்ளுக்குள் உலுக்கியது. மிகக் கவனமாக வார்த்துருவாக்கிய, அவரது நம்பிக்கைகள் மற்றும் ஏக்கங்களின் வலியினால் கண்டடையப்பட்ட அவரது சுயமதிப்பு, தற்போது நொருக்கப்பட்டுவிட்டது. அவர் மதிப்பிழந்தவரானார். பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கண்டதையும் உண்டு நோய்வாய்ப்பட்டுத் துன்புற்று அடுத்தவர்களையும் துன்பத்திலாழ்த்தும் ஒரு வயதானவனாக, மிகச் சில்லறைத்தனமான ஒரு முதியவனாக அவர் மாற்றப்பட்டுவிட்டார்.

ஷைலோபாலா அவருக்கு ஒரு பனியனைக் கொண்டுவந்து சொன்னாள், “அந்த வியர்வையான பனியனை கழட்டுங்க. கோக்கா, புத்து, நீங்க எல்லாம் தூங்கப் போங்க.”

கோக்கா கொட்டாவி விட்டபடி சொன்னான், “என்ன தூக்கம்! இன்றிரவு என்னுடைய தூக்கம் பாழாப்போச்சு.”

புத்து சொன்னான், “ஆமா. நடுராத்திரியில இந்த அமளி – – என்னுடைய வயிறும் கூட ஏதோ குமட்டுவது போலத் தெரியுது. இதற்கு அப்புறமும் என்னால தூங்க முடியும்னு தோனலை.” அவன் இத்தனையும் சொன்ன பிறகும் அங்கிருந்து கிளம்பிச் சென்றான். “இனி எப்படியும் என்னால் தூங்கமுடியாது அதனால் அப்பாவின் பக்கத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வர்றேன்” என்று சொல்லவில்லை. 

அவர் தண்ணீர் குடிப்பதைப் பார்த்த பிறகு அவருடைய பேத்திகளும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இப்போது அங்கே இருப்பது ஷைலோபாலா மட்டும்தான் – – அவள் அசைவுகளை வைத்துப் பார்க்கையில் அவளும் அங்கிருந்து செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. 

அபினாஷ் அக்கறையற்ற தொனியில் கேட்டார், “நீயும் போறியா?”

ஷைலோபாலா சற்று திகைப்புற்றாள். “இல்லை, கோக்கா மருந்தைப் பற்றி மறந்துட்டான் போலிருக்கு. நான் போய் எடுத்து வரேன். அப்புறம் கொஞ்ச நேரம் இங்க இருக்கேன்.”

“நீ இங்கே உட்கார வேண்டாம், ஏன் இங்கேயே தூங்கக் கூடாது?”

ஷைலோபாலா, அபினாஷின் இரண்டே முக்கால் அடி அகலக் கட்டிலைப் பார்த்துவிட்டு சொன்னாள். அவளது தொனி சங்கடத்திற்குள்ளானது போல் இருந்தது, “நீங்க பேசுற பேச்செல்லாம்…! உங்க கட்டில் மைதானத்தைப் போல அகலமானதா என்ன?”

ஆச்சரியம்தான், இந்தச் சில நாட்களுக்கு முன்னர்தான் அவரும் ஷைலோபாலாவும் ‘மைதானமளவு அகண்ட’ இதே கட்டிலில், சரி… இதே போன்ற ஒரு கட்டிலில், ஒன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உண்மையில், சில நடைமுறைகள் ஒருமுறை கைவிடப்பட்டுவிட்டால் மீண்டும் தொடங்க முடிவதில்லை, வெட்கம் வந்துவிடுகிறது. பல விஷயங்களில் இப்படித்தான்: உண்பதில் உடுத்துவதில் உறங்குவதில் என…

அபினாஷ் சொன்னார், “ஒருமுறை ரயில் படுக்கையில நாம ரெண்டு பேரும் ஒரே போர்வையைப் போர்த்திக்கிட்டு – -.”

ஷைலோபாலா உடனடியாகச் சொன்னாள், “ச்ச… முதல்ல நிறுத்துங்க, அந்த நாள் இந்த நாள்னு. நம்ம பேத்திங்க நம்மள பார்த்தா சிரிக்க மாட்டாங்களா? நான் போய் கோக்கா இன்னும் என்ன செய்யுறான்னு பார்த்துட்டு வரேன்.” ஷைலோபாலா எழுந்து நின்றாள். 

“எனக்கு எந்த மருந்தும் வேண்டாம்,” என்று சொல்லிவிட்டு அபினாஷ் சுவரைப் பார்த்துத் திரும்பிப் படுத்துக் கொண்டார். 

ஒருவகையில், இந்தப் பழிப்பை ஷைலோபாலா வரமாகவே எடுத்துக்கொண்டாள். ‘மகன்கள் மருந்தை மறந்துட்டாங்க, இப்போ எனக்கும் அவர்களை எழுப்ப தயக்கமாக இருக்கு.’ …ஒரு கணம் கழித்து ஷைலோபாலா காரணமேயன்றி மேஜை மின்விசிறியின் வேகத்தைக் குறைத்து மீண்டும் கூட்டினாள். பிறகு, அமைதியாக அறையை விட்டு வெளியேறினாள்.

ஒருவேளை பேத்திகள் இருவரும் இன்னும் தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கலாம், இவ்வயதான தம்பதிகள் ஒருவருக்கொருவர் கொஞ்சிக் குலாவுவதாக அவர்கள் நினைத்துக் கொள்ளலாம். இளமையில் முதியவர்கள் முன்னால் அது அசிங்கம்; முதுமையில் இளையவர்களுக்கு முன்னால் அசிங்கம். 

ஷைலோபாலா கிளம்பிச் சென்ற உடனேயே அபினாஷிற்குத் தன் மூச்சு நின்றுவிடும்போலத் தோன்றியது. அவர் எழுந்து அமர்ந்தார், பின், தன் பனியனை மாற்றிக்கொள்ளாமல் மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டார். படுத்தபடியே அவர் பிரார்த்தனை செய்யத்தொடங்கினார், “கடவுளே, அபினாஷிற்கு முடக்குவாதம் வரச் செய்…”

பக்கவாதம் போன்ற தாக்குதல் இல்லை முழுமையான தாக்குதல். அவர் மனைவியும் மகன்களும் தலையில் அடித்துக்கொண்டு கதறியழும்படியான ஒன்று, ‘நேற்று இரவு நெஞ்செரிச்சல் என்று நகர்ந்துவிட்டோமே… என்ன தவறு செய்துவிட்டோம்!’

