Saturday, November 14, 2020

ஒரு வலசைப் பறவை - ஜப்பானிய சிறுகதை

 கனலி மின்னிதழின் ஜப்பானிய சிறப்பிதழுக்காக தமிழாக்கம் செய்யப்பட்ட சிறுகதை

http://kanali.in/oru-valasai-paravai/


Osamu Dazai - ஓஸாமு தாசாய்


இருபதாம் நூற்றாண்டின் நவீன ஜப்பானிய புனைவெழுத்துகளின் முன்னோடியாக கருதப்படுபவர். 38 ஆண்டு காலமே வாழ்ந்த தன்னுடைய குறுகிய வாழ்வில் தன் படைப்புகளுக்கு இணையாகவே தன்னைச் சுற்றிச் சுழன்ற துயரங்களுக்காக இன்றும் நினைவுகூறப்படுபவர். ஷுஜி ட்சுஷீமா (Shuji Tsushima) என்பது அவர் இயற்பெயர். செல்வச் செழிப்பான பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் தாயின் மோசமான உடல் நிலையினாலும் தந்தையின் பரபரப்பான வேலைச் சூழலினாலும் பெரும்பாலும் தனித்தே வளர்ந்தார். தன் படைபாற்றலை சிறு வயதிலிருந்தே வெளிப்படுத்தி வந்த அவர் பெரும் அலைக்கழிப்பிற்கும் கொந்தளிப்பிற்கும்  உள்ளாகும் மனதுடையவராக இருந்தார். அவருடைய கதைகள் பெரும்பாலும் சுயசரிதைத் தன்மை கொண்டிருப்பதினால் ஒரு வாசகன் அவரின் துள்ளித் துடிக்கும் மனதையும், அலைபாயும் அவரின் காதல் வேட்கையையும் உணர முடியும். தன் ஆதர்ச எழுத்தாளர் தற்கொலை செய்து கொண்டதினால் பெரும் உளைச்சலுக்கு உள்ளான தாசாய், அதன் பின் தன் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் தற்கொலைக்கு முயன்று பார்த்தார். போர்ச் சூழலால் பெரும் சிதைவிற்கு உள்ளானது அவரது வாழ்வு. பெரும் குடிகாரராக மாறிப் போனார், மனநல விடுதிகளில் தங்க வைக்கப்பட்டார். போருக்குப் பிந்தைய வாழ்வை தன் கதைகளில் மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்தவர். இறுதியாக தன் துணைவியாருடன் சேர்ந்து மேற்கொண்ட தற்கொலை முயற்சியில் அவர் வெற்றியடைந்ததிற்கு முன்னால் எழுதிய “No Longer Human” என்ற நாவல்தான் அவரின் முதன்மையான நாவலாகக் கருதப்படுகிறது.


மதுபோதையில் வெளிப்படும் அர்த்தமற்ற, வெட்டி வெட்டிச் செல்லும் உரையாடல்களின் வழியாக வாழ்வின் அபத்தங்களும் மனித மனதின் பாவனைகளும் இவரது கதைகளில் சிறப்பாக வெளிப்படுகின்றன. தொடர்பற்ற உரையாடல்களின் மூலம் மனதின் இடுக்குகளில் மறைந்திருக்கும் கசடுகளை உணரச்செய்துவிடுவது இவரது தனித்துவம். ஒவ்வொரு கதையிலும் சிறிதளவேனும் தாசாய் வெளிப்படுவதால் வாசித்து முடித்ததும் ஆசிரியரின் மீதான பரிவு கருமேகமென வந்து கவ்விக் கொள்கிறது.












ஒரு வலசைப் பறவை


    ஓஸாமு தாசாய்


    தமிழில் - நரேன்



சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை” 

  • தாந்தே அள்கியரி.



பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில் முண்டியடித்தும் முட்டித் தள்ளியபடியும் தங்கள் வீடுகளை நோக்கி சிறகுகளை விரித்து வழிந்து வெளியேறிக் கொண்டிருந்தன


அட... அது மிஸ்டர்.யமானா தானே? இல்லையா?”


 அக்குரல், மெலிந்து நெடிந்து நின்ற அருவருப்பான ஒருவனுக்குரியது. தொப்பியணியாமல் தலைவிரிக்கோலத்துடன் இறுக்கமான மேல்சட்டை அணிந்திருந்தான்.


ஆமாம்…,” என்று பதிலளித்தார் நடுத்தர வயதான நவநாகரிகமிக்க மிஸ்டர்.யமானா. அவ்விளைஞன் தலைப்படும் திசையை சற்றும் பொருட்படுத்தாது அவர் யுராகுசோவை நோக்கி தன் நடையைத் தொடர்ந்தார்.


நீ யார்?”


நானா?” அந்த இளைஞன் தன் பின் கழுத்து மயிரை தூக்கித் தள்ளியபடி ஒரு சிறு எக்களிப்பை உதிர்த்தான். “ஒரு கலை ஆர்வலன் என்று வைத்துக் கொள்ளுங்களேன், ஏன்?”


சரி, உனக்கு என்ன வேண்டும்?”


நான் உங்கள் விசிறி, உங்கள் இசை விமர்சனங்களை விரும்புபவன். சமீபமாக நீங்கள் எதுவும் எழுதி நான் பார்க்கவில்லையே.”


அப்படியா.. ஆனால், உண்மையில்….. நான் எழுதியிருக்கிறேன்.”


ஐயையோ!!! இரவின் போர்வைக்குள் அந்த இளைஞன் தன் உதடுகளை சுழித்துக் கொண்டான். டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தின் மாணவன் அவன். ஆனால் அவன் அதன் சீருடையிலுமில்லை அதைக் குறிக்கும் தொப்பியும் அணிந்திருக்கவில்லை; வெறும் இறுக்கமான மேல்கோட்டும் அதற்குப் பொருத்தமாக உள்அங்கியும் காற்சட்டையும். அவன் தன் பெற்றோரிடமிருந்து எந்த பண உதவியும் பெறுவதில்லை, அதனால் பிழைக்கும் வழி தேடி ஒரு முறை ஷூக்களுக்கு பாலீஷ் போடும் வேலையை செய்திருக்கிறான், பிறிதொரு முறை லாட்டரி சீட்டுகளை விற்றிருக்கிறான். ஆனால் இந்நாட்களில் அவன் தன் வருமானத்தை தேற்றிக் கொள்வது இவ்வாறாகத்தான் : அதிகாரப்பூர்வமாக, ஒரு பதிப்பகத்தில் பிழை திருத்துனரின் உதவியாளன். அதோடு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிழலுலக சமாச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறான். அதனால், அவன் சூழ்நிலையை வைத்து நீங்கள் ஊகிக்கும் அளவை விடவும் அதிகமான பணம் வைத்திருக்கிறான்.


மொஸார்ட்டினுடையது மட்டும்தான் உண்மையான இசை என்று அழைக்கத்தகுந்தது, அப்படித்தானே?”


மண்ணைக் கவ்விய முகப்புகழ்ச்சிப் பேச்சுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அந்த இளைஞன் மொஸார்ட்டை விதந்தோதும் மிஸ்டர்.யமானாவின் உணர்ச்சிக் கொப்புளிக்கும் கட்டுரையை நினைவுகூர்ந்தான். பின்னர் உரையாடலை மீண்டும் தொடங்க, கவனமாக மெல்ல நயம்பட அக்கட்டுரையை தனக்கு சாதகமாக்கி ஒரு கருத்தை முணுமுணுத்தான்.


அது உண்மையில்லை…”


அருமை! உரையாடும் உறுதியை திரும்பப் பெற்றுவிட்டான். அவனுடைய கன்னங்கள் மேல்சட்டையின் காலருக்கு உள்ளே தற்போது இறுக்கம் குறைந்து தளர்ந்துவிட்டன என்று என்னால் பணம் வைத்துகூட பந்தயம் கட்ட முடியும்.


திடங்கொண்ட ஊக்கத்தில் அவன் மேலும் தொடர்ந்தான்


நவீன இசையின் சீரழிவு பீத்தோவனின் காலத்தில்தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். மனிதனின் வாழ்க்கையோடு இசை நேருக்கு நேர் மோதிக்கொள்ள வேண்டும் என்பது முறையற்ற சிந்தனை. இசை என்பது நம் வாழ்விற்கு அரும்பெரும் துணையாக இருக்க வேண்டும். இன்றிரவு மொஸார்ட்டை கேட்ட பிறகு, இசையென்பது உண்மையில் என்ன என்று எனக்குள் துலங்கத் தொடங்கியது….”


இதுதான் என்னுடைய ரயில் நிலையம்


அது யுராகுசோ ரயில் நிலையம்.


.. அப்படியா. என்னை மன்னிக்கவேண்டும். இன்றிரவு உங்களை சந்தித்து பேச முடிந்ததில் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி.”


இரண்டு கைகளையும் தன் காற்சட்டை பாக்கெட்டுக்குள் நுழைத்திருந்த அந்த இளைஞன் லேசாக குனிந்து வணங்கி மிஸ்டர்.யமானாவிடமிருந்து விடை பெற்று கின்ஸாவை நோக்கி வலப்புறமாக திரும்பினான்


பீதோவன் பீதோவன்தான், மொஸார்ட் மொஸார்ட்தான், அதைப் பற்றி சொல்வதற்கு வேறொன்றுமில்லை. மிஸ்டர்.யமானா மீசை வளர்க்கிறார், அதற்கான காரணம் எல்லா புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது. ஒருவேளை அவர் நுணுகிக் காணும் கண்கள் வாய்க்கப் பெறாதவராக இருக்கலாம். ஆமாம், நுண்ணோக்கு இல்லை அதனால் அவருக்கு அருவருப்பு என்று எதுவும் இல்லை. ஒருவேளை நானும் அவரைப் போன்றவன்தானோ. ரசனையற்றவன்! ஆனால் மீசைஅது பற்களுக்கு உகந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ..பொறுங்கள், ஒருவரின் சதையைக் கடிக்கத்தானா அது? சேச்சேஎனக்கு பேரரசரின் மீசை நினைவிற்கு வருகிறது, அவ்வளவு நேர்த்தியானது - எப்படியெல்லாம் தன்னை மேற்கத்திய பாணியில் அலங்கரித்துக் கொள்வார் அவர். ஆனாலும், மரபான கட்டைச் செருப்பையே அணிந்திருப்பார். , மிகவும் பரிதாபம்! உண்மையில், மேட்டிமைப் பொருந்திய பேரரசனின் உளவியல் என்னால் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம். என்னைக் கேட்டால் ஒருவரின் மீசை அதை பூண்டிருப்பவரோடு சற்றே சண்டையிடும் ஆர்வத்தில் உரசிக்கொண்டிருப்பதைப்  போலிருக்கிறது என்று சொல்வேன். உறக்கத்தில் அவரின் முகம் ஒரு பிச்சைக்காரனுடையதைப் போன்று இருந்திருக்கக்கூடும். நானும் ஒன்று வளர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். அது எனக்கு இதைப்பற்றிய ஏதாவது புரிதலைக் கொடுக்கலாம். ஒரு நம்பிக்கைதான். மார்க்ஸின் மீசையை எவ்வார்த்தை கொண்டு விவரித்துவிட முடியும்? அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது? சோள நாறுகளை அவரது மூக்கின் கீழே சொருகி வைத்தது போலிருக்கிறது. விளங்கிக்கொள்ள முடியாத மர்மம். டெஸ்கார்ட்டேவினுடையது மாட்டின் வாயில் வழியும் எச்சிலைப் போலிருக்கிறது - ஐயுறுவாதத்தின் தனிக் குறியீடோ அது, ஒருவேளை? பிறகு, அவரது பெயர் என்ன? யோசித்துக் கொண்டிருக்கிறேன்அட, ஆமாம்.., மிஸ்.டேனாபி, நிச்சயமாகத் தெரியும். நாற்பது வயதானவர். இந்த வயதில் ஒரு பெண்மணியாயிருந்தும் கூட செலவு செய்வதற்கு உபரி பணம் வைத்திருக்கிறார். அவர் மிகச் சிறிய உருவத்தில் பார்ப்பதற்கு இளமையாக இருப்பவர் என்பதுகூட ஒருவகையில் உதவுகிறது.  


மிஸ்.டேனாபி.”


