Sunday, August 19, 2018

ஊட்டி காவிய முகாம் 2018 - உலகச் சிறுகதைகள், ஒரு முன்னுரை

ஊட்டி காவிய முகாமிற்காக உலகச் சிறுகதைகள் மீதான விவாதத்திற்கென இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்து அதன் மீது ஒரு முன்னுரையை தயாரித்து வைத்திருந்தேன். நேரமின்மையால் அவ்விவாதம் நிகழவில்லை.  திரு.ஜெயமோகன் இம்முன்னுரையையும் இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் தனது தளத்தில் பதிந்து விவாதங்களையும் வரவேற்றார்.

மொழிபெயர்ப்பு சிறுகதைகள் - முன்னுரை





ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்:

உலகெங்கிலும் பிழைப்புக்காகவோ அல்ல உயிரைக் காக்கவோ மக்கள் சொந்த நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். சொந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு இடம் பெயர்வதும் அமெரிக்காவிற்கு இடம் பெயர்வதும் அனேகமாக வேறு வேறு வகையைச் சேர்ந்தது என்று தோன்றும். தன்னுடைய அரசாங்கமோ அதன் உள் அமைப்புகளோ எவ்விதமான எதிர் நிலைகளை கொண்டு எழுந்தாலும்  இன்றும் அமெரிக்காதான் பெரும்பாலானோர்க்கு கனவு தேசம். மக்கள் தனிச்சையாகவே அவ்விழுமியங்களை காக்கும் பொருட்டு பல்வேறு சக்திகளோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஓரளவிற்கு உயர் நிலை தொழில்களுக்காக அங்கு இடம் பெயர்பவர்கள் ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும். இந்தியர்களின் கால்களில் ஒன்று கடல் தாண்டி இந்தியாவில் எப்போதும் இருக்கும். அமெரிக்கக் குடியுரிமை பெற்றாலும்  இந்தியக் குடியரசில் தங்களுக்கு பங்கு உண்டு என்று நினைப்பவர்கள், முகநூலிலேனும். குலதெய்வ கோவிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை வருவது அன்றாட அலுவலைப் போன்றதொரு எண்ணமும் இருக்கும். இதற்கெல்லாம் காரணமாக அவர்கள் எப்போது இந்தியா திரும்பி வந்தாலும் நிம்மதியான சலனமற்ற ஒரு அடிப்படை வாழ்வை இங்கே அமைத்துக் கொள்ள முடியுமென்பதுதான். சீனர்கள் அமெரிக்காவில் கால் பதித்த நாள் முதலே அவர்களின் சீனா அமெரிக்காவிற்குள் வந்து விடுகிறது. திரும்பச் செல்லுதல் கிடையாது. எவ்வளவு தத்தளிப்பாக ஆங்கிலம் பேசினாலும் அவர்களுக்கு அமெரிக்கா தாய் நாடாகிவிடுகிறது. ஆனால் இவர்களிலிருந்து மேலெழும் இளம் தலைமுறையினர் அல்லது இரண்டாம் தலைமுறையினரின் அகவயமான சிக்கல்களும் அதுவே கதைகளாகவும் தற்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவ்வகையில் சீனப் பூர்வீகம் கொண்ட யியுன் லீ (Yiyun Li) சமகால அமெரிக்கப் பெண் எழுத்தாளர்களில் அதிகக் கவனம் பெற்று வருகிறார்.

