Showing posts with label இந்தக் கதையை சரியாகச் சொல்வோம். Show all posts
Showing posts with label இந்தக் கதையை சரியாகச் சொல்வோம். Show all posts

Monday, January 10, 2022

குடிபெயரும் கதைகள் - சிறில் அலெக்ஸ்

 இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் தொகுப்பின் மீது மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸின் மதிப்புரை


‘இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்’ – சிறுகதைத் தொகுப்பு

மொழிபெயர்ப்பாளர்: நரேன்

மனித வரலாறென்பது குடிபெயர்தலின் கதைதான், ஒருவகையில். 

மனிதக் குடிகள் உருவாகியபோது அனைத்தையும் பகுக்கவும் வகுக்கவும் முறைகள் உருவாகின, உறவுகள் துவங்கி நில எல்லைகள் வரை அனைத்தும் வரையறுக்கப்பட்டன. இவ்வரையறைகளின்மீது அமைப்புக்கள் உருவாகி வந்தன.  ஆழ்ஞானம் மதமாகியது புறஞானம் அறிவாகியது இடைப்பட்டது தத்துவமாக எஞ்சியது. கலைகள் இவற்றிலிருந்து உருவாகின. மொழி மனதின் வேகத்தில் விரிவடைந்தது. இவை அனைத்துமே எரிகுளம்புகள் வெளிவந்து உறைந்து பாறையாவதைப்போன்ற ஒரு சுழற்சியில் நிகழ்ந்தன, தொகுக்கப்பட்டு பண்பாடாகின. தனிமனிதன் குடும்பத்தில் இணைந்தான் குடும்பம் கிராமமாக, கிராமம் குடியாக, குடி அரசாகப் பேரரசாக விரிவடைந்தன. பேரரசுக்கள் உறைந்துபோன பண்பாடுகளை உட்கொண்டும் ஆட்கொண்டும்  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அவை பொங்கியெழுந்து மீண்டும் உறைந்தன. குடிபெயர்தல் என்பது இடம்பெயர்தல் மட்டுமல்லவே. குடிபெயராத சமூகங்கள் இடம்பெயரும் நீராதாரங்களால் கைவிடப்படும் குட்டைகளைப்போல தேங்கிப்போகின்றன. வளர்ச்சிக்கு அடிப்படை என்றாலும் குடிபெயர்தல் பெரும் பதட்டத்தைத் தரக்கூடிய ஒரு மானுட அனுபவமே.

நரேன் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ள ‘இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்’ தொகுப்பு இத்தகைய பதட்டமும் குழப்பமும் வெளிப்படும் குடிபெயர்ந்தோரின் கதைகளாலானதாகும்.  மேலைப் பண்பாடு கொண்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்தோரின் கதைகள் இவை எனச் சொல்லலாம். குறிப்பாக அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளுக்குக் குடிபெயர்ந்தவர்களின் கதைகளை நரேன் தேர்ந்தெடுத்திருக்கிறார். இக்கதைகள் வழியே நாம் உலகை மேற்கு கிழக்கு என இரண்டாகப் பிரித்துவிட முடியும். ஒரு கதையைத் தவிர மற்றவை அனைத்துமே குடும்பங்களை, உறவுகளை மையமாகக் கொண்டவை. இது அவரது தேர்வில் இருக்கும் பொதுத்தன்மையா அல்லது குடிபெயர்ந்தவர்களின் ஆதாரப் பிரச்சனை குடும்பங்கள் அல்லது உறவுகள்தானா என்பது எஞ்ச்சும் கேள்வி. 

மேற்குலகம் குடும்ப அமைப்புக்கு முற்றிலும் எதிரானதும் அல்ல. அங்கே ஆழ்ந்த உறவுகள் இல்லை என்பதுவும் ஒரு மேலோட்டமான பார்வையே. நாம் நம்ப விரும்புவதைவிட மேற்கத்திய கலாச்சாரத்தில் ஆழமான, உண்மையான உறவுகளும், குடும்பத்தின் மாண்பினைப் போற்றும் மத, கலாச்சார அமைப்புக்களும் அரசியல் இயக்கங்களும் தீவிரமாகவே உள்ளன. தன் மணவாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொள்ளாத ஒருவர் அரசியலில் வெற்றி கொள்வது அங்கே மிகக் கடினம். ஆனால் கிழக்கில் அது ஒரு பொருட்டல்ல. அதே நேரம் மேற்குலகில் தனிமனித உரிமைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குடும்ப அமைப்புக்கு சவால்களை உருவாக்குகின்றன. இவை இரண்டுமே அதனதன் சாதக பாதகங்களைக் கொண்டவை. குடும்பம் அதன் மிக பாதகமான நிலையில் கொடூரமான அடக்குமுறையும் வன்முறையும் நிறைந்த அமைப்பாகிவிடுகிறது, தனி மனிதச் சுதந்திரம் அதன் மோசமான எல்லையில் அரசின்மைக்கும் ஒழுக்கமின்மைக்கும் சுய அழிப்பிற்குமே இட்டுச்செல்லலாம் . குடும்பம் அதன் சாதகமான எல்லையில்  ஒரு குழந்தை வளர்வதற்கான ஆகச் சரியான அமைப்பாக விளங்குகிறது. சீரான குடும்பங்கள் சீரான சமூகங்களையும் உருவாக்குகின்றன. தனிமனித விடுதலையின் சாதகமான எல்லையில் தனி மனிதன் எந்தக் கட்டுக்களும் இன்றி தன் முழுத்திறனையும் கொண்டு புதிய உச்சத்தை அடைய முடியும். குடும்பம் தனிமனிதன் எனும் இவ்விரு புள்ளிகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருந்தாலும் அவற்றிற்கிடையே பெருந்தூரங்கள் எளிதில் உருவாகிவிட முடியும் என்பதை இக்கதைகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