குறிப்பாக ஷைலோபாலா. காலையில், “இப்போ எப்படி இருக்கு?” என்று விசாரித்தபடியே தன் கடமையென அவரைப் பார்க்க உள்ளே வரும்போதுதான் எல்லாம் முடிந்துவிட்டது என்பதை உணர்வாள். அவளுடைய வண்ணப் புடவை, கை வளையல்கள், அவள் வாழ்வின் கடன்கள் அத்தனையும் முடிந்து போயிருக்கும் – பிறகு என்ன?

அவர் மீண்டும் ஒரு கருணையற்ற ஆனந்தத்தை அனுபவிக்க முயற்சி செய்தார். மீண்டும் பயனற்றவரானார். கண்களில் நீர் மளமளவெனக் கொட்டத் தொடங்கியது, கண்ணீர் சிற்றோடையென வழிந்து அவர் தலையணையை நனைத்தது.

அபினாஷ் என்றழைப்படும் அம்மனிதன் தன் அறையில் தனிமையில் ஓசையற்று இறந்து கிடக்கிறான் – – நெருங்கிய உறவினனின் மரணத்தைக் காண்பதைப்போல இக்காட்சியைக் கற்பனை செய்து பார்க்கையில் அபினாஷின் நெஞ்சம் வெடித்து விம்மத் தொடங்கியது. செயலற்றுக் கிடக்கும் அந்த உயிரற்ற உருவத்தை நோக்கினார், கண்ணீர்ப் பெருக்கெடுத்து அவரைத் திணறச்செய்தது. ஆனால் நேசமற்ற, சொல்லற்ற, இழிவான அம்மரணத்திற்காக அவர் வேண்டிக் கொண்டிருந்தார்.

நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம்

 ஆஷாபூர்ணா தேவியின் சிறுகதைகளை முன்வைத்து



கொரோனா பெருந்தொற்று கால ஊரடங்கு உடைத்தெறிந்த பல கற்பிதங்களில் ஒன்று ‘வீடு ஆனந்த ஊற்றின் தோற்றுமுகம்’ என்பது. குடும்பம் என்ற அமைப்பு மனித நாகரிக வளர்ச்சியின் உச்சியில் முளைத்த மலர் என்பது இந்தியச் சூழலில் பெரும்பாலும் உண்மைக்கு அருகாமையில் இருப்பதைப் போலத் தோன்றினாலும் அதன் எல்லைகளும், அவ்வமைப்பின் ஊசி இலைப் பின்னலை பொத்திக் காக்கும் காரணிகளும் எண்ணற்றவை. முதல் சில நாட்களுக்கு நொடி குறையாமல் குடும்பத்தினர் அனைவரும் ஒரே கூரைக்குள், அறைகளாகப் பிரிந்துகிடந்தாலும், சலிப்பின்றி முகம் பார்த்துக் கொள்வதற்கு விதவிதமான விளையாட்டுகள் தேவையாயிருந்தன. மேலும் பல மாதங்களுக்கு இடைவிடாது வீடடைந்து இருக்க வேண்டிய சூழலாக அது நீண்டதும் பதற்றம் பற்றிக் கொள்ளத் தொடங்கியது. தன் இயல்பு வாழ்வு என்று தான் உருவகித்திருந்த ஒரு பழகிய, இடம் செயல்பாடு காலம் என்ற கூறுகளுடைய வட்டத்திற்குள் மீண்டும் திரும்ப இயலாது என்ற பயம் தொற்றிக்கொண்டது. அதன் அடிப்படையில் மூன்று காரணிகள் உண்டு. நிச்சயமாகப் பொருளாதாரம் முதன்மையானது. பெரும்பான்மையான இந்தியக் குடும்பங்கள் வறுமையில் மூழ்கும் முனையில் நின்று கொண்டிருந்தனர். சிறுகச் சிறுகச் சேமித்த வாழ்வு குலைந்துவிடாமல் விரிசல்களை அடைக்க வேண்டிய நிலை. இரண்டாவதாக மனங்களின் வறுமை. நெருங்கிய மனங்களின் இண்டு இடுக்குகளைக் கூர் நோக்கத் தொடங்கியதில் சிரிப்பும் இன்முகமும் தேய்ந்து போனது. அடுத்தவர் விரும்பும் முகமூடியை அணிந்து களைவதற்கு மறைவிடம் அற்றுப் போனது. மனித மனப் பொந்துகளிலிருந்து தீ நாக்குகள் தன் இல்லத்தினரிடையே சீறியது. இத்தனை நாள் வெளியே வேலையிடத்தில் தேநீர்க் கடைகளில் சக வாகன ஓட்டிகளிடத்தில் பிச்சைக்காரர்களிடத்தில் தெருநாய்களிடத்திலும் கூட வெளிப்படுத்தி வீடு வந்து குளிரும் வெறுப்புக் கங்குகள் அத்தனையும் வீட்டிற்குள்ளேயே பற்றி எரியத் தொடங்கின. மூன்றாவதாக, மூட்ட மருட்சியின் (claustrophobic) விளைவுகள். முதல் சில நாட்களில் பெரும் பரப்பினைப் போல விரிந்திருந்த நான்கு சுவர்களும் சுருங்கத் தொடங்கின. ஒற்றைக் கூரையின் கீழ் வரிசை வீடுகளில் பல குடும்பங்களின் வாழ்விடங்கள் காலையில் குளித்து வெளியே வேலைக்குப் போவதற்கும் இரவு திரும்பி புழங்கித் தூங்கி எழுவதற்கும் மட்டுமே போதுமானதாக இருந்தது. இப்போது முழு நாளும் இச்சிறு தரையில் அடைந்திருப்பது சவப்பெட்டியில் சுவாசித்துக் கிடப்பதற்குச் சமமாகிப்போனது. உணர்வுகள் சுவர்களில் மோதி எதிரொலித்து பன்மடங்காக வீரியமடந்தன. ஒரு சொல் ஒரு பார்வை கூட பல வருடப் பிணைப்புக் கண்ணிகளை உடைக்க போதுமானதாக இருந்தது. இந்த மூன்றினில் பின் இரண்டை நுண்ணுணர்வுடன் கையாள்வதுதான் குடும்ப அமைப்புகள் நிலைத்திருப்பதற்கு மட்டுமல்ல அவற்றைச் சகித்துக்கொள்வதற்கும் அவசியம் என்பது சிறிது சிறிதாகப் புலப்பட்டது. 

