Tuesday, August 25, 2020

கனன்றெரியும் நீர்வெளி

 நீலகண்டப் பறவையைத் தேடி நாவல் வாசிப்பை முன் வைத்து சொல்முகம் வாசகர் முழுமத்தின் வலைப்பூவில் எழுதிய கட்டுரை:

https://solmugam.home.blog/2020/08/23/கனன்றெறியும்-நீர்வெளி-ந/


கொப்புளிக்கும் கனவுத் தொகைகளின் ஆழத்தில் விழுந்து விடாமலிருக்க நுனிக் காலில் தத்தித்தத்தித் தாவி நாவலைக் கடந்து கண் மூடினால் உணர்வுகளின் பிடியில் சிக்கி பாதாளத்திற்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பிரமை. பொங்கிப் பொங்கி அடங்காத கொந்தளிப்பை ஒரு இலக்கியப் பிரதி கொடுக்குமென்றால் அது வெறும் ‘நிகர் வாழ்வு’ மட்டுமல்லவே. கிழக்கு வங்காள கிராமத்தின் 1920களின் வாழ்வு, ஒரு துளி மாயம் தடவி மிகு கற்பனையால் கட்டி வீசப்பட்டிருக்கிறது இந்நாவலில். ஒரு மிக நீண்ட கவிதையைப் போல பல்வேறு படிமங்களால் நிறைந்தபடி இக்கிராம மக்களின் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் அசாத்தியமான காட்சிகளாக எழுந்து எண்ணங்களை நிறைக்கிறது. அக்காட்சிகளின் ஊடாகவே பல்வேறு மரங்களும் கனிகளும் பறவைகளும் விலங்குகளும் பாத்திரங்களின் உணர்வுகளுக்கு உருவகமாகவும் நாவல் நெடுக கைக்கட்டி நிற்கும் குறியீடுகளாகவும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கதாபாத்திரங்களின் தகிக்கும் உணர்வெழுச்சிகளுக்கு இணையாகவே அவர்கள் வாழ் நிலத்தைப் பிரவாகித்திருக்கும் இயற்கைச் சூழலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வகை கதை சொல்லல் இயற்கையோடு இயைந்த அன்றைய இந்திய நிலத்தின் வாழ்க்கையை உணர்த்தும் அதேவேளையில் வாசகனைப் பனி பூண்ட வானத்திலும் கரையேறும் ஆற்று நீரிலும் சகதி செறிந்த ஏரியிலும் முட்கள் அடர்ந்த காட்டிலும் அமிழ்த்தி வைத்திருக்கிறது. விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள் காதில் விழாத ஒரு பக்கத்தைக் கூட புரட்டி விட முடியாது, ஹட்கிலா பறவைகளும் கிரெளஞ்ச பட்சிகளும் இன்னமும் பால்கனியில் சிவந்த விழிகளால் வெறித்துக் கொண்டிருக்கின்றன. கற்பனையின் பலம் யதார்த்த வாழ்க்கையைச் சற்று நீண்ட நேரத்திற்கு நம் தோளில் ஏற்றிவைத்துவிட்டுப் போய்விடுவதுதான். இடது கையால் தட்டிவிட்டுக் கடந்துவிடமுடியாது.

இந்திய இலக்கியத்தின் முதன்மை வரிசையில் வைக்கத்தகுந்த படைப்பாக அதீன் பந்தோபாத்யாய இந்நாவலை கொடையளித்திருக்கிறார். பாத்திரங்களின் மீதேறி தாவித் தாவிச் சென்று கதை சொல்லும் முறைமையை கையாண்டிருக்கிறார். ஒரு நிகழ்வின் உச்சத்தில் வாசகனை நிறுத்தி அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நடக்கும்  ஒரு காட்சிக்குத் தாவிவிடுகிறார். முந்தைய உணர்வுச்சத்தை தக்க வைத்துக் கொண்டே ஒரு வாசகனைக் கதைகளுக்குள்ளாக நுழையவிடுகிறார். உண்மையில் இது கதைகளின் ஒரு தொகை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஆழமான கதைகள் உண்டு. பாத்திரங்களின் செயல்களின் மூலமாகவே அவர்களை வடிவமைப்பதைப் போலவே அவர்களின் கதைகளையும் உருவாக்கி விடுகிறார். இதனால் இந்நாவலின் மைய பாத்திரம் என்று ஒருவரைக் குறிப்பிடுவது எளிதல்ல. முக்கிய பாத்திரங்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு இணையான ஒரு உச்சத்தை ஒன்றிரண்டு பக்கங்களின் வந்து செல்லும் மன்சூர் போன்ற மனிதர்களும் உண்டு.


வங்காள பிரிவினையின் தொடங்கு முகமான காலகட்டம். நிலவுரிமையும், ஊதிய பணிகளும் கொண்ட இந்துக் குடும்பங்களும் ஏதேனும் ஒருவகையில் அவர்களைச் சார்ந்து வாழவேண்டியிருக்கும் எளிய முஸ்லீம்களும் வாழும் கிராமங்கள். நீரால் சூழப்பட்டுக் காட்டு மேடுகளால் அரண் கொண்டிருப்பவை அவை. டாகூர் குடும்பத்தின் பெரிய பாபு இக்கதையின் முதன்மை பாத்திரமாகக் கொள்ளலாம். ‘பாலின்’ என்ற வெளிநாட்டு பெண்ணினுடான தன் நிறைவேறாத காதலால் பித்துப் பிடித்து கவிதையும் கற்பனையுமாக இயற்கையோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒரு வாழ்வு. எங்கு காணினும் ‘பாலினின்’ முகங்களாகவும் அவளைச் சென்று அடையும் பாதைகளாகவும் தெரிகிறது அவருக்கு. இம்முழு நாவலிலும் அவர் நீண்ட நேரம் ஓரிடத்தில் அமைந்திருப்பது அரிது. அலைந்து கொண்டேயிருக்கிறார்… தன் நீலகண்டப் பறவையைத் தேடிக் கொண்டேயிருக்கிறார். தன் எதிர்ப்புதான் பெரிய பாபுவை இந்நிலைக்குத் தள்ளிவிட்டதென்றும் பைத்தியமாகிவிட்ட தன் மகனை ஏமாற்றி ஒரு பெண்ணுக்குக் கட்டி வைத்ததாய் ஊர் நினைக்கிறதென்றும் குற்ற உணர்ச்சிகளில் புழுங்கித் தவிக்கும் கண் பார்வையற்ற அவரின் தந்தை. பெரிய பாபுவின் முதல் தம்பிக்கு குழந்தை பிறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. ‘சோனா’ என்ற அச்சிறுவனின் பார்வையில் பெரும்பான்மையான கதைப் பகுதி நகர்கிறது. பெரிய பாபுவின் சிறுவயதுப் பிரதி இச்சிறுவன். பின்னாளில் பெரிய பாபுவைப் போலவே பித்துப் பிடித்து அலையும் அத்தனை சாத்தியங்களும் கொண்ட ஒரு சிறுவனாக வெளிப்படுகிறான். கற்பனையும் அலைக்கழிப்புமாக அவனின் சிறுவயது தொடங்குகிறது. ‘கோட்சோரத்சாலா’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறெதுவும் சொல்லாத பெரிய பாபுவின் மனதையும் கண் அசைவையும் புரிந்து கொள்ளக் கூடியவன் அவன் ஒருவந்தான். அது தன்னையறிந்து கொள்வதுதான். 