நான் அவரது தோளைத் தட்டினேன். ஆஹ்ஹ்! பச்சை வட்டத்தொப்பி! தோற்றக்கேடு! கருத்தியலாளர்கள் அழகுணர்வை புறக்கணிக்கிறார்களா? ஆனால் உங்கள் வயது.. உங்கள் வயதையாவது சற்று நினைவில் கொள்ளுங்கள்!


யாரு?”


.. கிட்டப்பார்வை வேறயா? இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?


கிரேயான் பதிப்பகத்தில் உதவியாளர்….”


நான் என் பெயரையும் சொல்லவேண்டுமா? சைனஸ் வந்து காது கோளாறு ஆகிவிடவில்லை என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?


.. மன்னிக்கவும், மிஸ்டர்.யனகாவா.”


அது என்னுடைய உண்மையான பெயரில்லை, ஆனால் அதை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை.


ஆமாம், சென்ற முறை நீங்கள் உதவியதற்காக நன்றி சொல்ல விரும்பினேன்.”


பரவாயில்லை


எங்கேயிருந்து வருகிறீர்கள்?”


நீங்கள்?”


ஏன் இவ்வளவு அழுத்தம்?


இசை நிகழ்ச்சி


அப்படியாசரி!”


இப்போது உங்கள் கவசங்களை உங்களால் தளர்த்திக் கொள்ள முடியுமா? இதற்காகத்தான் நான் இசை நிகழ்வுகளுக்கோ அல்லது இது போல வேறெதற்காவதோ போய்வர வேண்டியிருக்கிறது


நான் என்னுடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன், சுரங்க ரயில் பிடிக்க வேண்டும். செய்தித்தாள் நிலையத்தில் எனக்குக் கொஞ்சம் வேலை இருந்தது


கொஞ்சம் வேலைஎன்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? பொய் சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் ஒரு ஆணுடன் இருந்துவிட்டு வருகிறீர்கள், இல்லையா? பத்திரிக்கை? என்னே ஒரு பொதுவுடைமைப் பெண்ணின் வெற்றாராவாரம்.


ஏதும் உரை நிகழ்த்தினீர்களா?”


பாருங்கள்! ஒரு சிறு வெட்கம் கூட தோன்றவில்லை அம்முகத்தில்.


இல்லை.. தொழிற்சங்கம் தொடர்பாக…”


தொழிற்சங்கமா? பொதுப் புத்தியின் அகராதி அதை இவ்வாறு விளக்குகிறது - ஒன்றுவிடாமல் எல்லா வழிகளையும் முயற்சித்துப் பார்ப்பது, கடைசியில் ஒருவரை சோர்வுறச்செய்வதுகண்ணீரில் கிடத்திவிடுவது; பரபரத்திருத்தல் என்பது அதன் மற்றொரு பெயர்.


என் கண்களும் கண்ணீரைக் கண்டறியாதவையல்ல.


ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இருக்குமே


ஆமாம்நீங்கள் சொல்வது உண்மைதான்..”


நான் சரியான இடத்தைத் தொட்டுவிட்டேன் என்று எனக்குத் தெரியும்.


ஆனால் மக்கள் புரட்சிக்கு இதைவிட ஒரு சரியான தருணம் இதுவரை அமைந்ததில்லைதானே?”


உண்மைதான். இப்போதுதான் அதற்கான வாய்ப்பு.”


இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை, சரிதானே?”


ஆனால் நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன், அது எக்காலமானாலும்


என் முகஸ்துதி பேச்சுகள் இவரிடமும் தோற்றுவிட்டனவா? - இவரை எது கனிய வைக்கும் என்று வியந்து  யோசிக்கிறேன்.


ஒரு கோப்பை தேநீர் அருந்திக்கொண்டே பேசலாமே?”


விட்டுவிடாதே, எப்படியாவது அவரிடமிருந்து ஒரு தேநீரைத் தேற்றிவிடு.


நிச்சயமாக, ஆனால் இந்த அழைப்பை பிறகொரு நாளுக்கென வைத்துக் கொள்கிறேனே, இன்று வேண்டாம்.”


என்ன ஒரு காரியக்கார பெண் இவள்! இவள் நிச்சயமாக நிதி கையாள்வதில் விவேகமுற்றவளாக  இருப்பாள்; உன்னைப் போன்ற ஒரு பெண்ணுடன் வாழும் ஆசி பெற்ற மனிதன் பாக்கியவானாகத்தான் இருப்பான்; அதோடு குழைந்து போகும் பண்புச் சாயலும் வந்து சேர்ந்துவிடும்.


நாற்பது வயது பெண்மணி நாற்பது வயது பெண்மணிதான். முப்பது வயது பெண் முப்பது வயதுப் பெண்தான். பதினாறோ பதினேழோ வயதான பெண் பதினாறோ பதினேழோ வயதான பெண்தான். பீதோவன். மொஸார்ட். மிஸ்டர்.யமானா. மார்க்ஸ். டெஸ்கார்டே. பேரரசன். மிஸ்.டேனாபி. ஆனால், இப்போது நான் தன்னந்தனியன். வெறும் காற்று.


சரி, இன்றிரவு நான் என்ன சாப்பிடுவது? இதென்ன வயிற்றில் ஒரு மாதிரி குமட்டல்? ஒருவேளை, இசை கச்சேரிகளெல்லாம் வயிற்றுக்கு ஒவ்வாதவையோ? அந்த ஏப்பத்தை அடக்கிவைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.


ஹே.. யனகாவா!”


ஆஹ்ஹ்இது நல்ல பெயரே இல்லை! கூடாது. நாளையே வேறொரு சிறந்த புனைப் பெயரை சூட்டிக் கொள்ள வேண்டும். அது இருக்கட்டும், யார் இவன்? ஒருபோதும் காணச் சகியாதவனாக இருக்கிறானே. அட ஆமாம்! எழுத்தாளர் ஆகும் ஆர்வத்துடன் தன் கையெழுத்துப் பிரதியுடன் என் அலுவலகம் வந்தவன். சற்றும் சுவாரசியமற்றவன்.. எப்போதும் குடிபோதை. என்னிடமிருந்து எதையோ பெற்றுக் கொள்ள விரும்புகிறானோ. ஒட்டாமல் விலகியே நிற்கிறேன்.


ஆமா.. ஆனால் நீங்கள் யார்…?”


என்னிடமிருந்து எப்படியும் அவன் ஏதாவது கடன் வாங்கிவிடக் கூடும்,


எப்பொழுது என்று மறந்துவிட்டேன், ஆனால் என் கையெழுத்துப் பிரதியுடன் நான் உங்கள் அலுவலகத்திற்கு ஒருமுறை வந்திருக்கிறேன். நான் அங்கிருந்து புறப்படும் முன்னர் அது காஃபுவின் எழுத்துகளின் அப்பட்டமான நகல் என்று சொன்னீர்கள். அதுவே நான் அங்கிருந்து கிளம்ப சூசகமான சொல் அல்லவா?”


எனக்கு மிரட்டல் விட முயற்சிக்கிறானா? நான் அப்படியெல்லாம் விமர்சித்திருக்கவே மாட்டேன். பார்த்துபின்பற்றியதுஎன்றோபோலச் செய்தல்' என்றோதான் சொல்லியிருப்பேன். எது எப்படியானாலும் நான் அதில் ஒரு பக்கத்தைக் கூட படிக்கவில்லை. தலைப்பே என்னை மேலே செல்ல விடாமல் தடுத்துவிட்டது. அது என்ன? ஆங்..! ‘ஒரு நடன அழகியின் விரும்பப்படாத கிறுக்கல்கள்'. நான் தான் சற்று திடுக்கிட்டு பின் சங்கடத்திற்கு உள்ளானேன். இப்படி ஒரு மடையன் இந்த உலகில் இன்னும் ஜீவித்திருக்க முடியுமென்றே என்னால் நம்ப முடியவில்லை


இப்போது ஞாபகம் வருகிறது


மிகுந்த சம்பிரதாயத்துடன் முகமன் கூறுவதால் ஒன்றும் கெட்டுவிடாது. இந்த ஆள் ஒரு மட்டி. இவனிடம் சிக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. பார்ப்பதற்கு பலவீனமாகத்தான் இருக்கிறான். என்னால் அவனை சுலபமாக அடித்துத் தள்ளிவிட முடியுமென்று நினைக்கிறேன், ஆனால் ஆளைப் பார்த்து எடை போடக்கூடாது என்பார்களே. எச்சரிக்கையுடன் இருப்பதே சிறந்த கொள்கை.


நான் தலைப்பை மாற்றிவிட்டேன்.”


என் மூக்குடைத்துவிட்டான்! இலக்கைப் பிடித்துவிட்டான்! அப்படியொன்றும் இவன் அடிமுட்டாள் இல்லை போலிருக்கிறதே.


அப்படியா? ஆம், அது ஒரு சிறப்பான முதற்படியாக அமையும்.”


இல்லை - எனக்கு அதில் துளி கூட ஆர்வம் கிடையாது.


நான் அதை இப்படி பெயர் மாற்றிவிட்டேன் - “ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஒரு போராட்டம்


ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஒரு போராட்டம்…”


நான் வாயடைத்துப் போய்விட்டேன், அட மடக்கோமாளியே! முட்டாள்தனத்தின் எல்லைகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டாய். மனித ஒட்டுண்ணி அவன். தப்பிவிடு! விரைந்து ஓடு! உன்னுடைய அசிங்கத்தை தொற்றிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை, இதனாலேயே நான் எழுத்தார்வத்துடன் வரும் இளைஞர்களை வெறுக்கிறேன்.


உண்மையில், ஒரு பதிப்பகத்துடன் எனக்கொரு ஒப்பந்தம் கூட கிடைத்துவிட்டது.”


என்ன?”


ஒப்பந்தம் பேசிவிட்டேன். அந்த மூலப் பிரதிக்கு.”


அதிசயத்திற்கும் மேலான ஒன்று. ஒரு புது எழுத்தாளரின் உதயமோ, ஒருவேளை? எனக்கு லேசாக வயிறு கலங்கத் தொடங்கியது. ‘ஹியோடோகோமுகமூடியைப் போல சப்பையான மூக்கை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவன் யாரும் எதிர்பாராதவொரு மேதையாகக் கூட இருக்கலாம். திகிலாகயிருக்கிறது. உண்மையிலேயே அவ்வளவு திகிலூட்டுகிறது. இதனால்தான் நான் எழுத்தார்வமிக்க இளைஞர்களை வெறுக்கிறேன். சரி, இவனையும் நாலு வார்த்தை புகழ்ந்து வைக்கிறேன்.


ஆஹா.. மிகத் தனித்துவமான தலைப்பு.”


ஆமாம்.. சமகாலத்தின் அழகுணர்ச்சியோடு இசைந்து போகக் கூடியதாக இருக்கிறது.”


ஒரு கட்டை கொண்டு உன்னை மொத்தி எடுக்க முடியும் என்னால். இவற்றிலிருந்தெல்லாம் எனக்கு சற்று ஒய்வு கொடுங்களேன். என்னைக் கண்டு அஞ்சியிரு, கடவுளே - நம் பந்தம் முடிந்தது!


பதிப்பகத்தாரிடமிருந்து நான் இன்று பணம் பெற்றேன், நல்ல கை நிறையப் பணம்! அத்தனை மதுவிடுதிகளுக்கும் ஒவ்வொன்றாகச் சென்று வந்த பின்பும், பாதிக்கும் மேலான பணம் இன்னும் கையில் உள்ளது.”


அதற்குக் காரணம் நீயொரு கஞ்சத்தனமான குடிகாரன் என்பதுதான். என்ன ஒரு அருவருப்பான அற்பன். அவனுக்குப் பணம் கிடைத்துவிட்டது என்பதால்தான் இப்படி பெருமையடித்துக் கொள்கிறான். கிட்டத்தட்ட மூவாயிரம் யென், சரியா? .. இரு, கழிவறையில் ஒதுங்கி உன்னிடம் மிச்சம் எவ்வளவு பணமிருக்கிறது என்று எண்ணிப்பார்த்திருக்கிறாய் இல்லையா? எனக்கு நிச்சயமாகத் தெரியும். இல்லையென்றால், இவ்வளவு உறுதியான குரலில்பாதிக்கும் மேலான பணம் இன்னமும் கையில் இருக்கிறதுஎன்று உன்னால் சொல்லியிருக்க முடியாது. நீ அப்படித்தான் செய்திருக்கிறாய். செய்தாய்தானேஎன்னால் அதை புரிந்துகொள்ள முடிகிறது. பின் தெருவின் மின்சாரக் கம்பத்தின் நிழலில், பலவீனமாக முணுமுணுத்தபடியும்  பெருமூச்செறிந்தும் நோட்டுகளை ஒவ்வொன்றாய் எண்ணினாய். ‘, மனம் கலங்கிடாதே! உற்று கவனி! உன் தலையின் மேல் ஒரு பறவை மிதந்து செல்கிறது.!’ பரிதாபம்! நானும் இந்நிலையில் இருந்திருக்கிறேன் என்பதுதான் உண்மை.