இந்தச் சூழலையும் அதன் விளைவுகளையும் 1940லிருந்து 80கள் வரையிலான வங்காளத்தின் வாழ்வியல் சற்றேறக்குறைய ஒத்திருந்தது. இருபெரும் பஞ்சங்களும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்தின் எல்லைப் பிரிவினைச் சார்ந்த போர்களும் கலவரங்களும் படுகொலைகளும் வெள்ளப் பேரழிவுகளும், பெருந்தொகையில் அகதிக் குடியேற்றங்களும் வங்காளத்தின் வறுமைக்குக் காரணிகளாக இருந்தன. கல்கத்தாவின் மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தெருக்களில் வாழ்ந்தனர். இவர்களைவிட ஓரளவு மேம்பட்ட நிலையிலிருந்த நடுத்தர மக்கள் வங்காளத்தின் மரபார்ந்த குடும்ப அமைப்பைப் பற்றிக்கொண்டு கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தனர். ஒரே வீட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்றாக வாழ்வது மிகச் சாதாரணமாக இருந்த காலகட்டம். ஆஷாபூர்ணா தேவியின் கதைகள் பெரும்பாலும் இம்மத்திய வர்க்கத்துக் குடும்பங்களிலிருந்து முளைப்பவை. வறுமை இக்கதைகளின் பின்னணியில் ஒரு திரையென இருந்தாலும் சிறுகூடத்திற்குள் உலவும் மனிதக் கூட்டத்தின் மனங்கள் ஒன்றுடனொன்று முயங்குவதும் மோதிக்கொள்வதுமே மையமென அமைபவை. அடைபட்ட சுவர்களுக்குள் கணவன் மனைவி மகன் மகள் என இரத்த உறவுகளுக்குள் மிக நுண்மையாக வெளிப்படும் வன்முறைகளும் ஆதிக்கமும் மெல்லிய அடக்குமுறைகளையும் ஒவ்வொன்றாக தொட்டெடுக்கும் ஆஷாபூர்ணா தேவியின் சிறுகதைகளை ஊரடங்குச் சூழலில் இன்று மீட்டெடுத்து வாசிக்கையில் இயல்பில் மனிதன் தனிமையானவன் என்பதும் அவ்வுண்மையை தன்னிடமிருந்து மறைக்கும் பொருட்டே உறவுகளின் பின்னால் தன்னை ஒளித்துக்கொள்கிறான் என்பதையும் ஒரு தரிசனமாக அவர் கண்டடைவதை உணரமுடியும். தனக்கு வீடொன்று இருப்பதினாலேயே அவன் அவ்வீட்டிற்குரியவனாகிவிட முடியுமா என்ற கேள்வி தொடர்ந்து அவரின் சிறுகதைகளில் முன்வைக்கப்படுகிறது. கணநேரத்தில் தனக்கு மிகவும் அண்மையாகத் தோன்றிய பலவருடம் ஊடாடிக் கொண்டாடிய உறவு அந்நியமாக மாறிவிடும் விந்தையை அவர் கதைகளாக எழுதி எழுதிக் கண்டடைந்திருக்கிறார். 

ஆஷாபூர்ணா தேவி அவர் முதல் சிறுகதை 1936ல் வெளிவந்ததில் தொடங்கி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தொடர்ந்து படைப்புலகில் கோலோச்சியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களும் ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளும் எழுதியவர். சிறுவர்களுக்கான கதைகளுக்குத் தனிக் கணக்குண்டு. கல்கத்தா எனும் மாபெரும் நகரத்தின் சின்னஞ்சிறிய தெருக்களுக்குள் அண்டிக்கொண்டிருக்கும் குடும்பங்களின் தனிப்பட்ட வாழ்வினூடாக மனித மனம் செயல்படும் விதங்களை ஆய்ந்தவர். குடும்பத் தலைவியாக ஒரு அன்னையாக இருந்துகொண்டு இத்தனை வீரியமாகப் படைப்புலகில் செயல்பட முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. இவர் முகம் வெளியுலகிற்குத் தெரியும் வரையிலும் இவர் புனை பெயரில் எழுதும் ஒரு ஆண் என்றே நம்பப்பட்டது. திரும்பத் திரும்ப குடும்பங்களைப் பற்றிய கதைகளையே எழுதுபவர் என்றும் ‘சமையலறை எழுத்தாளர்’ என்றும் அவர் விமர்சிக்கப்பட்டார். நவீன முற்போக்கு இலக்கியம் வீறுகொண்டெழுந்த காலகட்டத்தில் இவரின் கதைகள் குடும்பம் என்ற பழமைவாதத்தை மீண்டும் நிலைநிறுத்தப் பார்க்கிறது என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார். இவர் கதைகளில் வரும் பெண்கள் தங்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டு கோபம் கொள்பவர்களாகவும் அதற்கு எதிரான குரலெழுப்புபவர்களாகவும் இருந்தாலும் அவர்கள் வீட்டை விட்டு “வெளியேறுவதில்லை” என்று பெண்ணியவாதிகள் இவர் கதைகளை மறுத்தனர். அதே நேரத்தில் இவர் பெண்களின் கதைகளை மட்டுமே எழுதும் ஒரு பெண் எழுத்தாளர் என்ற சுருங்கிய பார்வையும் சிலரிடமிருந்தது. மஹாஸ்வேதா தேவி போன்ற எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தி போராட்டக் குரல்களாக மாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ஆஷாபூர்ணாவின் கதைகள் உலகப்பொதுமையான ஒரு நோக்கில் மனங்களை மையப்படுத்திய ஒரு குரல் எங்கோ ஆழத்திலிருந்து ஒலிப்பதைப் போல வெளிப்பட்டுக்கொண்டிருந்தன.