1972ல் பெய்ஜிங்கில் பிறந்த யியுன் லீ யின் தந்தை ஒரு அணு விஞ்ஞானி. சீன விஞ்ஞானிகள் அமெரிக்கா வந்தடையும் மரபைத் தொடர்ந்து இவர்கள் குடும்பம் 90களின் மத்தியில் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தது. யியுன் லீ அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பிற்குப் பின் புனைவு-அபுனைவு படைப்பியல் தொடர்பாக பட்டப் படிப்பை முடித்து புனைவிலக்கியத்தில் நுழைந்தார்.  இவரின் சிறுகதைகள் பரவலான வரவேற்பை பெற்றது. A thousand years of good prayers என்ற சிறுகதை தொகுப்பு PEN/Hemmingway உட்பட பல விருதுகளையும் வென்றது. அதீத அலைக்கழிப்பினால் 2012ல் இரண்டு முறை தற்கொலை முயற்சியை மேற்கொண்டார். புனைவுகள் எழுதுவதிலிருந்து ஒரு வருடம் ஒதுங்கிக் கொண்டு சுயசரிதைகளையும் வரலாறுகளையும் மட்டுமே தொடர்ந்து வாசித்து வந்தார். சுயசரிதைகளை வாசிப்பது, மனிதர்களின் வாழ்வை அறிந்துக் கொள்வது தனக்கு ஆசுவாசம் அளிப்பாதாக சொல்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுதி வரும் இவரின் 2015ல் வெளி வந்த “A Sheltered woman” – அமெரிக்காவில் இளந்தாய்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் முதல் மாதம் மட்டுமே செவிலித்தாயாக பணிபுரியும், தனக்கென குழந்தையே பெற்றிடாத ஒரு சீன மூதாட்டியைப் பற்றிய கதை – சன் டைம்ஸின் சிறந்த சிறுகதையாக தேர்வு செய்யப்பட்டது.

குருபூஜையின் போது ஊட்டியில் உங்களுடன் தங்கியிருந்த ஒரிரவில் சமூகத்தில் மதிப்பீடுகள் மாறியிருப்பது இலக்கியங்களில் பிரதிபலிக்கிறதா? இந்த மதிப்பீடுகள், விழுமியங்களின் மாற்றங்கள் எதனால் நிகழ்கின்றன? எந்த அளவிற்கு அவை பிறழ்ந்து தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும்  என்ற விவாதத்தில் மதிப்பீடுகளின் மாற்றங்களுக்கு இன்றைய சமூகத்தில் தனிமனித சுதந்திரத்தின் மீது எழும் பிரக்ஞையே பெரும் காரணியாக இருப்பதாகவும் பொருளியல் சுதந்திரம் துணையிருப்பதாகவும் கூறியிருந்தீர்கள். ஆனால் இந்த மாற்றங்கள் ஒரு சட்டகத்திற்கு உட்பட்டுதான் நடக்கும். மதிப்பீடுகள் (Values) சமூகங்கள் அல்ல நாடுகள் கட்டமைத்த ஒழுக்கங்களுக்கு  (Ethics) உள்ளேயேதான் மாற்றம் பெரும். அவ்வொழுக்கங்களின் மாற்றங்கள் மானுட தரிசினத்திற்கு (Vision) உட்பட்டதாகத்தான் இருக்கும் என்று நீங்கள் விளக்கிய படிநிலைகளை நிறுவுமாறு “ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்” என்ற இச்சிறுகதை அமைந்திருப்பதாகத் தோன்றியது.