இந்நாவலில் வெளிப்படையான ஒரு குறியீடு பறவை என்று கொண்டால், கையில் சிக்காத, கண்களில் அதுவரை கண்டிராத பறவையென சிறகு முளைத்து மறைந்துவிடும் ஒரு வாழ்வை இக்கதை மாந்தர்கள் அத்தனை பேரும் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். பெரிய பாபுவின் மனைவி பட்டிணத்திலிருந்து வந்தவள். சித்தம் கலங்கிய ஒருவனுக்கு தன் வாழ்க்கையைக் கொடுத்து விட்டவள். கண்களை மூடி பிரார்த்தனையிலும் ஜன்னலோரத்தில் பெருவெளிகளிலும் தன் கணவனின் உருவத்தை சதா தேடிக் கொண்டேயிருப்பவள். அவளின் தம்பி ரஞ்சித் சுதேசியாக மாறி போராட்டங்களில் ஈடுபட்டு தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தவன். அவன் கனவு கொண்டிருக்கும் இந்திய நிலம் ஒருநாள் கைவசப்படும் என்று நம்பிக்கையில் அலைபவன். அருகாமையில் வசிக்கும் நரேந்திரதாஸின் தங்கை மாலதி விதவையாகி வீடு திரும்பியவள். டாக்காவில் ஏற்பட்ட முதல் கலவரத்தில் தன் கணவனை இழந்தவள். இவளின் சிறு வயது தோழர்களான ரஞ்சித்தும் சாம்ஸுதீனும் இரு வேறு துருவங்களாக எழுந்து நிற்பவர்கள். மாலதி தன் வாழ்க்கையைத் தொலைத்த அக்கலவரத்தைப் போன்ற மற்றொன்றை நிகழ்த்தும் காரணிகளாகும் சாத்தியம் கொண்டவர்கள். சாமு கிராமத்திற்குள் முஸ்லீம் லீக் நுழையச் செய்கிறான், ரஞ்சித் சிலம்பம் கற்றுக் கொடுத்து இந்து சுதேசி வீரர்களை தயார் செய்கிறான். ஆனால் இவ்விரு ஆண்களின் நிழல் பட்டே உணர்ச்சி பெருக்கெடுக்கும் தன்மையானவள் மாலதி என்பது காவிய முரண். சாமுவின் நடவடிக்கைகளால் அவனிலிருந்து விலகி ரஞ்சித்திடம் மனம் சாய்கிறாள். 

மாலதியின் மறு முனையில் நிற்பவள் ஜோடன். ஆபேத் அலியின் சகோதரி. மூன்று மண முறிவுகளும் பதிமூன்று குழைந்தைகளுக்கு பிறகும் ஒற்றையாளாக மறு துணை தேடி வாழ்பவள். உயிர் பெருக்குவதுதான் இவ்வுடலுக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட ஆணை என்று உளமார நம்புபவள். ஆபேத் அலியின் மனைவி ஜலாலி வயிற்றுப் பசியைத் தீர்ப்பது ஒன்றே தன் வாழ்வென்றாகிப் போனவள். இவர்களுக்கிடையில் முடமாகி தன் எதிரிகளை என்றேனும் பழிவாங்கும் வெறியினாலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கும் பேலு, நிலையான ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளும் ஆசையில் பணத்திற்கு ஆசைப்பட்டு பாவச் செயலில் ஈடுபடும் ஜாபர், தர்பூஜ் நிலத்தின் மீதும் டாகூர் குடும்பத்தின் மீதும்  விசுவாசம் என்ற பற்றுகோளை மட்டுமே பிடித்து வாழும் ஈசம் கான் என்று பல்வேறு கதை மாந்தர்கள் இந்தக் கனவெளியில் சஞ்சரிக்கிறார்கள். அர்த்தமோ அபத்தமோ வாழ்ந்து தீர்த்துவிடும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். அடிமைபட்டுக் கிடக்கும் நாடோ, பிளவு கொள்ளப் போகும் நிலமோ ஒரு பொருட்டல்ல. கண்ணுக்குத் தெரியாத ஒரு பறக்கும் சிறகை நோக்கி கைகளை நீட்டி நிலவெளியெங்கும் அலைந்து கொண்டிருக்கும் எளிய வாழ்வுருவங்கள்.

 விரிசலில் ஊடுறுவும் அரசியல் வெளி:

இந்நாவலின் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் புலம் உண்டு. நாடெங்கும் கலகங்கள் எழும் காலம். சுதேசி இயக்கங்கள் தீவிரமாக ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருக்க, டாக்கா கலவரம் முஸ்லீம் லீக் எழுச்சிக்கு வித்திட்டிருந்தது. இந்திய விடுதலையைவிடவும் வங்காளம் தனியே பிரிந்து முஸ்லீம் நாடாகிவிட வேண்டுமென்ற கலகங்கள் பரவத் தொடங்கியிருந்த காலம். இந்தச் சூழலில் இந்துக்களும் முஸ்லீம்களும் இயைந்து வாழ்ந்து கொண்டிருந்த கிழக்கு வங்காள கிராமங்கள் எத்தகைய பதற்றத்தை உணர்ந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். அப்படியொரு பதற்றம் சிறிது சிறிதாக இக்கதை சோனாலி பாலி ஆற்றோரக் கிராமங்களில் நுழைந்த பின்புலத்தில் நிகழ்கிறது. ஆனால் பெரிதாக அரசியல் பிரக்ஞை மக்களிடையே தோன்றிவிடவில்லை. டாகூர் குடும்பத்தின் மீது மரபார்ந்த விசுவாசமும் மரியாதையுமே முஸ்லீம் மக்கள் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ஏற்படும் சச்சரவுகளின் பஞ்சாயத்துகள் கூட நிமிடங்களில் தீர்த்து வைக்கப்படும் வகையிலானதாகத்தான் இருக்கிறது. ஆனால் முஸ்லீம் லீக் நோட்டிஸ்கள் மரங்களில் ஒட்டப்படுகிறது. ஒன்றிரண்டு கூட்டங்கள் ஏற்பாடாகிறது. சாமு இக்காரியங்களில் முன்னின்று தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். வரும் பிராந்தியத் தேர்தலில் டாகூர் கிராமத்தை எதிர்த்து நிற்கத் துணிகிறான். இதன் அவசியம் கதையெங்கும் முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை முன் வைத்தே உணர்த்தப்படுகிறது.