இவற்றில் கிழக்கு மேற்கு என்ற பண்பாட்டுப் பிரிவை நாம் உருவாக்க முடியும் என்றாலும் திருப்பும்தோறும் வண்ணம் மாறும் ஒரு கலைடாஸ்கோப்பின் சுவாரஸ்யமும் இவற்றில் உள்ளன. முதல்கதையிலேயே இதைக் காணலாம். அமெரிக்காவில் குடியேறிய ஒரு சீனப் பெண்ணின் தந்தை ஒரு பெர்ஷியப் பெண்ணுடன் உரையாடுவதில் இக்கதை துவங்குகிறது. உடைந்த ஆங்கிலத்தில் அவர்கள் உரையாடிக்கொள்கின்றனர். கதையில் சீனத் தந்தையின் திருமணத்திற்கு வெளியேயான நட்பு அல்லது காதல் அதற்காக அவர் செய்த தியாகம் அது அவரது குடும்பத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை ஒருபக்கமும் அவரது குடிபெயர்ந்த மகள் தன் முதல் திருமணத்தை முறித்துக்கொண்டு இரண்டாவது ஆண் நண்பரிடம் உறவாடிக்கொண்டிருக்கிறாள். அவள் முதல் திருமணத்தை முறித்துக்கொண்டதற்கான காரணம் அவளுக்குச் சீன மொழி சரியாகத் தெரியாது என்பது. ‘மொழி’ இத்தொகுப்பின் பல கதைகளிலும் தலையாய பிரச்சனையாக வருகிறது குறிப்பிடத்தக்கது. தாய்மொழி சரியாகத் தெரியாமல் போவது தாய்ப்பண்பாட்டிலிருந்து ஒருவரை அறுபடச் செய்துவிடுகிறதை இக்கதையும் குறிப்பிடுகிறது. (ஆயிரமாண்டு பிரார்த்தனைகள் – A Thousand Years of Good Prayers – by Yiyun Li– சீன- அமெரிக்கர்?)

இரண்டாவதுகதை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச்செல்லும் ஒருவரின் கதை. நாட்டின் உட்பகுதியிலிருந்து துறைமுகத்தை நோக்கி தப்பியோடி வரும் ஒருவன் திக்கற்ற நிலையில் ஒரு அறிமுகமற்றவரின் (ஆப்ராஹீம்) உதவியைப் பெறுகிறான். கப்பலில் ஏற்றப்படும் பெட்டிகள் ஒன்றில் சுருண்டு அமர்ந்து அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும். எல்லாவற்றிற்கும் அந்த அறிமுகமற்றவர் துணைபுரிகிறார். ஒரு அகதியின் அடிப்படைத் தேவை உயிர்வாழ்ந்திருத்தல்தான் பிற மதிப்பீடுகள் அவனுக்குப் பெரும் சுமைகள் என்று இக்கதையின் முடிவை எடுத்துக்கொள்ளலாம். இது சொல்லப்பட்டிருக்கும் விதமும் சிறப்பாக உள்ளது, அதிலும் ஒரு கதை அல்லது கரு உள்ளது. அகதியாய் வந்த தன் தந்தையின் கதையை ஆசிரியையாயிருக்கும் மகள் கல்லூரியில் சொல்கிறாள். அதன் மூலம் அவள் பெயர் பெறுகிறாள். (ஒரு நேர்மையான வெளியேற்றம் – An Honest Exit – By Dinaw Mengestu – எத்தியோப்பியா)

மூன்றாவது கதை இத்தொகுப்பின் தலைப்புக் கதையாக வந்திருக்கவேண்டிய கதை என்று சொல்லலாம். மிக நேர்த்தியாக எழுதப்பட்ட கதை. மாய யதார்த்தக் கூறுமுறை மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டது சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்தது. மகனுக்கும் தாய்க்கும் இருக்கும் பண்பாட்டு இடைவெளி இதன் சாராம்சம். மொழி வேறுபாடு ஒரு சீனப் பெருஞ்சுவற்றை இவர்களிடையே கட்டிவிடுகிறது. தன் பண்பாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட கலையான ஆரிகமி மூலம் அவள் செய்யும் காகித விலங்குகள் அப்பெருஞ்சுவற்றைத் தாண்டிச் சென்றனவா என்பதை இக்கதை பேசுகிறது எனலாம். அந்தத் தாயின் பின்புலக் கதையும் அச்சிறுவனின் பண்பாட்டுக் குழப்பமும் நான் முன்பு சொன்ன கிழக்கு மேற்கின் பாதகமான அம்சங்களைத் தொட்டுச் சென்றிருக்கின்றன. வடிவ நேர்த்தியிலும், ஆழத்திலும் அழுத்தத்திலும் இது சிறந்த கதையாக வந்துள்ளது. (காகித மிருக சாலை – The Paper Menagerie – Ken Liu – சீனா)

நெமேஷியாவை ஒரு மனவியல் கதையாக வகைப்படுத்தலாம். தன் வீட்டை விட்டு உறவினர் வீட்டில் சென்று வளரும் ஒரு இளம்பெண்ணின் கதை. குடியேற்றத்தின் குறியீடாகவும் இதை எடுத்துக்கொள்ள முடியும், ஆனாலும் இதை வளர்பருவ மனவியல் கதையாக மட்டுமேகூட வாசிக்க முடியும். கதையில் வரும் பொம்மை மெக்சிக்க கத்தோலிக்கச் சடங்குகள் அவர்கள் குடும்பங்களை ஒருவர் ஒருவர் தாங்கும் தன்மைகள் என கதையில் பல சுவாரஸ்யமான சரடுகள் உள்ளன எனினும் ஒரு சைக்கோ திரில்லருக்கான தன்மையுடனும்  இது எழுதப்பட்டுள்ளது.

(நெமேஷியா Nemecia – KIRSTIN VALDEZ QUADE – மெக்சிக்கோ)

இத்தொகுப்பின் தலைப்புக்கதையான இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம் ஆப்ரிக்கப் பகடித்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு உறவுச்சிக்கலின் கதைதான். இக்கதையைப் படிக்கையில் ஆப்ரிக்க பண்பாட்டிற்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் ஒரு நெருக்கம் இருப்பதை உணர முடிகிறது. துக்க வீட்டில் நியாயம் பேசும் பெண்களின் ஆர்ப்பரிப்புக்கள் நினைவில் நிற்கின்றன, கூடவே ஏமாந்துபோன மனைவியின் ஏகாந்தமும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. (இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம் – Let’s Tell This Story Properly – Jennifer Nansubuga Makumbi – உகாண்டா)

அமைதிப்பிரதேசத்தின் முயல் மாய யதார்த்தத்தின் சாயலுடன் எழுதப்பட்ட கதை. ஒரு தீவிரவாதத்திட்டத்தைச் சுற்றி பின்னப்பட்ட கதை முட்டையிடும் முயல் பாத்திரம் அக்கதைக்கு மாய யதார்த்தத் தன்மையைத் தருகிறது. அரசியல் குழப்பச் சூழல்களின் சித்திரத்தையும் அதில் அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்பது கதையின் மையம் (அமைதிப்பிரதேசத்தின் முயல் – The Green Zone Rabbit –  Hassan Blasim – ஈராக்)

