Thursday, July 23, 2020

தாகூரின் கோரா - தேசம், தேசியம், மனிதம்!


1905 பெங்கால் பிரிவினை இந்திய வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் நிகழ்வு. அது இந்தியாவெனும் தன்னுணர்வை அசைத்துப் பார்த்தது. பெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்தியாவெங்கும் சிந்தனையாளர்களும் விடுதலை போர்களும் துளிர்த்தெழ பெரிதும் வழிகோலியது. இந்தியாவெனும் அரசியல் உடமையையும் அதன் உள்ளுணர்வாகிய கலாச்சார பண்பாட்டையும் சேர்த்து காக்கும் பெரும் பொறுப்பு இந்திய விடுதலை சிந்தனையாளர்கள் மத்தியில் பெருகத் தொடங்கியது. மரபார்ந்த இந்துமத சடங்குகளையும் அது முன் வைக்கும் பிரிவினைகளையும் வகுப்பு நிலைகளையும் ஒதுக்கி வைக்கும் புதிய மரபுகளும் முறைமைகளும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது. இந்தக் கிளர்ச்சிகளுக்கு நடுவே, பெங்காலின் மறுமலர்ச்சி காலகட்டத்தின் பின்புலத்திலிருந்து எழுந்து வந்த தாகூர், ஒரு முக்கிய பண்பாட்டு விவாதமாககோராநாவலை எழுதுகிறார்.



இந்து மதத்தின் அத்தனை மூடவழக்கங்களையும் பிரிவினைகளையும் உதறி 1828ல் ராஜா ராம் மோகன் ராய்பிரம்மோ சமாஜைதுவங்குகிறார். இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் இவ்வியக்கத்தினர் தங்களை இந்துகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. பெங்கால் மறுமலர்ச்சி இயக்கத்தின் ஊற்றுக் கண்ணென விளங்கிய இவ்வமைப்பு இந்திய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மரபார்ந்த தளைகளிலிந்து பெரு விடுப்பு அளித்தது. இவ்வமைப்பின் எழுச்சியால் அதிர்ச்சிக்குள்ளான மரபார்ந்த இந்துக்கள் பிரம்ம சமாஜத்திலிருந்தும் கிறித்துவ அமைப்புகளின் தாக்குதல்களிலிருந்தும் இந்து மதத்தை காக்கும் பொருட்டு சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது. இந்தியச் சுதந்திர போரட்டங்களில் ஒரு பகுதியாக சீர்திருத்தப்பட்ட இந்து அமைப்புகள் இந்துமத பண்பாட்டையும் கையிலெடுக்க, பிரம்ம சமாஜம் இந்து மதத்திலிருந்து இந்தியர்களை விடுவிக்கும் முனைப்புடன் வளர்ந்து வந்தது. இந்த இரண்டு பக்கங்களின் அதீத நோக்கிலிருக்கும் முரண்பாட்டை மையமாக வைத்துகோராவெகுசில கதாப்பாத்திரங்களைக் கொண்டு ஒரு முக்கிய விவாதத்தை நிகழ்த்துகிறது.

இப்புவியின் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு தாக்குதல்களால், இயற்கையாலும் மனிதனின் ஏதேச்சதிகாரத்தினாலும், மானுடம் தன்னை அசைத்துக் கொடுத்து தன் இருப்பை எப்படியாவது நிறுவிக்கொள்கிறது. ஒவ்வொருமுறையும் அவ்வசைவுகள் ஏற்படும்போது சிந்தனை தரப்பிலிருந்து வெளிப்படும் அறிஞர்களே முன்வடம் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு யுகசந்தியின் முனையிலிருக்கும் இளைஞர் குழாமின் சிந்தனை என்னவாக இருக்கும் அதன் விளைவாக எழும் செயல்பாடுகள் எம்மாற்றத்தை கொண்டு வரும் என்பதை இன்றைய சூழலில் புரிந்து கொள்வது இயலாததாகவே இருக்கும்

