Saturday, April 18, 2015

வண்ணங்களின் வரையறை!!

இளவயது ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களையும் அழகியல்களையும் எவ்வளவு சொல்லியும் தீராது. அது பலசமயம் வெறும் அர்த்தமற்ற வேகம் என்றபோதிலும்.
ஒரே கான்வாஸில் விதவிதமான ஓவியங்களை தீட்டுவதில் மணிரத்னம் மிக கைதேர்ந்தவர். அதிலும் இந்தமுறை வீடியோ கேம் வகை காதல். அதீத வண்ணங்களால் ஆன கதாபாத்திரங்கள். எதையுமே சட்டென தேடி தாவி ஓடி பிடித்து வென்றுவிட முடியுமென ஒரு முனைப்பு. செத்து செத்து விளையாடும் விளையாட்டு தானே...நிரந்தரமான எந்த முடிவிற்கும் தயாராகாத மனநிலை. இது காதாலா என்று கூட முடிவெடுக்க முடியாத ஒரு உறவு தாராவிற்க்கும் ஆதிக்கும். திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அதற்கு ஒரு காரணத்தை புனைய இக்கதை முனைந்தாலும் அது அவசியமற்றதும் கூட.
வேறு வேறு நாட்டிற்கு செல்லும் கனவுகளோடு கடைசி சில மும்பை மாதங்களை ஒன்றாக கொண்டாட முடிவெடுத்து வாழும் வீட்டின் அடுத்த அறையில் நீண்ட தாம்பத்தியத்தை ஒரு கனிந்த பழத்தைப் போல நிதானமாக சுவைத்து மகிழும் கணபதி தம்பதியினர். பல காட்சிகளில் இவர்களின் அறைக் கதவுகளின் மெல்லிய இடைவெளியின் ஒளியில் காதலின் முற்றிலும் முரணான இரு வேறு கோணங்கள் பரிமாரிக்கொள்ளப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை இழந்து வரும் மனைவியின் வியாதியை தனது மீதி வாழ்க்கையாக கொள்ளும் கணவனின் காதல்; இழப்பதற்க்காகவே நினைவுகளை சேகரிக்கும் ஒரு கலர்ஃபுல் காதல். சிறு பிரிவுகள் சிறு கூடல்கள்; இரண்டிலுமே நாடகமற்ற விளையாட்டுகளும் கனவுகளும் "சின்னஞ் சிறு ரகசியங்களும்"!

முதல்முறையாக ஆதியும் தாராவும் ஒரு அறையில் கழிக்க நேரும் ஒரு இரவின் பாடலில் "பறந்து செல்லவா.." என தாராவின் தொலைதூர கனவுகள் இவர்களின் இடையில் ஒரு பாதுகாப்பான தடையை உருவாக்கினாலும் அடுத்த சந்தர்ப்பத்தில் "நானே வருகிறேன்.." என இடைவெளிகளை கடந்து ஒன்று கூடுகிறார்கள். ஒன்றாக மிச்ச காலத்தை கழிக்க நினைத்து குடிபுக அனுமதி கேட்கும் காட்சியை தொடரும் பாடல் - "மலர்களை கேட்டேன் வனமே தந்தனை..தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை.." பாடல்களின் வரிசையும் வரிகளும் கதையின் ஓட்டத்தை நியாயப்படுத்தும் இந்த அழகு கடைசியாக எந்தப் படத்திலும் வந்ததாக நினைவில்லை. மணியின் படங்களையே இதற்க்காக மீண்டும் ஒரு முறை பார்க்க ஆவல் மேலிடுகிறது. ஆச்சரியமாக, "ஹே சினாமிகா.." பாடலின் ஒரு வரி - "சீரும் சினாமிகா" ஆங்கில சப்-டைட்டிலில் "Seething Sinamika" என்று அர்த்தமும் எதுகை மோனையும் கூட கெடாமல் வந்திருந்தது!!!
சிறு முறைப்புகளுக்கு பிறகு ஆதியிடம் கணபதி உரிமை கொள்ளும் காட்சி பிரஷர் குக்கர் நீராவி படர்ந்து தெளிவது போல காட்சிப்படுத்தியிருப்பது ஒரு உதாரணம். மணியும் பி.சி.யும் விளையாடியிருக்கிறார்கள். சீண்டுவதர்க்கென்றே ஆங்காங்கே "அலைபாயுதே" காட்சிகளை நினைவுபடுத்தும் கோணங்களும் உண்டு. பேருந்து பின் சீட் பயணம், எலெக்ட்ரிக் டிரெயின் என பழகிய இடங்களே. உண்மையில் அலைபாயுதே போலவே இதிலும் இரண்டு ஜோடிகள். ஏதோ ஒரு வகையில் ஒருவரின் வாழ்க்கையை இன்னொரு காதல் மாற்றியமைக்கிறது. அனால் முந்தையதில் பிரியாமல் இருப்பதற்காக தாலி கட்டி கல்யாணம் செய்து பின்பு பிரிவின் விளிம்பில் ஊசல்; இதில் பிரிவு நிச்சயம் என திருமணமற்ற உறவின் விளிம்பில் காதல். மிகச் சிறிய ஒரு கோடு. ஆனால் இந்தமுறை அழுத்தம் திருத்தமாக, விலாவரியாக வரைந்திருக்கிறார் மணி.
விதவிதமான பயணங்களில் வாழ்க்கை. எதை நோக்கியோ சென்றுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத திசையில் திரும்பி சலசலத்து ஓடும் நதி இது. வெவ்வேறு நிறங்களாக பிரிந்து தான் சென்று சேரும் இடங்களை தேடி அலைந்துக் கொண்டிருந்தாலும் இந்த வண்ணங்கள் அறுபடும் ஓரிடத்தில் காதல் மீண்டும் தூய ஒளியாக மட்டுமே எஞ்சுகிறது.