நீர் சூழ்ந்த இம்மண்ணில், விளைச்சல் மிகும் நிலங்கள் இருந்தும், மீன் வளம் மிகுந்திருந்தும் இந்து குடும்பங்களை ஒப்பு நோக்குகையில் முஸ்லீம்கள் பெருத்த வருமையில் உழல்கிறார்கள். இந்துக்களை அண்டியிருந்தும் அவர்களால் தன் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள முடிவதில்லை. ஈசாம் கான் தன் உடலையும் உயிரையும் தர்பூஜ் வயலுக்கென நேர்ந்துவிட்டவன். தர்பூஜ் அடுத்ததாக சோனா. இவ்விரண்டையும் காப்பதுதான் அவன் கடன் என்று விசுவாச வாழ்க்கை வாழ்பவன். ஆனாலும் அவன் ஒரு பருக்கையை கூட வீண் செய்ய இயலாத வறுமையை கொண்டவன். கிராமத்திற்கு வரும் பக்கிரி சாயுபு தரையில் விழுந்த ஒரு பருக்கையைத் தடவி எடுத்து உண்டு விடுகிறார். நீருக்குள் மூழ்கி அள்ளிக் கிழங்குகளைப் பறித்து உண்ணும் ஜலாலி வயிற்றுப் பசிக்கு தன் உடலை இரையாக்கியவள். மாலதியின் ஆண் வாத்தை அவள் கவர்ந்து வந்து தன் வீட்டில் வறுக்க வழியில்லாமல் தீயில் சுட்டு உண்ணுகிறாள். இந்தத் திருட்டைக் கண்டுகொண்ட சாம்சுதீன் தட்டிக் கேட்கும் எண்ணத்தில் ஜலாலி வீட்டை நெருங்கி ஜன்னல் வழியே அவள் உண்பதைப் பார்க்கிறான். அவள் உண்டு முடித்ததும் மண்டியிட்டு இன்று உணவை அளித்ததற்கு அல்லாவிடம் நன்றி கூறுகிறாள். இதைப் பார்க்கும் சாமு, அல்லாவின் கருணையைத் தடுப்பதற்குத் தான் யார் என்று எண்ணுகிறான். பட்டினியுடன் இருப்பது திருட்டை மீறிய பாவம் என்று தோன்றுகிறது அவனுக்கு.

நீர் வளம் சூழ்ந்த ஒரு மண்ணில் வாழும் இரு சமுதாயங்களில் ஒன்று பூஜையும் நைவேத்தியங்களும், அவலும் அரிசியும், மீனும் மணமுமாக வாழ்ந்துக் கொண்டிருக்கையில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இரவில் யாருமறியாமல் நீரில் மூழ்கி அல்லி கிழங்கு பறித்தும், நெற்மணிகளைத் திருடியும், வாத்தையும் கோழியையும் களவாடியும், அரையாடை உடுத்தி தன் வயிற்றைத் தரையில் இருத்தி பசியை குளிர்வித்தும் வாழ்கிறார்கள். இந்தப் பொருளாதார விரிசலில்தான் இந்திய நிலத்தின் அரசியல் உள் நுழைகிறது. டாகூர் வீட்டு குழந்தைகளை பயிற்றுவிக்க ஆசிரியர் ஒருவர் உடன் வந்து தங்குகிறார். பல் தேய்ப்பதிலிருந்து ஆங்கில கவிதைகள் வரை அனைத்தையும் சொல்லித் தருகிறார். அக்குழந்தைகள் உரக்கப் பாடம் படிப்பது அப்பிராந்தியத்திற்கே கேட்கிறது. ஆனால் பாத்திமாவோ, ஜாபரோ கல்வி முகம் அறியாதவர்கள். தன் உயிரை நிலை நிறுத்தும் பொருட்டு எந்தக் குற்றத்திற்கும் துணியத் தயங்காதவர்களாகவும் மாறுகிறார்கள். ஆனால் அவ்வறுமையிலும் ஈசாம் கான் தான் ஏற்றுக் கொண்ட மரபுப் பிடிப்பிலிருந்து வழுவாதவனாக இருக்கிறான். பக்கிரி சாயுபு தன் உயிர் நீங்கும் தறுவாயிலும் மாலதிக்கு மறுவாழ்வு அளித்து மறைகிறார். இறுதியில் டாக்காவுக்கு சாமு கிளம்பிச் செல்லும்போது கூட டாகூர் வீட்டுக் குழந்தைகள் வழி தவறிடாமலிருக்க அவர்களின் துணையாக வீடு வரை செல்கிறான். எடை மிகுந்த நெற்கதிர்களை அவர்கள் வீட்டு துர்க்கைக்கு தன் கையால் பறித்து அவர்களின் மூலம் காணிக்கை செலுத்துகிறான். சுதேசி இயக்கத்தின் தீவிர அங்கத்தினனான ரஞ்சித் விடுதலைப் போராட்டத்தைத் தொடர தன் நிலம் விட்டு விலகுகையில் எண்ணிக் கொள்கிறான் – “ ‘உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டு நிலம் கிடைக்க வேண்டும்; சாப்பாட்டுக்கு இல்லாத மனிதன், தன் கால்களுக்குக் கீழே தனக்கென்று கொஞ்சம் சொந்த நிலம் இல்லாத மனிதன். சாப்பிட வழியில்லாத மனிதனுக்குச் சுதந்திரம் கிடைத்து என்ன பிரயோசனம்’”. 

சாமுவுக்கும் அதுதான் விருப்பம் ஆனால் வேறொரு திசையில். இந்த அரசியல் மிகப் பூடகமாகக் கதை மாந்தர்களின் வாழ்வின் மூலமாகத்தான் உணர்த்தப்படுகிறது. இந்நாவல் வரிசையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாவல்களில் அரசியல் பிரதானமாக இருப்பதாக அறியப்படுகிறது.


நீர்நிழற் பிம்பங்கள்:

பறவையைப் போலவே இக்கதையின் நீர்வெளி ஒரு பிரதான குறியீடாகத் தோன்றுகிறது. நிலமென்றும் நீரென்றும் பிரித்தறியமுடியாத ஒரு தளத்தில் அவர்களின் வாழ்வு குமிழிகளாக ஊதி வெடித்து மறைகிறது. அந்நீரில் தோன்றி மறையும் பிம்பங்களைப் போலக் கதை மாந்தர்கள் அலைந்து அலைந்து கூடுகிறார்கள். ஒருவரையொருவர் ஏதோவொருவகையில் தன் எதிர் பிம்பங்களாகவே பார்க்கிறார்கள். பெரிய பாபுவின் குழந்தைப் பருவமே தன் கை பிடித்திருக்கும் சோனா. தான் சென்று சேரக் கூடாத பிம்பமாகத்தான், தோய்ந்த வருத்தத்துடன், மாலதியைக் கண்ணுறுகிறாள் ஜோடன். ரஞ்சித்தும் சாமுவும்  உருவும் அதன் நிழலும் போல. அவர்கள் கதைக்குள்ளும் கிராமத்திற்குள்ளும் வருவதும் போவதும் எப்போதென்று எவருக்கும் தெரியாது. ஒரே இலக்கை நோக்கி இருவேறு திசையில் பயணிக்கும் பிம்பங்கள். இருவருக்கும் பொதுவான அக்கறை மாலதியின் மீது. 