அத்தனை பணத்தையும் இன்றிரவுக்குள் தீர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். என்னோடு இணைந்து கொள்வீர்களா? அருகாமையில் உங்களுக்கு விருப்பமான மதுவிடுதி ஏதாவது இருந்தால் அங்கே நீங்கள் என்னை கூட்டிச்செல்லலாம்.”


மன்னிக்கவும். நான் தவறாக எண்ணிவிட்டேன். உன்னிடம் அந்த அளவிற்குப் பணமுள்ளது என்று உனக்கு உறுதியாகத் தெரியுமா? அங்கே சென்ற பிறகு என் பங்கிற்கு நானும் ஏதாவது தர வேண்டும் என்றெல்லாம் எதுவும் சொல்லக் கூடாது. சரி சரி, எதற்கும் இதெல்லாம் சரி பார்த்துக் கொள்ளலாமேயென்றுதான்


ஆமாம், எனக்குத் தெரிந்த ஓர் இடம் உள்ளது ஆனால் அது கொஞ்சம் ஆடம்பரமான இடம். அங்கே உன்னை கூட்டிச்செல்வதற்காக நீ என்னைத் தவறாக நினைத்துவிடக்கூடாது.”


அதெல்லாம் பரவாயில்லை. மூவாயிரம் யென் அந்தக் கவலையை ஏற்றுக் கொள்ளும் என்று எண்ணுகிறேன். இதோ, நீங்களும் வைத்துக் கொள்ளலாம். நம்மிருவருக்கிடையில் இதை இப்போதே பிரித்துக் கொள்ளலாம்.”


வேண்டாம்..வேண்டாம்.. அடுத்தவரின் பணத்தைக் கையாளும் பொறுப்பை நான் விரும்புவதில்லை - அது என் மகிழ்ச்சிக்கு இடையூறாகவே மாறிவிடும்.”


அசிங்கமாகத்தான் இருக்கிறான், ஆனால் இயல்பாகயிருக்கிறான். எழுதும் மனிதன் தன்னைப் பற்றி இப்படியான ஒரு தனித்துவமிக்க எளிமையான சூழலை உருவாக்கிக் கொள்கிறான். வழக்கத்திற்கு மாறாக கவலையற்று இருப்பதைப் போன்றதொரு சூழல். மொஸார்ட் மொஸார்ட் தான். ஓர் இலக்கியக் கத்துக்குட்டி, இலக்கியக் கத்துக்குட்டி தான். இயற்கையாகவே அதனதன் இடத்தில் எப்படிப் போய் அதுவே விழுகிறது என்பது வேடிக்கைதான்.  


சரி, நாம் இலக்கியத்தைப் பற்றி தீவிரமாகப் பேசுவோமா? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் தொடக்கத்திலிருந்தே எனக்கு உன்னுடைய படைப்பின் மீது நிஜமாகவே ஆர்வமிருந்ததுதான், ஆனால் என்னுடைய பொறுப்பாசிரியர் கொஞ்சம்... எப்படிச் சொல்வது? பழமைவாதி!”


நான் அவனையே டகேடாமதுவிடுதிக்கு அழைத்துச் செல்கிறேன். என் நினைவு சரியென்றால், அங்கே என் கணக்கில் ஆயிரம் யென் கடன் உள்ளது, அதையும் இவனே பார்த்துக் கொள்ளட்டும்


ஓஹ்இந்த இடமா?”


ஆமாம்.. சற்று ஒளி மங்கிய இடம்தான். ஆனால் எனக்கு இப்படியான ஒரு சூழல்தான் பிடிக்கும். நீ என்ன நினைக்கிறாய்?”


அவ்வளவு மோசமில்லை.”


நல்லது. நம்மிருவரின் ரசனையும் ஒன்று போலவே இருக்கிறது எனத் தோன்றுகிறது. நாம் குடிக்கலாம்! இது உனக்காக! ரசனை ஒரு சிக்கலான விஷயம். ஆயிரம் வெறுப்புகளை   கடந்த பிறகுதான் ஒற்றை ரசனை நமக்குள் பிறக்கிறது. எனவே, ரசனையே இல்லாதவனுக்கு.., வெறுப்பதற்கும் ஒன்றுமே இல்லை.


நாம் குடிக்கலாம்! இது உனக்காக! இன்றிரவை பேசித் தீர்க்கலாம். நான் நினைத்ததை விடவும் நீ அதிகம் பேசாதவனாக இருக்கிறாய். நான் அப்படிப்பட்டவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பேன். என்னால் அதை வெற்றி கொள்ள முடியாது. அது எங்களின் பிரதான எதிரி. இதைப் போல பேசிக்கொண்டேயிருப்பது முழு தியாகத்தின் வெளிப்பாடு, மேலும் நிறைய பேருக்கு இதுவே தர்மத்தின் உயர்ந்த வடிவமாகக் கூட இருக்கிறது. பதிலுக்கு எதுவுமே எதிர்பார்ப்பதில்லையே, அது தர்மமேதான். ஆனால் அதேசமயம் ஒருவர் சத்துருக்களையும் சிநேகிப்பவராக இருக்க வேண்டும். என்னை உயிர்ப்பிப்பவனை என்னால் நேசிக்காமல் இருக்க முடியாது. நம்முடைய எதிரிகள் எப்போதும், தவறாமல், நமக்கு உயிரூட்டுபவர்கள். இதோ, இது உனக்காக! முட்டாள்கள், பொழுதுபோக்கித் திரிவது பொறுப்பற்ற செயல் என்று நம்புகிறார்கள். மேலும் ஒரு சிலர், சிலேடைப் பேச்சுகளெல்லாம் பொருட்படுத்தத் தக்க பதில்  என்று கூட நம்புகிறார்கள். அவர்கள் வெளிப்படைத்தன்மை என்று  நம்புவதை வேறு எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் வெளிப்படையாயிருப்பதென்பது உங்களை நீங்களே ஓர் உணர்வற்ற மனிதனைப் போல விடுவித்துக்கொள்வது ஆகும். அதன் அர்த்தம் அவர்கள் மற்றவர்களையும் உணர்ச்சியற்றவர்களாகக் கருதுகிறார்கள் என்பது. அதீத கூருணர்வுள்ளவர்களுக்கு, அடுத்தவரின் வலிகளை நன்குணர்ந்தவர்களுக்கு, வெளிப்படையாய் இருப்பது மிகக் கடினம். எனவே, வெளிப்படைத்தன்மை என்பதே வன்முறைதான். அதனால்தான் என்னால் எழுதிப் பழகிய கைகளை விரும்பி நெருங்க முடியவில்லை. ஒருவேளை அவர்களின் திறமையைக் கண்டு அஞ்சுகிறேனாக இருக்கலாம். எப்படி இந்த உலகம் லேசாக உசுப்பினால் கூட கடும் கசப்பான சொற்களைப் பேசுபவர்களோடு தழைத்து வளர்கிறது! முதலில், ஒரு நல்ல உள்ளுணர்வு என்பது கொள்ளிவாய்ப் பேயைப் போன்ற ஒரு மாயத் தோற்றம். ஞானத்தின் துணை கொண்டிராத உள்ளுணர்வுஎதேச்சையானது அல்லாமல் வேறென்ன? குருட்டு அதிர்ஷ்டம்


நாம் குடிக்கலாம்! இது உனக்காக! நாம் பேசுவோம்! நம்முடைய பிரதான எதிரி மெளனித்திருப்பது. அது எப்படியோ, நான் எவ்வளவு பேசுகிறேனோ அவ்வளவு ஐயம்கொள்பவனாக ஆகிறேன். யாரோ என் சட்டைக் கையைப் பிடித்து இழுக்கிறார்கள், திரும்பிப் பார்க்க வேண்டும் நான்ஹாஆமாம் நானும் கூட்டத்தில் ஒருவன் தான். தங்கள் மதிப்பீடுகளின் மீது முழு நம்பிக்கை கொண்டவர்கள்தான் மிக உயர்ந்தவர்களாகிறார்கள். அது அப்படியே முட்டாள்களுக்கும் பொருந்தும்தான். நானே இப்போது பழி பேசிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த நடத்தையை நல்ல பண்புகளுக்கு மிகக் கீழாகத்தான் மதிப்பிடுகிறேன். கடுஞ்சொல் பேசுவது சிறிதளவு உங்கள் எதிரே இருக்கும் நபரின் அதீத கஞ்சத்தனத்தை பிரதிபலிக்கிறது.  


நாம் குடிக்கலாம்! இலக்கியத்தைப் பற்றி பேசலாம்! இலக்கியக் கோட்பாடுகள் ஆவலைக் கிளருகின்றன, இல்லையா? ஆமாம்..புதிய எழுத்தாளர்கள் புதிய எழுத்தாளர்கள்தான், பழகிய கைகள் பழகிய கைகள்தான். நான் எப்படி இயல்பாகவே அப்படியான ஒரு சிந்தனையின் பக்கம் சாய்ந்துவிட்டேன் என்பதே தனி சுவாரசியம்தான். சரி, இதோ உன் சிந்தனைக்கு ஒரு தீனி. ஒரு புதிய எழுத்தாளனாக, மூன்று மில்லியன் வாசகர்களுக்கும் பிரியமானவனாக இருக்க வேண்டுமானால் நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்? இது சிக்கலான கேள்விதான், எனக்குத் தெரியும். ஆனால் அதனால் உன் தன்னம்பிக்கையை ஒருபோதும் நீ இழந்துவிடாதே. இங்கே பார் - பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு வாசகர்களின் விருப்பத்திற்குரிய எழுத்தாளனாக இருப்பதை விடவும் இது கையாளக்கூடிய காரியம்தான். லட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பப்படும் எழுத்தாளர்கள் பெரும்பாலும் தன்னையே நேசிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அதே காரணத்தினால் சிறுபான்மை வாசகர்களால் நேசிக்கப்படுபவர்கள் தங்களை நேசிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். அது ஒரு சராசரியான வாழ்வு. அதிருஷ்டவசமாக, உன்னுடைய விஷயத்தில், உன்னுடைய படைப்பை நீ மிகவும் நேசிப்பவனாக இருப்பது, மூன்று மில்லியன் வாசகர்களால் நேசிக்கப்படும் ஒரு பிரபலமான எழுத்தாளனாக வெற்றியடைவதற்கான சாத்தியத்தையே குறிக்கிறது. தன்னம்பிக்கையை இழந்துவிடாதே. நீ பணம் சேர்ப்பாய் என்பதை  பொதுவான மொழியில் சொல்ல வேண்டுமெனில், “உனக்குத் திறமை இருக்கிறது”.