இஸ்லாமிலிருந்து கிறீத்துவத்திற்கு மதம் மாறி ஈரானிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த பெண் சலிப்புற்று தாய்லாந்துக்குச் செல்கிறாள். இன்னொரு ஒரு கெலைடஸ்கோப் கதை. பண்பாட்டு வேறுபாடுகளின் வழியே உறவைத் தொலைப்பதும் பெறுவதும் எனக் கதை செல்கிறது. (பிராவோவிலிருந்து ஒரு சவாரி – A Ride Out of Phrao – Dina Nayeri – ஈரான்)

டேனியேல் அலக்ரானின் ‘அரசன் எப்போதும் மக்களுக்கு மேல் நிற்பவன்’ என்கிற கதை கிராமத்த்திலிருந்து நகரத்திற்கு குடிபெயரும் ஒருவனின் கதை. தென்னமெரிக்க நாடுகளில் நிலவும் அரசியல் நிலையின்மை, குற்றச் சூழலைக் குறித்த கதை என்று கொள்ளலாம். கதை எழுதப்பட்டிருந்த விதம் சுவைகூட்டியது. நிகழ்வுகளை அடுக்கடுக்காக விவரிக்கும் கதை என்றாலும் ஒரு நிகழ்வின் விளைவை அடுத்த நிகழ்வாகச் சொல்லிச் செல்வது ஒரு சுவாரஸ்யமான பாணியாக இருந்தது.

(அரசன் எப்போதும் மக்களுக்கு மேல் நிற்பவன்- Daniel Alarcon – The king is always above the people – பெரு)

‘தந்தையர் நிலம்’ இத்தொகுப்பில் முக்கிய கதைகளில் இன்னொன்று. குடிபெயர்ந்தவர்களுக்கும் தாய்நாட்டிலிருப்பவர்களுக்குமிடையேயான உறவு அல்லது உறவின்மை குறித்த கதை இது. இவ்வுறவுகளில் இருக்கும் எதிர்பார்ப்புகள், பொய்மைகளை இக்கதை பேசுகிறது. குடும்பம், உறவுச்சிக்கல்கள், பண்பாட்டுச் சிக்கல்கள் என உடைந்த வண்ணக்கண்ணாடிச் சில்லுகளைக் கொண்ட இன்னொரு கலைடஸ்கோப், கூடவே வியட்னாம் அமெரிக்க வரலாற்றுப் பின்னணியும்.

(தந்தையர் நிலம் – Viet Than Nguyen – வியட்நாம்)

தொகுப்பின் கடைசிக் கதை மீண்டும் ஒரு மாய யதார்த்தக் கதை. பிரிவின் சோகத்தை ஒரு பெண் எதிர்கொள்ளும் கதை இது. அதை அவர் ஒரு அறிவியல் புனைவைப்போல சொல்ல முயலும் விதம் மெல்ல மெல்ல வாசகரையும் அத்தனிமையின் ஆழத்தை உணரச் செய்கிறது. 

(மறைந்துகொண்டிருக்கிறாய், நீ – Alexandra Kleeman – You, Disappearing– அமெரிக்கன்)

சரியான கதைகளை தேர்ந்தெடுத்த நரேனுக்குப் பாராட்டுக்கள். இதற்காக அவர் கிட்டத்தட்ட இருநூறு கதைகளைப் வாசித்திருப்பதாக அறிந்தேன். மொழிபெயர்க்கத் துவங்க்கும் எவருக்கும் இரு கவலைகள் இருக்கும். ஒன்று மூலப் பிரதியை சிதைத்துவிடக்கூடாதெனும் கவனம், மற்றொன்று தமிழுக்குத் துரோகம் செய்துவிடக்கூடாதெனும் பதட்டம். குறிப்பாகப் புனைவுகளை மொழிபெயர்க்கும்போது இவற்றின் அழுத்தம் அதிகம். எனவே சில இடங்களில் வாசிப்பதற்குச் சற்றுக் கடினமாகவே உள்ளது. மொழிபெயர்ப்பவர்க்கு மூலப்பிரதியும், கதையும் பரிச்சயமாயிருக்கும் என்பதால் அதை வேறொருவர் வாசித்து திருத்தங்கள் செய்வதே சிறப்பானதாயிருக்கும் என்பார் ஜெயமோகன். பல இடங்களில் நேரடியாக வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்ததைப்போலவும் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் நீண்ட வாக்கியங்களை எழுதுவது ஒரு தனித்திறனாகவும் கலையம்சம் கூடியதாகவும் கருதப்படுகிறது. தமிழில் அப்படிச் சொல்லிவிட முடியாது. கூடவே ஒருமைப் பன்மை வேறுபாடின்மை பல இடங்களில் உள்ளது. ‘அல்லது’ எனும் வார்த்தை ‘அல்ல’ என அச்சடிக்கப்பட்டுள்ளது. இவை அடுத்த பதிப்பில் மாற்றப்பட்டால் இன்னும் சிறப்பான மொழிபெயர்ப்பாக இருக்கும். ஆனால் கதைகளைப் புரிந்துகொள்ள, நுட்பங்களை உணர இவை பெரிய தடைகள் இல்லை என்றே சொல்வேன். 

இக்கதைகளில் ஒன்றிரண்டு தமிழ்ச்சூழலில் எழுதப்பட்டிருக்கும் கதைகளை ஒத்தவை என்று சொல்ல முடியும். தலைப்புக்கதையும், தந்தையர் நிலமும் அப்படி சொல்லத்தக்கவை. எல்லா கதைகளுமே நம் பண்பாட்டிலும், நாட்டிலும் காணக்கிடைக்கூடிய அனுபவங்களின் வெவ்வேறு வெளிப்பாடுகளே. மானுட அனுபவம் என்பது ஒன்றுக்கொன்று மிக வேறுபாடானதில்லை என்று இக்கதைகளை படிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். பன்னிரண்டு சுரங்களைக்கொண்டு உருவாக்கப்படும் எண்ணற்ற இசைத் துண்டுகளைப்போல மனித அனுபவங்கள் வெகு சில அடிப்படைகள் மீதே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. நான் முதற்பகுதியில் கிழக்கு மேற்கு எனப் பிரித்தாலும் ஒரு இசைத்துணுக்கில் சில சுரங்கள் முக்கியத்துவம் பெறுவதைப்போல வெவ்வேறு பண்பாடுகள் வெவ்வேறு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்று கொள்ளலாம். எனவே கிழக்குக்கும் மேற்கிற்கும் அத்தனை தூரமில்லை, பூமியின் எந்தப் புள்ளியும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் நடுவேதான் உள்ளது. 

