Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா - அஞ்சலி

திருவான்மியூரிலிருந்து சின்மாயா நகர் வரை வந்து கூத்துப்பட்டறை நாடங்களை பார்த்துக்கொண்டிருந்த நாட்களது. நொடிந்து நொடிந்து முடியும் தெருக்கள் ஒன்றின் ஓரத்தில் உயர்ந்த கூரை கொண்ட கூடாரம் முன் வண்டி நிறுத்தி நின்றேன். "இன்னும் கவுன்ட்டர் திறக்கலை.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க." என்று ஒப்பனை இட்ட பெண்ணொருத்தி சொல்லி சென்றாள். நாடகம் தொடங்க இன்னும் அரை மணிநேரம் இருக்க எனக்கு அடுத்து இரண்டாவதாக வெள்ளை சொகுசு கார் ஒன்று தயங்கி தயங்கி சந்தில் நுழைந்து சாந்தமாய் அமைந்தது. காரிலிருந்து இறங்கியவரின் தொப்பி மீது விழுந்த பார்வை விரியும் முன்னரே மண்டையில் உரைத்தது அது திரு. பாலு மகேந்திரா என்று. அறிவிலும் உணர்விலும் நிழலாடிய ஒரு மகா கலைஞனின் பிம்பம் இறங்கி என்னை கடந்து சென்றது. நளினமுற்ற ஒரு காற்றுருவம் போல் உள்ளே நுழைந்து மறைந்தார்.


நடிகர்களும் நடத்துனர்களும் அங்குமிங்கும் ஓடியபடி இருக்க சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தேன். படிக்கட்டுகளாய் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து நடிகர்களற்ற மேடையையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அனிச்சையாகவே அவருக்கு அடுத்த வரிசையில் அவர் கால் வைத்திருந்த படியில் இரண்டடி தள்ளி அமர்ந்தேன். அநேக முப்பது நொடிகளுக்கு யாருமற்ற மேடைக்கு நாங்கள் இருவர் மட்டுமே இரசிகர்கள். இரண்டொருவர் வந்து அமர சலனம் கூடியது. அமைப்பாளர்களில் ஒருவர் பாலு அவர்களிடம் எதோ கையில் கொடுத்து பேசி சென்றது என் விழியோரத்தில் படமாகியது.

மிகச் சன்னமான ஒரு குரல் பின்னாலிருந்து ஒலித்தது. "தம்பி இதை பூசிக்கோங்க. கொசு கடிக்காது. பூசிட்டு பக்கத்துல கொடுத்திடுங்க...."

"தேங்க்ஸ்..." என்றேன். அவர் கண்ணை கூட நோக்கவில்லையென்று
இப்போது தோன்றுகிறது.

பரமார்த்த குரு நாடகம் தொடங்கியது. கொசு தடுப்பு மருந்தின் வாசனை நாசியில் நிறைந்தது. முட்டாள்கள் சூழும் கதை வளர்ந்தது. கூட்டம் கலைய பாலு மகேந்திரா எழுந்து வெளியே நடக்க நாடகம் நிறைவுற்றது.

கலைஞர்களின் மரணம் கனத்த மௌனத்தை போன்றது. தானாக கலைந்து விடியும்வரை காத்திருந்து மீள வேண்டும்.