Saturday, April 18, 2015

வண்ணங்களின் வரையறை!!

இளவயது ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களையும் அழகியல்களையும் எவ்வளவு சொல்லியும் தீராது. அது பலசமயம் வெறும் அர்த்தமற்ற வேகம் என்றபோதிலும்.
ஒரே கான்வாஸில் விதவிதமான ஓவியங்களை தீட்டுவதில் மணிரத்னம் மிக கைதேர்ந்தவர். அதிலும் இந்தமுறை வீடியோ கேம் வகை காதல். அதீத வண்ணங்களால் ஆன கதாபாத்திரங்கள். எதையுமே சட்டென தேடி தாவி ஓடி பிடித்து வென்றுவிட முடியுமென ஒரு முனைப்பு. செத்து செத்து விளையாடும் விளையாட்டு தானே...நிரந்தரமான எந்த முடிவிற்கும் தயாராகாத மனநிலை. இது காதாலா என்று கூட முடிவெடுக்க முடியாத ஒரு உறவு தாராவிற்க்கும் ஆதிக்கும். திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அதற்கு ஒரு காரணத்தை புனைய இக்கதை முனைந்தாலும் அது அவசியமற்றதும் கூட.
வேறு வேறு நாட்டிற்கு செல்லும் கனவுகளோடு கடைசி சில மும்பை மாதங்களை ஒன்றாக கொண்டாட முடிவெடுத்து வாழும் வீட்டின் அடுத்த அறையில் நீண்ட தாம்பத்தியத்தை ஒரு கனிந்த பழத்தைப் போல நிதானமாக சுவைத்து மகிழும் கணபதி தம்பதியினர். பல காட்சிகளில் இவர்களின் அறைக் கதவுகளின் மெல்லிய இடைவெளியின் ஒளியில் காதலின் முற்றிலும் முரணான இரு வேறு கோணங்கள் பரிமாரிக்கொள்ளப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை இழந்து வரும் மனைவியின் வியாதியை தனது மீதி வாழ்க்கையாக கொள்ளும் கணவனின் காதல்; இழப்பதற்க்காகவே நினைவுகளை சேகரிக்கும் ஒரு கலர்ஃபுல் காதல். சிறு பிரிவுகள் சிறு கூடல்கள்; இரண்டிலுமே நாடகமற்ற விளையாட்டுகளும் கனவுகளும் "சின்னஞ் சிறு ரகசியங்களும்"!