புதிய களங்களில் புதிய வடிவங்களில் கதை சொல்ல விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதைகள் இவை. கிரேக்க உரோமைப் பாரம்பரியத்தின் வழியே மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட மேலை இலக்கியத்தில் இன்று பிற பண்பாடுகளின் கதைகள் குடிபெயர்ந்தவர்களால் சொல்லப்படுவதென்பது மிகப் புரட்சிகரமான ஒன்றேயாகும். அதுவும் இவ்வெழுத்தாளர்கள் அனைவரும் மதிக்கத்தக்க விருதுகளையும் கவனிப்பையும் பெற்றவர்கள், எனவே இவை தற்கால உலக இலக்கியத்தின் சிறந்த கதைகளில் பத்து எனக் கொள்ளலாம். தமிழ் வாசகர்கள் நரேனுக்கு நன்றிக்குரியவர்கள். அவர்கள் சார்பில் நரேனுக்கு நன்றி.

***



Tuesday, February 11, 2020

சிறுகதைகளின் நிலவெளி - முத்துகுமாரின் அறிமுகவுரை


https://www.jeyamohan.in/129439#.XkLNDFIza00



[நரேந்திரன் மொழியாக்கம் செய்த சிறுகதைத் தொகுதியான ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’ நூலுக்கான மதிப்புரை] 

மிகத் தெளிவான முன்னுரையுடன் இம் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு தொடங்குகிறது. இத்தொகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் பத்து ஆங்கிலச் சிறுகதைகளை மொழி பெயர்த்து தந்திருக்கிறார் அறிமுக எழுத்தாளரான நரேன். பெரும்பாலும் இந்த எழுத்தாளர்கள் அனைவருமே புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பல தலைமுறைகளாக அங்கு தொடர்ந்து வாழ்ந்த பிறகே தீரும் அடையாளச் சிக்கலில் ( Identity Crisis) மாட்டிக் கொண்டவர்கள் மற்றும் அச்சிக்கலை தங்களின் நுண்ணுணர்வு கொண்டு அவதானிக்க முற்படுபவர்கள். இது இயல்பாகவே அவர்களை எழுத வைக்கிறது என்று எண்ணுகிறேன். இக்கதைகள் அனைத்தும், இவ்வடையாளச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதவர்களையும் சேர்த்தே உலுக்கி விடுகின்றன.

பரந்த வாசிப்பும், அதைத் தொடர்ந்து செம்மைப் படுத்திக் கொள்ள உதவும் ஒரு நட்பு வட்டமும் அமையும் ஒருவரால் மட்டுமே இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க முடியும். நரேனை செம்மைபடுத்தியதில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் பங்கு மிகமுக்கியமானது.

அடையாளச் சிக்கலின் காரணங்கள்

இக்கதைகளில் வரும் முக்கியமான கதைமாந்தர்கள் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள். பொருளாதார மேம்பாட்டிற்காக புலம்பெயர்ந்தவர்களுக்கும் , அரசியல் சூழல்களால் புலம்பெயர்ந்த கதை மாந்தர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை அவர்களுக்கு ஏற்படும் அடையாளச் சிக்கல் தான் என்றாலும்,  அதற்கான காரணம் எங்கு பொதிந்திருக்கிறது என்பதுதான் இவ்விரு தரப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள சுவாரஸ்யமான வேற்றுமையாக உள்ளது. ஆயிரமாண்டு பிரார்த்தனைகள் என்ற கதையில் வரும் அமெரிக்காவில் வாழும் பொருளாதார சுதந்திரமும், தன்னிறைவும் கொண்ட சீனப் பெண்ணிற்கு அடையாளச்சிக்கல்களை ஏற்படுத்துவது சீனக் குடும்ப கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் அவளுடைய 75வயது தந்தை என்றால், ‘நேர்மையான வெளியேற்றம்’ கதையில் வரும் சூடான் நாட்டு அகதியின் மகனான ஆங்கிலப் பேராசியருக்கு அவருக்கான அங்கீகாரத்தை அளிக்க மறுக்கும் வெள்ளைச் சமூகத்தால் அடையாளச் சிக்கல் ஏற்படுகிறது. முதல் வகையினருக்கு தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கிட்டிய அங்கீகாரம், இரண்டாம் வகையினருக்கு கிட்டாதது தான் இவர்களுடைய அடையாளச் சிக்கலின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக  உள்ளது.
பெண்களின் அடையாளச் சிக்கல்

ஆனால், இக்கதைகளில் வரும் பெரும்பாலான பெண்கள் எந்தவிதமான அடையாளச் சிக்கல்களிலும் மாட்டிக் கொள்வதை தங்களுடைய கனிவாலும், சாதுர்யத்தாலும் தவிர்த்து விடுவது ஆச்சர்யமளிக்கிறது. ஆயிரமாண்டு பிரார்த்தனைகள்‘ கதையில் வரும் அமெரிக்காவில் வாழும் சீனப் பெண் ஒவ்வொரு உறவுக்கு பின்பும் பல நூறாண்டு பிரார்த்தனைகள் உண்டு என்ற வலுவான சீனக் கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் தன் தந்தையின் போதாமையைச் சுட்டிக் காட்டி தன்னுடைய ஏழு வருட மணவாழ்வை முறித்துக் கொண்டதை நியாயப்படுத்துகிறார்.

தன்னுடைய வீட்டின் குளியலறையில் இருக்கும்போதும் கூட தன்னை மற்றவர்கள் கண்கானிக்கிறார்கள்  என்ற உணர்வோடு கண்ணாடிச் சுவருக்குள் வாழவேண்டியிருந்த உகாண்டாவைச் சேர்ந்த ந்னாம் என்ற பெண் மான்செஸ்டரில் உள்ள தன் வீட்டினுள் முழு நிர்வாணமாக சுற்றிவரும் சுதந்திரத்தை அடையாளச் சிக்கல் என்ற பெயரில் பறிகொடுக்க விரும்பவில்லை என்பதை இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்‘ என்ற கதையில் காண முடிகிறது. தங்களுக்கு திடீரென முளைத்த சுதந்திரச் சிறகுகளை கத்தரித்துக் கொள்ள விரும்பாத புத்திசாலிகளாகவே இக்கதைகள் முழுவதும் பெண்கள் சித்தரிக்கப் படுகிறார்கள்.