கால இடப் பரிமாணம்

ஆஷாபூர்ணா தேவியின் சிறுகதைகளைக் காலம் – இடம் எனும் பரிமாணங்களின் கண்கொண்டு வாசிக்கையில் அவை உருதிரளும் விதங்களைக் காணமுடிகிறது. அனேக கதைகள் வீட்டிற்குள் நிகழ்கிறதென்பதாலேயே “இடம்” என்பது ஒரு தனிப்பாத்திரமாகவே மாறிவிடுகிறது. சுவர்கள் பன்மடங்கு மேலெழுந்து நிற்பதைப் போலத் தோன்றும். வீடுகளின் விவரிப்புகளில் சுவர்களைத் தவிர வேறெதுவும் பெரியதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்காது. நாற்காலிகள் மேஜைகள் கட்டில்கள் இவை அத்தனையும் வெறும் ஜடப் பொருட்களாக அவ்வீட்டின் ஊமைச் சாட்சியங்களாக மட்டுமே நிற்கும். அவற்றிலிருக்கும் அழகிய வேலைப்பாடுகளோ அப்பொருட்களின் தரமோ நிறங்களோ கூட இக்கதைகளுக்குப் பொருட்டல்ல. அதனாலேயே வீடு என்பது சுவர்கள் மூடிய ஒரு பெரும் பரப்பாக மாற்றப்பட்டு அதனுள் ஊடாடும் கதைகளின் மேல் மட்டுமே வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. “வீடு” எனும் இடம் கால மாற்றங்களுக்கு உட்படாதவையாக எந்நிலத்திற்கும் சார்ந்தவையாக மாறிவிடுகிறது. 1950 களில் கல்கத்தா வீட்டில் நிகழும் கதை கொரொனா ஊரடங்கில் கோவை வீட்டொன்றில் நிகழ்வதற்கான சாத்தியத்தையும் உடனழைத்து வருகிறது.

சில நேரங்களில் மனிதர்கள் புழங்கும் ‘வீடு’ எனும் இடம் அவர்களின் சிறைகளாகவும், அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எல்லைகளாகவும், மீறிப் பாய நினைக்கும் தடுப்புகளாகவும் அமைந்துவிடுகிறது. மற்றொரு தருணத்தில் முதுகைச் சாய்த்து மூச்சு விடும் சுதந்திர வெளியாகவும், இருப்பின் அர்த்தமாகவும், தனிமனிதனை சமூகமெனும் அபாயத்திலிருந்து தற்காலிகமாக காப்பதாகவும் இருக்கிறது. ஒரே “இடம்” இருவேறு எதிர்நிலைகளாக உருமாறும் விந்தையை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது இவரது சிறுகதைகள். ‘தீப்பெட்டி’ எனும் சிறுகதையில் இவ்வெதிர் நிலைகளின் மிகச் சிறப்பான குறியீடாகவும், வீட்டையும் அதில் வாழும் பெண்களின் மனதையும் குறிப்பதாகவும் ‘தீப்பெட்டி’ அமைகிறது. ஆயிரம் இலங்கைகளை எரித்துவிடும் நெருப்பை தனக்குள் வைத்திருந்தாலும் தீப்பெட்டி வீட்டின் ஏதோவொரு மூலையில் பொறுப்பற்று போட்டு வைக்கப்படுகிறது. கட்டுக்குள் அடக்க முடியாத நெருப்பை எந்நேரத்திலும் கொழுந்துவிடச் செய்யும் இப்பெட்டி அதன் உண்மையான தன்மையைக் கொண்டு மதிக்கப்படுவதில்லை. ஆனால் சிறு உரசலில் அது சீறும் போது விதிர்ப்புக்குள்ளாகிறது எதிர் மனங்கள். நேரடியாகவே ஒரு பெண்ணின் உவமையாகத் தீப்பெட்டியைச் சொல்லித் துவங்கும் இச்சிறுகதையில் உரசலும் தீப்பிடித்தலும் அது அணைக்கப்படுவதும் கணநேரத்தில் நடந்துவிடுகிறது. ஆனால் அந்த ஒற்றைத் தீப்பொறி, அவள் கண்களில் அணைக்கப்படாமல் நின்று எரியும் நெருப்பு, பல்லாயிரமாண்டுகளாக அணைக்கப்படாமல் இருக்கும் சீதையின் நெருப்பு எனும் தொன்மத்துடன் தன்னை இணைந்துக் கொள்கிறது. தீப்பெட்டி எனும் இச்சிறு இடத்தினுள் பொதிந்து இருக்கிறது ஆதிகாலத்துத் தொன்மம். 