நாம் குடிக்கலாம்! இது உனக்காக! சார், உங்கள் படைப்பு ஒரே ஒரு வாசகனால் ஆயிரம் முறை படிக்கப்படுவதை விரும்புவீர்களா அல்லது ஒரே முறை ஆயிரம் வாசகர்கள் படிப்பதையா? உன்னுடைய தேர்வு எது? எல்லா வகையிலும்.. எல்லா வகையிலும், உனக்குத் திறமை இருக்கிறது! எப்படிப் பார்த்தாலும் காஃபுவை காப்பியடிப்பதில் பிரச்சினை ஒன்றுமில்லை. அசல் தன்மையைப் பற்றிய இந்த விஷயம் அடிப்படையில் வயிற்றின் இயக்கவியலை நோக்கித்தான் கடைசியில் செல்கிறது - உட்கொண்ட பிறகு, அவற்றிலிருக்கும் அடுத்தவரின் ஊட்டச்சத்துகள் வெளிவரும்போது முழுமையாக செரிமானமான பின் வருகிறதா அல்லது அப்படியே மாறாமல் மலமாக வெளிவருகிறதா; நிச்சயமாக, இதில் இரண்டாவதைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை, ஆனால் அவை நன்றாக ஜீரணிக்கப்பட்டிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. எந்தவொரு எழுத்தாளரும், பழங்காலத்திலிருந்தே கணக்கிட்டாலும், எப்போதுமே அசலான படைப்பாளியாக இருந்ததில்லை. அப்படியொரு பெயருக்குத் தகுதியான ஒருவரை எங்கேயும் யாருக்கும் தெரியாது; அவர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு எழுதப்பட்ட எங்களின் சிறந்த கட்டுரைகளிலிருந்துகூட அவர்கள் நழுவி விடுகிறார்கள். அதனால், இதைப் பற்றி பதற்றம் கொள்வதில் எந்த அர்த்தமுமில்லை. ஆனால் பலமுறை, தங்கள் படைப்புகள் அசலானவை என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்களை நீ சந்திக்க நேரிடும், அவர்களையெல்லாம் நீ வடிகட்டிய முட்டாள்கள் என்று ஒதுக்கித் தள்ளிவிடு. அவர்களையெல்லாம் விளையாட்டாக அணுகவேண்டும். ஆஹ்ஹ்பெருமூச்சு விடவேண்டும் போலிருக்கிறது. உனக்கு முன்னால் உள்ள பாதை மிகப் பெரியது, விசாலமானது. ‘விசாலத்தைப்’ பற்றி குறிப்பிடுகையில் , நீ ஏன் உன் அடுத்த புத்தகத்தின் தலைப்புவிசாலமான வாயில்என்று வைத்துக் கொள்ளக்கூடாது? ‘வாயில்என்ற வார்த்தைக்கு ஆழமான வரலாற்றுப் பண்பாட்டின் கூறு உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


மன்னிக்கவும், எனக்கு லேசாக குமட்டுகிறது….


இல்லையில்லை, எனக்கு ஒன்றுமில்லை, நன்றாக இருக்கிறேன். இந்த மதுபானங்கள் அவ்வளவு சிறந்தவை அல்ல. அப்பாடா, இப்போது நான் விடுவிக்கப்பட்டவனாக உணர்கிறேன் - இதுவரை குமட்டலின் மந்தமான பிடியில் சிக்கியிருந்தேன். அப்படியே இந்த வலெரியைப் பற்றி…. அடடா…, கடைசியில் நான் அவர் பெயரை உளறிவிட்டேன்உன் மெளனமெனும் வாளை நோக்கி நானே குதித்துவிட்டேன். இன்றிரவு நான் பேசியதில் பெரும்பாலும் அவரின் இலக்கியக் கோட்பாடுகளிலிருந்துதான். அடடேஎன்னே என் அசல் சிந்தனை!! இறுதியில், என்னுடைய வயிறு ஏற்கனவெ தொந்தரவு செய்து கொண்டிருந்ததால், இச்சிந்தனைகளை அவற்றின் அசல் வடிவத்திலேயே செரிக்க முடியாமல் பொங்கி வெளியேற்றிவிட்டேன். என்னால் இப்படியே வளவளவென்று பேசிக்கொண்டே போக முடியும் அதுதான் உன் விருப்பமென்றால். ஆனால் இங்கேயே இப்போதே  அவருடைய புத்தகத்தை உனக்குக் கொடுப்பதுதான் அதிக பயன் தரும். நான் உன்னைச் சந்திப்பதற்கு முன் இதை பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். இன்றிரவு இங்கே பேசியதெல்லாம் இன்று ரயிலில் வருகையில் இதிலிருந்து நான் பொறுக்கி எடுத்தவைதான், புத்தம்புதிய ஞானம், சுடச்சுட, அதனால்தான் என் நினைவில் அது இன்னமும் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனால் நாளையே இது அநேகமாக முழுமறதி இருளுக்குள் நழுவிச் சென்றுவிடும். நீ வலெரியைப் படித்தால் வெளிவருவதில் வலெரியைத்தான் எதிர்பார்க்கமுடியும். மெளண்டேனியென்றால் மெளண்டேனி, பேஸ்கல் என்றால் பேஸ்கல். தற்கொலை செய்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும், ஆனால் முழுமையான வாழ்வை வாழ்ந்த ஆண்களுக்கு மட்டுமேஇதுகூட வலெரியிடமிருந்துதான். அவ்வளவு மோசமில்லை, தானே? நம்மால் நம்மையே கொன்றுவிடுவது கூட இயலாது. இதோ, நீ எடுத்துக்கொள். , உபசரிக்கும் பெண்ணே! வந்து கணக்கை முடி! எல்லா கணக்கையும்! அப்போ சரி, உன்னோடு பேசியதில் மகிழ்ச்சி. அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நீ ஒரு பறவையைப் போல எடையற்றவனாகு, இறகைப் போல அல்ல…. இப்போது, நான் என்ன செய்ய வேண்டும்?”


தொப்பியணியாத பரட்டைத் தலையுடன், இறுக்கமான மேல்சட்டை அணிந்திருந்த அருவருப்பான அந்த இளைஞன் நீரில் வாத்தைப் போல தன் சிறகுகளை உளுக்கி காற்றின் மீதேறி பறந்து போனான்.



Tuesday, August 25, 2020

கனன்றெரியும் நீர்வெளி

 நீலகண்டப் பறவையைத் தேடி நாவல் வாசிப்பை முன் வைத்து சொல்முகம் வாசகர் முழுமத்தின் வலைப்பூவில் எழுதிய கட்டுரை:

https://solmugam.home.blog/2020/08/23/கனன்றெறியும்-நீர்வெளி-ந/


கொப்புளிக்கும் கனவுத் தொகைகளின் ஆழத்தில் விழுந்து விடாமலிருக்க நுனிக் காலில் தத்தித்தத்தித் தாவி நாவலைக் கடந்து கண் மூடினால் உணர்வுகளின் பிடியில் சிக்கி பாதாளத்திற்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பிரமை. பொங்கிப் பொங்கி அடங்காத கொந்தளிப்பை ஒரு இலக்கியப் பிரதி கொடுக்குமென்றால் அது வெறும் ‘நிகர் வாழ்வு’ மட்டுமல்லவே. கிழக்கு வங்காள கிராமத்தின் 1920களின் வாழ்வு, ஒரு துளி மாயம் தடவி மிகு கற்பனையால் கட்டி வீசப்பட்டிருக்கிறது இந்நாவலில். ஒரு மிக நீண்ட கவிதையைப் போல பல்வேறு படிமங்களால் நிறைந்தபடி இக்கிராம மக்களின் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் அசாத்தியமான காட்சிகளாக எழுந்து எண்ணங்களை நிறைக்கிறது. அக்காட்சிகளின் ஊடாகவே பல்வேறு மரங்களும் கனிகளும் பறவைகளும் விலங்குகளும் பாத்திரங்களின் உணர்வுகளுக்கு உருவகமாகவும் நாவல் நெடுக கைக்கட்டி நிற்கும் குறியீடுகளாகவும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கதாபாத்திரங்களின் தகிக்கும் உணர்வெழுச்சிகளுக்கு இணையாகவே அவர்கள் வாழ் நிலத்தைப் பிரவாகித்திருக்கும் இயற்கைச் சூழலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வகை கதை சொல்லல் இயற்கையோடு இயைந்த அன்றைய இந்திய நிலத்தின் வாழ்க்கையை உணர்த்தும் அதேவேளையில் வாசகனைப் பனி பூண்ட வானத்திலும் கரையேறும் ஆற்று நீரிலும் சகதி செறிந்த ஏரியிலும் முட்கள் அடர்ந்த காட்டிலும் அமிழ்த்தி வைத்திருக்கிறது. விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள் காதில் விழாத ஒரு பக்கத்தைக் கூட புரட்டி விட முடியாது, ஹட்கிலா பறவைகளும் கிரெளஞ்ச பட்சிகளும் இன்னமும் பால்கனியில் சிவந்த விழிகளால் வெறித்துக் கொண்டிருக்கின்றன. கற்பனையின் பலம் யதார்த்த வாழ்க்கையைச் சற்று நீண்ட நேரத்திற்கு நம் தோளில் ஏற்றிவைத்துவிட்டுப் போய்விடுவதுதான். இடது கையால் தட்டிவிட்டுக் கடந்துவிடமுடியாது.

இந்திய இலக்கியத்தின் முதன்மை வரிசையில் வைக்கத்தகுந்த படைப்பாக அதீன் பந்தோபாத்யாய இந்நாவலை கொடையளித்திருக்கிறார். பாத்திரங்களின் மீதேறி தாவித் தாவிச் சென்று கதை சொல்லும் முறைமையை கையாண்டிருக்கிறார். ஒரு நிகழ்வின் உச்சத்தில் வாசகனை நிறுத்தி அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நடக்கும்  ஒரு காட்சிக்குத் தாவிவிடுகிறார். முந்தைய உணர்வுச்சத்தை தக்க வைத்துக் கொண்டே ஒரு வாசகனைக் கதைகளுக்குள்ளாக நுழையவிடுகிறார். உண்மையில் இது கதைகளின் ஒரு தொகை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஆழமான கதைகள் உண்டு. பாத்திரங்களின் செயல்களின் மூலமாகவே அவர்களை வடிவமைப்பதைப் போலவே அவர்களின் கதைகளையும் உருவாக்கி விடுகிறார். இதனால் இந்நாவலின் மைய பாத்திரம் என்று ஒருவரைக் குறிப்பிடுவது எளிதல்ல. முக்கிய பாத்திரங்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு இணையான ஒரு உச்சத்தை ஒன்றிரண்டு பக்கங்களின் வந்து செல்லும் மன்சூர் போன்ற மனிதர்களும் உண்டு.


வங்காள பிரிவினையின் தொடங்கு முகமான காலகட்டம். நிலவுரிமையும், ஊதிய பணிகளும் கொண்ட இந்துக் குடும்பங்களும் ஏதேனும் ஒருவகையில் அவர்களைச் சார்ந்து வாழவேண்டியிருக்கும் எளிய முஸ்லீம்களும் வாழும் கிராமங்கள். நீரால் சூழப்பட்டுக் காட்டு மேடுகளால் அரண் கொண்டிருப்பவை அவை. டாகூர் குடும்பத்தின் பெரிய பாபு இக்கதையின் முதன்மை பாத்திரமாகக் கொள்ளலாம். ‘பாலின்’ என்ற வெளிநாட்டு பெண்ணினுடான தன் நிறைவேறாத காதலால் பித்துப் பிடித்து கவிதையும் கற்பனையுமாக இயற்கையோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒரு வாழ்வு. எங்கு காணினும் ‘பாலினின்’ முகங்களாகவும் அவளைச் சென்று அடையும் பாதைகளாகவும் தெரிகிறது அவருக்கு. இம்முழு நாவலிலும் அவர் நீண்ட நேரம் ஓரிடத்தில் அமைந்திருப்பது அரிது. அலைந்து கொண்டேயிருக்கிறார்… தன் நீலகண்டப் பறவையைத் தேடிக் கொண்டேயிருக்கிறார். தன் எதிர்ப்புதான் பெரிய பாபுவை இந்நிலைக்குத் தள்ளிவிட்டதென்றும் பைத்தியமாகிவிட்ட தன் மகனை ஏமாற்றி ஒரு பெண்ணுக்குக் கட்டி வைத்ததாய் ஊர் நினைக்கிறதென்றும் குற்ற உணர்ச்சிகளில் புழுங்கித் தவிக்கும் கண் பார்வையற்ற அவரின் தந்தை. பெரிய பாபுவின் முதல் தம்பிக்கு குழந்தை பிறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. ‘சோனா’ என்ற அச்சிறுவனின் பார்வையில் பெரும்பான்மையான கதைப் பகுதி நகர்கிறது. பெரிய பாபுவின் சிறுவயதுப் பிரதி இச்சிறுவன். பின்னாளில் பெரிய பாபுவைப் போலவே பித்துப் பிடித்து அலையும் அத்தனை சாத்தியங்களும் கொண்ட ஒரு சிறுவனாக வெளிப்படுகிறான். கற்பனையும் அலைக்கழிப்புமாக அவனின் சிறுவயது தொடங்குகிறது. ‘கோட்சோரத்சாலா’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறெதுவும் சொல்லாத பெரிய பாபுவின் மனதையும் கண் அசைவையும் புரிந்து கொள்ளக் கூடியவன் அவன் ஒருவந்தான். அது தன்னையறிந்து கொள்வதுதான். 