அரசியல் காலாச்சார மாற்றங்களை மையப் பொருளாக்கியஆரோக்கிய நிகேதனுமும்’ ‘அக்னி நதியும்இந்நாவலை வாசிக்கையில் நினைவில் எழுந்துக் கொண்டே இருந்தன.  ‘அக்னி நதிஇது போன்ற வெவ்வேறு காலச் சுழலில் நிகழும் சரித்திர திருப்புமுனைகளில் நிற்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை சொல்கிறது. கோராவிலும் முக்கிய பாத்திரங்களாக நான்கு இளைஞர்கள். அவர்களின் அரசியல் பிடிமானங்களையும் அதனூடாக அலைக்கழியும் காதல் வாழ்வையும் இருசேர பிணைப்பதாலேயே கோரா ஒரு முக்கிய இலக்கிய படைப்பாகவும் ஆகிவிடுகிறது. தாகூர் நீண்ட வசனங்கள் மூலமாக கதாபாத்திரங்களின் ஆழ் மனம் வரை ஒரு கூர் சுழலாக இறங்கி தொட்டு பின் விலகுகிறார். உரையாடல்களின் நீளத்திற்கே கதாபாத்திரங்களின் அவ்வுரையாடலுக்கு முன்னும் பின்னுமான சிந்தனையோட்டத்தை விவரிக்கிறார். இதன் மூலம் அப்பாத்திரங்களுக்குள் நிகழும் அலைக்கழிப்புகளையும் உணர்வுச் சிதைவுகளையும் மிகத் துல்லியமாக அவரால் மீட்டெடுக்க முடிகிறது. பெரும்பாண்மையான தமிழ் நவீன நாவல்களிலிருந்து பெரிதும் விலகி நிற்கும் ஒரு வடிவம் இது. தொடக்கத்தில் வாசிப்பிற்குத் தடையாக இருக்கும் மொழிபெயர்ப்பு சிக்கலிலிருந்தும் கூட பெரிதும் தப்பி நாவலுக்குள் புக இந்நாவலின் உரையாடல்களே துணையாக அமைகிறது.

கோரா எனும் கோர்மோஹன் இந்து மத விழுமியங்களின் மீது பெரும் பிடிப்பு கொண்டவன். அதன் பிற்போக்குத்தனங்களையும் பிரிவினைவாதங்களையும் கூட இம்மதத்தை காக்கும் பொருட்டு பொருத்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் கொண்டவன். இந்திய விடுதலைக்குப் பிறகு இதெல்லாம் சீர் செய்து கொள்ளலாம். முதலில் ஆங்கிலேயர்களை வெளியே விரட்டுவதும் இந்து மதத்தினரை மாறிவிடாமல் தடுப்பதும்தான் தற்போது தலையாயது என்று எண்ணுபவன். சடங்குகளை தான் பின்பற்றாவிடினும் மதத்தின் ஒருமையை காக்கும் பொருட்டு அவை புழங்குவதில் தவறில்லை என்பவன். பிரம்மோ சமாஜத்தின் ஈர்ப்பிலிருந்து விலகி வந்து அதற்கு எதிராக நின்று வாதிடுபவன். சுற்றத்தினரின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவன். தான் பிறப்பால் ஒரு இந்தியன் அல்ல என்று தெரியவரும்போது ஏற்படும் அவனின் மனமாற்றத்திற்கு முற்றிலும் வேறு திசையில் நாவல் முழுதும் பயணிப்பவன். நேர்மறை எண்ணம் கொண்டிருந்தவன்தான் என்ற போதிலும் இந்திய மண்ணிற்கு தான் யார் என்பதும் இந்த மண் எந்த மனிதர்களின் மீதும் எல்லைக் கோடுகளை வரிப்பதில்லை என்பதும் புரியவரும்போது ஒரு பெரும் திறப்பை அடைகிறான். தன் வாழ்நாள் முழுதும் அவன் நிகழ்த்திய விவாதங்கள், தன் காதல் வாழ்வின் ஊசலாட்டங்கள் என அனைத்தும் ஒற்றைப் புள்ளியில் வந்து இணைவதை உணர்கிறான். அது ஒரு பெரும் விடுதலையுணர்வை அவனுக்கு அளித்திருக்கும் என்பதை ஒரு வாசகனும் உணர்ந்தறிவான்.

