Wednesday, February 1, 2023

நண்பகல் நேரத்து மயக்கம்

 2022ம் ஆண்டின் கேரள திரைப்படவிழாவிற்கு வழக்கத்தை விடவும் பெரும் எண்ணிக்கையிலான சினிமா ரசிகர்கள் வந்து குவிந்திருந்தனர். கொரோனா இடைவெளியினை சமன் செய்யும் பொருட்டு இத்திருவிழாவில் கலந்து கொள்ள மீண்டும் திருவனந்தபுரத்திற்கு வருகை தந்திருந்தனர் பெரும் பகுதியினர். இப்பெருங்கூட்டத்தைத் தாள முடியாமல் திரையரங்குகள் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது போலவே  IFFK இணையதளமும் முதல் நாளிலிருந்தே பெரும் தள்ளாட்டத்திலிருந்தது. அடுத்த நாள் காண விரும்பும் மூன்று திரைப்படங்களுக்கு முந்தைய நாள் காலை 8 மணியிலிருந்து முன் பதிவு செய்யத் துவங்கலாம். அப்படி முன்பதிவு தொடங்கிய ஒரு நாள் காலை இணையதளம் முற்றிலுமாக உடைந்து முடங்கியது. எவராலும் எந்தத் திரைப்படத்திற்கும் பதிவு செய்யமுடியவில்லை. இதற்குக் காரணம் வெறும் ஐந்நூறு பேர் மட்டுமே அமரக்கூடிய ஒரு திரையரங்கக் காட்சிக்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்ய முந்தியதுதான். அத்திரைப்படம் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின்நண்பகல் நேரத்து மயக்கம்’. 




லிஜோ தன் அடுத்தடுத்த படங்களில் ஒரு தனித்த அழகியலைக் கண்டடைந்து முன் நகர்ந்து கொண்டேயிருக்கிறார். அவ்வகையில்நண்பகல்..’ முற்றிலுமாக ஒரு புது திரைமொழியை முயன்றிருக்கிறார். வழக்கமாக திரை விழாக்களில் உலக சினிமாக்களை பார்ப்பவர்களுக்கு இக்காட்சி மொழி அவ்வளவு புதிதானது ஒன்றுமல்ல. நிலைத்த காமிராவின் வழியே கதாபாத்திரங்களும் கதையும் நகர்வது வழக்கமானதுதான். ஒரு வகையில் கலைப்படங்களுக்கு உரித்தான தனி மொழி அது. திரைப்படத்தின் ஓட்டத்தில் காமிராவும் நம் கண்களும் ஒன்றிவிட, எந்த உறுத்தலும் இன்றி காட்சி வழி ஒரு வாழ்க்கையின் சாட்சியாக நாம் அமைந்துவிடக்கூடும். வெகுசன சினிமாவிடமிருந்து, முதன்மையாக, காட்சி வழியாக பிரித்துக்காட்டுவது இதுவே. ஆனால் இப்படத்தில் மேலதிகமாக தேர்ந்தெடுத்த பழைய தமிழ் சினிமா வசனங்கள், பாடல்கள் ஊடாக இக்கதையின் உணர்வுகளை, அதன் மறைபொருளைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார். இது சற்று ஒலி மிக்கு அமைதிக் குலைவை ஏற்படுத்தினாலும், லிஜோ இப்படத்தில் தேர்ந்துகொண்ட புது உத்தி என்றே கொள்ளலாம்.


அங்கமாலி டைரியை ஒதுக்கி வைத்துப் பார்த்தால், லிஜோவிற்கு உருவகக் காட்சிகளில் தனித்த ஆர்வம் உண்டென்பது விளங்கும். தன்னுடைய அடுத்த படமான மா யோவின் கடைசிக் காட்சியும்ஜல்லிக்கட்டின்முடிவும் உருவகமாக அமைந்து அப்படங்களில் அதுவரை பரபரத்து சொல்லப்பட்ட எதுவும் மேற்பூச்சுதான் என்றும் அதன் உள்ளீடாக லிஜோவின் கவனம் மேலான ஒரு கேள்வியின் மீது அமைந்திருந்தது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். அடுத்த கட்ட தாவலாகசுருளிபடம் முழுவதுமேமாதிரிஉலகிற்குள் நுழைந்து வெளிவரும் அனுபவம். முடிவற்ற சுருளில் மனிதர்களும் அவர்கள்தம் நன்மை தீமைகளிலும் சிக்கிகொண்டிருப்பதும் இருள் கானகத்தை ஊடுருவி ஆழப் பாயும் ஒளிக்கதிர்களினூடாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது.