முதல்முறையாக ஆதியும் தாராவும் ஒரு அறையில் கழிக்க நேரும் ஒரு இரவின் பாடலில் "பறந்து செல்லவா.." என தாராவின் தொலைதூர கனவுகள் இவர்களின் இடையில் ஒரு பாதுகாப்பான தடையை உருவாக்கினாலும் அடுத்த சந்தர்ப்பத்தில் "நானே வருகிறேன்.." என இடைவெளிகளை கடந்து ஒன்று கூடுகிறார்கள். ஒன்றாக மிச்ச காலத்தை கழிக்க நினைத்து குடிபுக அனுமதி கேட்கும் காட்சியை தொடரும் பாடல் - "மலர்களை கேட்டேன் வனமே தந்தனை..தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை.." பாடல்களின் வரிசையும் வரிகளும் கதையின் ஓட்டத்தை நியாயப்படுத்தும் இந்த அழகு கடைசியாக எந்தப் படத்திலும் வந்ததாக நினைவில்லை. மணியின் படங்களையே இதற்க்காக மீண்டும் ஒரு முறை பார்க்க ஆவல் மேலிடுகிறது. ஆச்சரியமாக, "ஹே சினாமிகா.." பாடலின் ஒரு வரி - "சீரும் சினாமிகா" ஆங்கில சப்-டைட்டிலில் "Seething Sinamika" என்று அர்த்தமும் எதுகை மோனையும் கூட கெடாமல் வந்திருந்தது!!!
சிறு முறைப்புகளுக்கு பிறகு ஆதியிடம் கணபதி உரிமை கொள்ளும் காட்சி பிரஷர் குக்கர் நீராவி படர்ந்து தெளிவது போல காட்சிப்படுத்தியிருப்பது ஒரு உதாரணம். மணியும் பி.சி.யும் விளையாடியிருக்கிறார்கள். சீண்டுவதர்க்கென்றே ஆங்காங்கே "அலைபாயுதே" காட்சிகளை நினைவுபடுத்தும் கோணங்களும் உண்டு. பேருந்து பின் சீட் பயணம், எலெக்ட்ரிக் டிரெயின் என பழகிய இடங்களே. உண்மையில் அலைபாயுதே போலவே இதிலும் இரண்டு ஜோடிகள். ஏதோ ஒரு வகையில் ஒருவரின் வாழ்க்கையை இன்னொரு காதல் மாற்றியமைக்கிறது. அனால் முந்தையதில் பிரியாமல் இருப்பதற்காக தாலி கட்டி கல்யாணம் செய்து பின்பு பிரிவின் விளிம்பில் ஊசல்; இதில் பிரிவு நிச்சயம் என திருமணமற்ற உறவின் விளிம்பில் காதல். மிகச் சிறிய ஒரு கோடு. ஆனால் இந்தமுறை அழுத்தம் திருத்தமாக, விலாவரியாக வரைந்திருக்கிறார் மணி.
விதவிதமான பயணங்களில் வாழ்க்கை. எதை நோக்கியோ சென்றுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத திசையில் திரும்பி சலசலத்து ஓடும் நதி இது. வெவ்வேறு நிறங்களாக பிரிந்து தான் சென்று சேரும் இடங்களை தேடி அலைந்துக் கொண்டிருந்தாலும் இந்த வண்ணங்கள் அறுபடும் ஓரிடத்தில் காதல் மீண்டும் தூய ஒளியாக மட்டுமே எஞ்சுகிறது.

Friday, February 6, 2015

என்னை அறிந்தால்...


தன் அப்பாவை கொன்ற மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கும் ஒரு தாதாவை கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஒரு போலீஸ்தான் கொல்ல முடியும் என்பதை உணர்ந்த சிறுவன் கோட்டுக்கு எந்தப் பக்கம் போனான் என்பதுதான் கதை... இல்லையில்லை. ....பதுதான் "ஒரு" கதை. நாட்டுக்காக நண்பனாக நடிக்கப்போய் தன்னால் ஏமாற்றப்பட்ட இப்போது வில்லனாகிவிட்ட அந்த நண்பனிடமிருந்து தன்னையும் வீட்டையும் நாட்டையும் காப்பாற்றுவது இன்னொரு கதை. தன் மனைவியாகப் போகும் ஒரு பெண்ணை மனைவியாகப் போகும் நாளில் (அதாவது திருமண நாளில்) கொன்ற அதே நண்ப வில்லனை பழிவாங்குவதும் ஒரு கதை. உடல் உறுப்பு கடத்தலுக்காக குறிவைக்கப் பட்டிருக்கும் ஒரு அழகான பெண்ணை பறந்து பறந்து காப்பாற்றுவதும் மற்றொரு கதை. அந்த கடத்தலுக்கு தலைவனாக அதே நண்ப வில்லனே அமைவது ஒரு தனி கதை. இதில் வேறு ஏதேனும் கதைகள் விடுபட்டிருந்தால் சகலரும் மன்னிப்பாராக.
படங்களில் கதைகள் இல்லையென யார் சொன்னது. கௌதம் மேனன் இயக்கிய எல்லா படங்களின் கதைகளும் இதிலேயே உள்ளது. ஒரு கேட்டலாக் மாதிரி. ஹாரிஸ் அமைத்த எல்லா பாடல்களின் மாதிரியும் இதிலேயே உள்ளது என்பது சொல்லமலே புரிவது!

