Friday, May 6, 2011

மூன்றெழுத்தில் என் மூச்சு....


எங்க கிராமத்தில் - இப்படி தொடங்கினாலும் அந்த கிராமத்தில் எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு என்ன வராண்டா கூட இருந்தது கிடையாது. பனி மாற்றம் நிமித்தமாக 4 வருடங்களுக்கு ஒரு முறை மாறி மாறி ஒரு மாதிரி நாங்கள் வந்து சேர்ந்த இந்த கிராமம் எங்கள் “தொலைக்காட்சி வரலாற்றிலேயே” இல்லை வரலாற்றையே தொடக்கி வைத்த இடம்.

ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் கருப்பு வெள்ளை சினிமா காண கலர் கலராய் மக்கள் எங்கள் கூடத்தில் கூடியிருப்பார்கள். என்னுடைய நோட்டுப்புத்தகத்தில் எதோ கிறுக்கி டிக்கெட்டை போல கிழித்து கொடுத்து இவர்களை உள்ளே அனுப்புவது என் வாராந்திர கடமை.

எதிர் வீட்டு சிங்கப்பூர் பாட்டி “எங்க ஊரு பாட்டுக்காரன்” பார்க்க மிகவும் விரும்பியதால், எங்கள் தொலைக்காட்ச்சிப் பெட்டி ஆண்டெனா சகிதம் தெருவைக் கடந்து எதிர் வீட்டுக்கு ஒரு இரவு குடிபெயர்ந்ததுதான் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு அன்றைய பரபரப்பு செய்தி.

எங்கள் தெருக்கோடியில், ஊர்க்கோடியில் உள்ள ஒற்றை தியேட்டரின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். புது படத்தின் போஸ்டர் தெரிந்தால் மனம் குதூகளித்து குதிக்கும்.

வாரம் ஒருமுறை பாட்டி வீட்டுக்குப் போயிட்டு வரும்போதெல்லாம் “இன்னிக்கு சினிமாவுக்கு போலாமா” என்று அப்பா எப்போ கேட்பாரென காத்திருப்பேன். அனேகமாக வாரம் தவராமல் கேட்டிருப்பார். இன்றும் வெள்ளிக்கிழமை இரவுகளில் தொலைபேசினால், “வெளியே இருக்கே? ஏதும் படம் ரிலீஸ் ஆகலையா என்ன?” என ஐயமுருவார். “பையன் ஊருல இருந்திருந்தா இந்நேரம் இந்தப் படம் எப்படியிருக்குன்னு சொல்லியிருப்பான். இதை டிவியில சொல்லி கேக்க வேண்டியதா இருக்கேன்னு” அம்மா வருத்தப்படுவாள்.

தனிமை போக்கியாய் புத்தகங்களுக்குள் புரண்டு படுத்தும் புத்தியில் கசப்பு கலவரங்களாய் புழு நெலியும். சினிமா மட்டுமே என்னை தின்று விழுங்கும்.பறத்தல் கூட நேரம் பிடிக்கலாம், சிறகை இறக்கி வைத்து மறைதல் எனக்கு சினிமாவால் சாத்தியம். ஆலயத்தில் மண்டியிட்டு இரங்குபவனைப் போல திரையறங்குகளில் தவமிருந்திருக்கிறேன். இன்னமும் எனதாகிப்போன சினிமாக்களே என் வாழ்க்கையாகிப் போயின.

சகலகலா வல்லவன் படம் பார்த்து திரும்பி வந்த இரவில் திடுதிப்பென நான் பிறந்தேனாம். அப்படத்தின் “இளமை இதோ இதோ...” பாடலில் கண்ணாடி உடைத்து கமல் வெளியே குதிப்பது ஞாபகத்துக்கு வரும்.

No comments:

Post a Comment