நண்பகல்..’ படமும் அப்படியான ஒரு இணை வாழ்வின் சாத்தியத்தைத் தொட்டுக் காட்டுகிறது. தமிழ் தெரியாத மலையாள ஜேம்ஸின் அறிமுகக் காட்சியிலேயே அவனின் தடித்தனமும் குழுவிலிருந்து தனித்துத் திரியும் ஆளுமையும் வெளிப்படுகிறது. வேளாங்கண்ணிக்கு தன்னுடன் வந்த குழு முழுவதும் வண்டியில் காத்திருக்க இவன் தன் அறையில் மனைவியின் மூட்டு வலிக்குத் தைலம் தடவிக்கொண்டிருக்கிறான். வண்டியில் ஓடும் தமிழ்ப்பாடல்களும் சர்க்கரைத் தண்ணியாக இனிக்கும் தமிழ் காஃபியையும் வெறுக்கிறான். நண்பகளில் உறக்கத்திலிருந்து விழித்ததும் வண்டியை நிறுத்திநின்ற இடத்திலேயே இறங்கி நடந்து ஒரு தமிழ்க் கிராமத்தில் நுழைந்து அங்கு இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போன சுந்தரமாக மாறிவிடுகிறான். சுந்தரத்தின் தினசரி கடமைகளையும் செயல்பாடுகளையும் அவன் விட்டுப் போன இடத்திலிருந்தே செய்யத் துவங்குகிறான். சுந்தரத்தை போலவே சரளமாகத் தமிழ் பேசுகிறான், தன் மகள் மீதான அன்பைப் பொழிகிறான், அங்கிருக்கும் அத்தனை பேருடனும் சுந்தரமாகவே உரையாடுகிறான். இது தன் நிலம் என்று தரையில் புரண்டு அழுகிறான், இதை விட்டு வெளியேற முடியாது எனக் கதறுகிறான். சுந்தரமாக மாறியிருக்கும் ஜேம்ஸை மீட்டு ஜேம்ஸாக அவனை தங்களுடன் அழைத்துச் செல்ல அவன் குழுவினர் அத்தனை பேரும் போராடுகிறார்கள். இறந்த சுந்தரமாக உயிர்ப்புடன் நடமாடும் ஜேம்ஸை வெளியேற்ற முடியாமல் அக்கிராமமே தவிக்கிறது.



உறங்குவது போலும் சாக்காடு

உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” - எனும் திருக்குறள் தொடக்கத்தில் விளக்கமாக ஒரு உரையாடலில் சுட்டப்படுகிறது. உண்மையில், இந்தக் காட்சி மட்டுமே இப்படத்தின் ஆன்மா என்ன என்பதை உரக்கக் கூறுகிறது. இது முற்றிலும் சூசகமாகவே வெளிப்பட்டிருக்க வேண்டும். ரசிகர்களின் மீதிருந்த சிறு அவநம்பிக்கையில் லிஜோ இக்காட்சியை வைத்திருக்கக்கூடும். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிக்கும் ஒருவன் முற்றிலும் வேரொருவனாகிவிட்டால் என்னவாகும் என்ற கேள்வியிலிருந்து இப்படம், உண்மையில் நிலமும் அவன் வாழ்வும், குடும்பமும் ஒரு தனி மனிதனின் அடையாளமாகிவிடுமா என்ற அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது. ‘எனது' என ஒருவன் சொந்தம் கொண்டாடும் எதுவும் எவ்வளவு எளிதாக மாறிவிடக்கூடியது. உறங்குவதும் விழிப்பதும் போலவே பிறப்பும் இறப்பும். மெல்லிய விரல் தொட்டு உடைந்துவிடக்கூடிய வாழ்வு இது. காஃகாவின்மெட்டமார்ஃபஸிஸைநினைவுபடுத்தினாலும் இப்படம் தனி மனிதனின் இருத்தலியல் சார்ந்த கேள்வியை மட்டும் எழுப்பவில்லை. உரிமையையும் அடையாளங்களையும் பற்றிக்கொண்டு திரியும் சக மனிதர்கள் மீது தன் வெளிச்சத்தைச் செலுத்துகிறது