தன்னிரங்கல் (Neejer Jonno Shok) சிறுகதையில் இரவில் திடீரென தனக்கு முடக்குவாதம் வந்து கைகால்களை அசைக்க முடியாமல் நின்றுவிட்டதாகப் பயந்துவிடும் அபினாஷ் தன் அறுபது ஆண்டுகால வாழ்க்கையைச் சட்டென நினைவுகூர்ந்து கழிவிரக்கம் கொள்கிறார். சின்னஞ்சிறு கட்டிலில் தன் மனைவியுடன் ஒன்றாகத் தூங்கியது அவர் நினைவிற்கு வருகிறது. பேத்திகள் வளர்ந்துவிட்ட பிறகு மனைவி அடுத்த அறைக்கு தன் படுக்கையை மாற்றிக்கொள்கிறாள். இரண்டு அறைகளுக்குமிடையில் ஒரு சில அடிகள்தான் தூரம். அவர்களின் அறைகளைப் பிரிப்பது வெறும் ஒரு திரைச்சீலைதான். ஆனால் அந்த தொலைவு அவரால் எண்ணிப்பார்க்கமுடியாததாக இருக்கிறது. தன்னுடைய மரண ஓலம் அவள் காதுகளுக்கு எட்ட முடியாத தூரத்தில் இருப்பதாக வருத்தம் கொள்கிறார். கற்பனையில் ஒரு மரணத்தை நிகழ்த்திப் பார்க்கிறார். அதுவே அவர் மீது அக்கறையின்றி வாழும் மனைவி மகன்களுக்குத் தான் தரும் சாபம் என்று நினைக்கிறார். அது நிறைவேறாமல் போகுமிடத்தில் மீண்டும் தான் ஒன்றுமற்றவன் என்று நினைத்துக் குமைகிறார். உண்மையில், தன் உடலில் நிகழ்ந்துவிட்டதாக நினைக்கும் முடக்குவாதம் எப்பொழுதோ அவர் மனதில் உண்டாகிவிட்டிருக்கிறது. தனக்கென ஒரு தினசரியை மாற்றம் இல்லாமல் செய்கிறார். மாறிவரும் போக்குகளோடு இணைந்து கொள்ளும் தன் மனைவியைக் குறைசொல்கிறார். முப்பது ஆண்டுகளாக ஒரே மாதிரியான வாழ்வை வாழ்வதே பெருமையெனக் கொள்ளும் இவர், எவரும் உதாசீனப்படுத்தக்கூடிய இடத்தில் தேங்கிவிடுகிறார். அவரது குடும்பம் அவரைச் சுற்றி அமர்ந்து அவருடன் பேச முயலும்போது தனக்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தவுடன் அதைக் காட்டிக்கொள்ள மறுக்கிறார். கண் இமைகளின் அடியில் தன்னை மறைத்துக்கொள்கிறார். கண் இமை போன்ற அவ்வளவு மெலிதான திரை அவ்விடத்திலிருந்தும் அது நிகழும் காலத்திலிருந்தும் அவரை தொலைதூரத்தில் ஒளிந்துகொள்ளச் செய்கிறது.

சிறை எனும் இச்சிறுவார்த்தையின் அர்த்தம் பெருகிக்கொண்டே செல்லும் தன்மையுடையது. பறவையின் சிறுகூடாக இருந்தாலும் புத்தம்புதிய அரண்மனையாக இருந்தாலும் அதைச் சிறையாக மாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதில் வாழும் மனிதர்களுக்கு மட்டுமே உரியது. சிறைவாசி (Bondini) சிறுகதையில் வரும் சாருபாலா சிறையிலிருப்பதையே மறந்து வாழும் ஒரு சிறைவாசி என்று அவளின் மகன் நினைக்கிறான். எந்நேரமும் கஞ்சா போதையிலும் குடிபோதையிலும் இருக்கும் கணவனுடன் போராடுவதுதான் தன் தினசரி வாழ்வு என்பதை ஏற்றுக்கொண்டவளாகிறாள் அவள். கதையின் தொடக்கத்தில் மனித இனத்தை இவ்வளவு சிறிய அளவினராகப் படைத்ததிற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறாள். இந்த உயரத்தில் இருப்பதினால்தான் அவளும் அவள் கணவனும் இருபத்தி மூன்று வயதாகும் தன் மகனுடன் இந்த வீட்டில் வாழமுடிகிறது. மிகச் சரியாக அவர்கள் அளவிற்கே உரிய மெத்தையைத்தான் அங்கே போடமுடியும். இவ்வளவு சிறிய இடத்தில் வாழவேண்டிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்த கடவுளைச் சபிக்காமல் தன்னை இதற்கேற்றார் போல் சிறியதாகப் படைத்த ஆண்டவனுக்கு நன்றி கூறும் அபத்தச்சுவைகள் ஆஷாபூர்ணா தேவியின் சிறுகதைகளுக்குரிய தனிச் சிறப்பு. தன் குடும்பத்தின் சீரழிவிற்குக் காரணமான அப்பாவை எதிர்த்து குரல் எழுப்பி அவரை வீட்டு விட்டு வெளியேறச் சொல்கிறான் மகன். தன் அம்மாவைத் தனியாக வைத்துக் காப்பாற்றும் நம்பிக்கையுண்டு அவனுக்கு. ஆனால் பெரியவர்களை மதிக்கத் தெரியாத ஒருவன் இருக்கும் இவ்வீட்டில் என்னாலும் இருக்க முடியாது என்று கணவனுடன் வெளியேறும் சாருபாலாவின் முடிவு என்றும் அவிழ்க்கமுடியா மனிதப் புதிர்களில் ஒன்று. இளவரசியை சிறைபிடித்து வைத்த அரக்கன்  அவளின் சுவடென்று எதுவுமே மிஞ்சாமல் தின்றுவிட்டானெனத் தோன்றுகிறது மகனுக்கு. சிறைவாசி இல்லாவிட்டாலும் சிறை சிறையாகத்தான் மிஞ்சுமா? சிறைவாசி இருப்பதனால்தான் அது சிறையென்றே மாறுகிறதா? எனில், சிறையென்பது சுவர்களால் ஆனது இல்லையா? இதற்கு நேரெதிராக ‘பறவை மாளிகை’ (Ponkhi Mahal) எனும் சிறுகதையில் நூறாண்டுகளாக கடைப்பிடித்து வரும் ஒரு மரபிற்கு அடிமையாகிவிடக் கூடாது என்று வைராக்கியத்தை வளர்த்துக் கொள்கிறாள் ஷோரோனா. ஆஷாபூர்ணா தேவியின் இச்சிறுகதையின் களம் ஒரு அரண்மனை. கல்கத்தாவின் பெட்டி வீடுகளிலிருந்து அவர் வெளியே வந்து ஜமீன்தார்களின் மரபுகளை நோக்குகிறார். வீடுகள் அதன் அளவினால் மட்டுமல்ல அதற்கப்பாற்பட்டு அவற்றின் மீறமுடியா வழக்கங்களினாலும் கூட மக்களை இறுகப்பிடித்து வைத்திருக்கிறது. பேரன் ஒருவன் பிறந்துவிட்டால் ராணியாகத் தான் வாழ்ந்த மாளிகையை விட்டு வெளியேறும் ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது, ஷோரோனாவின் ஜமீன் குடும்பத்தில். ஜமீன்தார் முறைக்கு எதிரான கலகங்கள் தோன்றத் தொடங்கியிருந்த காலகட்டம். அரண்மனையை விட்டு வெளியேறி வாழ்வது சாத்தியமானதல்ல. கணவனிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற மரபிற்கு அவள் தயாராகவே இருந்தாலும் இம்மாளிகையை விட்டு அவள் போவதாக இல்லை. மரபை உடைக்கத் தயாராகிறாள். பறவை மஹால் என்று தலைப்பிலேயே குறீயீட்டு அர்த்தத்தை உணர்த்தும் ஆசிரியர் தேவி, ஷோரோனா தன் முடிவை மாற்றிக் கொள்ளும் ஒரு தருணத்தை மிக நுண்மையாகச் சென்று தொடுகிறார்.