விதிவிலக்காக, காகித மிருக சாலை என்ற கதையில் வரும் வரும் சீனப்பெண் இந்தச் சுதந்திரச் சிறகுகளை வெற்றுக் காகிதங்களாகப் பாவித்து, தனக்குத் தேவையற்ற ஒன்றென தவிர்த்து விடுகிறாள். தன்னுடைய சீனப் பண்பாட்டின் வழியாகவே தனக்கு நேரும் அடையாளச் சிக்கல்களை உறுதியான அமைதியோடு கடந்து போகிறாள். இப்படி இந்தத் கதைகளில் வரும் பெண்கள் அனைவரும் அடையாளச் சிக்கல்களை எதிர்கொண்டு வெல்லும் விதம் அவர்களுடைய Clarity of Toughtக்கு ஒரு சான்று.
மொழிபெயர்ப்பும் உணர்வுகளின் வெளிப்பாடும்

இந்த அடையாளச் சிக்கல்களை ஒட்டி இக்கதை மாந்தர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்களில் மனித உணர்வுகளின் நுட்பங்கள் மிகக் கூர்மையாக வெளிப்படுகின்றன. ஆயிரமாண்டு பிரார்த்தனைகள்‘ கதையில் வரும் சீனத் தந்தை அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்திருக்கும் தன் மகளின் மணமுறிவிற்கு அவள்தான் காரணம் என்பதை, அவள் தன் காதலனுடன் இரவில் தொலைபேசியில்மேற்கொள்ளும் அடாவடியான மற்றும் கட்டற்ற ஆங்கில உரையாடல்கள் வழியாக அறிந்து கொள்கிறார். ஆங்கிலம் அவ்வளவாக அறியாத அவருக்கு அவள் தன் காதலனுடன் என்ன பேசியிருக்க முடியும் என்பதை அவளுடைய பேச்சுத் தொனியை வைத்தே ஊகிப்பதை ‘அவளின் நிர்வாணத்தை கண்டுவிட்டதைப் போல உணர்ந்தார்’ என்ற வார்த்தைகள் நமக்கு நுட்பமாக கடத்துகின்றன. மிகச் சம்பிராதயமான உரையாடல்களைத் தவிர வேறு எந்த விதமான உரையாடலுக்கும் வாய்ப்பற்ற ஒரு சீனக் குடும்பப் பிண்ணணியால் தான் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி ஆங்கிலத்தில் மட்டுமே என்னால் எளிதாக உரையாட முடிகிறது என்று அவள் தன் தந்தையின் போதாமைகளைச் சுட்டிக் காட்டுவது, கெட்ட வார்த்தைகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் உடலுறவு, அதிலடையும் உச்சக்கட்டம் போன்ற வார்த்தைகளை நம்மால்  ‘ I felt Orgasmic during sex…’ என ஆங்கிலத்தில் எளிமையாக கடக்க முடிவதை உணர்த்துகிறது. இது நம்முடைய தாய்மொழியின் போதாமையா அல்லது அதை சிறைப்படுத்தியிருக்கும் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றின் போதாமைகளா என்பது விவாதத்திற்குரிய விஷயம்தான்.

இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்‘ என்ற கதையில் வரும் உகாண்டாவைச் சேர்ந்த ந்னாம் என்ற பெண், மான்செஸ்டரில் இருக்கும் தன் நாட்டைச் சேர்ந்த சக ஆண் புலம்பெயரியால் ஏமாற்றப்பட்டதை அவனின் மரணத்திற்குப் பிறகு தெரிந்து கொண்டு அவனின் நினைவுகளை அகற்றுவதை, தன் வீட்டிலுள்ள அவனுடைய உடமைகளை ( உள்ளாடைகள் முதற்கொண்டு) அகற்றுவதோடு ஒப்பிட்டு சித்தரிக்கும் விதம் மிகவும் வித்தியாசமாகவும் தத்ரூபமாகவும் உள்ளது. ஒவ்வொரு பத்திக்கும் கதை உகாண்டாவிற்கும், மான்செஸ்டருக்கும் இடையே ஊஞ்சலாடுகிறது. உகாண்டாவில் நடக்கும் இறுதிச் சடங்கில், கணவன் இறந்த பிறகு, மாதவிடாய்த் துணியை அணிந்து கொள்ள வலியுறுத்தப்படும் மனைவி, பின் அதைக் கணவன் பிணத்தின் குறிமேல் போர்த்த வேண்டும்.  இச்சடங்கை வெறுத்து மறுதலிக்கும் ந்னாம், மான்செஸ்டரில் உள்ள தன்னுடைய வீட்டில் அவனது உள்ளாடைகளுடன் கூடிய உடைமை பெட்டியை முற்றிலுமாக அகற்றிவிட்டு தன் ஆடைகளை களைந்து முழு நிர்வாணமாய் தன் வீட்டின் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறாள்.

ந்னாமின் கணவனாக இருந்தாலும் சரி, ‘ஆயிரமாண்டு பிரார்த்தனைகள்’ கதையில் வரும் சீனத்தந்தையாக இருந்தாலும் சரி அவர்களுடைய பண்பாடு சார்ந்த தரப்பையும் நியாயப்படுத்தும் சித்தரிப்புகள் இக்கதை ஆசிரியர்களின் நடுநிலைப் பார்வைக்கு ஒரு சான்று.