பெரியபாபு – சோனா

மணீந்திரநாத் பாபு எனும் பெரிய பாபு தன் கையிலிருந்து நழுவிச் சென்ற பாலினின் நினைவில் வாழ்பவர். ஆனால் அவரைப் பற்றிய சித்திரம் மிக அலாதியானது. அவர் கண் கொள்ளா அழகு நிறைந்தவர், ஆஜானுபாகுவான தோற்றமுடையவர். அவர் நீரில் தொப்பலாக நனைந்து வாசலில் வந்து நிற்கும்போது அவர் மனைவிக்குத் தீர்த்தயாத்திரை முடித்து வீடு திரும்பிய ஒரு துறவியெனத் தோன்றும். ஆனால் அடுத்த கணமே கைப்பிடித்து காற்றில் ஆட்டம் போட ஏதுவான ஒரு இளைஞனெனத் தெரிவார். ஒரு கிரேக்க துன்பியல் நாடகத்திலிருந்து வழி தவறிய ஒரு வீரனைப் போன்றவன். ஜமீன்தாரின் வீட்டிற்குப் போகும்போது ட்ராயின் ட்ரோஜன் குதிரையைப் போன்று இருப்பதாக விவரிக்கப்படுவார். ஜலாலி நீரில் மூழ்கி இறந்தபோது, அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் மற்றவர்கள் திணறும்போது இவர் சடாரென நீரில் குதித்து அவளின் உடலை தன் தோள் மீது தூக்கி கரையேறுவார். இவரை தன் குலப் ‘பீர்’ என்று நினைத்து பிரமித்துப் போவார்கள் முஸ்லீம் மக்கள். இந்தத் தோற்றத்திற்கு நேர்மாறான மனம் கொண்டவர். கவிதைகளில் தன்னை தொலைத்து தூர தேசத்தில் பாலினுடன் கவிதை மீதேறியே சென்று விட முடியுமென கனவுகளில் வாழ்பவர். நிலத்தையும் நீரையும் மரங்களையும் காட்டி இதுதான் நாம் பற்றிக் கொண்டு வாழவேண்டியவை என்று சொல்ல நினைப்பவர். 

ஆனால் அவர் வாயிலிருந்து வருவதெல்லாம் “கோத்சோரத்சாலா” மட்டும்தான் – இதற்கென அறுதியான அர்த்தம் எதுவும் இல்லை. ஒரு வசவுச் சொல் எனக் கொள்ளலாம். ‘என் புண்களின் மீது உப்பைத் தோய்க்காதே’ என ஒரு அர்த்தம் உண்டு. எப்படியாயினும் ஒரு மொழி ஒரு சொல் மட்டுமே கொண்டு இயங்குமானால் அது எவ்வாறு இருக்கும் என்ற கற்பனை எழுகிறது. அத்தனை உணர்ச்சிக்கும் ஒரு சொல் மட்டுமே. விவாதங்களுக்கும் அரவணைப்புக்கும் என ஒரு சொல் மட்டுமே பயன்படுமென்றால் அது ஒரு மட்டற்ற சுதந்திரமாகத்தான் இருக்கும். ஜென் எண்ணங்களைப் போல சொல் ஒரு வீண் செலவு. ஐரோப்பிய/மேற்கத்திய மிகு புனைவுகளில் இப்படியான பாத்திரங்கள் வருவதுண்டு. மிகச் சமீபமாக ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைத் தொடரில் ‘ஹோடோர்’ என்ற ஒரு சொல்லை மட்டும் சொல்லும் ஒரு பாத்திரம் வரும். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தடையொன்றுமில்லை!

சோனாவிடம் பெரிய பாபு சொல்லும் மிக முக்கியமான வசனம் ஒன்றுண்டு, சொற்களற்ற மொழியில்தான். அது இந்த நாவலின் மையத்தைத் தொட்டுவிடக் கூடியது – “‘உன்னுள் விதை முளைக்கிறது சோனா! இன்னுங் கொஞ்சம் காலத்தில் நீ வாலிபனாகிவிடுவாய். இப்போது உனக்குப் புரியாத ரகசியம் அப்போது புரிந்துவிடும். இன்னும் பெரியவனானதும் இருபக்கமும் கரையில்லாத ஆற்றுக்குள் மூழ்கி விடுவாய் நீ. அப்படி முழுக முடியாவிட்டால் கரையில் அந்த ரகசியத்தைத் தேடுவாய். தேடிக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என் மாதிரியே பைத்தியமாகிவிடுவாய்’. இது தான் உணர்ந்ததை தன்னைப் பார்த்தே பெரிய பாபு சொல்லிக் கொள்வதைப் போன்றது. சோனாவும் தன் பெரியப்பாவைப் போல கற்பனைகளிலும் கனவுகளிலும் பறந்தலைபவன். “இந்த மண்ணும் பூவும் புல்லும் சாமியைவிட உண்மையானவை” – இது சோனாவிடம் பெரிய பாபு உணர்த்த விழைபவை. உண்மை அறிந்த மனமது. 

 சோனாவின் முகம் பெரிய பாபுவைப் போலவே இருப்பதாக அவன் பிறந்தபோதே சொல்லிக் கொண்டார்கள். சின்ன பாலின் என்று கூறும்படியான பாலினைப் போன்ற முகத் தோற்றமுடைய அமலாவின் மீது பதற்றமான ஈர்ப்பு கொண்டவன். உடல் மீறும் குழந்தை விளையாட்டொன்றில் தன்னையும் அமலாவையும் கண்டு கொண்டவன். ஆனால் பாத்திமா கமலா அமலாவின் இடையில் சிக்கி அலைகழிபவன். இருகரையும் தெரியாத ஆற்றில் தான் படகோட்டியாகிவிட்டதாகத் தோன்றும் சோனாவிற்கு. இம்மூவரையும் வைத்துக் கொண்டு நட்டாற்றில் படகோட்டினான் அவன். இம்மூவருமே அவனை விட்டு விலகிச் செல்லப் போகிறவர்கள். பின்பு இவன் கரையேறி அதன் ரகசியத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் பைத்தியாமாகிவிடுவானோ என்ற பதற்றம் அவனை நெருங்கி உணரச் செய்கிறது. பெரிய பாபுவையும் சோனாவையும் இரு கரங்களில் பற்றிக் கொள்ள வைக்கிறது. 

ஜோடன் – மாலதி – ஜலாலி

ஒருநாளும் தான் மாலதியாகிவிடக் கூடாது என்ற பதற்றத்தில் வாழ்பவள் ஜோடன். மாலதியைப் பார்க்கும் தோறும் குற்றவுணர்ச்சியில் உழல்பவள். ஜோடன் தன் பசியைப் போக்க பெரும் தீச்சுவாலையென பொங்கித் திரிபவள் – ““இந்தச் சனியன் பிடித்த உடம்புக்கு எப்போதும் பசி”. பதிமூன்று குழந்தைகளுக்குப் பிறகும் அல்லாவிற்கு தான் செலுத்த வேண்டிய வரி பாக்கி உண்டு என்று நம்புபவள். “இந்த மனித உடல் மண்ணைப் போல. அதை தரிசாக விட்டுவைப்பது குற்றம்.” பக்கிரி சாயுபுவால் கவரப்பட்டு, ஐந்தாண்டுகள் காத்திருந்து அவருடனே சென்றுவிடுபவள். அவள் உடற் பசி காட்டைக் கொள்ளாமல் அடங்கிவிடாதது. பிணங்கள் அடங்கும் காட்டுக்குள் சென்று பக்கிரியோடு மிச்ச காலத்தைக் கழிக்கிறாள். 