உடல் ஜேம்ஸ் உள்ளம் சுந்தரம் என விழித்துவிட்ட ஒருவனை எவர் சொந்தம் கொண்டாட முடியும். இரு குடும்பங்களும் காத்திருக்கும் காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. இரண்டு வாசல் எல்லைகளிலும் குடும்பங்கள் நின்றிருக்க சுந்தரம் இடையில் உலவுகிறான். அவர்களின் எல்லைகள் நிறுவப்பட்டுவிட்டன. ஏதாவது ஒரு பக்கம் அவனை இழுத்து நிறுத்தினால் மட்டுமே அவர்கள் இத்தனை நாள் வாழ்ந்த, ஏற்றுக்கொண்ட உறவிற்கு அர்த்தம் கிடைக்கும். இறந்து போன சுந்தரத்தைப் போலவே நடமாடும் ஜேம்ஸை எவ்வகையிலும் சுந்தரத்தின் குடும்பத்தினரால் முற்றிலும் ஒதுக்கி விரட்டி விட முடியவில்லை. கனவினைப் போல அங்கு நடப்பதைப் பார்க்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்னரே சுந்தரம் இறந்துவிட்டான் என்பது புத்திக்கு உரைத்தாலும் அவன் மனைவி, ஜேம்ஸின் பேச்சு, நடை என அத்தனையும் சுந்தரமாகவே இருப்பதை உணர்ந்து உறைந்துபோகிறாள். மீண்டும் சுந்தரம் வருவானெனில், வேரொரு உருவமாக இருந்தாலும் கூட, ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியுமா? தனதென இருந்த ஒன்று தொலைந்து போய் மீண்டும் உருமாறி கிடைத்தாலும் அதன் மீதான உரிமை மாறிவிடுமா? மகளுக்கு பெரும் வெறுப்பு உருவாகிறது. எவனோ ஒருவன் சுந்தரம் போல நடிப்பதாக நினைத்து கோபப்படுகிறாள். தன் பெரியப்பாவை உடனடியாக இங்கு வரும்படி அழைக்கிறாள். சுந்தரத்தின் அப்பா ஏதாவது ஒரு சமரசம் செய்து அவனை, காத்திருக்கும் அவன் குடும்பத்தினருடன் அனுப்பிவிட முயல்கிறார். அங்கு தாமதமாக வந்து சேரும் சுந்தரத்தின் அண்ணனின் கோபம் முற்றிலும் வேறு விதமானது. சுந்தரம் எந்த உருவிலாவது இங்கிருப்பது தனக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறான். சுந்தரத்தின் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பை தாமாகவே ஏற்றுக்கொண்ட இவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை, ‘ஒரு திருமண ஏற்பாடைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று ஊர்ப்பெரியவர்கள் உரையாடுவதிலிருந்து அவன் எண்ணத்தைப் புரிந்துகொள்ள முடியும். மிக மிகச் சன்னமாக ஒரு உரிமைப் போராட்டம் வெளிப்படும் இடம் இது. அவன் மட்டுமே வெகுண்டெழுந்து வன்முறைக்குள் பாயும் சாத்தியம் கொண்டவனாக இருக்கிறான். மறுபுறம் ஜேம்ஸின் குடும்பம் அவனுக்கு மயக்க மருந்து செலுத்தியாவது தூக்கிக் கொண்டு போக காத்திருக்கிறார்கள். தன் கண் முன்னே கணவன் கை நழுவி விலகுவதைப் பார்த்தபடி இருக்கிறாள் ஜேம்ஸின் மனைவி. நான் ஜேம்ஸ் அல்லா எனக் கூறும் ஒருவனிடம் எதைக் காட்டி தன் உரிமையை அவளால் மீட்ட முடியும். அவனில்லாமல் அவள் அங்கிருந்து நகர்வதாகவும் இல்லை. தன்னுடைய உரிமையும் சொந்தமும் காற்றின் முன் தூசியாகிக்கொண்டிருக்கும் உணர்வில் அவள்

  

எந்தக் குழப்பமும் இல்லாமல் அவனை அப்படியே ஏற்றுக்கொள்வது அவ்வீட்டில் வாழும் கண் தெரியாத சுந்தரத்தின் பாட்டி மட்டுமே. அவளுக்கும் மட்டுமே உருவத்தின் மீதான எந்த அக்கறையும் இல்லை. எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் அவளுக்கு ஒரு கவலையும் இல்லை. தன் கையில் வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஒருவன் யாராக இருந்தாலும் அவளுக்கு அது சுந்தரம்தான். இரண்டு வருடங்களாக அவன் இல்லாமல் போனதின் வருத்தமும் இல்லை ஒரு நாள் மட்டுமே மீண்டு வந்ததினால் பெரு உவகையும் இல்லை. இந்தச் சமநிலை வேறு எவருக்கும் இங்கு இல்லை