கௌதமிற்கு எப்போதும் அழகிய கனவுகள் உண்டு. என்னதான் ஆங்கிலத்தியே பேசும் அம்மா இருந்தாலும் குடும்பம் பெருங்கடனில் இருக்கும்போது உள்ளங்கையிலேயே அளந்து அமெரிக்காவிற்கு மகனை காதலிப்பதற்காக அனுப்பி வைக்கும் அப்பா போல. அஜீத்தும் குழந்தையை கூட்டிக்கொண்டு நான்கு வருடம் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார். போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக வருகிறார். ஆனால் போலீஸ் ஷு மட்டும் தான் போடுவார். யூனிபார்ம்லாம் இல்லை. ஏன்னா அவர் தான் போலீஸ்லியே சேரலையே. வெறும் போலீஸ் துணையோடு வில்லன்களை பந்தாடுகிறார். நாட்டுக்கு இப்படி நாலு வேலையை ராஜினாமா செய்த போலீஸ் இருந்தால் எப்படி இருக்கும். சம்பளம் மிச்சம். நாலு வருடம் ஊர் ஊராக செலவு செய்து சுற்றி வந்த பின்னும் அனுஷ்காவுக்கு காவலானாக பாஸ்டன் வரை போய் வருகிறார். இதிலெல்லாம் லாஜிக்கே இல்லை என்பது கதாசிரியருக்கு தெரியாதா என்ன. இருந்தாலும் கனவுகள் அல்லவா. கனவுகளுக்கு ஏது லாஜிக். (ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்த "இசை" எப்படியெல்லாம் உதவுது.)





அஜீத் அழகாக இருக்கிறார், காபி விளம்பரத்தில் பார்த்தது போலவே. படம் முழுவதும் விளம்பரம் போலவே எழுந்துட்டேன் வந்துட்டேன்னு எங்கிருந்தாவது எழுந்து எழுந்து வந்து கொண்டே இருக்கிறார். ஆனாலும் படம் பார்க்க போதிய காரணமாக அவர் மட்டுமே இருக்கிறார். திரிஷாவிற்கும் அனுஷ்காவிர்க்கும் சம அளவில் வேலையின்மை. பாராட்டுக்கள். பரதநாட்டியம் என்ற பேரில் திரிஷாவின் மேடை நாடகம் ஒன்று வருகிறது. என்னதான் அது!?

சிற்சில காதல் கணங்கள், உச்ச கட்ட ஹீரோ வில்லன் சேசிங், எட்டி பார்க்கும் நாசர் பாத்திரம், தெள்ளத்தெளிவான கேமரா கோணங்கள் உடல் உறுப்பு கடத்தல் என ஆங்காங்கே என்னை அறிந்தால் தெரிகிறது. த்ரிஷா அஜித் எபிசொட் மட்டும் அப்படி ஒரு ஆழம். இதை மட்டுமே படமா எடுத்து எங்க உயிரை ப்ரீயா விட்டு இருக்கலாமேன்னு தோன்றாமல் இல்லை.. யாருடைய கோணத்தில் கதை சொல்லப்படுகிறது என்பதிலும் அவ்வளவு குழப்பம். க்ளோஸ் அப் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் எது உரையாடல் எது மனக்குரல் என கண்டுபிடிப்பது கஷ்டம். முக்கிய வசனத்தை (எல்லோருமே கொஞ்சம் முக்கி முக்கி தான் பேசுறாங்க) கூட "ஏதோ மனசுல நினைச்சுகிட்டாங்க போல" என தவறாக புரிந்து கொள்ளும் அபாயம் உண்டு. நடிகர்களின் வாயையே பார்க்க வேண்டியது அவசியம். அனுஷாவிற்கு கூட கௌதம் மேனோனே டப்பிங் கொடுத்துட்டரோ என்ற சந்தேகம் எனக்கு மட்டும் தானா? எல்லோருமே அவரைப் போல பல்லைக் கடித்துக் கொண்டு வாயின் கொஞ்ச இடைவெளியில் தான் பேசுகிறார்கள். படம் முழுதும் ஏதோ ஒரு பாத்திரம் மாறி மாறி தன் குரலில் கதையை நர்ரேட் செய்துக்கொண்டே இருக்கிறது. படம் முடிந்ததும் வேறு வழியில்லாததால் கௌதமே நர்ரேட் செய்து "இப்போது படம் முடிந்தது" என்கிறார்.