மாலதி – ஏரியில் முதன் முதலில் முதலை அகப்பட்டுக்கொண்ட நாளில் திருமணமானவள், ஏரிக்கும் அவளுக்குமான பந்தம் அங்கிருந்து தொடங்குகிறது. கணவனை இழந்து தன் சகோதரனின் வீட்டில் வாழும் இவள் மெல்லுணர்வுகளால் ஆளப்படுபவள். இவள் காற்றில் அலைந்தெறியும் விளக்குத் தீயைப் போன்றவள். சாமுவோ ரஞ்சித்தோ தன் பால்ய தோழர்களின் கருணைப் பார்வைக்கு ஏங்குபவள். இவளால் ஜோடனைப் போல காணுமிடத்திலெல்லாம் தீப்பற்றிக் கொள்ள முடியாது. தன் ஆண் வாத்தை தொலைத்துப் பரிதவித்திருக்கும் நேரத்தில் அமூல்யன் இவளை நெருங்க வேறொரு ஆண் வாத்தை கண்டெடுத்து இவளிடம் வருகிறான். இவள் “என் பிரியம் மாமிச வெறியை அணுகவிடாது!” என்கிறாள். மூன்று கொடியவர்களால் இவள் வன்புணரப்பட்டதும் நிலையழிந்து போகிறாள். ரஞ்சித்துடன் தொடர்ந்து செல்ல முடியாமல் ஜோடனுடன் தஞ்சம் புகுகிறாள். ஜோடனும் மாலதியும் வெவ்வேறு கலத்திலெறியும் ஒற்றை தீயைச் சுமந்து அலைபவர்கள். 

ஜலாலியின் தீ வயிற்றுத் தீ. அடுப்பெரிந்து கொண்டிருக்கும்போது தன் கணவனுடனான எதிர்பாரா கலவியால் அத் தீ ஊரெங்கும் பரவுகிறது. அவள் பசி ஊரை எறிக்கும் வல்லது. அவள் சோற்றுத் தீ படர்ந்து பற்றக் கூடியது. பசிக்காக அவள் வாத்தை திருடியும், நீரில் மூழ்கி கிழங்கு பறித்தும் வயிற்றை நிரப்புவதற்காக வாழ்ந்து மடிகிறாள்.

ரஞ்சித் – சாமு

மாலதியின் மீது அன்பு பொழியும் இரு துருவங்கள். இவர்களின் வருத்தமும் குற்றவுணர்வும் சமமானது. தன் லீக் கில் இணையும் ஜாப்பார்தான் மாலதியின் இந்நிலைக்குக் காரணம் என்று தெரிய வந்ததும் அவனால் அவ்வூரில் இருக்க முடியவில்லை. மாலதியைப் பார்த்துக் கொண்டு தன்னால் இயல்பாக இனி வாழ முடியாது என்ற முடிவிற்கு வருகிறான். தன் லீக் அங்கத்தினன் செய்த காரியத்திற்கான காரணம் தெரியுமென்றாலும் இது பாவச் செயல் என்பது அவன் அறியாததல்ல. ஊரை விட்டு விலகிச் செல்கிறான். ரஞ்சித் சுயநலமாய் தன் குறிக்கோளை நோக்கிப் புறப்படுகிறான். ஆனால் தன்னால் ஈர்க்கப்பட்டவள் மாலதி என்று அவன் அறிவான். “நாட்டிற்காக” என்ற காரணத்தைக் கொண்டிருந்தாலும் மாலதியை இங்கே விட்டுச் செல்வது தன்னுடைய சுயநலம் என்று உணர்கிறான். அவளை அழைத்துச் செல்கிறான். ஜோடனிம் சேர்ப்பித்துவிடுவான். நாட்டின் விடுதலைக்காக அவன் திரும்பி வர இயலா இடத்திற்குச் சென்றுவிடுவான். என்ன இருந்தாலும் அவன் ஒரு – “செல்ஃபிஷ் ஜெயண்ட்”.

பக்கிரி சாயுபு தானாக முளைத்தெழுந்த ஒரு “பீர்”. யாருக்கும் தீங்கு நினையாதவன். ஆனால் மாயங்களை உண்டு பண்ணி தன்னை ஒரு “பீர்” ஆக நிலை நிறுத்திக் கொண்டவன். அவன் செய்த மிகப் பெரும் மாயம், கந்தலாகக் கிடந்த மாலதியை அவள் அண்ணனிடம் சேர்த்ததுதான். அவன் அப்போது உண்மையான “பீர்” ஆகிவிட்டான். உடலிலிருந்து உயிர் வழிய வழிய அவன் இந்த நற்காரியத்தைச் செய்தான். இனி அவன் காலாகாலத்திற்கும் மாயங்கள் செய்து வாழ்வான் தொன்மக் கதைகளில்.

நுனிப் புல்லின் கனம்:

மிகப் பெரிய வாழ்க்கைப் புலத்தில் அரசியல் பின்னணியில் மனிதர்களின் உயிர்ப்பும் இறப்பும் பேசும் இந்நாவலின் மற்றொரு சிறப்பு அது கதை மாந்தர்களின் நுண்ணுணர்வுகளைச் சித்தரிக்கும் இடங்கள். ஒரு நுனிப் புல்லின் மீதிருக்கும் பனித்துளியின் எடையைப் போல மிக மெல்லியதாக ஆனால் மிகக் கூர்மையாக வெடித்து ஒளிரும் இடங்கள் இவை. 

அமலாவுடனான எல்லை மீறிய விளையாட்டை தன் மனதிலிருந்து எடுக்க முடியாமல் தவிக்கிறான் சோனா. ஆற்றங்கரையில் நின்று சத்தம் போட்டு தன் பாவச் செயலை சொன்னால் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறான். அம்மாவைப் பார்த்து வெகுநாளாகிவிட்டது. திரும்பிச் சென்றால் அம்மாவைப் பார்க்க முடியாமலே போகலாம் என்ற பதற்றம் கொள்கிறான். காரணம், பாவங்கள் செய்தால் அம்மாவின் உயிர் பறிக்கப்படும் என்ற பயம். ஒருவரியில் மின்னும் இந்தப் பயம் மிக ஆழமான சங்கிலிகளால் பின்னப்பட்டது. ஒரு குழந்தையின் பயம் எப்போதும் அம்மாவின் நலத்தின் மீதுதான். அதுவும் அப்பருவத்தில் தனக்கான தண்டனை என்பது அம்மாவை தன்னிடமிருந்து பறித்துக் கொள்வதுதான். இவ்வுணர்வு மிக மெலிதாக சோனாவின் பயத்தின் மூலம் வெளிப்படுகிறது.

வெகுநாட்களாக ரஞ்சித் கண்ணில் படாமல் போனதால் துயருறுகிறாள் மாலதி. அவளால் நிலை கொள்ள  முடியவில்லை. டாகூரின் வீட்டிற்குள் நுழைந்து பார்க்கிறாள். எதிர் வரும் பெரிய மாமியிடம் அவள் கேட்க எத்தனிக்கும்போது அவரே ரஞ்சித்தின் பெயர் சொல்லி வேறெதுவோ பேசுகிறார். தனக்கு முன்னால் ரஞ்சித்தைக் குறித்து பெரிய மாமி பேசிவிட்டதாலேயே தன்னால் அப்பெயரை மீண்டும் உச்சரித்து அவன் எங்கே எனக் கேட்க முடியாது என்று துணுக்குறுகிறாள் மாலதி. மன சஞ்சலங்கள் நீரில் அலையும் கோடுகள் போலத்தான். எவர் தொட்டும் கலைந்து போகக்கூடும்.