பினய் பாபு வாசகனின் மனநிலைக்கு மிக நெருக்கமானவன். கோராவின் எல்லையற்ற நட்பினாலும் - ஒருவகையில் பக்தி நிலையும்கூட, அனந்தமயியின் தாயன்பினாலும், முற்போக்கு சிந்தனைகளாலும், லொலிதா மீதான காதலினாலும், சுசாரிதாவின் அறிவார்ந்த நட்பினாலும் அலைகழியும் ஒருவன். தான் சுயமாக எடுக்கும் எந்த முடிவுகளும் யாரோ ஒருவரை பாதிக்கும் என அறிகையில் ஒரு அடி பின்னே செல்பவன். கோராவின் கோபத்திற்கு ஆட்படாமலிருக்க லொலிதாவின் காதலைக் கூட மறுதலிக்க தயாராக இருக்க கூடியவன். இதனாலேயே எவரின் பகைக்கும் ஆட்படாதவனாகயிருக்கிறான். பிரம்மோஸின் நியாயங்களும் முற்போக்கு சிந்தனைகள் அவர்களின் பெண்களுக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தையும் கண்டு அதன் அவசியத்தை உணர்கிறான். ஆங்கிலேயருடன் அவர்கள் காட்டும் இணக்கம் கூட அவனுக்கு தொந்தரவுதருவதாயில்லை கோரா சிறையிலடைக்கப்பட்ட செய்தி வரும் வரை. ஒவ்வொரு கட்டத்திலும் ஏதேனும் இரண்டு முனைகளை சீர் நிறுத்தி பார்க்க வேண்டிய இக்கட்டில்தான் வாழ்கிறான். அவனின் பிடிப்பை சிறுவன் சதீஷால் கூட அசைத்துப் பார்த்துவிட முடியும்

கோராதான் இந்நாவலின் மையம் என்றாலும் முதல் பக்கத்தில் தொடங்கி கடைசி வரை வியாபித்திருக்கும் பாத்திரங்கள் பினய்யும் சுசாரிதாவும்தான். கோராவினால் பெரும் ஈர்ப்புக்குள்ளாவதும் இவர்கள் இருவர்தான் என்பதுவும் காரணமாக இருக்கலாம். பிரம்மோ தனக்களித்த சுதந்திர சிந்தனையை பொரேஷ் பாபுவின் வளர்ப்பினால் தீவிரமாக பற்றி வரும் சுசாரிதாவின் எண்ணங்களை வெவ்வேறு முனையில் நின்று கோராவும் ஹரிமோகினியும் குலைக்கிறார்கள். கோராவின் மீது இவள் ஈர்ப்பு கொள்வதும் ஹரன் பாபுவுடனான திருமண தயாரிப்புகளை ரத்து செய்வதும் கருத்தியல்களின் அடிப்படையிலேயே என்பது இவளை யுவதிகளுக்கான ஒரு லட்சிய உருவமாக ஆக்குகிறது. அனைத்தையும் விவாதத்தின் மூலமாக கடக்க விழைப்பவள். ஆனால் அன்பும் உறவும் அவளை எப்போதும் நெகிழ்த்தும் கண்ணிகளாக இருப்பதால் பினய் பாபுவைப் போல அலைகழிப்புகளுக்கு உள்ளாகுபவளாக ஆகிறாள்.

துணிச்சல்மிக்க பெண்ணாக லொலிதா உருவெழுந்து வருவது நாவலின் நடுப்பகுதியிலிருந்துதான். எவரும் எதிர்பாராவண்ணம் ஒரு திருப்புமுனையில் அவள் ஒரு அலையென எழுந்து பினய் பாபுவை தன்னுடன் இழுத்துக் கொண்டுவிடுகிறாள். பின்ய பாபுவிற்கு ஒரு வகையில் நேர் எதிரான பாத்திரம். தன்னைப் போலவே பினய் பாபுவும் சுயமாக சிந்திக்கவும் தான் நினைத்ததை செயல்படுத்தவும் வேண்டும் என்று விரும்புகிறாள். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பினய்யிடம் இதை சுட்டிக் காட்டவும் தவறுவதில்லை. இதுவே கோராவையும் மீறி லொலிதாவுடனான திருமணத்திற்கு சம்மதம் தருமளவிற்கு அவனுக்கு உத்வேகம் கொடுக்கிறது. பிரம்மோஸாக மாறுவதற்கு கூட அவன் தயாராகிவிடுகிறான்