கொடுத்த காசுக்கு துவம்சம் செய்திருப்பது ஹாரிஸ் மட்டுமே. தனித்தனியாக ஒவ்வொருத்தர் காதுக்குள்ளும் வந்து வாசி வாசியென்று ....சிக்கிறார். அடிக்கும் அடியில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கலெல்லாம் "என்னை எழுப்பினால்" என எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

Friday, April 4, 2014

‪‎மான்கராத்தே‬


ட்ரெயிலர் பார்த்து யூகித்த கதை அப்படியே மார்ஜின் மிகாமல் எழுதப்பட்டு படமாகியிருக்கிறது. அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க்க வேண்டும் என்பதாலோ கதை என முருகதாஸ் பெயர் வைத்து டைட்டில் போட்டதாலோ முதல் பத்து நிமிடமும் கிளைமாக்ஸ் சண்டைக்கு  முன்னதான பத்து நிமிடமும் ஆச்சர்ய அட்ராசிட்டி!

ஓபனிங் சாங், முட்டிகால் டான்ஸ் என சிவகார்த்தி ஒரு "காமெடி" விஜய் ஆக ஏக வாய்ப்பு. (பத்ரியும் ஒரு காமெடி படம் தானே? #டவுட்) அனால் இன்னொரு சந்தானம் ஆகாமல் இருந்தால் சரி. உண்மையில் ஒருசில ஒன் லைன்கள் தவிர சிவா வராத திருக்குறள் இன்டர்வியூ காட்சிதான் அதகளம்.

காதலிக்காக உயிரையே விட துணிந்தாலும் உயிரை விடவே முடியாத சிவா, படிக்காத பொறுப்பில்லாத தறுதலை பிள்ளையானாலும் நல்ல பிள்ளை! "எனக்கெல்லாம் இந்த  
மாதிரி
பொண்ணு கிடைக்குமா"னு சீரியஸாவே வில்லனிடம் புலம்பும் அளவுக்கு வெள்ளை சாயம் பொம்மை ஹன்சிகா. அப்புறம் மூணு பாட்டு ஒரு இடைவேளை ரெண்டு பாட்டு ஒரு சண்டை!

இதில் வித்தியாசம் என்னவென்றால் நண்பர்களுக்காக ஒரு ஹீரோ தயாராகிறான். உண்மையில் குத்துச் சண்டை வீரனாகி வெல்வதெல்லாமே அந்த கும்பளுக்காகதான். நண்பர்கள் நண்பர்களாவதே ஹீரோ ஹீரோ ஆன பிறகுதான் என்பது உட்கதை. (வெள்ளித்திரையில் கண்டபின் இதை படிக்கோணும்)


அநியாயத்திற்க்கு கேட்ட பார்த்த பழகிய காட்சிகள் வசனங்கள். லிப்ட் திறந்தால் ஹன்சிகா நிற்பதும் வம்சி வீட்டு காலிங்க்பெல் அடிப்பது சிவா என்றும் ரைட்டர் இங்க் நிரப்பும் முன்னரே இங்க தெரிந்த விஷயம். வலிய வலிய வட்டி கட்டியாவது வம்சி வில்லனாகிறார். சதீஷ் மட்டும் சிரிக்க வைப்பதோடு இயல்பாகவும் தோன்றுகிறார். சூரி வரும் காட்சிகளில் அவர் இதற்கு முன்னால் நடித்த படங்களை நினைத்து சிரித்து வைக்கிறோம். ரம்மியமான லைட்டிங் கலர்புல் லேஅவுட் என காமிரா தான் புள்ளிமான். பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்க பின்னணியில் தன்னால் இயன்ற அளவுக்கு பெஃப் ஏற்றுகிறது இசை.