பெரிய பாபு பைத்தியமாகி அலைவதற்கு தான்தான் காரணம் என்று மணீந்திரநாத்தின் அப்பா குற்றவுணர்வில் தவிக்கிறார். ஒருவேளை பாலினுடன் பெரிய பாபுவை மணமுடித்து வைத்திருந்தால் இவன் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கிறார். ஆனால் அதற்கு நேரெதிரான சித்திரம் ஒன்று ஜமீந்தாரின் வீட்டிலிருந்து மேலெழுகிறது. அமலா/கமலாவின் அப்பா தன் வீட்டாரை எதிர்த்து வெள்ளைகார பெண்ணை மணமுடித்து வாழ்ந்து வருகிறார் கல்கத்தாவில். ஆனால் சமீபகாலமாக அவர்களின் இல்லற வாழ்வு சுகமிழந்து வருகிறது. துர்கா பூஜைக்கு தன் ஊருக்குச் செல்லும் சில காலம் முன்னரே தனித்திருக்கத் தொடங்குகிறார். பூஜைகளில் மூழ்குகிறார். அது அமலாவின் அம்மாவிற்கு ஒரு விலக்கத்தை உண்டு பண்ணுகிறது. தன் மனைவியிடம் பேசுவதைக் கூட தவிர்கிறார். வருடா வருடம் இதன் வீரியம் பெரிதாகி இல்லறம் உடையத் தொடங்குகிறது. தன் சொந்த ஊர் வந்திறங்கியதும், அமலா கமலாவிடம் அவர்கள் அப்பா தன் மண்ணை நேசிக்க வேண்டியதின் அவசியத்தைச் சொல்கிறார். அவர் முகம் களையிழந்திருக்கிறது. கல்கத்தாவிற்கும் அவருக்குமான தூரம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒருவேளை இப்படியான ஒரு சூழலை பெரிய பாபு அடைய நேர்ந்திருக்கலாம். இப்படி அவர் பைத்தியமாகி அலைவதற்கும் அவரின் அப்பா குற்றவுணர்ச்சியில் தன் உயிரை தேய்த்தழிப்பதற்கும் ஏதேனும் நியாயம் உண்டா என்ற கேள்வி எழுகிறது. எதைத் தேர்ந்தாலும் அதில் வருந்தி உழல்வதான வாழ்க்கையா இது?

பெரியப்பாவின் பைத்தியத்தை எப்படியாவது தன்னால் குணமாக்கிட முடியுமென்று நம்புகிறான் சோனா. அதற்கான அத்தனை செயல்களையும் செய்கிறான். அவருக்கு எண்களைச் சொல்லிக் கொடுக்கிறான். வாய்ப்பாடுகளை கற்றுத் தருகிறான். அவர் மாற்றம் கொள்கிறார் என்று நம்புகிறான். முதன்முறையாக பெரியப்பா தும்முவதைக் காண்கிறான். மனம் பிறழ்ந்த அவர் தும்முவது அவர் சொஸ்தமாவதின் அறிகுறி என்று நினைத்து ஆனந்தத்தில் துள்ளி குதிக்கிறான். உடலுக்கும் மனதிற்குமான வேறுபாடு அறியாத மழலையின் குதூகலம் அது. 

சோனா தெரியாத்தனமாக பாத்திமாவை தொட்டுவிட்டான். அதை தன் அம்மாவிடம் மறைக்கவும் முடியாமல் தவிக்கிறான். நல்ல பசியில் உணவின் முன் அமர்ந்த பிறகு உண்மை தெரிந்தால் அவன் அம்மா அவனை குளிக்கச் சொல்வாள். இருந்தும் உண்மை வெளி வருகிறது. அவனின் அம்மா கொதித்தெழுந்து அவனை அடித்து நீரடிக்கு அழைத்துச் செல்கிறாள். ஆனால் அவளின் அக்கோபம் அவன் பாத்திமாவை தொட்டுவிட்டதால் மட்டும் வருவதல்ல, தன் மாமியரின் சுடுசொல்லை எதிர்பார்த்து எழுவது. கூட்டுக் குடும்பத்தின் எரிச்சலும் சேர்த்து வெளிப்படுவதாக ஆசிரியர் ஒரு சிறு குறிப்பை உதிர்த்துவிட்டுச் செல்கிறார். இப்படியான மிக நுண்மையான உணர்வுகள் இக்கதைக்குள்ளிருந்து வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இவை இந்நிலமெனும் மாயச்சுழலில் நம்மை சிக்க வைக்கும் யதார்த்த சரடுகளாக உருக்கொள்கின்றன.

பிடி நழுவும் இறகு:

இந்நாவலின் தனித்தன்மை இது கற்பனாவாதத்தின் பலத்தில் நின்று யதார்த்த வாழ்வைப் பேசுகிறது. ஒரு அரூபத் தன்மை கொண்டு கவிதை சாயலில் மொத்த கதையும் விரித்து வைக்கிறது. இது கணக்கிலா உருவகங்களும் படிமங்களும் மேலெழுந்து வர அத்தனை சாத்தியங்களையும் உருவாக்கி விடுகிறது. வாசகனின் கற்பனைக்கு அவன் விரித்தெடுப்பதற்கு போதிய இடங்களை விட்டுச் செல்கிறது. இது உண்மையில் வாசகனைக் கொஞ்சம் திக்குமுக்காடவே செய்யும். சற்று சுதாரித்து கனவுக்குள் நுழைந்தால், ஆசிரியனுக்கு இணையான கற்பனை உலகை உருவாக்கிக் கலைத்து மீண்டும் அடுக்கி உருமாற்றி அதில் திளைக்க முடியும்.

பறவை என்பது இந்நாவலின் பிரதான குறியீடு. கை நழுவிச் செல்லும் அத்தனையும் ஒட்டு மொத்த வாழ்வு உட்படவும் அது குறித்து விடுகிறது. பெரிய பாபுவின் பைத்தியக்காரத்தனம் ஒரு அபாயமற்ற பிறழ்வு என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவரின் கற்பனை வீரியம் கொண்டு அவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறார். “கனவு மாளிகையில் வாழ்ந்த பறவை அவருடைய பிடியிலிருந்து நழுவி பறந்து போய்விடுகிறது. வியாபாரிகளின் நாட்டை கடந்து ஜலதேவதைகளின் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்து அங்கே சோகித்திருக்கும் ராஜகுமாரனின் தலையில் உட்கார்ந்துகொண்டு அழுகிறது. அப்போது பெரிய பாபுவின் மனசில் ஏதோ ஒரு பெரும் வேதனை ஏற்படுகிறது. அவர் தன் கையை தானே கடித்துக் கொள்கிறார்.” இங்கே அப்பறவை சென்று சேர்வதும் ஒரு சோகித்திருக்கும் ராஜகுமாரனிடம்தான். தான் எதுவும் செய்யவியலா நிலையின் அழுத்தம். கை நழுவும் ஒன்றைப் பிடிக்க முடியாத தவிப்பு. தன் கையை கடித்துக் கொள்கிறார். 