இந்நாவலில் வெளிப்படையான ஒரு குறியீடு பறவை என்று கொண்டால், கையில் சிக்காத, கண்களில் அதுவரை கண்டிராத பறவையென சிறகு முளைத்து மறைந்துவிடும் ஒரு வாழ்வை இக்கதை மாந்தர்கள் அத்தனை பேரும் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். பெரிய பாபுவின் மனைவி பட்டிணத்திலிருந்து வந்தவள். சித்தம் கலங்கிய ஒருவனுக்கு தன் வாழ்க்கையைக் கொடுத்து விட்டவள். கண்களை மூடி பிரார்த்தனையிலும் ஜன்னலோரத்தில் பெருவெளிகளிலும் தன் கணவனின் உருவத்தை சதா தேடிக் கொண்டேயிருப்பவள். அவளின் தம்பி ரஞ்சித் சுதேசியாக மாறி போராட்டங்களில் ஈடுபட்டு தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தவன். அவன் கனவு கொண்டிருக்கும் இந்திய நிலம் ஒருநாள் கைவசப்படும் என்று நம்பிக்கையில் அலைபவன். அருகாமையில் வசிக்கும் நரேந்திரதாஸின் தங்கை மாலதி விதவையாகி வீடு திரும்பியவள். டாக்காவில் ஏற்பட்ட முதல் கலவரத்தில் தன் கணவனை இழந்தவள். இவளின் சிறு வயது தோழர்களான ரஞ்சித்தும் சாம்ஸுதீனும் இரு வேறு துருவங்களாக எழுந்து நிற்பவர்கள். மாலதி தன் வாழ்க்கையைத் தொலைத்த அக்கலவரத்தைப் போன்ற மற்றொன்றை நிகழ்த்தும் காரணிகளாகும் சாத்தியம் கொண்டவர்கள். சாமு கிராமத்திற்குள் முஸ்லீம் லீக் நுழையச் செய்கிறான், ரஞ்சித் சிலம்பம் கற்றுக் கொடுத்து இந்து சுதேசி வீரர்களை தயார் செய்கிறான். ஆனால் இவ்விரு ஆண்களின் நிழல் பட்டே உணர்ச்சி பெருக்கெடுக்கும் தன்மையானவள் மாலதி என்பது காவிய முரண். சாமுவின் நடவடிக்கைகளால் அவனிலிருந்து விலகி ரஞ்சித்திடம் மனம் சாய்கிறாள். 

மாலதியின் மறு முனையில் நிற்பவள் ஜோடன். ஆபேத் அலியின் சகோதரி. மூன்று மண முறிவுகளும் பதிமூன்று குழைந்தைகளுக்கு பிறகும் ஒற்றையாளாக மறு துணை தேடி வாழ்பவள். உயிர் பெருக்குவதுதான் இவ்வுடலுக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட ஆணை என்று உளமார நம்புபவள். ஆபேத் அலியின் மனைவி ஜலாலி வயிற்றுப் பசியைத் தீர்ப்பது ஒன்றே தன் வாழ்வென்றாகிப் போனவள். இவர்களுக்கிடையில் முடமாகி தன் எதிரிகளை என்றேனும் பழிவாங்கும் வெறியினாலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கும் பேலு, நிலையான ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளும் ஆசையில் பணத்திற்கு ஆசைப்பட்டு பாவச் செயலில் ஈடுபடும் ஜாபர், தர்பூஜ் நிலத்தின் மீதும் டாகூர் குடும்பத்தின் மீதும்  விசுவாசம் என்ற பற்றுகோளை மட்டுமே பிடித்து வாழும் ஈசம் கான் என்று பல்வேறு கதை மாந்தர்கள் இந்தக் கனவெளியில் சஞ்சரிக்கிறார்கள். அர்த்தமோ அபத்தமோ வாழ்ந்து தீர்த்துவிடும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். அடிமைபட்டுக் கிடக்கும் நாடோ, பிளவு கொள்ளப் போகும் நிலமோ ஒரு பொருட்டல்ல. கண்ணுக்குத் தெரியாத ஒரு பறக்கும் சிறகை நோக்கி கைகளை நீட்டி நிலவெளியெங்கும் அலைந்து கொண்டிருக்கும் எளிய வாழ்வுருவங்கள்.

 விரிசலில் ஊடுறுவும் அரசியல் வெளி:

இந்நாவலின் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் புலம் உண்டு. நாடெங்கும் கலகங்கள் எழும் காலம். சுதேசி இயக்கங்கள் தீவிரமாக ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருக்க, டாக்கா கலவரம் முஸ்லீம் லீக் எழுச்சிக்கு வித்திட்டிருந்தது. இந்திய விடுதலையைவிடவும் வங்காளம் தனியே பிரிந்து முஸ்லீம் நாடாகிவிட வேண்டுமென்ற கலகங்கள் பரவத் தொடங்கியிருந்த காலம். இந்தச் சூழலில் இந்துக்களும் முஸ்லீம்களும் இயைந்து வாழ்ந்து கொண்டிருந்த கிழக்கு வங்காள கிராமங்கள் எத்தகைய பதற்றத்தை உணர்ந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். அப்படியொரு பதற்றம் சிறிது சிறிதாக இக்கதை சோனாலி பாலி ஆற்றோரக் கிராமங்களில் நுழைந்த பின்புலத்தில் நிகழ்கிறது. ஆனால் பெரிதாக அரசியல் பிரக்ஞை மக்களிடையே தோன்றிவிடவில்லை. டாகூர் குடும்பத்தின் மீது மரபார்ந்த விசுவாசமும் மரியாதையுமே முஸ்லீம் மக்கள் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ஏற்படும் சச்சரவுகளின் பஞ்சாயத்துகள் கூட நிமிடங்களில் தீர்த்து வைக்கப்படும் வகையிலானதாகத்தான் இருக்கிறது. ஆனால் முஸ்லீம் லீக் நோட்டிஸ்கள் மரங்களில் ஒட்டப்படுகிறது. ஒன்றிரண்டு கூட்டங்கள் ஏற்பாடாகிறது. சாமு இக்காரியங்களில் முன்னின்று தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். வரும் பிராந்தியத் தேர்தலில் டாகூர் கிராமத்தை எதிர்த்து நிற்கத் துணிகிறான். இதன் அவசியம் கதையெங்கும் முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை முன் வைத்தே உணர்த்தப்படுகிறது.

நீர் சூழ்ந்த இம்மண்ணில், விளைச்சல் மிகும் நிலங்கள் இருந்தும், மீன் வளம் மிகுந்திருந்தும் இந்து குடும்பங்களை ஒப்பு நோக்குகையில் முஸ்லீம்கள் பெருத்த வருமையில் உழல்கிறார்கள். இந்துக்களை அண்டியிருந்தும் அவர்களால் தன் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள முடிவதில்லை. ஈசாம் கான் தன் உடலையும் உயிரையும் தர்பூஜ் வயலுக்கென நேர்ந்துவிட்டவன். தர்பூஜ் அடுத்ததாக சோனா. இவ்விரண்டையும் காப்பதுதான் அவன் கடன் என்று விசுவாச வாழ்க்கை வாழ்பவன். ஆனாலும் அவன் ஒரு பருக்கையை கூட வீண் செய்ய இயலாத வறுமையை கொண்டவன். கிராமத்திற்கு வரும் பக்கிரி சாயுபு தரையில் விழுந்த ஒரு பருக்கையைத் தடவி எடுத்து உண்டு விடுகிறார். நீருக்குள் மூழ்கி அள்ளிக் கிழங்குகளைப் பறித்து உண்ணும் ஜலாலி வயிற்றுப் பசிக்கு தன் உடலை இரையாக்கியவள். மாலதியின் ஆண் வாத்தை அவள் கவர்ந்து வந்து தன் வீட்டில் வறுக்க வழியில்லாமல் தீயில் சுட்டு உண்ணுகிறாள். இந்தத் திருட்டைக் கண்டுகொண்ட சாம்சுதீன் தட்டிக் கேட்கும் எண்ணத்தில் ஜலாலி வீட்டை நெருங்கி ஜன்னல் வழியே அவள் உண்பதைப் பார்க்கிறான். அவள் உண்டு முடித்ததும் மண்டியிட்டு இன்று உணவை அளித்ததற்கு அல்லாவிடம் நன்றி கூறுகிறாள். இதைப் பார்க்கும் சாமு, அல்லாவின் கருணையைத் தடுப்பதற்குத் தான் யார் என்று எண்ணுகிறான். பட்டினியுடன் இருப்பது திருட்டை மீறிய பாவம் என்று தோன்றுகிறது அவனுக்கு.

நீர் வளம் சூழ்ந்த ஒரு மண்ணில் வாழும் இரு சமுதாயங்களில் ஒன்று பூஜையும் நைவேத்தியங்களும், அவலும் அரிசியும், மீனும் மணமுமாக வாழ்ந்துக் கொண்டிருக்கையில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இரவில் யாருமறியாமல் நீரில் மூழ்கி அல்லி கிழங்கு பறித்தும், நெற்மணிகளைத் திருடியும், வாத்தையும் கோழியையும் களவாடியும், அரையாடை உடுத்தி தன் வயிற்றைத் தரையில் இருத்தி பசியை குளிர்வித்தும் வாழ்கிறார்கள். இந்தப் பொருளாதார விரிசலில்தான் இந்திய நிலத்தின் அரசியல் உள் நுழைகிறது. டாகூர் வீட்டு குழந்தைகளை பயிற்றுவிக்க ஆசிரியர் ஒருவர் உடன் வந்து தங்குகிறார். பல் தேய்ப்பதிலிருந்து ஆங்கில கவிதைகள் வரை அனைத்தையும் சொல்லித் தருகிறார். அக்குழந்தைகள் உரக்கப் பாடம் படிப்பது அப்பிராந்தியத்திற்கே கேட்கிறது. ஆனால் பாத்திமாவோ, ஜாபரோ கல்வி முகம் அறியாதவர்கள். தன் உயிரை நிலை நிறுத்தும் பொருட்டு எந்தக் குற்றத்திற்கும் துணியத் தயங்காதவர்களாகவும் மாறுகிறார்கள். ஆனால் அவ்வறுமையிலும் ஈசாம் கான் தான் ஏற்றுக் கொண்ட மரபுப் பிடிப்பிலிருந்து வழுவாதவனாக இருக்கிறான். பக்கிரி சாயுபு தன் உயிர் நீங்கும் தறுவாயிலும் மாலதிக்கு மறுவாழ்வு அளித்து மறைகிறார். இறுதியில் டாக்காவுக்கு சாமு கிளம்பிச் செல்லும்போது கூட டாகூர் வீட்டுக் குழந்தைகள் வழி தவறிடாமலிருக்க அவர்களின் துணையாக வீடு வரை செல்கிறான். எடை மிகுந்த நெற்கதிர்களை அவர்கள் வீட்டு துர்க்கைக்கு தன் கையால் பறித்து அவர்களின் மூலம் காணிக்கை செலுத்துகிறான். சுதேசி இயக்கத்தின் தீவிர அங்கத்தினனான ரஞ்சித் விடுதலைப் போராட்டத்தைத் தொடர தன் நிலம் விட்டு விலகுகையில் எண்ணிக் கொள்கிறான் – “ ‘உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டு நிலம் கிடைக்க வேண்டும்; சாப்பாட்டுக்கு இல்லாத மனிதன், தன் கால்களுக்குக் கீழே தனக்கென்று கொஞ்சம் சொந்த நிலம் இல்லாத மனிதன். சாப்பிட வழியில்லாத மனிதனுக்குச் சுதந்திரம் கிடைத்து என்ன பிரயோசனம்’”. 

சாமுவுக்கும் அதுதான் விருப்பம் ஆனால் வேறொரு திசையில். இந்த அரசியல் மிகப் பூடகமாகக் கதை மாந்தர்களின் வாழ்வின் மூலமாகத்தான் உணர்த்தப்படுகிறது. இந்நாவல் வரிசையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாவல்களில் அரசியல் பிரதானமாக இருப்பதாக அறியப்படுகிறது.


