Friday, May 6, 2011

பெயர் பெறாதவை


குளத்தில்
அலைந்து அலைந்து
மறைந்து மீண்டும்
உரு பெறும்
என் நிழல்...
கரையில் நிற்கும்
என்னால் அது
முடிவதேயில்லை!


ஜன்னல் சந்துகளில்
உடைந்துருகி
பெளர்ணமி
நுழையும் முன்
கண்களை மூடி
இரவைத் தொடர்கிறேன்
அமாவாசையோடு


மெழுகாய்
உருகிக்கொண்டிருகையில்
என் வெளிச்சமாய்
நீ
பரவிக்கொண்டிருக்கிறாய்!


தேயவும்
மீண்டு முழுதாய்
பூக்கவும்
நிலவுகளைப் போல் - என்
கனவுகளுக்கும் ஒரு
குணம் உண்டு!


ஹைக்கூ நீ!
இரண்டே வரியில்
புரிந்து நெருங்கினால்
விலகிப்போகிறாய்
வேறொரு அர்த்தமாய்
மூன்றாம் வரியில்...


நிஜமென்று
உணர்த்த விரும்பிய
கணங்கள்
கனவாகவே இருந்திருக்கலாம்
நீ
கிள்ளிய வலியாவது
மிஞ்சியிருக்கும்!


No comments:

Post a Comment