இந்நான்கு பாத்திரங்களையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்த முடியும். இவர்கள் பிராதான கதைமாந்தர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வில் எதிர்படும் சந்தர்பங்களினாலும் எதிராளியுடனான விவாதங்களினூடாகவும் ஊசலாடும் தன்மை கொண்டவர்கள். சுசாரிதாவை முதன்முறையாக சந்தித்து உரையாடும்போதுதான் இந்திய கலாச்சாரத்தில் இந்திய சுதந்திர வேட்டையில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்கிறான். சார்-கோஸ்பரா கிராமத்திற்கு இரண்டாவது முறையாக செல்லும்போதுதான் அக்கிராமத்தின் எளிய மனிதர்களிடமிருந்து தன்னைப் பிரித்த இடைவெளிகளை உணர்கிறான். அவன் கற்பனையிலிருக்கும் பாரதவர்ஷம் அசலில் இல்லை என்பதை உணர்கிறான். சடங்குகளாலும் சாதிப் பிரிவினைகளாலும் தான் கனவு காணும் பாரதம் வெறுமையானது என்பதையும் கண்கூடாக காண்கிறான். அம்மக்களின் சார்பாக நின்று சிறை செல்வதற்கு தயாராகிறான். இறுதியாக அவனுடைய பிறப்பு பற்றிய உண்மை தெரிய வரும்போது ஏற்கனெவே நொறுங்கத் தொடங்கியிருந்த பாரதம் என்ற அவனது கனவுப் பிம்பம் முற்றிலுமாக உடைந்து போகிறது. சடுதியில் அவன் தன்னையும் பாரதத்தையும் வெளியாளின் கண்கொண்டு பார்க்கிறான். அனைத்தையும் ஏற்று அனைத்தின் மீதும் ஊறும் தேசமிது என்பதை புரிந்துகொள்கிறான். இந்நாவல் அவனுக்கு கிடைக்கும் இந்த அதிர்ச்சியுடன் முடிவுற்கிறது. இனி இத்தேசத்தின் விடுதலைக்கு சமூக விடியலுக்கு அவன் எடுக்கப் போகும் ஆயுதம் என்ன என்பதோ அவன் கனவுகளை எவ்வாறு மாற்றியமைத்துக் கொள்ளப்போகிறான் என்பதோ கற்பனைக்கு விடப்படுகிறது. இந்த திருப்பம் வாசகனுக்கு ஏற்கனெவே தெரிந்திந்திருக்கும் என்பதால் கோராவின் அதீத ஆசார விவாதங்கள் பெரும் முரணாக நாவல் முழுதும் அமைகிறது.

ஆனந்தமாயி பாரதமாதாவின் உருவகம். அன்பின் வழியாக ஆனந்த வாழ்வை தனதாக்கிக் கொண்டவர். பாகுபாடுகள் அவரிடம் இல்லை. அவரின் சுதந்திர சிந்தனைகளால் ஒரு கிறித்துவர் என்று கிண்டலடிக்கப்பட்டாலும் அதை கண்டுக் கொள்பவரில்லை. பெரும் ஆசாரவாதியான கணவர் கிருஷ்ணதாயாளுக்கும் இது மத கட்டமைப்பின் மீது புதிய பாரதத்தை உருவாக்க துடிக்கும் கோரவுக்கும் பாசத்தில் உருகும் பினய்ய்க்கும் பொரேஷ் குடும்பாதாருக்கும் ஒரு மைய ஊக்கியாக, அத்தனையையும் இணைக்கும் சரடாக இருப்பவர். இவரின் எதிர் முனையில் பொரேஷ் பாபு. தன் குடும்பத்தினருடன் பினய் கோரா இருவரையும் கொண்டு வந்து சேர்ப்பவர். எதிர் நிலையில் நின்று மற்றுமொரு மையப் புள்ளியாக இருப்பவர். ஆனந்தமயியும் பொரேஷ் பாபுவும் எதிர் நிலையில் இருக்கும் பெருமனம் படைத்த இருவர். அனைவரும் வந்தடையும் நீள் நிழலாக இருப்பவர்கள்.

இந்நாவல் அனைத்து மார்க்கங்களையும் விமர்சனப் பார்வையோடும் அனுகுவதே இதை முக்கிய சமூக விவாதமாக ஆக்குகிறது. நாவல் முழுதும் இந்து மதத்தின் சாதிய அடுக்குமுறைகள் கொணரும் பிரிவினைகளும் எளிய மனிதர்களின் வாழ்வு இதன் பின்னால் நசுக்கப்படுவதும் உரையாடல்களினூடே எடுத்துரைக்கப்படுகிறது. தீண்டாமைகள் மலிந்து தன் வீட்டிற்குள்ளேயே அவை கடைப்பிடிக்கப்படும்போது கூட தான் ஒரு சமூக போரளி என்றபோதும் கூட அதை கேள்விக்குள்ளாக்க் முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. “பெரிய விஷயங்களை சிறிய கண்ணோட்டத்தில் பார்ப்பதால்தான் நமக்குச் சந்தேகம் வருகிறதுஎன்று கோரா இதை கடந்து செல்ல முயல்கிறான். இவை எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியாமல் அதை வெட்டி எறிவது முட்டாள்தனம் என்கிறான். இன்றளவும் இவ்விவாதங்களை நம்மால் கேட்க முடிகிறது. “ஹிந்துத்துவம் குறித்து சில விஷயங்களில் சமரசம் செய்து விட்டால் முட்டாள்கள் பெரிய விஷயங்களில் ஒரு மரியாதையற்ற நிலையை உருவாக்கி அதனையே தமது வெற்றியாகவும் கொண்டாடுவர்என்பான் கோரா. இந்நிலையிலிருந்துதான்நான் பாரதீயன். இன்று பாரதத்தின் எல்லா ஜாதிகளும் என் ஜாதியே. எல்லோரும் எதைச் சாப்பிட்டாலும், அதுவே என் உணவுஎன்ற நிலையை வந்தடைகிறான். இதைப் போலவே புது ஞான சபையான பிரம்ம சமாஜமும் அதன் முரண்பாடுகளை முன்வைத்து விமர்சிக்கப்படுகிறது. ஹரன் பாபுவின் கையில் ஒரு அமைப்பு நிறுவனமாக மாறிவருகிறது. தலைவர்கள் தொண்டர்கள் என்ற நின்றுவனமயமாதல் பொரேஷ் பாபு போன்ற உயர் சிந்தைனையுடையவர்களை வெளியேற்றவும் தயங்குவதில்லை. மற்றொருபுறம் கோராவை ஆன்மிகத் தியாகத் தலைவனாக்கும் சடங்குகளும் தொடங்குகிறது. எஞ்ஞானித்திற்கு தலைப்படினும் நிறுவனப்படுதலிலிருந்து தப்ப முடியாது