ஜமீன்தார் வீட்டு யானைக்கு அடிக்கடி மதம் பிடிக்கிறது. அது கட்டற்று திரிகிறது. ஆனால் அதன் மீது பெரிய பாபு ஏறி நாட்கணக்கில் ஊர்வலம் வர முடியும். எங்கும் சுற்றித் திரிய முடியும். அவர் முன்னால் அந்த யானை மண்டியிட்டு நிற்கிறது. பெரிய பாபுவும் கட்டுக்கடங்காத ஒரு வேழம்தான். அவர் நீரிலும் காட்டிலும் சுற்றித் திரியும் சித்திரம் ஒரு யானைக்கு ஒப்பானது. பாறை, சேறு, முட்காடு, முதலை மிதக்கும் ஆறு என்று எதையும் பார்க்காது இறங்கி ஏறும். உணவின்றி நாட்கணக்கில் சுற்றித் திரியும். யானை பெரிய பாபுவின் குறியீடாக இக்கதையில் சுற்றித் திரியும் ஒரு விலங்கு.

ஜலாலி நீரில் மூழ்கி இறக்கும் காட்சி ஆசச்சிறந்த ஒரு படிமமாக உருக்கொள்கிறது. அவள் நீர்க் கொடிகளில் சிக்கி தன் மூச்சை காற்றுப் பந்துகளாக நீருக்கு மேலே அனுப்பி சொட்டு சொட்டாக உயிரை உதிர்க்கும் தருணம் ஒரு பெரிய கஜாரா மீன் அவளை நெருங்கி வருகிறது.  அவளை உண்டுவிடுமோ என்று பயப்படும் அளவிற்கு பெரியதாக இருக்கிறது. அதன் உடல் முழுதும் மனிதர்கள் எறிந்த ஈட்டியினால் ஏற்பட்ட வடுக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த மீனை ஒரு எளிய சமூகம் என கொண்டால் அது ஆதிக்க மனிதர்களால் ஆண்டாண்டு காலமாய் நிகழ்த்தப்பட்ட வன்முறையின் எச்சமாக இன்று நின்று கொண்டிருக்கிறது.  இவளைக் கண்டதும் தன்னிடத்தில் ஒரு மனித பெண் சிக்கிவிட்டாள் என்று குதூகலிக்கிறது. திரும்பிச் சென்று தன் உலகத்தாரிடம் சொல்லி அவர்களை அழைத்து வரப்போகிறது. இவ்விடத்தில் இந்நாவல் ஒரு மீனைப் போல சற்றே துள்ளி யதார்த்தம் கற்பனாவதம் எனும் தன் நீர்ப் பரப்பை மீறி மாய யதார்த்தவாதத்தை சுவாசித்து பின் நீருக்குள் திரும்புகிறது. மீனின் மனவோட்டங்கள் இங்கே துள்ளியெழுந்து அமிழ்கிறது.

இம்மனிதர்களின் வருங்காலமும் அவர்களின் தன்னிலையும் படிமங்களாக நாவல் முழுதும் மின்னிச் செல்கிறது. ஜாப்பரின் நடவடிக்கைகளால் கலங்கி நிற்கும் மாலதியின் அருகில் ஹாட்கிலாப் பறவையை ஒரு பாம்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது. சாமுவை நோக்கி அப்போது அவள் நின்றிருக்கிறாள். ஆனால் அவனால் அப்பறவையை மீட்க முடியவில்லை. இது பிற்பாடு ஜாப்பரால் மாலதி தன் மானமிழக்கும் நிலை காட்சியாக அமைகிறது. சாமுவால் அப்போதும் ஒன்றும் செய்ய முடியாது. குற்றவுணர்வு பொங்க அவன் அவளிடமிருந்து விலகிப் போவான்.  

பாத்திமாவிற்கு ஒரு வண்ணத்துப் பூச்சியை முடிச்சிட்டு தருவான் சோனா. அது அவர்கள் இருவருக்கும் ஒரு அன்புப் பாலமாக இருக்கும் என்று அவன் நம்பினான். ஆனால் சாமு அதைப் பிரித்து பார்க்கும்போது அவ்வண்ணத்துப் பூச்சி இறந்து போயிருக்கும். இறுதியில் சோனாவைப் பிரிந்து பாத்திமா செல்லும் காட்சிக்கு ஒப்பான துயரத்தை ஏந்தியிருக்கும் அப்பூச்சியின் மரணம். 

மாலதியை கசங்கிய கோலத்தில் கண்டெடுக்கும் ஜோடன், பக்கிரியின் உதவியோடு அவளை தூக்கிச் செல்வாள். அப்போது அவளின் கால்களைப் பார்க்கும் பக்கிரி அது துர்கையின் பாதங்களை ஒத்திருப்பதாகத் தோன்றும். இரத்தம் அவள் முகமெங்கும் தெரித்து குங்குமத்தால் பூசப்பட்டவளைப் போல காட்சியளிப்பாள். தங்கத்தில் ஏது அசுத்தம், தண்ணீரில் ஏது எச்சில் என்று கூறுவான் பக்கிரி. அவனுக்கு மாலதி துர்கையேதான். 

ஜமீன்தாரின் ஊரில் விசர்ஜனத்திற்கு தயாராக இருக்கும் துர்கையின் சிலையொன்று. அதனிடத்தில் சென்று விளையாடிக் கொண்டிருப்பான் சோனா. சிங்கத்தின் வாயில் கைகளை விட்டும் குதிரையின் மூக்கில் குச்சி நுழைத்தும் சிரிப்பான். அப்போது துர்கையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிவதாகத் தோன்றும் அவனுக்கு. கரைந்து போகப் போகிறோம் என்ற வருத்தம் துர்க்கைக்கு என்று நினைப்பான். ஆனால் வங்காள நிலமெங்கும் உதிர்க்கும் பெண்களின் கண்ணீர் அது. அதை உணர்ந்து கொள்ளும் மனம் சோனாவிற்கும் பெரிய பாபுவிற்கும் மட்டுமே உண்டு. 

துர்கா பூஜைக்கு எருமையின் தலையை துண்டாக்குவதும் அதை சுமந்துச் செல்வதும் இருவேறு நிலங்களிலும் அக்கொண்டாட்டங்கள் ஒன்று போல இருப்பதும் அவர்களின் புராதன மனதை குறிக்கிறது. அத்தனை பூஜைகளும் ஒரு பெரும் வன்முறையின் துண்டாட்டோடு இணைந்திருக்கிறது. தூக்கிச் செல்லும் எருமையின் உடல் மீது வைக்கப்பட்ட அதன் தலை உருண்டு தரையில் விழுவதும் அது உதாசீனப்பட்டு கிடப்பதும் மனம் குலைக்கும் சித்திரத்தை உருவாக்குகிறது. 

வெட்டி வெட்டிச் செல்லும் இந்நாவலில் காட்சிகளின் சித்தரிப்பு பெரும் பலம். அது சில இடங்களில் முழுமை கொள்ளாமல் நகர்ந்து செல்வது அக்காட்சிகள் படிமமாக உருக்கொள்வதற்கு வழி வகுப்பதாகத் தோன்றுகிறது. மேலும் மேலும் யோசிக்கையில் அவை வெவ்வேறு அர்த்தங்களைத் தெளித்தபடியே இருக்கின்றன.