மிஸ்டர்.ஷீயும் அவரது மகளும் தங்கள் திருமணத்தை மீறிய தோழமையை தேடிச் செல்கிறார்கள். ஷீ தொடுதலுக்கும் தேவையற்ற ஒரு காதலை யீலானோடு வளர்த்துக் கொண்டதிற்காகவே அவர் ஏற்கும் தண்டனை, அடுத்த தலைமுறையை சென்றடைந்து, தனக்கும் தன் மனைவி மகளுக்கும் இடையே பெரும் தனிமையை எழுப்பி நின்று விடுகிறது. தன்னை, தன் கெளரவத்தை குடும்பத்திடமிருந்து பாதுகாத்துக் கொள்ள அவர் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு பொய்யிலிருந்து வெளிவருவதற்கு, அவர் தனக்கே அந்நியனாக மாற வேண்டியிருக்கிறது. சீனாவில் மாவோவின் ஒழுக்க நெறிமுறைகளின் படி தன் மதிப்பீடுகளை ஒருவாக்கி கொண்ட ஷீயும், அது உலகப் பொதுமையானதென்ற அவர் எண்ணமும், தன் மகள் அவள் தோழனோடு சத்தம் போட்டு சிரித்துப் பேசும்போது பெரும் சவாலை எதிர்கொள்கிறது. அவள் தன் உணர்வுகளுக்கு பொருள்படும்படியான ஒரு தோழமையை தேடிக் கொண்டாள், அதை பகிரங்கமாக சமூகத்துக்கு வெளிக்காட்டி திருமண வாழ்விலிருந்து விலகியும் வந்துவிட்டாள். எதன் பொருட்டு அவர் ஒரு பொய்யை அரண் எழுப்பி காத்து வந்தாரோ அது சடாரென வெட்டவெளியில் கூத்தாடிக் கொண்டிருக்கிறது. மிகச் சமீபத்தில் விவாகரத்தான தன் மகள் ஒரு ஆணோடு சிரித்துப் பேசுவது விபச்சாரியின் செயல் என்று கொந்தளிக்கிறார், தான் அமெரிக்காவிற்கு வந்ததின் உள் நோக்கம் அவளுக்கு நல்ல துணை தேடி அமைக்கத்தான் என்பதையும் மறந்துவிட்டு. தன் புதுத் தோழியான “மேடம்” அவர் வயதுக்கு பொருந்தாத அடைகள் அணிவதை உடனே மேடத்தின் பூர்வீக நாட்டின் ஒழுக்க விதிகளோடு ஒப்பிட முயற்சிக்கிறார். ஈரானைப் பற்றி அவருக்கு என்ன தெரியுமோ தெரியாதோ ஆனால் மேடம் இப்போது இங்கே சந்தோஷமாக இருக்கிறார் என்பதை உணர்வதன் மூலமாகவே தன் மகளையும் அவர் புரிந்துக் கொள்கிறார். “அந்நிய நாடு அந்நிய எண்ணங்களை கொடுக்கும்”.  இந்த மதிப்பீடுகளின் மாற்றங்களும் இம்மூன்று நாடுகளுக்குமிடையிலான ஒழுக்க வேறுபாடுகளுக்கும்  ‘ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்’ என்ற தொன்மத்திற்குள்  சட்டகம் அமைத்து அடைத்துக் கொள்ளும்போது பெரும் ஆசுவாசமடைகிறார் மிஸ்டர்.ஷீ. தன் மகளின் முறிந்த மணவாழ்விற்கும், தனக்கும் தன் மகளுக்குமான பசையற்ற உறவுக்கும், மேடத்திடம் துளிர் விட்டிருக்கும் இளந் தோழமைக்கும் அவர் தன் தொன்மத்திலேயே விடை கண்டடைகிறார். தொன்மம் மானுட தரிசனத்தின் ஆதாரம்.


இரண்டாவதாக, அப்பாவிற்கும் மகளுக்கும் இடையே முரணான மொழி பற்றிய புரிதல். “உங்களுக்கு சொந்தமான ஒரு மொழி உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவியதில்லையென்றால், வேறொரு மொழியை தேர்ந்து அதில் நீங்கள் வெளிப்படுவது உங்களை புதிய மனிதராக்கும்” என்று சொல்லி சீன மொழியில் தன் கணவரோடு இயல்பான உரையாடலை மேற்கொள்ள முடியாததாலும் ஆனால் ஆங்கிலத்தில் தன் தோழனிடம் தான் உண்மையாய் வெளிபட்டதும்தான் தன் விவாகரத்திற்கு காரணமாக காட்டுகிறாள் மகள். இதை ஷீயால் என்றுமே புரிந்துக் கொள்ளமுடியாமல் போகும் என்று படுகிறது. தன் மொழியிலேயே அவர் ஒரு ராக்கெட் சயிண்டிஸ்டாக வளர்ந்தவர். ஆனால் மனைவியிடமும் மகளிடமும் அவரின் நெருக்கத்தை குறைத்தது மொழியல்ல, தன் உணர்வுகளை, அவர் வேலை அவருக்களித்த உற்சாகத்தை பகிர்ந்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாமல் போனதுதான். அவர் மகளே கூட தன் புது உறவை தொலைபேசி உரையாடலை அப்பா கேட்கும்படி நடத்தும் நாடகத்தின் மூலம்தான் தெரியப்படுத்துகிறாள். மிஸ்டர்.ஷீயும் மேடமும் வெவ்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட தனக்குதானேதான் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடையில் இடைவிடாத, வெகுசில நாட்களே முதிர்ந்த ஒரு அன்பு உறவாடிக் கொண்டிருக்கிறது. தான் எப்போதும் அறிந்திராத மகிழ்வை இப்போது அனுபவிப்பதாக அவருக்கு தோன்றுகிறது. மொழிகளுமற்ற மதிப்பீடுகளுமற்ற பரிசுத்த துளிர் இலையின் மீது நின்றிருக்கும் அச்சூரிய கணத்தில் உறைந்துபோய்விடுவதென முடிவெடுக்கிறார் மிஸ்டர்.ஷீ.