மிகக்குறைந்த கதாப்பாத்திரங்கள், அனேகமாக பெரும் நிகழ்வுகள் ஏதுமில்லை, நீண்ட சமூக விவாதங்களாக உரையாடல்கள் என் இவை அனைத்தியும் மீறி இதுவொரு இலக்கிய படைப்பாக மாற்றுவது பாத்திரங்களின் மனநிலைகளுக்கு ஊடுறுவிச் செல்லும் தன்மையினால்தான். பாத்திரங்களின் மனவோட்டங்களை முழுவதும் எழுதிச் செல்லப்படுகிறது. அவர்களின் அகவயமான எண்ணங்களோடும் புறவயமான செயல்பாடுகளுக்கிடையிலான வேறுபாடுகளையும் இதனால ஒரு வாசகன் உள்வாங்க முடிகிறது. இது முக்கிய பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, சிறிய பாத்திரங்களுக்கும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதுபோலவே காதலர்களின் மன ஆட்டங்களும் அவர்களின் கனத்த மெளனம் உருவாக்கும் சஞ்சலங்களும் கீதாஞ்சலி ஆசிரியனால் மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அற்புதமான பிம்பங்களை அவரால் உருவாக்க முடிகிறது. உதாரணமாக, பினய் பாபுவும் லொலிதாவும் தங்களுக்குள் சூசகமாக காதல் கொண்டிருப்பதை உணர்த்தியபின் ஒரு மெளனம் நிலவுகிறது. “ஒவ்வொரு ஜீவனையும் வானம் தொடர்ந்து அதிசயமாகவும் அமைதியாகவும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அது வெறும் ஒரு வெட்ட வெளியல்லஎன்பதையும் உணர்கிறார்கள். அவர்களின் அகவிழிப்புணர்வு அண்டம் முழுவதும் பரவியிருக்கும் தெய்வீக விழிப்புணர்வோடு அவர்கள் உடலால் இணைந்திருப்பது போன்றிருந்தது. இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.”



இத்தேசத்தின் மீது அதீத காதலும் கனிவும் அதன் வளர்ச்சியில் கவனமும் கொண்ட தாகூரின் எக்காலத்திற்குமான படைப்பு இது. பாரதவர்ஷத்தை சொந்த கண் கொண்டு காணுங்கள் என்னும் அவரின் அறைகூவல் இன்றளவும் முக்கியமாக இருக்கிறது. இதேசத்திற்கு ஒரு தனிப்பட்ட பண்பு உண்டு, ஒரு தனிப்பட்ட ஆற்றல், ஒரு தனிப்பட்ட உணமை உண்டு. அதன் நிறை குறைகளை மனதில் வைத்தே ஒவ்வொருவருடைய நிலையை முடிவு செய்ய வேண்டும் ஆனால் அது எந்நிலையாகயிருந்தாலும் தீவிரமான போக்கில் அதை கடைபிடிப்பது அத்தனையையும் சூன்யமாக்கவே செய்யும். தேசத்தின் மீது பித்து கொண்ட ஒரு பெருங்கவிஞனின் கூக்குரலுக்கு காது கொடுக்க வேண்டிய நேரமிது.

No comments:

Post a Comment