பின்பாதியில் நிலைகுலையுமளவு சும்மா குத்து குத்தென்று குத்தி எடுக்கிறார்கள். அவசரகதியில் அவசியமே இல்லாமல் ஒரு டாஸ்மாக் பாட்டு. அணிருதும் முருகதாசும் வேறு காட்சி கொடுத்து சிறப்பு சேர்க்க... மிடில..! குறைந்தபட்சம் மான் கராத்தே என்றால் என்னவென்றாவது கோச் சொல்லுவாரென்று பார்த்தல் அதை வேடிக்கை பார்க்கும் யாரோ சொல்லி தொலைக்கிறார். இசை விமர்சகர் ஷாஜி முழு நேர நடிகர் ஆகிவிட்டாரா என்ன! மான் கராத்தேவெல்லாம் ஹீரோ இமேஜ்க்கு ஒத்து வராது என்பதால் அது டைட்டிலில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

எதைப்பற்றியும் யோசிக்காமல் சிவகார்த்தியை நம்பி படம் எடுக்கும் அளவிற்கு மார்க்கெட் உயர்ந்திருப்பது சந்தோஷம். 600 திரையரங்குகள் திரையிடும். டிவிக்களில் கூவி கூவி விற்க குடும்ப சகிதம் பார்த்து சிரிக்க, அடுத்த வாரம் இதன் வெற்றி விழா கொண்டாடப்படும்.

Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா - அஞ்சலி

திருவான்மியூரிலிருந்து சின்மாயா நகர் வரை வந்து கூத்துப்பட்டறை நாடங்களை பார்த்துக்கொண்டிருந்த நாட்களது. நொடிந்து நொடிந்து முடியும் தெருக்கள் ஒன்றின் ஓரத்தில் உயர்ந்த கூரை கொண்ட கூடாரம் முன் வண்டி நிறுத்தி நின்றேன். "இன்னும் கவுன்ட்டர் திறக்கலை.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க." என்று ஒப்பனை இட்ட பெண்ணொருத்தி சொல்லி சென்றாள். நாடகம் தொடங்க இன்னும் அரை மணிநேரம் இருக்க எனக்கு அடுத்து இரண்டாவதாக வெள்ளை சொகுசு கார் ஒன்று தயங்கி தயங்கி சந்தில் நுழைந்து சாந்தமாய் அமைந்தது. காரிலிருந்து இறங்கியவரின் தொப்பி மீது விழுந்த பார்வை விரியும் முன்னரே மண்டையில் உரைத்தது அது திரு. பாலு மகேந்திரா என்று. அறிவிலும் உணர்விலும் நிழலாடிய ஒரு மகா கலைஞனின் பிம்பம் இறங்கி என்னை கடந்து சென்றது. நளினமுற்ற ஒரு காற்றுருவம் போல் உள்ளே நுழைந்து மறைந்தார்.


நடிகர்களும் நடத்துனர்களும் அங்குமிங்கும் ஓடியபடி இருக்க சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தேன். படிக்கட்டுகளாய் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து நடிகர்களற்ற மேடையையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அனிச்சையாகவே அவருக்கு அடுத்த வரிசையில் அவர் கால் வைத்திருந்த படியில் இரண்டடி தள்ளி அமர்ந்தேன். அநேக முப்பது நொடிகளுக்கு யாருமற்ற மேடைக்கு நாங்கள் இருவர் மட்டுமே இரசிகர்கள். இரண்டொருவர் வந்து அமர சலனம் கூடியது. அமைப்பாளர்களில் ஒருவர் பாலு அவர்களிடம் எதோ கையில் கொடுத்து பேசி சென்றது என் விழியோரத்தில் படமாகியது.

மிகச் சன்னமான ஒரு குரல் பின்னாலிருந்து ஒலித்தது. "தம்பி இதை பூசிக்கோங்க. கொசு கடிக்காது. பூசிட்டு பக்கத்துல கொடுத்திடுங்க...."