அமைதிப் பிரதேசத்தின் முயல்:

ஹஸான் ப்ளாஸிம் அரபு மொழியில் எழுதிய  ‘Green zone Rabbit’ என்ற சிறுகதையை தமிழில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து நம் நண்பர்களுடன் நான் பகிர்ந்த போது சிலருக்கு இது நேரடியான ஒரு பொழுதுபோக்கு சிறுகதையென்றும் விவாதத்திற்கு அவ்வளவு உவப்பானதில்லையென்றும் தோன்றியது. இருப்பினும் இக்கதையை நான் முன் வைக்க விரும்பிய காரணங்களுள் ஒன்று, போர் சூழல்களிலிருந்து வெளிவரும் தற்கால கதைகள், மத்திய கிழக்கிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும், க்ரைம் த்ரில்லர் வகையிலேயே அமைந்திருக்கிறது. அதற்குள்ளாக அவர்களின் வாழ்வின் ஒரு கணத்தை பதிவு செய்து அனுப்புகிறார்கள். இதன் உளப் பிண்ணனியும் இது விரிவடையும் ஒரு தொடர் போக்கா என்பதையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருந்தது.

ஹஸான் ப்ளாஸிம்  அடிப்படையில் ஒரு திரைப்பட இயக்குனர். அவர் படங்களினால் அவருக்கு உள்நாட்டில் ஆபத்து நேரும் என்று அறிந்ததும் இராக்கிலிருந்து தப்பித்து பல நாடுகளில் தலைமறைவாகி இறுதியில் ஃபின்லாந்தில் தஞ்சமடைந்தார். இதுவரை இரண்டு சிறுகதை தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். “இராக்கிய கிறிஸ்து” என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2014ல் Independent Foreign Fiction பரிசை வென்றார். இப்பரிசு 2015லிருந்து Man Booker International பரிசோடு இணைக்கப்பட்டது. இத்தொகுப்பிலிருக்கும் ஒரு கதை The Green Zone Rabbit. ஃபின்லாந்தின் புகழ்பெற்ற ஒரு ஓவியரின் “The Garden of Death” என்ற ஓவியம்தான் இக்கதை எழுத தூண்டுதலாக அமைந்திருக்கிறது ஆசிரியருக்கு. இறந்தவர்கள் சொர்கத்திற்கு சென்று சேரும் முன்னால் தங்கியிருக்கும் தோட்டம் இது. போர் நிறைந்த இராக்கிய நாட்டில் ஆபத்துகளிலிருந்து விலகி மிகப் பாதுகாப்பானதாக அமைக்கப்படும் Green Zone அத் தோட்டத்தைப் போன்றது. அதன் பாதுகாப்பும் வசதிகளும் ஒரு மாயத் தோற்றமே.

இக்கதையில் வரும் முயல் உண்மையிலேயே முட்டையிட்டிருக்கக் கூடும் என்ற எண்னம் எழுகையில் இது Fabulism அல்லது மாய யதார்த்த வகையைச் சேர்ந்ததாகிவிடுகிறது. ஹஜ்ஜார் அது முயலின் முட்டைதான் என்று நம்பிவிடுவதற்கான சாத்தியம் உண்டு. அவனுக்கு யார் மீதும் சந்தேகம் எழவில்லை. சல்சால் தன் மீது பாய்கையில் “இது நான் இட்ட முட்டையில்லை” என்கிறான். யாரும் வைத்திருக்கவில்லை. மேலும், அவன் வித்தியாசமான மிருகங்களைப் பற்றி தொடர்ந்து படித்தவன். வினோதமான விலங்குகளுக்கும் அதன் வழக்கங்களுக்கும் பழகிப் போனவன். தான் இதுவரை அறிந்திராத முட்டையிடும் முயல் இனத்தை சேர்ந்தது இது என்றே அவன் நம்புவான்.