இரண்டாவதாக, இப்படம் அடையாளங்களின் அர்த்தமின்மையைப் பேசுகிறது. ஜேம்ஸும் சுந்தரமும் நாம் ஏற்றி வைக்கும் அத்தனை அடையாளங்களிலும் நேர் எதிரானவர்கள். தீவிர கிறிஸ்துவன் இல்லையென்றாலும் தேவைப்படும்போது பிரார்த்திப்பவன் ஜேம்ஸ். தினசரி கோயிலுக்குச் சென்று நெடுஞ்சாண்கிடையாக விழுபவன் சுந்தரம். குடிப்பழக்கம் முதல் உணவு விருப்பம் வரை அத்தனையிலுமே எதிரெதிராக நிற்கக்கூடியவர்கள். பழைய பாடல்களையும் படங்களையும் கிண்டல் செய்து வரும் ஜேம்ஸ், சுந்தரமாக மாறி நுழைவது மனதில் தங்கிவிட்ட பழங்கனவினைப் போலக் காலத்தில் எங்கோ தொலைந்து போன ஒரு கிராமத்தினுள். கிராமம் முழுவதும் கருப்பு வெள்ள தமிழ்ப் படங்களும் பாடல்களும். இரவில் குடித்துவிட்டு சுந்தரமாக சிவாஜி படத்தின் வசனத்தை நடித்து காட்டுகிறான். வண்டியில் தமிழ் பாடல்கள் ஓடிக்கொண்டிருப்பதை எதிர்த்து சத்தம் போட்டவன் ஜேம்ஸ். அவன் கிராமத்தினுள் நடந்து வரும்போது அத்தனை வீடுகளிலும் எம். ஆர். ராதா பழமையையும் இந்தியாவையும் கிண்டலடித்து வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டின் நாள்காட்டி ஒன்று தென்பட்டாலும் அக்கிராமம் முழுவதும் கறுப்பு வெள்ளை ஒலிக்க விட்டிருக்கிறார் லிஜோ. தமிழ் கிராமத்தில் பெரும் பதட்டத்தினூடே இம்மலையாளக் குடும்பம் நுழைகிறது. அத்தனை பேரும் தங்களை ஏதேனும் ஒரு வகையில் தாக்குவார்கள் என்ற பயத்திலே அங்கே ஜேம்ஸை தேடி வருகிறார்கள். தன் நிலமும் மொழியும் மதமுமே தன்னுடைய அடையாளம் என எண்ணும் பெரும் திரளுக்கு முன்பாக ஒரு கண்விழிப்பில் இது அத்தனையும் மயங்கி மாறியவனாகச் சுந்தரமெனும் ஜேம்ஸ் ஒரு நாள் வாழ்கிறான். ஜேம்ஸின் குழுவில் யாராலும் மதிக்கப்படாத, திருமணச் சந்தையில் விலை போகாதவனாக வரும் இளைஞன் சாலையின் நடுவில், இரவில், மஞ்சள் விளக்கொளி மேலே விழ வண்டியோட்டியிடம் சொல்கிறான், “இப்படி ஒரு ஊரு இப்படிச் சில மக்கள் இருப்பாங்கன்னு நாம் எப்போவாவது நினைச்சு பார்த்திருப்போமா. இன்னிக்கு இங்கே அறியாத ஊருல இவங்க கூட ஒரு நாள் தங்க வேண்டி வந்திருக்கு பாருங்க."





பின்னணியாக ஒலிக்கும் பழைய தமிழ் திரையிசைப் பாடல்களும் வசனங்களும் இப்படத்தின் உள்ளுணர்வுடன் எவ்வாறு ஒத்திசைகிறது என்பதைத் தனியாகவே ஆராயலாம். ஆனால், சமயத்தில் அது உரக்கப் பேசுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு கலைப் படமாக தன் படைப்பை உருவாக்கும்போது ஒரு இயக்குனருக்கு இந்திய ரசனையின் மீது அவநம்பிக்கை எழுவதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய உச்ச நட்சத்திரங்களில் மம்முட்டியால் மட்டுமே ஒரே வருடத்தில்ரோர்ஷாச்போன்ற பேயிடம் நேருக்கு நேர் நின்று சண்டையிடும் படமும்நண்பகல்…’ போன்ற கலைக்கு அருகில் வந்து நிற்கும் படத்திலும் நடிக்கச் சாத்தியப்படுகிறது என நினைக்கிறேன். ஜேம்ஸுக்கும் சுந்தரத்துக்குமான உடல் மொழி வேறுபாட்டை மிக நுண்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார் மம்முட்டி. ஜேம்ஸும் சுந்தரமும் சந்தித்துக்கொள்வதுதான் உச்ச காட்சி. வெறும் சில நொடிகளே நீளும் அக்காட்சியில் இருவருமே வெளிப்பட்டு மறையும் உணர்வுகளை வெளிக்கொணர்கிறார். இச்சிறிய படத்திற்கு உச்ச நட்சத்திரம் ஏன் என்ற கேள்வி அவசியமற்று போகிறது. அடுத்ததாக தேனி ஈஸ்வரனின் நிலைத்த காமிரா காட்சிகள். தமிழில் குறிப்பிடத்தக்க கலையம்சம் பொருந்திய திரைப்படம் எடுத்த இயக்குனர் அவரென்பதால் இக்கதைக்குத் தேவையான வண்ணமும் வெளிச்சமும் மிகச் சரியாகக் கையாளப்பட்டிருக்கிறது. கிராமத்து சந்துகளிலும் வீட்டின் முற்றத்திலும் கோழியின் கண் போலக் காட்சிகளை பிடித்திருக்கிறது