இக்கதைகளை வாசிக்கும்போது எழுந்த ஆச்சரியங்களில் முக்கியமான ஒன்று, ஒரு அறிமுக எழுத்தாளரால் எப்படி இவ்வளவு நுட்பமாக உணர்வுகளை சித்தரிக்க முடிகிறது என்பதுதான். ஆனால், சற்று நேரத்தில் இவை மொழிபெயர்ப்புக் கதைகள் என்றுணர்ந்ததும் இந்த ஆச்சரியம் குறைந்தாலும், மூலக் கதையோடு தன்னை ஆத்மார்த்தமாக பிணைத்துக் கொண்ட படைப்பூக்கம் கொண்ட படைப்பாளியால் மட்டுமே இவ்வளவு சிறப்பான மொழிபெயர்ப்பைத் தரமுடியும் என்ற நிதர்சனம் புரிகிறது. நரேனின் படைப்பூக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

என் முதல் பேட்டி

மொழிபெயர்ப்பு சிறுகதை வெளியீட்டை முன்னிட்டு ஜெயமோகன் தளத்தில் வெளியான என் முதல் பேட்டி:

https://www.jeyamohan.in/129059#.XkLMl1Iza00

சென்ற சில ஆண்டுகளாகவே விஷ்ணுபுரம் அமைப்பின் முதன்மைச் செயல்பாட்டாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நரேன். தொடர்ச்சியாக மொழியாக்கங்களை செய்து வருகிறார். அவருடைய முதல் மொழியாக்கச் சிறுகதைத் தொகுதி ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம் வெளிவந்துள்ளது
உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)
நான் வேலுர் மாவட்டத்தில் திருவலம் என்ற பாலாற்றாங்கரை கிராமத்தில் பிறந்தவன். அப்பா G.மணி அம்மா L.K. சசிகலா இருவரும் தபால் துறையில் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். தங்கை ம.ரேவதி மேலாண்மையில் முதுகலை முடித்து தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.  பள்ளிப் படிப்பை இராணிப்பேட்டையில் முடித்த பின், காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றேன். இக்காலங்களில்தான் வாசிப்பின் தொடர்ச்சியாக எழுதிப் பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினேன். நாடகங்கள் எழுதி இயக்கி மாநில அளவில் பரிசுகள் வென்றேன். இறுதியாண்டில் விகடன் மாணவ பத்திரிகையாளனாக தேர்வாகி காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டத்தின் வாழ்க்கைக் கதைகளை கட்டுரைகளாக விகடன் குழும இதழ்களில் எழுதினேன். கணினி பயன்பாட்டியலில் முதுகலை பட்டப் படிப்பிற்காக கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக்  கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் நான் கோவைக் குடிமகனாக மாறினேன். ஆறு வருட அமெரிக்க வாசத்திற்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறேன்.
இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்?
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எங்கள் வீட்டில் குமுதமும் ஆனந்த விகடனும் வாங்குவார்கள். அதில் ஜோக்குகளையும் துணுக்குகளையும் எழுத்து கூட்டி வாசிக்கத் தொடங்கிய எனக்கு அவற்றில் வரும் தொடர் கதைகளை என் பெற்றோர்கள் சிரத்தையாக வாராவாரம் கிழித்து இறுதியாக புத்தகமாக கோர்த்து வைத்தது ஆர்வமூட்டுவதாக இருந்தது. எங்கள் இல்லத் தயாரிப்பில் என் பெற்றோர்கள் பதிப்பித்த நாவல்கள்தான் நான் வாசிக்கத் தொடங்கியதின் ஆரம்பப் புள்ளி. சுஜாதா தனது கட்டுரைகளில் குறிப்பிடும் எழுத்தாளர்கள் எங்கள் வீட்டு சேகரிப்பில் இல்லாதபோது நான் இராணிப்பேட்டை நூலகரை அணுகுவேன். அப்படித்தான் என் பன்னிரெண்டாம் வகுப்பு விடுப்பில் விஷ்ணுபுரத்தை அவரிடம் கேட்டு நின்றேன். எப்படி தருவித்துக் கொடுத்தார் என்று எனக்கு இப்போது பிரமிப்பாக இருக்கிறது. பொருள் ஒன்றும் கொள்ளாமல் எழுத்து கூட்டி வாசித்து முடித்தேன். ஜெயமோகனை மூடி வைத்து அதுவரை வந்திருந்த அத்தனை இந்திரா பார்த்தசாரதி நாவல்களையும் வாசித்தேன். பிரபஞ்சன், பாலகுமாரன், எஸ்.ரா., சாரு என்று தொடர்ந்த நான் இரண்டு வருடங்களில் ஜெயமோகனிடம் வந்து மீண்டும் தஞ்சமடைந்தேன். அன்றிலிருந்து அவரின் வலைப்பூ, வலைத்தளம், மின்னஞ்சல் குழு என்று அவரை மானசீகமாக என் ஆசானாக ஏற்று அவரை மெளனமாக பின் தொடர்ந்தேன். சரியாக ஈரேழு வருடங்கள் கழித்து முதன்முறையாக அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன்.
இவற்றுக்கிடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நாஞ்சில் நாடன் அவர்களின்  சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கிய நான் ஜெயமோகன் அவரை முன்வைத்த பின் தீவிரமாக பற்றிக்கொண்டேன். அவரின் நாவல்களும் சிறுகதைகளும் எனக்குள் வேறு ஒருகோணத்தில் திறக்கத் தொடங்கின. கோவையில் அவரை ஏதேச்சையாக சந்தித்துப் பேசியதும் அமெரிக்காவில் அவருடன் மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்ததும் என்னை அவருக்கு மிக அணுக்கமானவராக உணரச் செய்தது.
இலக்கியத்தை நோக்கும் எனது பார்வையை திருத்தி வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் என் ஆர்வத்தை இறுக்கிப் பூட்டிய வண்டியைப் போல செலுத்தும் நாஞ்சிலும் ஜெயமோகனுமே எனக்கு ஆதர்சங்கள்.
இந்தத் தொகுப்பின் கதைகளை  மொழியாக்கம் செய்த அனுபவம் மற்றும் சவால்கள் என்ன? 