தொன்மமேறுதல்

இந்நாவலின் வெளியெங்கும் நாடோடிக் கதைகளும் புராணக்கதைகளுமாக விரவிக் கிடக்கிறது. சிவபுராணத்தில் ஒரு வங்காள நாடோடிக் கதையின் குறிப்பு இக்கதையில் வருகிறது. பெரிய மாமியிடம் கிழவர் தன் மனக் கிலேசத்தை வெளிப்படுத்துகிறார். தன் மகன் பைத்தியம் என்று தெரிந்தே நான் உனக்குக் கட்டி வைக்கவில்லை என்று வருந்துகிறார். அப்போது கிழவரின் மனைவி பத்மபுராணம் கேட்கச் சென்றிருந்தார். நீங்கள் செல்லவில்லையா என்று பெரிய மாமி கேட்க “நானே பத்மபுராணம்தானே” என்கிறார். அவர் தான் சந்தா சாகர் என்றும் பெரிய மாமி பேஹூலாவின் பாத்திரத்தையும் ஏற்றிருக்கிறார் என்கிறார். அந்நாடோடிக் கதையில் சந்தா சாகர் செய்யும் தவறுக்காக அவரின் மகன் மீது பாம்பு ஒன்று ஏவப்படுகிறது. அதில் உயிர் பிரியும் தன் கணவனுக்காக பேஹூலா செய்யும் பிரயத்தனங்களே அக்கதை.

ஜோட்டனை மீட்டு அவள் அண்ணனிடம் சேர்க்க பக்கிரி கிளம்புகிறார். கழுத்திலும் கையிலும் அவர் அணிந்திருந்த கண்ணாடிக்கல் மாலைகளும் தாயத்துகளும் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து ஒலியெழுப்பின. அப்போது அவரைப் பார்த்தால் மாலதிக்கு கண்வ மகரிஷி சகுந்தலையை அரசனிடம் அழைத்துச் செல்வதைப் போல தெரிகிறது. அவர் தான் உள்ளூர படும் உபாதையைக் காட்டிக்கொள்ளாமல் துடுப்பு வலித்து முன்னேறிச் சென்றார். அவர் அக்காரியத்தைச் செய்து முடித்ததும் தான் ஒரு தொன்மமாக உருமாறும் வழியைச் செய்கிறார். நரேந்தாஸிடம் மாலதியை சேர்ப்பித்த அதே நேரத்தில் இடுகாட்டில் தான் உயிர் விட்டதாக ஜோடன் மூலம் ஊர் அறியச் செய்கிறார். அவர் தொன்மக் கதைகளின் மாயப் ‘பக்கிரி’யாக உருவெழுகிறார்.

அமலா சோனாவுடன் சேர்ந்து கர்ண ஜாத்ரா காண்கிறாள். அதில் கர்ணனின் கடைசி புதல்வனாக போரில் மரிக்காத ஒரே மகனான விருஷகேதுவாக நடிக்கும் ஒருவனின் முகம் சோனாவை நினைவூட்டியது அமலாவிற்கு. பைத்தியக்கார பெரியப்பாவின் அருகில் அமர்ந்திருக்கும் சோனாவை பார்க்கிறாள் அவள். மேடையில் ஒளிரும் பாத்திரங்கள் இவர்களாகத் தோன்றுகிறது. கர்ணனிற்கு ஒப்பான பித்து குணம் கொண்ட ஒருவரின் அசாதாரணமான பித்ரு பக்தி. அப்பைத்தியக்கார மனிதர் காலை அசைத்தால் சோனாவின் தூக்கம் கலைந்துவிடுமென்று நேராக அமர்ந்திருக்கிறார்.

சோனாவிடம் அமலா கல்கத்தாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததும், அவனின் கற்பனையில் பெரிய வீடுகளும் அரண்மனைகளும் கோட்டைகளும் எழுகிறது. கற்பனையில் ஒரு ராஜகுமாரனைப் போல வலம் வருகிறான். பிரிதிவிராஜ், ஜயசந்திரன் சம்யுக்தையின் சுயம்வரம் எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன. அவன் ஒரு பூங்காவில் தன் குதிரையுடன் ஒளிந்திருக்கிறான். அவன் ராஜகுமாரியை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடுகிறான். அவன் மனக் கண்ணில் வெள்ளைக் குதிரை தோன்றியது. அதன் மேல் அமர்ந்திருக்கிறான் சோனா. அவனுக்கு முன்னால் அமலா. அவளைக் கூட்டிக்கொண்டு ஆறு, வயல், காடுகளைக் கடந்து பெரியப்பாவின் நீலகண்ட பறவையைத் தேடிப் போவான் அவன்.

*****


இந்நாவலை தமிழுக்கு தந்ததிற்காக எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தமிழுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கூட கிடைக்கப்பெறாத இப்பெரும் இலக்கிய ஆக்கத்தை தமிழுக்கு தருவித்திருக்கிறார். தன்னலமற்ற செயல்களால்தான் ஒரு சமூகம் உய்விக்கப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சுயசரிதை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுகிறது. இவர் மொழிபெயர்த்த ஆக்கங்கள் அத்தனையையும் தேடிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது.

நீராலான ஒரு நிலத்தின் மனிதர்கள் வாழ்வு சதா கனன்று கொண்டேயிருக்கிறது. மனிதர்கள் நடமாடும் கங்குகளாகத் திரிகிறார்கள். எதையாவது பற்றி எரிந்து அழிந்து விடவேண்டுமென்ற வேட்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த ஏரியின், ஆற்றின் ஆழம் இன்னதென்று அறியாதவர்கள். சில நேரம் மண் தென்படுகிறது, சில நேரம் கொடிகள் சூழ்கிறது. ஆழம் என்ற ஒன்று அந்நீருக்குப் பொருந்தா. அந்நீரில்தான் மனிதர்களின் பசியடங்குகிறது. நனைந்து உதறி மேலெழுந்ததும் அவர்கள் கனன்று பற்றியெரிகிறார்கள். ஜலாலியின் பசித் தீ அவர்களின் கிராமத்தை எரிக்கிறது. கலவரத்தின் நெருப்பு உயிர்களை கொளுத்திச் செல்கிறது. நீர் சூழ்ந்த நிலத்தை நெருப்பு, உடலால் மனதால் பசியால் மானத்தால், துளிர்விட்டு ஆள்கிறது.

நீரைப் பார்க்கும் போதெல்லாம் அதில் குதித்து உயிர்விட வேண்டுமென்று எண்ணுவதாக இந்நாவலில் ஒரு வரி வரும். பெரும் நீர்ப்பரப்பைக் காணும்போதெல்லாம் அப்படியான ஒரு பித்து எழாமல் இருக்காது. சதா கைகளை நீட்டி விலகிச் செல்லும் ஒரு பறவையின் பின்னால் அலைவது முடிவுறும்போது கரையற்ற நீரில் மூழ்கி ஒரு பறவையாக மேலெழவே உள்ளம் இரங்கும். வாழ்வென்பதே ஒருமுறையாவது கற்பனையில் மரணித்து பின் முளைத்தெழுந்து சலிக்கச் சலிக்க உயிர்த்திருப்பதுதானே..!!!!