நீர்நிழற் பிம்பங்கள்:

பறவையைப் போலவே இக்கதையின் நீர்வெளி ஒரு பிரதான குறியீடாகத் தோன்றுகிறது. நிலமென்றும் நீரென்றும் பிரித்தறியமுடியாத ஒரு தளத்தில் அவர்களின் வாழ்வு குமிழிகளாக ஊதி வெடித்து மறைகிறது. அந்நீரில் தோன்றி மறையும் பிம்பங்களைப் போலக் கதை மாந்தர்கள் அலைந்து அலைந்து கூடுகிறார்கள். ஒருவரையொருவர் ஏதோவொருவகையில் தன் எதிர் பிம்பங்களாகவே பார்க்கிறார்கள். பெரிய பாபுவின் குழந்தைப் பருவமே தன் கை பிடித்திருக்கும் சோனா. தான் சென்று சேரக் கூடாத பிம்பமாகத்தான், தோய்ந்த வருத்தத்துடன், மாலதியைக் கண்ணுறுகிறாள் ஜோடன். ரஞ்சித்தும் சாமுவும்  உருவும் அதன் நிழலும் போல. அவர்கள் கதைக்குள்ளும் கிராமத்திற்குள்ளும் வருவதும் போவதும் எப்போதென்று எவருக்கும் தெரியாது. ஒரே இலக்கை நோக்கி இருவேறு திசையில் பயணிக்கும் பிம்பங்கள். இருவருக்கும் பொதுவான அக்கறை மாலதியின் மீது. 

பெரியபாபு – சோனா

மணீந்திரநாத் பாபு எனும் பெரிய பாபு தன் கையிலிருந்து நழுவிச் சென்ற பாலினின் நினைவில் வாழ்பவர். ஆனால் அவரைப் பற்றிய சித்திரம் மிக அலாதியானது. அவர் கண் கொள்ளா அழகு நிறைந்தவர், ஆஜானுபாகுவான தோற்றமுடையவர். அவர் நீரில் தொப்பலாக நனைந்து வாசலில் வந்து நிற்கும்போது அவர் மனைவிக்குத் தீர்த்தயாத்திரை முடித்து வீடு திரும்பிய ஒரு துறவியெனத் தோன்றும். ஆனால் அடுத்த கணமே கைப்பிடித்து காற்றில் ஆட்டம் போட ஏதுவான ஒரு இளைஞனெனத் தெரிவார். ஒரு கிரேக்க துன்பியல் நாடகத்திலிருந்து வழி தவறிய ஒரு வீரனைப் போன்றவன். ஜமீன்தாரின் வீட்டிற்குப் போகும்போது ட்ராயின் ட்ரோஜன் குதிரையைப் போன்று இருப்பதாக விவரிக்கப்படுவார். ஜலாலி நீரில் மூழ்கி இறந்தபோது, அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் மற்றவர்கள் திணறும்போது இவர் சடாரென நீரில் குதித்து அவளின் உடலை தன் தோள் மீது தூக்கி கரையேறுவார். இவரை தன் குலப் ‘பீர்’ என்று நினைத்து பிரமித்துப் போவார்கள் முஸ்லீம் மக்கள். இந்தத் தோற்றத்திற்கு நேர்மாறான மனம் கொண்டவர். கவிதைகளில் தன்னை தொலைத்து தூர தேசத்தில் பாலினுடன் கவிதை மீதேறியே சென்று விட முடியுமென கனவுகளில் வாழ்பவர். நிலத்தையும் நீரையும் மரங்களையும் காட்டி இதுதான் நாம் பற்றிக் கொண்டு வாழவேண்டியவை என்று சொல்ல நினைப்பவர். 

ஆனால் அவர் வாயிலிருந்து வருவதெல்லாம் “கோத்சோரத்சாலா” மட்டும்தான் – இதற்கென அறுதியான அர்த்தம் எதுவும் இல்லை. ஒரு வசவுச் சொல் எனக் கொள்ளலாம். ‘என் புண்களின் மீது உப்பைத் தோய்க்காதே’ என ஒரு அர்த்தம் உண்டு. எப்படியாயினும் ஒரு மொழி ஒரு சொல் மட்டுமே கொண்டு இயங்குமானால் அது எவ்வாறு இருக்கும் என்ற கற்பனை எழுகிறது. அத்தனை உணர்ச்சிக்கும் ஒரு சொல் மட்டுமே. விவாதங்களுக்கும் அரவணைப்புக்கும் என ஒரு சொல் மட்டுமே பயன்படுமென்றால் அது ஒரு மட்டற்ற சுதந்திரமாகத்தான் இருக்கும். ஜென் எண்ணங்களைப் போல சொல் ஒரு வீண் செலவு. ஐரோப்பிய/மேற்கத்திய மிகு புனைவுகளில் இப்படியான பாத்திரங்கள் வருவதுண்டு. மிகச் சமீபமாக ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைத் தொடரில் ‘ஹோடோர்’ என்ற ஒரு சொல்லை மட்டும் சொல்லும் ஒரு பாத்திரம் வரும். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தடையொன்றுமில்லை!

சோனாவிடம் பெரிய பாபு சொல்லும் மிக முக்கியமான வசனம் ஒன்றுண்டு, சொற்களற்ற மொழியில்தான். அது இந்த நாவலின் மையத்தைத் தொட்டுவிடக் கூடியது – “‘உன்னுள் விதை முளைக்கிறது சோனா! இன்னுங் கொஞ்சம் காலத்தில் நீ வாலிபனாகிவிடுவாய். இப்போது உனக்குப் புரியாத ரகசியம் அப்போது புரிந்துவிடும். இன்னும் பெரியவனானதும் இருபக்கமும் கரையில்லாத ஆற்றுக்குள் மூழ்கி விடுவாய் நீ. அப்படி முழுக முடியாவிட்டால் கரையில் அந்த ரகசியத்தைத் தேடுவாய். தேடிக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என் மாதிரியே பைத்தியமாகிவிடுவாய்’. இது தான் உணர்ந்ததை தன்னைப் பார்த்தே பெரிய பாபு சொல்லிக் கொள்வதைப் போன்றது. சோனாவும் தன் பெரியப்பாவைப் போல கற்பனைகளிலும் கனவுகளிலும் பறந்தலைபவன். “இந்த மண்ணும் பூவும் புல்லும் சாமியைவிட உண்மையானவை” – இது சோனாவிடம் பெரிய பாபு உணர்த்த விழைபவை. உண்மை அறிந்த மனமது. 

 சோனாவின் முகம் பெரிய பாபுவைப் போலவே இருப்பதாக அவன் பிறந்தபோதே சொல்லிக் கொண்டார்கள். சின்ன பாலின் என்று கூறும்படியான பாலினைப் போன்ற முகத் தோற்றமுடைய அமலாவின் மீது பதற்றமான ஈர்ப்பு கொண்டவன். உடல் மீறும் குழந்தை விளையாட்டொன்றில் தன்னையும் அமலாவையும் கண்டு கொண்டவன். ஆனால் பாத்திமா கமலா அமலாவின் இடையில் சிக்கி அலைகழிபவன். இருகரையும் தெரியாத ஆற்றில் தான் படகோட்டியாகிவிட்டதாகத் தோன்றும் சோனாவிற்கு. இம்மூவரையும் வைத்துக் கொண்டு நட்டாற்றில் படகோட்டினான் அவன். இம்மூவருமே அவனை விட்டு விலகிச் செல்லப் போகிறவர்கள். பின்பு இவன் கரையேறி அதன் ரகசியத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் பைத்தியாமாகிவிடுவானோ என்ற பதற்றம் அவனை நெருங்கி உணரச் செய்கிறது. பெரிய பாபுவையும் சோனாவையும் இரு கரங்களில் பற்றிக் கொள்ள வைக்கிறது. 

ஜோடன் – மாலதி – ஜலாலி

ஒருநாளும் தான் மாலதியாகிவிடக் கூடாது என்ற பதற்றத்தில் வாழ்பவள் ஜோடன். மாலதியைப் பார்க்கும் தோறும் குற்றவுணர்ச்சியில் உழல்பவள். ஜோடன் தன் பசியைப் போக்க பெரும் தீச்சுவாலையென பொங்கித் திரிபவள் – ““இந்தச் சனியன் பிடித்த உடம்புக்கு எப்போதும் பசி”. பதிமூன்று குழந்தைகளுக்குப் பிறகும் அல்லாவிற்கு தான் செலுத்த வேண்டிய வரி பாக்கி உண்டு என்று நம்புபவள். “இந்த மனித உடல் மண்ணைப் போல. அதை தரிசாக விட்டுவைப்பது குற்றம்.” பக்கிரி சாயுபுவால் கவரப்பட்டு, ஐந்தாண்டுகள் காத்திருந்து அவருடனே சென்றுவிடுபவள். அவள் உடற் பசி காட்டைக் கொள்ளாமல் அடங்கிவிடாதது. பிணங்கள் அடங்கும் காட்டுக்குள் சென்று பக்கிரியோடு மிச்ச காலத்தைக் கழிக்கிறாள். 

மாலதி – ஏரியில் முதன் முதலில் முதலை அகப்பட்டுக்கொண்ட நாளில் திருமணமானவள், ஏரிக்கும் அவளுக்குமான பந்தம் அங்கிருந்து தொடங்குகிறது. கணவனை இழந்து தன் சகோதரனின் வீட்டில் வாழும் இவள் மெல்லுணர்வுகளால் ஆளப்படுபவள். இவள் காற்றில் அலைந்தெறியும் விளக்குத் தீயைப் போன்றவள். சாமுவோ ரஞ்சித்தோ தன் பால்ய தோழர்களின் கருணைப் பார்வைக்கு ஏங்குபவள். இவளால் ஜோடனைப் போல காணுமிடத்திலெல்லாம் தீப்பற்றிக் கொள்ள முடியாது. தன் ஆண் வாத்தை தொலைத்துப் பரிதவித்திருக்கும் நேரத்தில் அமூல்யன் இவளை நெருங்க வேறொரு ஆண் வாத்தை கண்டெடுத்து இவளிடம் வருகிறான். இவள் “என் பிரியம் மாமிச வெறியை அணுகவிடாது!” என்கிறாள். மூன்று கொடியவர்களால் இவள் வன்புணரப்பட்டதும் நிலையழிந்து போகிறாள். ரஞ்சித்துடன் தொடர்ந்து செல்ல முடியாமல் ஜோடனுடன் தஞ்சம் புகுகிறாள். ஜோடனும் மாலதியும் வெவ்வேறு கலத்திலெறியும் ஒற்றை தீயைச் சுமந்து அலைபவர்கள். 

ஜலாலியின் தீ வயிற்றுத் தீ. அடுப்பெரிந்து கொண்டிருக்கும்போது தன் கணவனுடனான எதிர்பாரா கலவியால் அத் தீ ஊரெங்கும் பரவுகிறது. அவள் பசி ஊரை எறிக்கும் வல்லது. அவள் சோற்றுத் தீ படர்ந்து பற்றக் கூடியது. பசிக்காக அவள் வாத்தை திருடியும், நீரில் மூழ்கி கிழங்கு பறித்தும் வயிற்றை நிரப்புவதற்காக வாழ்ந்து மடிகிறாள்.

ரஞ்சித் – சாமு

மாலதியின் மீது அன்பு பொழியும் இரு துருவங்கள். இவர்களின் வருத்தமும் குற்றவுணர்வும் சமமானது. தன் லீக் கில் இணையும் ஜாப்பார்தான் மாலதியின் இந்நிலைக்குக் காரணம் என்று தெரிய வந்ததும் அவனால் அவ்வூரில் இருக்க முடியவில்லை. மாலதியைப் பார்த்துக் கொண்டு தன்னால் இயல்பாக இனி வாழ முடியாது என்ற முடிவிற்கு வருகிறான். தன் லீக் அங்கத்தினன் செய்த காரியத்திற்கான காரணம் தெரியுமென்றாலும் இது பாவச் செயல் என்பது அவன் அறியாததல்ல. ஊரை விட்டு விலகிச் செல்கிறான். ரஞ்சித் சுயநலமாய் தன் குறிக்கோளை நோக்கிப் புறப்படுகிறான். ஆனால் தன்னால் ஈர்க்கப்பட்டவள் மாலதி என்று அவன் அறிவான். “நாட்டிற்காக” என்ற காரணத்தைக் கொண்டிருந்தாலும் மாலதியை இங்கே விட்டுச் செல்வது தன்னுடைய சுயநலம் என்று உணர்கிறான். அவளை அழைத்துச் செல்கிறான். ஜோடனிம் சேர்ப்பித்துவிடுவான். நாட்டின் விடுதலைக்காக அவன் திரும்பி வர இயலா இடத்திற்குச் சென்றுவிடுவான். என்ன இருந்தாலும் அவன் ஒரு – “செல்ஃபிஷ் ஜெயண்ட்”.