முதன்முறையாக இத்தனை நூறு வார்த்தைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியபோது எனக்கு அத்தனையுமே சவாலாக இருந்தன. வார்த்தை தேர்வில் இருந்து வாக்கிய நீளத்தை தக்க வைப்பது வரை. உதாரணமாக ஒரு நீண்ட வாக்கியத்தில் அலைக்கழியும் ஒரு பாத்திரத்தின் உணர்வுகளை ஆசிரியர் தொகுத்திருப்பார். முதல் வார்த்தையில் “ஆம்” என்று தொடங்கி அவ்வரியின் இறுதியில் “இல்லை” என்றாகி நின்றிருக்கும். அவ்வாக்கியம் ஒரு உணர்வின் எழுத்துப் பிரதி. ஓடும் ஆற்றின் அடியில்தானே என்று ஒரு கூழாங்கல்லை எடுத்தாலும் ஆறு தடம் மாறுவதைப் போன்ற பிரமையில் தவித்திருக்கிறேன். போகப் போக ஆசிரியரும் பாத்திரமும் அவர்கள் எழும்பி நின்றிருக்கும் வார்த்தைகளும் என் மொழியுமேகூட எனக்கு புலப்படத் தொடங்கின.
சவாலுடன் கூடிய சுவாரசியமாக அமைந்தது இக்கதைகளின் வரலாற்றுப் புலங்களை அறிந்துகொண்டது. மற்றும் வெவ்வேறு மொழிகளில் உள்ள பெயர்களையும் உரையாடல்களையும் தமிழில் அப்படியே மொழி மாற்றி எழுதும்போது அதன் உச்சரிப்புகளை தேடி தெரிந்து கொண்டது.
எந்த அடிப்படையில்  மொழியாக்கம் செய்யவும் தொகுப்பாக்கவும் நீங்கள் கதைகளை  தேர்வு செய்கிறீர்கள்?
சமகால உலகச் சிறுகதைகளை வாசிக்கும் ஆர்வத்தில்தான் ஆங்கில இலக்கிய மின் இதழ்களில் வரும் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கினேன். மொழிபெயர்க்கும் கலையை பயிலும் முயற்சியாக வாசித்ததில் பிடித்த கதைகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். அது கிட்டத்தட்ட சுயமாக ஒரு சிறுகதை எழுதும் அனுபவத்தை ஒத்திருப்பதைப் போன்ற உணர்வு எனக்கு பெரும் திறப்பாக அமைந்தது. கதையின் மொழி பிரதிபலிக்கும் அவ்வாசிரியனின் உணர்வை நேரடியாக புரிந்துகொள்ள முடிந்தது. புதிதாய் ஒன்றை படைக்கும் அகமகிழ்வை தந்ததால் தொடர்ந்து நான் வாசித்த சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அப்படி சமகால ஆங்கில பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுக்கும் அளவிற்கு மொழிபெயர்த்தேன். ஆங்கில குறுநாவல், சிறுகதை தளங்களில் தற்போது பெண் எழுத்தாளர்களின் பங்கு மிகப் பெரியது. பிற்பாடு, அதிகம் விவாதிக்கப்பட்ட பரிசு பெற்ற சிறுகதைகளை கவனிக்கத் தொடங்கியபோது அவை பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்களின் சிறுகதைகளாகவோ அல்ல புலம் பெயர்தலைப் பற்றிய சிறுகதைகளாகவோ இருந்தன. தொடர்ந்து அச்சிறுகதைகளை மொழிபெயர்த்து இப்போது அது தொகுப்பாக வரவிருக்கிறது.
என் வாசிப்பில் சிறந்ததென உணரும் சிறுகதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கி பின் அதன் மைய ஓட்டத்தை ஒத்திருக்கும் சிறுகதைகளை தேடத் தொடங்கிவிடுகிறேன். சிறந்ததெனத் தோன்றும் பட்சத்தில் அவற்றை மொழிபெயர்த்து அக்கதைகளை சற்று நெருங்கி அணுக முற்படுகிறேன். கீழைத்தேசங்களின் கதைகள், மேற்கத்திய வாசகர்களின் பொரித்த அவலாக மாறாமல் நேர்மையாக சொல்லப்படும் கதைகள், என் விருப்பத்திற்குரியவனாக இருக்கின்றன.
இந்த நூல் வழி நீங்கள் பெற்றதென்ன? இந்த நூலின் சமகால முக்கியத்துவம் என்ன?
பரவலாக அறியப்படும் சமகால வரலாற்று நிகழ்வுகளில்கூட இன்னும் கண்டறியப்படாத பதுங்கு சுரங்கங்களைப் போல பல்வேறு சிதைவுகளும் அதன் பிறகான கதைகளும் இருப்பது அறிய வரும்போது வரலாறு எனக் கொள்வது எதை என்ற கேள்வியை எழுப்பியது.  ஆப்பிரிக்க நாடுகளின் கதைகள், பண்பாடு, விழுமியங்கள் என்று நமக்கு சொல்லப்பட்டிருந்தவை அங்கிருந்து எழுந்து வந்து மேற்குலகின் மொழி பயின்ற ஒருவரின் சொற்களாக வெளிவரும்போது அவை திருத்தப்பட்டு  நேர்மையாக திருப்பிச் சொல்லப்படுகிறன.  அங்கும் இங்குமென தொடர்ந்து நமக்கு சொல்லப்படும் கதைகளும் நாம் தேடி அறிந்துகொள்ளும் வரலாறும் இரண்டு பக்கமிருந்தும் நம்மை இழுத்து ஒரு நிலையில் நிறுத்துகின்றன. வெறும் தகவல்களாலும் செய்திகளாலும் நாம் அவற்றை புரிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு புனைவாசிரியனின் உள்ளுணர்வை புரிந்துகொள்வது முக்கியம் என்று படுகிறது.
உலகெங்கிலும் இலக்கியம், தேசம் அழிக்கும் போர்களில் தொடங்கி ஒரு கூரையின் கீழ் உணர்வுகள் மிதிபடும் உறவுகள் வரை, வன்முறைக்கு எதிராக உரக்க மன்றாடுகிறது. இந்த உயிர் விதை பிளந்து வருவது எங்கிருந்தோ வரும் ஒரு பூட்ஸ் அடியில் நசுக்கப்படுவதற்கல்ல.  இக்கதைகள் அனைத்தும் வன்முறையின் ஒரு துளி உருவாக்கும் சிதைவுகளைப் பற்றி பேசுகின்றன. அடிப்படைவாதமும் அதன் ஆதரவாக எழும் ஒற்றைத் தன்மையிலான மூர்க்கமும் அழிவுகளை நோக்கியே இழுத்துச் செல்லும் என்று சொல்கின்றன. உலமயமாக்கல் நமக்கு ஈட்டித் தந்த “உலகக் குடிமகன்’ என்ற கருத்து நிதர்சனமானதுதானா? முப்பதாண்டுகளில் நாடுகள் முன்னெப்போதையும்விட எல்லைகளை மூடி, தேசிய உணர்வுகளைப் பெருக்கி, அன்னியன் எவன் என்பதை வரையறுக்கத் தொடங்கியிருக்கும் இக்காலத்தில் இக்கதைகள் நமக்கு பிற்காலத்தில் எஞ்சியிருக்கப்போவது என்ன என்று காட்டுகின்றன.
அடுத்து என்ன?
வியட் தன் குவென் எழுதிய புலிட்ஸர் பரிசு பெற்ற நாவலை மொழி பெயர்க்கும் எண்ணத்தில் இருக்கிறேன். வியட்னாம் போரின் பின் நாட்களை அடிப்படையாக வைத்து ஒரு உளவாளியின் கதை இது. சொந்தமாக சில சிறுகதைள் எழுதிப் பார்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன்.

இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் - முன்னுரை

என் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் "இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்" சிறுகதை தொகுப்பிலுள்ள முன்னுரை. பதிப்பாளர் ஜீவ கரிகாலனுக்கும் யாவரும் பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்.



தற்கால ஆங்கில இலக்கியத்தில் சிறுகதைகளின் இடம் அநேகமாக இல்லாமல் ஆகியிருக்கும் ஒரு சூழலில் 2000க்குப் பிறகு ஒரு சிறு அலையைப் போல புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் மேலெழத் தொடங்கியுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஆங்கிலச் சிறுகதைகளின் பட்டியலை நோக்குங்கால் பெருவாரியான சிறந்த கதைகள், விருது பெற்றவைகள் புலம் பெயர்ந்தவர்களின் கதைகளாகவே இருக்கின்றன. இவர்கள் அகதிகளாகவோ அல்லது தொழில் நிமித்தமாகவோ 80-களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் குடிபெயர்ந்தவர்களின் முதல் தலைமுறை மக்கள்.
இவர்கள் மேற்கத்திய குடிமகன்களாகவே வளர்ந்தாலும் தன் வேரைக் கண்டடையும் தேடல் இவர்களுக்குள் இருக்கிறது. இரண்டு கலாசாரங்களுக்கு இடையிலான மோதல் இவர்களுக்குள் கேள்விகளை எழுப்புகின்றன. குடிபெயர்ந்தவர்கள் தன் இருப்பை நிலைநாட்டும் போராட்டத்தில் தன் பூர்வீகத்தை மொத்தமாக மறந்து மேற்கத்திய வாழ்வில் ஒன்றிணையும் முனைப்பில் இருக்க அடுத்த தலைமுறையோ தராசுத் தட்டின் நடுமுள் போல இரு கலாசாரங்களையும் அளந்து பார்க்க முற்படுகிறார்கள். வெற்றிபெற்றவர்களின் வெற்றிகளை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஏற்கனவே விவாதிக்கப்படும் உறவுச் சிக்கல்கள் இவர்கள் பார்வையில் வேறொரு பரிணாமம் பெறுகின்றன. அப்படியான சில புலம்பெயரிகளையும் அவர்களின் சிறுகதைகளையும் தமிழ் வாசகப் பரப்பிற்கு அறிமுகப்படுத்துவதே இத்தொகுப்பின் நோக்கம்.
கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் கொணர்ந்த தனிமனித சுதந்திரமும் உலகக் குடிமகன் என்ற கருத்துருவாக்கமும் அதன் எதிர்வினையாகப் பெருகி வரும் தேச இன உணர்வுகளும் வளர்ந்துவரும் நாடுகளில் சிக்கலான வாழ்வியல் சூழல்களை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் பன்னெடுங்காலமாக போர்களையும் மரணங்களையும் தோற்றுவித்து வரும் நிலங்களிலிருந்து மக்கள் வெளியேறி வாழும் வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. புது நிலங்களில் தங்கள் வாழ்வு வெறும் பிழைத்திருப்பதிலிருந்து ஒரு படியேனும் மேலோங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
அடுத்த நிலையில் புலம்பெயர்தல், ஒரு ஆறுதலான அல்லது ஒரு வசதியான சூழ்நிலையில் அது அமைந்திருந்தாலும் அப்புது மண்ணின் மனிதர்களாக மாறுவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும், இழக்கும் உறவுகளும் மொழியும் பண்பாடும் எதிலிருந்து மீண்டும் முளைக்கும்? இந்த விவாதங்களை எழுப்புவதினாலேயே இச்சிறுகதைகள் உலகத்தன்மையுடன் அனைவருக்குமான கதைகளாக மாறுகின்றன.
தற்கால உலகச் சிறுகதையாசிரியர்களை தேடி வாசிக்கையில், அவர்கள் பெரும்பாலும் புலம்பெயரிகளாக இருப்பதையும் அவர்களின் கதைகளின் மையம் இடமாற்றங்களின் வழியே மனிதர்கள் தங்களுக்குள் கண்டடையும் வாழ்வின் அர்த்தங்களையும் அபத்தங்களையும் அறிந்துகொள்ள முயல்வனவாக இருப்பதையும் அறியமுடிகிறது. தமிழ்ச் சூழலில் அறியப்படாத இவ்விளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது, தற்போது உலகமெங்கும் நிலவும் அகதிகளின் மீதான விவாதங்களினிடையில் அவசியமாகிறது. மேற்கு உலகிற்கு அணுக்கமான குரல்களாக இல்லாமல் கீழைத்தேசங்களிலிருந்தும் ஆயுத உரமேந்திய யுத்த நிலங்களிலிருந்தும் உரத்த உண்மையான குரல்களில் இவை வெளிவருகின்றன. இவர்களின் மூலமாக புலம்பெயரிகளின் கதைகள் இப்போது சரியாக சொல்லப்படுகின்றன.
என் இலக்கிய வாசிப்பிற்கும் ரசனைக்கும் செழுமை சேர்த்ததில் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்திற்கும் கோவை சொல்முகம் வாசகர் குழும நண்பர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. கதைகள் தேர்விலும் தட்டச்சுவதிலும் உடனிருந்து உதவிய தோழி கனிமொழிக்கும் துணையாயிருந்த தங்கை ரேவதிக்கும் நன்றிகள். இம்மொழிபெயர்ப்பை தொடர்ந்து செய்திட எனக்கு தூண்டுதலாக இருந்த நண்பர் செல்வேந்திரனுக்கு தனிப்பட்ட நன்றிகள். இத்தொகுப்பை வெளிக்கொண்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கும் திரு. ஜீவகரிகாலனுக்கும் உளமார்ந்த நன்றிகள். இருபது வருடங்களாக ஆத்மார்த்தமாகவும் நேரிடையாகவும் வாசிப்பிலும் வாழ்விலும் குருவென்றான என் ஆசான் ஜெயமோகனுக்கு என் வணக்கங்கள்.