இப்படி மனிதர்கள் அடுத்த அடியெடுத்து வைப்பதற்குக் காரணிகளாக இருக்கும் பல முடிவுகள் பெரும்பாலும் எந்தத் தர்க்கத்தையும் கடைப்பிடிப்பதில்லை. அதனால்தான் எந்த அலங்காரங்களுமற்ற, மனிதர்களின் மீது மட்டுமே தன் கவனத்தைக் குவிக்கும் ஆஷாபூர்ணா தேவியின் சிறுகதைகள் கால எல்லைகளுக்கு அப்பால் சிந்தனையைச் சீண்டிக்கொண்டேயிருக்கிறது. ‘பிரம்மாஸ்திரம்’ மற்றும் ‘வாழ்க்கைச் சட்டகம்’ (Kathamo) என்ற இரண்டு சிறுகதைகளிலும் ஒரு ஆணின் விஷக் கூர்மை கொண்ட சிந்தனை செயல்படும் முறையை நுணுகி ஆராய்கிறது. வேலையின்றி தவிக்கும் கணவன் தன் மனைவியைத் தற்போது பெரும் தொழிலதிபராக இருக்கும் அவள் முன்னால் காதலனிடம் தூதுபோகச் சொல்கிறான். கடிகாரத்தின் சிறு முள்ளைத் திருப்பி வைப்பதன் மூலமாக இரவைப் பகலாக்கிவிட முடியும் என்று எண்ணுவதைப் போல என்றோ காலத்தில் மறைந்துவிட்ட உறவை லேசாகத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயல்கிறான். கணவனுக்காக மட்டுமல்ல தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கத் தான் எய்தும் பிரம்மாஸ்திரம் என்றும் இதைக் குறிப்பிடுகிறான். தீர்க்கமாக மறுக்கும் மனைவியை வற்புறுத்துகிறான். கோபமாகக் கத்துகிறான். கெஞ்சுகிறான். கடைசியாக ஒரு மனைவி கணவனின் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல என்று நாடகமாடி அவளை ஒப்புக்கொள்ளச் செய்கிறான். ஆனால் தான் எய்த அஸ்திரம் தன்னை நோக்கித் திரும்பும் சாத்தியத்தை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. அவ்வஸ்திரம் இருமுனைகளாக அவனை நோக்கித் திரும்புகிறது. அவள் சென்ற வேகத்திலேயே திரும்பி வந்து வேலை கிடைத்துவிட்டதாகச் சொல்கிறாள். முதலில் மகிழும் அவன் பிறகு அவ்வெற்றி கூர்மையாக வந்து தன்னைத் தாக்குவதை நிதானமாக உணர்கிறான். உள்ளுக்குள் இவளைப் பார்த்ததும் முன்னால் தோழன் வெறுப்பானென்றும் வேலை இல்லையென்று மறுப்பானென்றும் இவன் மனம் மௌனமாக எண்ணியிருந்தது. ஆனால், தோழனோ மகிழ்ந்து இவள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டான் என்பது இதயத்தின் ஆழத்தில் தைக்கப்பட்ட அம்பு எனப் புலப்படுகிறது. அவன் நிதானமடைவதற்குள் அவள் அடுத்த தாக்குதலை நிகழ்த்திவிடுகிறாள். அவள் தோழன் வேலை கொடுத்தது கணவனுக்கு இல்லை தனக்குத்தான் என்று சொல்கிறாள். குடும்பத்தின் வறுமையைப் போக்குவது மனைவியின் கடமையும்தான் அதைத் தானே ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி அங்கிருந்து சென்றுவிடுகிறாள். உறவுகளின் பெயரால் நிகழ்த்தப்படும் மெலிதான வன்முறைகள் தன்னை நோக்கியே திரும்பிவரும்போது அதை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ‘கதாமோ’ என்ற சிறுகதையில் கேஷவ் ராய் அப்பாவின் சொத்திற்குப் பங்காளியாக வந்து நிற்கும் சிறுவனான தன் தம்பியைக் கொல்லத் துணிந்துவிடுகிறான். அப்பாவின் இரண்டாவது மனைவிக்கு தன் மகன் வயதில் ஒரு மகன். அப்பா இறந்துவிட அவனின் இளவயது சித்தி சொத்தை இரண்டாகப் பிரித்து பங்கு கேட்கிறாள். நீதிமன்றம் செல்லும் கேஷவ் ராய் இந்த வழக்கு தனக்குச் சாதகமாக மாறாது என்பதை உணர்ந்துகொள்கிறார். திரும்பி வரும் வழியில் குளக்கரையில் தன் மகன் கோபால் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டதும் கோபம் கொள்கிறார். யாருமில்லா இவ்விடத்தில் இவன் இருப்பது ஏன் என்று நினைக்கும்போதே அது தன் மகன் கோபால் அல்ல அவன் அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகன் மாணிக் என்று தெரிகிறது. இவ்விடத்தில் ஆஷாபூர்ணா தேவி ஒரு ஆண் மனதின் ஆழத்திலிருக்கும் வாரிசு மரபின் எப்போதும் விழித்திருக்கும் ஒரு கூர்மையைக் கண்டுவிடுகிறார். ஏதோவொருவகையில் அங்கு விளையாடும் அச்சிறுவன் தன் அப்பாவின் நீட்சி என்பது அவன் அகக்கண்ணுக்கு ஒரு மாயத்தோற்றமாகவேனும் புலப்படுகிறது. சற்று சுதாரித்து, யாரும் இல்லாத இடத்தில் இருக்கும் இவனை ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டால் தன் வீட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டியிருக்காது என்று எண்ணுகிறான். குளத்தை நெருங்கிச் செல்லும் அவனால் அக்காரியத்தைச் செய்ய முடியாது என்பது அவனுக்கே உறுதியாகத் தெரியும்.    