பக்கிரி சாயுபு தானாக முளைத்தெழுந்த ஒரு “பீர்”. யாருக்கும் தீங்கு நினையாதவன். ஆனால் மாயங்களை உண்டு பண்ணி தன்னை ஒரு “பீர்” ஆக நிலை நிறுத்திக் கொண்டவன். அவன் செய்த மிகப் பெரும் மாயம், கந்தலாகக் கிடந்த மாலதியை அவள் அண்ணனிடம் சேர்த்ததுதான். அவன் அப்போது உண்மையான “பீர்” ஆகிவிட்டான். உடலிலிருந்து உயிர் வழிய வழிய அவன் இந்த நற்காரியத்தைச் செய்தான். இனி அவன் காலாகாலத்திற்கும் மாயங்கள் செய்து வாழ்வான் தொன்மக் கதைகளில்.

நுனிப் புல்லின் கனம்:

மிகப் பெரிய வாழ்க்கைப் புலத்தில் அரசியல் பின்னணியில் மனிதர்களின் உயிர்ப்பும் இறப்பும் பேசும் இந்நாவலின் மற்றொரு சிறப்பு அது கதை மாந்தர்களின் நுண்ணுணர்வுகளைச் சித்தரிக்கும் இடங்கள். ஒரு நுனிப் புல்லின் மீதிருக்கும் பனித்துளியின் எடையைப் போல மிக மெல்லியதாக ஆனால் மிகக் கூர்மையாக வெடித்து ஒளிரும் இடங்கள் இவை. 

அமலாவுடனான எல்லை மீறிய விளையாட்டை தன் மனதிலிருந்து எடுக்க முடியாமல் தவிக்கிறான் சோனா. ஆற்றங்கரையில் நின்று சத்தம் போட்டு தன் பாவச் செயலை சொன்னால் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறான். அம்மாவைப் பார்த்து வெகுநாளாகிவிட்டது. திரும்பிச் சென்றால் அம்மாவைப் பார்க்க முடியாமலே போகலாம் என்ற பதற்றம் கொள்கிறான். காரணம், பாவங்கள் செய்தால் அம்மாவின் உயிர் பறிக்கப்படும் என்ற பயம். ஒருவரியில் மின்னும் இந்தப் பயம் மிக ஆழமான சங்கிலிகளால் பின்னப்பட்டது. ஒரு குழந்தையின் பயம் எப்போதும் அம்மாவின் நலத்தின் மீதுதான். அதுவும் அப்பருவத்தில் தனக்கான தண்டனை என்பது அம்மாவை தன்னிடமிருந்து பறித்துக் கொள்வதுதான். இவ்வுணர்வு மிக மெலிதாக சோனாவின் பயத்தின் மூலம் வெளிப்படுகிறது.

வெகுநாட்களாக ரஞ்சித் கண்ணில் படாமல் போனதால் துயருறுகிறாள் மாலதி. அவளால் நிலை கொள்ள  முடியவில்லை. டாகூரின் வீட்டிற்குள் நுழைந்து பார்க்கிறாள். எதிர் வரும் பெரிய மாமியிடம் அவள் கேட்க எத்தனிக்கும்போது அவரே ரஞ்சித்தின் பெயர் சொல்லி வேறெதுவோ பேசுகிறார். தனக்கு முன்னால் ரஞ்சித்தைக் குறித்து பெரிய மாமி பேசிவிட்டதாலேயே தன்னால் அப்பெயரை மீண்டும் உச்சரித்து அவன் எங்கே எனக் கேட்க முடியாது என்று துணுக்குறுகிறாள் மாலதி. மன சஞ்சலங்கள் நீரில் அலையும் கோடுகள் போலத்தான். எவர் தொட்டும் கலைந்து போகக்கூடும்.

பெரிய பாபு பைத்தியமாகி அலைவதற்கு தான்தான் காரணம் என்று மணீந்திரநாத்தின் அப்பா குற்றவுணர்வில் தவிக்கிறார். ஒருவேளை பாலினுடன் பெரிய பாபுவை மணமுடித்து வைத்திருந்தால் இவன் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கிறார். ஆனால் அதற்கு நேரெதிரான சித்திரம் ஒன்று ஜமீந்தாரின் வீட்டிலிருந்து மேலெழுகிறது. அமலா/கமலாவின் அப்பா தன் வீட்டாரை எதிர்த்து வெள்ளைகார பெண்ணை மணமுடித்து வாழ்ந்து வருகிறார் கல்கத்தாவில். ஆனால் சமீபகாலமாக அவர்களின் இல்லற வாழ்வு சுகமிழந்து வருகிறது. துர்கா பூஜைக்கு தன் ஊருக்குச் செல்லும் சில காலம் முன்னரே தனித்திருக்கத் தொடங்குகிறார். பூஜைகளில் மூழ்குகிறார். அது அமலாவின் அம்மாவிற்கு ஒரு விலக்கத்தை உண்டு பண்ணுகிறது. தன் மனைவியிடம் பேசுவதைக் கூட தவிர்கிறார். வருடா வருடம் இதன் வீரியம் பெரிதாகி இல்லறம் உடையத் தொடங்குகிறது. தன் சொந்த ஊர் வந்திறங்கியதும், அமலா கமலாவிடம் அவர்கள் அப்பா தன் மண்ணை நேசிக்க வேண்டியதின் அவசியத்தைச் சொல்கிறார். அவர் முகம் களையிழந்திருக்கிறது. கல்கத்தாவிற்கும் அவருக்குமான தூரம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒருவேளை இப்படியான ஒரு சூழலை பெரிய பாபு அடைய நேர்ந்திருக்கலாம். இப்படி அவர் பைத்தியமாகி அலைவதற்கும் அவரின் அப்பா குற்றவுணர்ச்சியில் தன் உயிரை தேய்த்தழிப்பதற்கும் ஏதேனும் நியாயம் உண்டா என்ற கேள்வி எழுகிறது. எதைத் தேர்ந்தாலும் அதில் வருந்தி உழல்வதான வாழ்க்கையா இது?

பெரியப்பாவின் பைத்தியத்தை எப்படியாவது தன்னால் குணமாக்கிட முடியுமென்று நம்புகிறான் சோனா. அதற்கான அத்தனை செயல்களையும் செய்கிறான். அவருக்கு எண்களைச் சொல்லிக் கொடுக்கிறான். வாய்ப்பாடுகளை கற்றுத் தருகிறான். அவர் மாற்றம் கொள்கிறார் என்று நம்புகிறான். முதன்முறையாக பெரியப்பா தும்முவதைக் காண்கிறான். மனம் பிறழ்ந்த அவர் தும்முவது அவர் சொஸ்தமாவதின் அறிகுறி என்று நினைத்து ஆனந்தத்தில் துள்ளி குதிக்கிறான். உடலுக்கும் மனதிற்குமான வேறுபாடு அறியாத மழலையின் குதூகலம் அது. 

சோனா தெரியாத்தனமாக பாத்திமாவை தொட்டுவிட்டான். அதை தன் அம்மாவிடம் மறைக்கவும் முடியாமல் தவிக்கிறான். நல்ல பசியில் உணவின் முன் அமர்ந்த பிறகு உண்மை தெரிந்தால் அவன் அம்மா அவனை குளிக்கச் சொல்வாள். இருந்தும் உண்மை வெளி வருகிறது. அவனின் அம்மா கொதித்தெழுந்து அவனை அடித்து நீரடிக்கு அழைத்துச் செல்கிறாள். ஆனால் அவளின் அக்கோபம் அவன் பாத்திமாவை தொட்டுவிட்டதால் மட்டும் வருவதல்ல, தன் மாமியரின் சுடுசொல்லை எதிர்பார்த்து எழுவது. கூட்டுக் குடும்பத்தின் எரிச்சலும் சேர்த்து வெளிப்படுவதாக ஆசிரியர் ஒரு சிறு குறிப்பை உதிர்த்துவிட்டுச் செல்கிறார். இப்படியான மிக நுண்மையான உணர்வுகள் இக்கதைக்குள்ளிருந்து வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இவை இந்நிலமெனும் மாயச்சுழலில் நம்மை சிக்க வைக்கும் யதார்த்த சரடுகளாக உருக்கொள்கின்றன.

பிடி நழுவும் இறகு:

இந்நாவலின் தனித்தன்மை இது கற்பனாவாதத்தின் பலத்தில் நின்று யதார்த்த வாழ்வைப் பேசுகிறது. ஒரு அரூபத் தன்மை கொண்டு கவிதை சாயலில் மொத்த கதையும் விரித்து வைக்கிறது. இது கணக்கிலா உருவகங்களும் படிமங்களும் மேலெழுந்து வர அத்தனை சாத்தியங்களையும் உருவாக்கி விடுகிறது. வாசகனின் கற்பனைக்கு அவன் விரித்தெடுப்பதற்கு போதிய இடங்களை விட்டுச் செல்கிறது. இது உண்மையில் வாசகனைக் கொஞ்சம் திக்குமுக்காடவே செய்யும். சற்று சுதாரித்து கனவுக்குள் நுழைந்தால், ஆசிரியனுக்கு இணையான கற்பனை உலகை உருவாக்கிக் கலைத்து மீண்டும் அடுக்கி உருமாற்றி அதில் திளைக்க முடியும்.

பறவை என்பது இந்நாவலின் பிரதான குறியீடு. கை நழுவிச் செல்லும் அத்தனையும் ஒட்டு மொத்த வாழ்வு உட்படவும் அது குறித்து விடுகிறது. பெரிய பாபுவின் பைத்தியக்காரத்தனம் ஒரு அபாயமற்ற பிறழ்வு என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவரின் கற்பனை வீரியம் கொண்டு அவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறார். “கனவு மாளிகையில் வாழ்ந்த பறவை அவருடைய பிடியிலிருந்து நழுவி பறந்து போய்விடுகிறது. வியாபாரிகளின் நாட்டை கடந்து ஜலதேவதைகளின் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்து அங்கே சோகித்திருக்கும் ராஜகுமாரனின் தலையில் உட்கார்ந்துகொண்டு அழுகிறது. அப்போது பெரிய பாபுவின் மனசில் ஏதோ ஒரு பெரும் வேதனை ஏற்படுகிறது. அவர் தன் கையை தானே கடித்துக் கொள்கிறார்.” இங்கே அப்பறவை சென்று சேர்வதும் ஒரு சோகித்திருக்கும் ராஜகுமாரனிடம்தான். தான் எதுவும் செய்யவியலா நிலையின் அழுத்தம். கை நழுவும் ஒன்றைப் பிடிக்க முடியாத தவிப்பு. தன் கையை கடித்துக் கொள்கிறார். 

ஜமீன்தார் வீட்டு யானைக்கு அடிக்கடி மதம் பிடிக்கிறது. அது கட்டற்று திரிகிறது. ஆனால் அதன் மீது பெரிய பாபு ஏறி நாட்கணக்கில் ஊர்வலம் வர முடியும். எங்கும் சுற்றித் திரிய முடியும். அவர் முன்னால் அந்த யானை மண்டியிட்டு நிற்கிறது. பெரிய பாபுவும் கட்டுக்கடங்காத ஒரு வேழம்தான். அவர் நீரிலும் காட்டிலும் சுற்றித் திரியும் சித்திரம் ஒரு யானைக்கு ஒப்பானது. பாறை, சேறு, முட்காடு, முதலை மிதக்கும் ஆறு என்று எதையும் பார்க்காது இறங்கி ஏறும். உணவின்றி நாட்கணக்கில் சுற்றித் திரியும். யானை பெரிய பாபுவின் குறியீடாக இக்கதையில் சுற்றித் திரியும் ஒரு விலங்கு.