அமைதிப் பிரதேசத்திலிருக்கும் முயல் தன் இயல்பை மீறி முட்டையிடவும் கூடும் என்ற எண்ணம் அமைதிப் பிரதேசத்தை முகநூலோடு ஒப்பிடுகையில் மேலும் விரிவடைகிறது. 1970 களில் இராக்கில் இலக்கியமும் கலைகளும் மேலோங்கியிருந்தது. புத்தக வாசிப்பு மிகப் பரவலாக இருந்தது. டால்ஸ்டாயும் காஃப்காவும் மிகவும் பழக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர். அதற்கான குறிப்புகள் இக்கதை முழுதும் உண்டு. போர் தொடங்கிய பின்னால் நூலகங்களும் கல்விக் கூடங்களும் அழிந்து போயின. இலக்கியம் வாசித்த காலத்தை “அமைதிக் காலம்” என்று இன்றளவும் நினைவுகூறுகின்றனர். இன்று சதா குண்டுவெடிப்புகளும் உயிர்ப் பலிகளும் நடந்தேறிக் கொண்டிருக்கும் நாட்டில் கருத்து அடிமைகளின் முகநூல் மோதல்கள் மேலும் சில உயிற்களை காவு வாங்குவது கவலையோடு நோக்கப்படுகிறது. அமைதிப் பிரதேசம் முகநூலுக்கும் அம்முயல் சல்சாலுக்கும் உருவகங்களாகிறது. இந்த மாய பாதுகாப்புக்குள் இருக்கும் வரை அவர்கள் முயல்கள்தான். தேவையெனில் முட்டையிடவும் செய்வார்கள். வெளியில் காலடி எடுத்து வைத்ததும் வெடிக்கிறார்கள் அல்ல வெடித்துச் சாகிறார்கள். சல்சால் முயலைக் காணும்போதெல்லாம் எரிச்சலுறுவதும் இதனால்தான். அது அவன் தான். ஒரு தொழில் முறை கொலையாளி முயலாகி பதுங்கியிருக்கிறான். சல்சாலும் முயலுமே இக்கதையில் எரிந்து தழல்களாகிறார்கள்.

இக்கதையில் வருபவர்கள் பெரும்பாலும் இலக்கிய பரிச்சயம் உள்ளவர்கள். ஹஜ்ஜார் ருஷிய நாவல்கள் வாசித்தவன், கலாச்சார துணை அமைச்சர் இரண்டு நாவல்கள் எழுதியவர், சல்சாலின் முகநூல் முகம் டால்ஸ்டாய். போரும் அமைதியும் என்று முகநூலில் உரக்கச் சொல்பவனாகயிருக்கிறான். இதில் கடைசி இரண்டு பேரும் முகநூலில் கருத்துகளையும் கோட்பாடுகளையும் அலசி ஆராயும் அறிஞர்கள். மாற்றி மாற்றி விதந்தோதிக் கொண்டாலும், ஒருவரையொருவர் கொல்வதற்கு காத்திருக்கிறார்கள்.

இப்போது, முகநூல் வெறும் பொழுது போக்குதானே என்பவர்களுக்கு அது ஒரு நாட்டின் உயிர்ப் பிரச்சினையாக மாறியிருப்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுவதை கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒர் படைப்பாளியின் முன்னுணர்வுக்கு வாசகன் தர வேண்டிய கவனமிது. இக்கதையில் வன்முறைகளெல்லாம் நாடகத்தனமற்று சொல்லிச் செல்லும் போது மெய் நிகர் உலகின் கருத்து மோதல்களினால் உயிர்கள் போவது கோடிட்டு காட்டப்படுகிறது. தினமும் பத்து கார் குண்டுகள் வெடிக்கும் ஒரு நாட்டில் கூடவே முகநூல் மோதல்களினால் ஒரு உயிர் போவதை கவலையோடு முன்வைக்கிறான் ஆசிரியன். ஒருவேளை இது போர் நிகழும் பூமியாக இருந்து கொல்வதும் மடிவதும் யாரென்றரியாத ஒரு நிலத்தில் ஆயுதங்களும் குண்டுகளும் சுலபமாக கைவரும் சாத்தியமிருந்தால், நீங்கள் வெறுப்பு உமிழும் உங்கள் பரம முகநூல் எதிரியின் மீது குண்டெறியமாட்டீர்கள் என்று உறுதியாக கூறமுடியுமா நண்பர்களே?

நரேன்