இளைப்பாறும் இடமாக, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக மனம் குடிகொள்ளும் இடமே இல்லம் என்றாலும் அங்கு மனிதன் ஆடும் விளையாட்டுகளுக்கும் குறைவிருப்பதில்லை. மகிழ்வும் துயரமும் எந்தப் பூச்சும் இல்லாமல் வெளிப்படும் இடமே அது ஆயினும் ஒரு சிறு ஒப்பனையை மனம் எவ்வாறேனும் விரும்பி ஏற்றுக்கொள்கிறது. துயரம் (Shok) எனும் சிறுகதையில் கணவனும் மனைவியும் ஒரு துயரத்தின் பின்னணியில் ஆடும் சிறு ஆட்டம், பகிர்ந்துகொள்வதற்கு யாரும் இல்லாத நேரங்களில் வீடு சிறு இடைநேரத்திற்கு அதன் அர்த்தத்தை இழந்துவிடுகிறது என்பதைச் சுவாரசியமாகக் காட்சிப்படுத்துகிறார் ஆஷாபூர்ணா. ஒரு மர்மக் கதைக்கு இணையான விவரிப்புகள் கொண்ட இக்கதையில் மனைவியின் அம்மா இறந்துபோன செய்தி தபால் அட்டையில் வருகிறது. அது தபால் அட்டையில் வரவேண்டிய செய்தியே அல்ல, முதலில். இவ்வளவு தாமதமாக வந்திருக்கும் இச்செய்தியை மனைவியிடம் சொன்னால் அவள் உருக்குலைந்து போவாள். ஆனால் பிரச்சினை அது மட்டுமல்ல, ஊருக்கு உடனே கிளம்ப வேண்டியிருக்கும். மாதத்தின் முதல் நாள் விடுப்பு எடுத்தால் முதல் ஏழு நாட்களுக்குச் சம்பளம் கிடையாது என்ற விசித்திர விதிகள் உண்டு அவரின் அலுவலகத்தில். துக்கச் செய்தியைச் சொல்லி அவளின் மனதைத் தேற்றிய பிறகு அலுவலகம் செல்வதென்றால் தாமதம் ஆகிவிடும். அதனால் தபால் அட்டையை அவளே கண்டுகொள்ளட்டும் என்று வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். மனைவியின் கண்களில் இது பட்டதும் அவள் நொறுங்கிப் போகிறாள். அவளின் அதீத நேசத்திற்குரிய அம்மாதான். கதறியழும் துக்கம் மேலெழுகிறது, ஆனால் தன் துயரத்திற்குச் சாட்சியொன்று இல்லையெனில் அதன் உண்மையான கனம் எப்படி வெளிப்படும். தன் துயரத்தைத் தாங்குவதற்கு உடன் ஒருவர் இல்லையெனில் வீடென்று ஒன்று இருப்பது எதற்கு. அவள் கடிதத்தை மறைத்து விடுகிறாள். கணவன் வந்து எடுத்துக் கொடுக்கட்டும் என்று. இருவரும் சேர்ந்து ஒரு சிறு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். நேரத்தைச் சற்று ஒத்திப்போடுகிறார்கள். அப்பகலிடமிருந்து ஒரு துக்கச்செய்தியை மறைத்து அந்நாளை என்றைக்கும் போன்ற ஒரு சாதாரண நாளாக மாற்ற முயல்கிறார்கள். இச்சிறிய வீட்டிற்குள் நின்றபடி சுற்றிச் சுழலும் அத்தனையையும் அவர்களுக்கு மட்டும் அர்த்தமற்றதாக மாற்றிவிட நினைக்கிறார்கள்.

மூச்சு முட்டும் இடங்களில் கூட தங்களை நெருக்கி உள்ளே தள்ளி இப்பயணத்தின் முடிவைப் பார்த்துவிடத் துடிப்பதற்குக் குறியீடாக ராஜோனி அவனின் பை வெடித்துவிடும் அளவிற்குப் பொருட்களை உந்தித் தள்ளி ஜிப்பை அழுத்தி மூடுவதாக ‘ஆகாஷ்மதி’ கதை துவங்குகிறது. அஸ்ஸாமிலிருந்து வருடத்திற்கு பத்து நாள் மட்டுமே தன் மனைவி மக்களைப் பார்க்க வங்காள கிராமத்திற்குச் சென்று வருபவன் அவன். நடுவயதைத் தாண்டிய பிறகும் வேலை பார்த்து வீட்டிற்குப் பணம் அனுப்பி வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறான். அஸ்ஸாம் காடுகளிலிருந்து அவனுக்குப் பத்து நாள் மட்டுமே ஓய்வு. மகன்கள் வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டதால் ராஜோனி திரும்ப வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை இங்கேயே இருந்துவிடவேண்டும் என்று குடும்பத்தினர் கிராமத்தினர் அவனிடம் வேண்டுகிறார்கள். இது அவனுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இனி யாருக்கும் அடிமைப்பட்டு இருக்க வேண்டியதில்லை. எந்த வேலையையும் கூடச் செய்ய வேண்டியதில்லை. சொந்த கிராமத்தினரால் மதிக்கப்படும் ஒரு பெரியவராக வலம் வரலாம். ரயிலில், வேலையிலிருந்து விலகுவதாக எழுதிய கடிதத்தைக் கொடுத்துவிடும் பொழுதுதான் ராஜோனி தனக்குள் ஏதோ கலக்கமூட்டுவதாக உணர்கிறான். இனி இங்கேயே, தன் வீட்டிலேயே இருக்கவேண்டுமென்ற எண்ணம் இப்போது நிம்மதியிழக்கச் செய்வதாக இருக்கிறது. பதற்றம் அடையும் அவன், திடீரென அஸ்ஸாமிற்கு கிளம்பிச் செல்வதாக முடிவெடுக்கிறான். தான் நேரிலேயே சென்று வேலையை விடும் தகவலைச் சொல்லிவிட்டுவருகிறேன் என்பதை ஒரு காரணமாகச் சொல்கிறான். அடைக்க முடியா அந்தப் பையில் மீண்டும் துணிகளையும் பொருட்களையும் அடைத்து ஜிப்பை அரைகுறையாக அழுத்தி மூடி அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறான். பத்து நாட்கள் வீட்டிற்கு வருவதற்காக வருடம் முழுதும் ஏங்கும் அவன் இனி வீட்டிலிருந்து வெளியேற வழியில்லை என்பது அவனை வேறொருவனாக மாற்றிவிடுகிறது. அப்புதிய வேடத்திற்கு அவன் உண்மையிலேயே தயாராக இல்லை. என்றுமே பழகிக்கொள்ள முடியாத அஸ்ஸாம் காட்டையே அவன் தேர்வு செய்கிறான்.  