ஜலாலி நீரில் மூழ்கி இறக்கும் காட்சி ஆசச்சிறந்த ஒரு படிமமாக உருக்கொள்கிறது. அவள் நீர்க் கொடிகளில் சிக்கி தன் மூச்சை காற்றுப் பந்துகளாக நீருக்கு மேலே அனுப்பி சொட்டு சொட்டாக உயிரை உதிர்க்கும் தருணம் ஒரு பெரிய கஜாரா மீன் அவளை நெருங்கி வருகிறது.  அவளை உண்டுவிடுமோ என்று பயப்படும் அளவிற்கு பெரியதாக இருக்கிறது. அதன் உடல் முழுதும் மனிதர்கள் எறிந்த ஈட்டியினால் ஏற்பட்ட வடுக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த மீனை ஒரு எளிய சமூகம் என கொண்டால் அது ஆதிக்க மனிதர்களால் ஆண்டாண்டு காலமாய் நிகழ்த்தப்பட்ட வன்முறையின் எச்சமாக இன்று நின்று கொண்டிருக்கிறது.  இவளைக் கண்டதும் தன்னிடத்தில் ஒரு மனித பெண் சிக்கிவிட்டாள் என்று குதூகலிக்கிறது. திரும்பிச் சென்று தன் உலகத்தாரிடம் சொல்லி அவர்களை அழைத்து வரப்போகிறது. இவ்விடத்தில் இந்நாவல் ஒரு மீனைப் போல சற்றே துள்ளி யதார்த்தம் கற்பனாவதம் எனும் தன் நீர்ப் பரப்பை மீறி மாய யதார்த்தவாதத்தை சுவாசித்து பின் நீருக்குள் திரும்புகிறது. மீனின் மனவோட்டங்கள் இங்கே துள்ளியெழுந்து அமிழ்கிறது.

இம்மனிதர்களின் வருங்காலமும் அவர்களின் தன்னிலையும் படிமங்களாக நாவல் முழுதும் மின்னிச் செல்கிறது. ஜாப்பரின் நடவடிக்கைகளால் கலங்கி நிற்கும் மாலதியின் அருகில் ஹாட்கிலாப் பறவையை ஒரு பாம்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது. சாமுவை நோக்கி அப்போது அவள் நின்றிருக்கிறாள். ஆனால் அவனால் அப்பறவையை மீட்க முடியவில்லை. இது பிற்பாடு ஜாப்பரால் மாலதி தன் மானமிழக்கும் நிலை காட்சியாக அமைகிறது. சாமுவால் அப்போதும் ஒன்றும் செய்ய முடியாது. குற்றவுணர்வு பொங்க அவன் அவளிடமிருந்து விலகிப் போவான்.  

பாத்திமாவிற்கு ஒரு வண்ணத்துப் பூச்சியை முடிச்சிட்டு தருவான் சோனா. அது அவர்கள் இருவருக்கும் ஒரு அன்புப் பாலமாக இருக்கும் என்று அவன் நம்பினான். ஆனால் சாமு அதைப் பிரித்து பார்க்கும்போது அவ்வண்ணத்துப் பூச்சி இறந்து போயிருக்கும். இறுதியில் சோனாவைப் பிரிந்து பாத்திமா செல்லும் காட்சிக்கு ஒப்பான துயரத்தை ஏந்தியிருக்கும் அப்பூச்சியின் மரணம். 

மாலதியை கசங்கிய கோலத்தில் கண்டெடுக்கும் ஜோடன், பக்கிரியின் உதவியோடு அவளை தூக்கிச் செல்வாள். அப்போது அவளின் கால்களைப் பார்க்கும் பக்கிரி அது துர்கையின் பாதங்களை ஒத்திருப்பதாகத் தோன்றும். இரத்தம் அவள் முகமெங்கும் தெரித்து குங்குமத்தால் பூசப்பட்டவளைப் போல காட்சியளிப்பாள். தங்கத்தில் ஏது அசுத்தம், தண்ணீரில் ஏது எச்சில் என்று கூறுவான் பக்கிரி. அவனுக்கு மாலதி துர்கையேதான். 

ஜமீன்தாரின் ஊரில் விசர்ஜனத்திற்கு தயாராக இருக்கும் துர்கையின் சிலையொன்று. அதனிடத்தில் சென்று விளையாடிக் கொண்டிருப்பான் சோனா. சிங்கத்தின் வாயில் கைகளை விட்டும் குதிரையின் மூக்கில் குச்சி நுழைத்தும் சிரிப்பான். அப்போது துர்கையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிவதாகத் தோன்றும் அவனுக்கு. கரைந்து போகப் போகிறோம் என்ற வருத்தம் துர்க்கைக்கு என்று நினைப்பான். ஆனால் வங்காள நிலமெங்கும் உதிர்க்கும் பெண்களின் கண்ணீர் அது. அதை உணர்ந்து கொள்ளும் மனம் சோனாவிற்கும் பெரிய பாபுவிற்கும் மட்டுமே உண்டு. 

துர்கா பூஜைக்கு எருமையின் தலையை துண்டாக்குவதும் அதை சுமந்துச் செல்வதும் இருவேறு நிலங்களிலும் அக்கொண்டாட்டங்கள் ஒன்று போல இருப்பதும் அவர்களின் புராதன மனதை குறிக்கிறது. அத்தனை பூஜைகளும் ஒரு பெரும் வன்முறையின் துண்டாட்டோடு இணைந்திருக்கிறது. தூக்கிச் செல்லும் எருமையின் உடல் மீது வைக்கப்பட்ட அதன் தலை உருண்டு தரையில் விழுவதும் அது உதாசீனப்பட்டு கிடப்பதும் மனம் குலைக்கும் சித்திரத்தை உருவாக்குகிறது. 

வெட்டி வெட்டிச் செல்லும் இந்நாவலில் காட்சிகளின் சித்தரிப்பு பெரும் பலம். அது சில இடங்களில் முழுமை கொள்ளாமல் நகர்ந்து செல்வது அக்காட்சிகள் படிமமாக உருக்கொள்வதற்கு வழி வகுப்பதாகத் தோன்றுகிறது. மேலும் மேலும் யோசிக்கையில் அவை வெவ்வேறு அர்த்தங்களைத் தெளித்தபடியே இருக்கின்றன.


தொன்மமேறுதல்

இந்நாவலின் வெளியெங்கும் நாடோடிக் கதைகளும் புராணக்கதைகளுமாக விரவிக் கிடக்கிறது. சிவபுராணத்தில் ஒரு வங்காள நாடோடிக் கதையின் குறிப்பு இக்கதையில் வருகிறது. பெரிய மாமியிடம் கிழவர் தன் மனக் கிலேசத்தை வெளிப்படுத்துகிறார். தன் மகன் பைத்தியம் என்று தெரிந்தே நான் உனக்குக் கட்டி வைக்கவில்லை என்று வருந்துகிறார். அப்போது கிழவரின் மனைவி பத்மபுராணம் கேட்கச் சென்றிருந்தார். நீங்கள் செல்லவில்லையா என்று பெரிய மாமி கேட்க “நானே பத்மபுராணம்தானே” என்கிறார். அவர் தான் சந்தா சாகர் என்றும் பெரிய மாமி பேஹூலாவின் பாத்திரத்தையும் ஏற்றிருக்கிறார் என்கிறார். அந்நாடோடிக் கதையில் சந்தா சாகர் செய்யும் தவறுக்காக அவரின் மகன் மீது பாம்பு ஒன்று ஏவப்படுகிறது. அதில் உயிர் பிரியும் தன் கணவனுக்காக பேஹூலா செய்யும் பிரயத்தனங்களே அக்கதை.

ஜோட்டனை மீட்டு அவள் அண்ணனிடம் சேர்க்க பக்கிரி கிளம்புகிறார். கழுத்திலும் கையிலும் அவர் அணிந்திருந்த கண்ணாடிக்கல் மாலைகளும் தாயத்துகளும் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து ஒலியெழுப்பின. அப்போது அவரைப் பார்த்தால் மாலதிக்கு கண்வ மகரிஷி சகுந்தலையை அரசனிடம் அழைத்துச் செல்வதைப் போல தெரிகிறது. அவர் தான் உள்ளூர படும் உபாதையைக் காட்டிக்கொள்ளாமல் துடுப்பு வலித்து முன்னேறிச் சென்றார். அவர் அக்காரியத்தைச் செய்து முடித்ததும் தான் ஒரு தொன்மமாக உருமாறும் வழியைச் செய்கிறார். நரேந்தாஸிடம் மாலதியை சேர்ப்பித்த அதே நேரத்தில் இடுகாட்டில் தான் உயிர் விட்டதாக ஜோடன் மூலம் ஊர் அறியச் செய்கிறார். அவர் தொன்மக் கதைகளின் மாயப் ‘பக்கிரி’யாக உருவெழுகிறார்.

அமலா சோனாவுடன் சேர்ந்து கர்ண ஜாத்ரா காண்கிறாள். அதில் கர்ணனின் கடைசி புதல்வனாக போரில் மரிக்காத ஒரே மகனான விருஷகேதுவாக நடிக்கும் ஒருவனின் முகம் சோனாவை நினைவூட்டியது அமலாவிற்கு. பைத்தியக்கார பெரியப்பாவின் அருகில் அமர்ந்திருக்கும் சோனாவை பார்க்கிறாள் அவள். மேடையில் ஒளிரும் பாத்திரங்கள் இவர்களாகத் தோன்றுகிறது. கர்ணனிற்கு ஒப்பான பித்து குணம் கொண்ட ஒருவரின் அசாதாரணமான பித்ரு பக்தி. அப்பைத்தியக்கார மனிதர் காலை அசைத்தால் சோனாவின் தூக்கம் கலைந்துவிடுமென்று நேராக அமர்ந்திருக்கிறார்.

சோனாவிடம் அமலா கல்கத்தாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததும், அவனின் கற்பனையில் பெரிய வீடுகளும் அரண்மனைகளும் கோட்டைகளும் எழுகிறது. கற்பனையில் ஒரு ராஜகுமாரனைப் போல வலம் வருகிறான். பிரிதிவிராஜ், ஜயசந்திரன் சம்யுக்தையின் சுயம்வரம் எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன. அவன் ஒரு பூங்காவில் தன் குதிரையுடன் ஒளிந்திருக்கிறான். அவன் ராஜகுமாரியை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடுகிறான். அவன் மனக் கண்ணில் வெள்ளைக் குதிரை தோன்றியது. அதன் மேல் அமர்ந்திருக்கிறான் சோனா. அவனுக்கு முன்னால் அமலா. அவளைக் கூட்டிக்கொண்டு ஆறு, வயல், காடுகளைக் கடந்து பெரியப்பாவின் நீலகண்ட பறவையைத் தேடிப் போவான் அவன்.

*****


இந்நாவலை தமிழுக்கு தந்ததிற்காக எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தமிழுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கூட கிடைக்கப்பெறாத இப்பெரும் இலக்கிய ஆக்கத்தை தமிழுக்கு தருவித்திருக்கிறார். தன்னலமற்ற செயல்களால்தான் ஒரு சமூகம் உய்விக்கப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சுயசரிதை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுகிறது. இவர் மொழிபெயர்த்த ஆக்கங்கள் அத்தனையையும் தேடிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது.

நீராலான ஒரு நிலத்தின் மனிதர்கள் வாழ்வு சதா கனன்று கொண்டேயிருக்கிறது. மனிதர்கள் நடமாடும் கங்குகளாகத் திரிகிறார்கள். எதையாவது பற்றி எரிந்து அழிந்து விடவேண்டுமென்ற வேட்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த ஏரியின், ஆற்றின் ஆழம் இன்னதென்று அறியாதவர்கள். சில நேரம் மண் தென்படுகிறது, சில நேரம் கொடிகள் சூழ்கிறது. ஆழம் என்ற ஒன்று அந்நீருக்குப் பொருந்தா. அந்நீரில்தான் மனிதர்களின் பசியடங்குகிறது. நனைந்து உதறி மேலெழுந்ததும் அவர்கள் கனன்று பற்றியெரிகிறார்கள். ஜலாலியின் பசித் தீ அவர்களின் கிராமத்தை எரிக்கிறது. கலவரத்தின் நெருப்பு உயிர்களை கொளுத்திச் செல்கிறது. நீர் சூழ்ந்த நிலத்தை நெருப்பு, உடலால் மனதால் பசியால் மானத்தால், துளிர்விட்டு ஆள்கிறது.

நீரைப் பார்க்கும் போதெல்லாம் அதில் குதித்து உயிர்விட வேண்டுமென்று எண்ணுவதாக இந்நாவலில் ஒரு வரி வரும். பெரும் நீர்ப்பரப்பைக் காணும்போதெல்லாம் அப்படியான ஒரு பித்து எழாமல் இருக்காது. சதா கைகளை நீட்டி விலகிச் செல்லும் ஒரு பறவையின் பின்னால் அலைவது முடிவுறும்போது கரையற்ற நீரில் மூழ்கி ஒரு பறவையாக மேலெழவே உள்ளம் இரங்கும். வாழ்வென்பதே ஒருமுறையாவது கற்பனையில் மரணித்து பின் முளைத்தெழுந்து சலிக்கச் சலிக்க உயிர்த்திருப்பதுதானே..!!!!