Saturday, June 18, 2011

அவன் இவன்


வாழ்ந்து கெட்ட ஜமீனும் களவாடி கெடுக்கும் ஒரு குடும்பமும் வீதி விதி எதையும் பாராமல் எதன் மீதும் எகிறிகுதிக்கும் அவர்கள் வாழ்க்கையும் விளையாட்டாகவே சொல்லப்பட்டிருக்கிறது, முக்கால் வாசி. 
எஸ்.ரா எழுதி எழுதி கொடுக்க விஷாலும் ஆர்யாவும் பேசி பேசியே தள்ளியிருக்கிறார்கள். 

முதல் பாதி முழுதும் சரளமான வார்த்தைகளும் தெனாவட்டு உடல் மொழியும் எவ்வளவு ரசித்தாலும் காட்சிகளின் நீளம் சோர்வு கொள்ளவே வைக்கிறது. பாலா படங்களில் இதுவரை இது நிகழ்ந்ததில்லை. ஆர்யாவுக்கும் விஷாலுக்கும் இது நிச்சயம் “பாலா” பாடம். குட்டிகரணம் அடித்தாவது இப்படத்தில் இடம்பெருகிறார்கள் நாயகர்களுக்கான நாயகிகள். எம்.வி.குமார் அசாத்தியம். இன்ஸ்பெக்டரும் குண்டு பையனும் இன்னொரு அவன் - இவன் கள்.

  பின்பாதியில் மாறுபடவேண்டிய - இரு திசையாயினும் ஒரெ பாதையென - குணங்களின் அழுத்ததிற்க்காக முதல் பாதி முழுதும் இலகுவாகவே சொல்லப்பட்டிருப்பது புரிந்தாலும் போலீஸ் உட்பட அத்தனை பாத்திரங்களையும் வெரும் கேளியாகவே கையாண்டிருப்பது அநியாயம். காணாமல் போகும் கோடி மதிப்புள்ள வண்டியை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. சிரிக்க வைக்கும் முயற்சியிலும் முழு வெற்றியில்லை.
  அவசரத்தில் அள்ளி தெளித்திருந்தாலும் இது பாலாவின் கோலம் என பின்பாதியில் அழுந்த பதிகிறது. செந்நிற மழையில் பின்னிரவு காட்சிகளும் அதை தொடரும் சானம் கரையும் மண் தரையில் மழை கலந்தோடும் உக்கிரமும் உள்ளபடியே சொல்ல பாலாவால் மட்டுமே சாத்தியப்படும்.

  தோள் உரசி தொடை தட்டி “அதாவது என்ன ஆச்சுனா...” என கதை சொல்லுவதில் - அது எவ்வளவு சோடையாயினும் - பாலாவிற்க்கு நிகர் அவரே! - June 17, 2011

No comments:

Post a Comment