ஏதோவொரு வகையில் அடைபட்ட வீட்டிற்குள் மனிதர்கள் விலங்குகளைப் போலத்தான் உழல்கிறார்கள். பல்வேறு விதமான விலங்குப் பண்புகள்கூட ஒருவருக்கு இருக்கலாம். காட்டைப் போல மாயத்தோற்றம் கொண்டு விரிந்த பரப்பாக ஒரு வீடு உணரப்படும்போது அங்கு எந்தச் சமரும் இல்லாமல் ஒருவர் மற்றொருவரிடத்தில் அன்பு பாவிக்கிறார்கள். ஒரு சிறு சொல்லில், மெல்லசைவில் அக்காட்டின் வெளி எனும் மாயம் அழிந்து வெறும் நான்கு சுவர்கள்தான் என்று உணர்ந்து மிரளும்போது கூண்டில் அடைபட்ட விலங்கினைப் போலச் சீறிப் பாயக் காத்திருக்கிறார்கள். உடலும் உணர்வும் மடங்கி ஒரு சிறு பரப்பிற்குள் அடைபடுகிறது. அதன் விளைவுகளை எந்நேரமும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதுதான் உறவுகளைச் சிதைவுறாமல் காப்பதற்கு உதவுகிறது. 

தன் படைப்பின் குறுகிய பரப்பின் மீதான விமர்சனங்களை மிக எளிதாகக் கடந்துவிடுகிறார் ஆஷாபூர்ணா தேவி. தான் பார்த்ததை மட்டுமே எழுதியதாகக் கூறுகிறார். தனக்கு மிகப் பரிச்சயமான வாழ்க்கையிலிருந்தே கதைகளை அள்ளி அள்ளி எடுத்திருக்கிறார். வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் பெண்களுக்கு அனுமதியற்ற ஒரு சூழலில் பிறந்தவர். அம்மாவின் வாசிப்பு பழக்கம் அவரை தொற்றிக் கொண்டது. திருமணத்திற்குப் பின்பு கணவனின் ஆதரவினாலும் பெரிய வீட்டிற்குக் குடிபெயர்ந்து அங்குத் தனிமையில் அமர்ந்து வாசிக்கவும் எழுதவும் இடம் கிடைத்ததாலும் இடைவிடாது அவரால் இலக்கியத்தில் ஈடுபடமுடிந்தது. வீடும் இலக்கியமும் மட்டுமே அவரின் விருப்பத்திற்குரியவனாக இருந்திருக்கிறது. இரண்டிலுமே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவராக வாழ்ந்தார்.  

ஆஷாபூர்ணா தேவியின் படைப்புகளைப் பெண்ணியக் கதைகளாகவோ அல்லது குடும்பக் கதைகளாகவோ மட்டும் பார்ப்பது அவரது படைப்புத் தன்மையை சிற்றளவும் புரிந்துகொள்ளப்படாத பார்வையாகவே இருக்க முடியும். அவரது எண்ணற்ற சிறுகதைகள் மனித மனங்களின் ஆழம் சென்று அவனின் தன்னுணர்வற்ற நிலையுடன் விசாரணை செய்கிறது. அடிப்படையில் உறவுகள் செயல்படும் விதத்தைக் கூர்தீட்டிப் பார்க்கிறது. சொந்த அனுபவத்தினாலும் அவரது தன் இயல்பினாலும் அவர் கதைகள் அடைபட்ட ஒரு சிறு இடத்திற்குள் நின்றபடி காலத்தை அண்ணாந்து பார்க்கிறது. இங்கிருந்து ஒரு நூலை எறிந்து பல்லாண்டுகளாக வாழும் ஒரு இனத்தின் சிடுக்குகளை விடுவிக்க முயல்கிறது. நான்கு சுவர் கொண்ட ஒரு வீட்டை மனித ஆழ்மனதின் உருவகமாக மாற்றுகிறது. ஒரு வீடு உயிர் கொண்ட மனித மனமாக அன்பிற்காக ஏங்குகிறது, பகிர்தலுக்காகக் காத்திருக்கிறது, கண நேரத்தில் கண்களை மூடி உக்கிரமாக வெறுப்பைக் கக்குகிறது. உடல்கள் தோன்றி மறைந்தாலும் வாழ்ந்த மனங்களின் சாட்சியாகச் சிதைவுறும் வரையில் வீடுகள் நின்றிருக்கும். காட்டை விட்டு வெளியேறிய மனிதன் தன் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு கூரையின் கீழ்தான் கழிக்கிறான். அவனைச் சுற்றியிருக்கும் சுவர்கள் அவன் எண்ணங்களை மாற்றியமைக்க வல்லது. ஏதோவொரு வகையில் அச்சுவர்கள் மனிதர்களிடம் பேசத் துவங்கிவிடுகின்றன. மனிதர்கள் வெளியேறுவதும் திரும்பி வருவதையும் அச்சுவர்களே தீர்மானித்துவிடுகின்றன. ஒருவனிடத்தினுள்ளிருந்து மிருகத்தை வெளிக்கொணர்ந்து வருபவை இவையே என்றாலும், கட்டுக்கடங்காத அம்மிருகத்தை ஆசுவாசப்படுத்தி மீண்டும் உள்ளே பூட்டி வைப்பதற்கும் இச்சுவர்களை விட்டால் காடு துறந்த மனிதனுக்கு வேறு போக்கிடமில்லை! 


* ஏப்ரல் மாதம் சொல்வனம் மின்னிதழின் வங்காளச் சிறப்பிதழில் வெளியான கட்டுரை

https://solvanam.com/2021/02/13/நான்கு-சுவர்களுக்குள்-வி/#comments