"தேங்க்ஸ்..." என்றேன். அவர் கண்ணை கூட நோக்கவில்லையென்று
இப்போது தோன்றுகிறது.

பரமார்த்த குரு நாடகம் தொடங்கியது. கொசு தடுப்பு மருந்தின் வாசனை நாசியில் நிறைந்தது. முட்டாள்கள் சூழும் கதை வளர்ந்தது. கூட்டம் கலைய பாலு மகேந்திரா எழுந்து வெளியே நடக்க நாடகம் நிறைவுற்றது.

கலைஞர்களின் மரணம் கனத்த மௌனத்தை போன்றது. தானாக கலைந்து விடியும்வரை காத்திருந்து மீள வேண்டும்.

Thursday, February 7, 2013

கடல்


                                                                   
வெயிலும் உதிர் மணலும் தினம் மீட்டெடுக்கும் கருவாட்டு வாழ்க்கை-உப்பு கரிக்கும் முதல் பாதி மணியின் புது அலை. கிறித்துவ இறையியலையே வானமும் கடலுமாய் கொள்ளும் சமூகத்திற்க்கு தேவனும் சாத்தானுமே கண்படும் எல்லைகள். இந்த இரண்டு எல்லைகளையும் வெவ்வேறு தருணங்களில் தொட்டு திரும்பும் நான்கு பாத்திரங்களின் கதையை திரைமொழிந்ததில் பாதிதான் வெற்றி.

பியாட்ரிஸ் - தமிழ் திரையின் ஒரு தேவ மகளாய் வரவேண்டியவள் வெரும் சினிமா லூசுப் பெண்ணாக மட்டுமே எஞ்சிப்போகிறாள். முதல் பாதி பார்த்து ”இது என் படம் போலவே இல்லையே” என நினைத்தோ என்னவோ மணி காபி குடித்த பின் காட்சிகளை வெட்டி எறிந்திருக்கிறார். கதையை கரையிலேயே வைத்து விட்டு தடாலடியாக இறுதி சண்டைக்கு நடுக்கடலில் குதித்து விடுகிறார்.

திரையில் தோன்றும் அத்துனை துணைப் பாத்திரங்களும் அட்டகாசம். கெளதமும் துளசியும் அழகு. தோற்றமே நடிப்பாகிப் போனதில், அர்விந்த்சாமி நடிசிருக்கார். ஆனால் அர்ஜுன் சார் - இது உங்க போட் இல்லை......!!!

மஞ்சளும் நீலமுமாய் ராஜீவின் கண்சிமிட்டாத காமிரா வண்ணமயம். ரஹ்மானுடன் சேர்ந்து வைரமுத்துவும் கார்க்கியும் மணியை திணறடிக்கிறார்கள். ஈடு கொடுக்க முடியாமல், பாடல் காட்சியமைப்பில் கற்பனை வறண்டு மணி இன்னமும் “அலைபாய்ந்து’க்கொண்டே இருக்கிறார்.

“எனக்கு வீட்ல சோறு இல்லை, அதான் விடுதியில சேர்ந்தேன்” - “எனக்கு வீட்ல தியானம் இல்லை. அதை தேடி தான் இங்க சேர்ந்தேன்”என வசனங்களிலேயே கதையின் தளங்களை நிறுவிக்கொண்டே செல்கிறார் ஜெ.எம். உன்னிப்பாக கவனித்தால் குறைந்தபட்சம் அறுபது நாகை
வட்டார வசவு சொற்களை கற்கலாம். நாவல் வடிவிற்க்காக காத்திருப்போம்.

கரைக்கும் கடலுக்கும் மாற்றி மாற்றி இழுத்துப்போடும் அலையின் மீதான மனிதர்களின் வாழ்க்கையை பாதியில் தொலைத்த பாவத்திற்க்கு மணி பொறுப்பேற்க்க வேண்டும். பலமான நங்கூரமிட்ட கப்பல் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியில் மூழ்கிப்போகிறது. கரை சேராதது கப்பல் மட்டுமல்ல கடலும் தான்.