இயல்பாக கதையின் போக்கோடு வெளிப்படும் நகைச்சுவை தருணங்கள் படம் முழுவதும் புன்னகையைத் தக்க வைக்கிறது. ஆனாலும் படத்தின் இறுதியில்வீடு வரை மனைவி…’ பாடல் பின்னணியில் ஒலிக்கும்போது மனம் விம்முவதையும் தடுக்க முடியவில்லை. ஒரு வகையில் சுந்தரத்தின் இரண்டாம் மரணம் இது. சுந்தரத்தின் ஒரு நாள் வருகையை அவன் குடும்பத்தினர் அள்ளிக்கொள்ளவும் முடியாமல் அறுத்துவிடவும் முடியாமல் தவிக்கின்றனர். மீண்டும் அவன் விடைபெறுவது அவனின் மரணமேதான். மரணம் கொட்டி குவிக்கும் துக்கத்தை அந்த கிராமமே அனுபவிக்கிறது. நீண்ட நடையாக சுந்தரம் ஜேம்ஸாக மாறி விடை பெறும் காட்சிகள் இறுதி யாத்திரையை நினைவுபடுத்துகிறது.  


படத்தின் இறுதியில் ஜேம்ஸ் குழுவினரின் வண்டி கிளம்பியதும் அதன் பின்னால் சாரதா நாடக கம்பெனி என்று எழுதியிருக்கும். திலகனின்ஓர் இடத்தில்என்ற நாடகத்தின் பெயரும் குறிக்கப்பட்டிருக்கும். படத்தின் போக்கில் வண்டியின் ஓட்டுநர் தன் முதலாளியின் பெயர்திலகன்என ஓரிடத்தில் கூறுவார். நாடக காலங்களில் லிஜோவும் திலகனும் சேர்ந்திருந்த புகைப்படங்கள் பெயர் ஓட்டத்தின் ஊடாக காட்டப்பட்டது. திலகனுக்கு ஏதோ ஒரு வகையில் இத்திரைப்படம் சமர்ப்பிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால்ஓர் இடத்தில்என்ற நாடகம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடியவில்லை. ஜேம்ஸின் குழு, நாடக கம்பெனியின் வண்டியில் பயணித்தவர்கள் என்பது ஒரு நாளில் நடந்து முடிந்த இந்நாடகத்திற்கு வேறு ஒரு பரிணாமத்தைக் கொடுக்கிறது. வண்டியின் ஓட்டுநர் இரவில் சாலையில் தன்னுடன் தத்துவம் பேசிய இளைஞனுக்கு, “இவ்வுலகமே ஒரு நாடக மேடைன்னு சொல்லியிருக்காங்களே உனக்கு தெரியுமாஎன்று பதிலளிப்பார்.  


தமிழ் டப்பிங் வெளியாகியிருந்த போதும் நான் மலையாளத்தில்தான் இப்படத்தைப் பார்த்தேன். படத்தின் வசனங்களும் பெரும் பகுதி தமிழ்தான். மனம் விம்மி நான் அரங்கை விட்டு வெளியே வருகையில் பின்னால் ஒரு தமிழ் இளைஞர் குழாம் சத்தமாகப் பேசிக்கொண்டது, “இருநூறு ரூபாய்க்கு வொர்த்தே இல்லையேடா. இரண்டு மணி நேரம் கூட ஓடலை. ஒன்னுமே நடக்கவும் இல்லை. இதை எதுக்குடா எடுத்து வெச்சிருக்கான்.” என்று. மனிதனின் பெருமைக்குரிய தனித்த அடையாளங்கள் மொழி, மதம், நிலம் சார்ந்து இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிபட புரிந்துகொண்டேன்