Sunday, January 5, 2020

ஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்

ஈரோடு சிறுகதை முகாமிற்காக எழுதிய கட்டுரை. ஜெயமோகன் தளத்தில் இக்கட்டுரை வெளியாகியது.

https://www.jeyamohan.in/125933#.XhHEIEUza00


தற்கால ஆங்கில இலக்கியத்தில் குறிப்பாக 2010 க்குப் பிறகான நேரடி ஆங்கில எழுத்துக்களில் சிறுகதைகளின் இடம் மற்றும் அதன் போக்கை வாசகப் பார்வையாக அனுகுவதே இச்சிற்றுரையின் எண்ணம். நவீன இலக்கியத்தில் ஆங்கில எழுத்துலகின் மையமாக உருவெடுத்திருக்கும் அமெரிக்காவின் சிறுகதைகளை முன்வைத்தே ஆங்கில சிறுகதைகளின் இடத்தை அனுமானிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஆங்கில சிறுகதைகளின் பட்டியலை நோக்குங்கால் பெருவாரியான சிறந்த கதைகள், விருது பெற்றவைகள் புலம் பெயர்ந்தவர்களின் கதைகளாகவே இருக்கிறது. அதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள முயல்வதும் புலம் பெயர்ந்த ஆசிரியர்கள் ஒரு சிலரை அறிமுகப்படுத்துவதும் கூட இவ்வுரையின் நோக்கம்.

14ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கில இலக்கியத்தின் தந்தை என அறியப்படும் Geoffrey Chaucer தொடங்கி 16ம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் ஆரம்ப காலம் வரை கவிதைகளே பிரதானமாக இருந்தது. பிரெஞ்ச் இத்தாலிய மற்றும் செல்டிக் இலக்கியங்களை ஒத்து ஆங்கில ஈரடிச் செய்யுள்கள் இயற்றப்பட்டது. (Rhyming Couplets). 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உணர்ச்சி மிகுந்த பாடல் வரிகளைப் போன்ற கவிதைகள் வெளிவரத் தொடங்கின. Thomas wyatt மற்றும் Henry Howard இத்தாலியர்களைப் பின்பற்றி இயைபுகள் (Rhyming) அற்ற வரிகளை எழுதத் தொடங்கியதுதான் க்ஷேக்ஸ்பியரின் sonnet களுக்கு அடித்தளமாக அமைந்தது. மறுமலர்ச்சி காலகட்டத்தில் பிரபலமான நாடகக் கலையை முழுமையாக தனதாக்கிக் கொண்டவரும் ஷேக்ஸ்பியரே. பின்பு வரலாற்று நாயகர்களை அடிப்படையாக கொண்டு காவியங்கள் இயற்றப்பட்டன. உதாரணமாக ஹோமரின் இலியாட் மற்றும் ஒடிஸ்ஸி, ஜான் மில்டனின் பாரடைஸ் லாஸ்ட். இதன் ஒரு கூறாக உருவான அரசியல் மற்றும் உடலியல் அங்கத நாடகங்கள் ஒரு பிரிவில் கொஞ்சம் உருமாறி உரைநடைகளும் புதினங்களும் தோன்றத் தொடங்கியது.

பின்புதான் ஒரு திருப்புமுனையாக 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற்பனாவாத காலகட்டம் தொடங்கிற்று. வில்லியம் ப்ளேக், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் தொடங்கி பிற்காலத்தில் ஜான் கீட்ஸ் மற்றும் ஷெல்லி வரை தொடர்ந்தது. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் சார்ல்ஸ் டிக்கென்ஸ், வாஷிங்டன் இர்விங் போன்ற நாவலாசிரியர்கள் பிரபலமடைகிறார்கள். இவர்களுக்கிடையேதான் எட்கர் ஆலன் போ சிறுகதையெனும் வடிவத்தை முறையாக ஒரு இலக்கிய வகைமையாக முன் வைக்கிறார். சிறுகதைகளின் அழகியல் குறித்து அதன் அவசியத்தின் மீது ஒரு விவாதத்தை உருவாக்குகிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுகிய வடிவ சிறுகதைகள் பிரிட்டனிலும் எழுதப்பட்டிருந்தாலும் எட்கர் ஆலன் போவை ஆங்கில சிறுகதை எழுத்தின் தந்தையென்றும் அமெரிக்கா முறையான ஆங்கில சிறுகதை வடிவத்தை தோற்றுவித்த நாடு என்றும் கருதப்படுகிறது. அன்று முதல் இலக்கிய வகை மாதிரிகளை உருவாக்குவதிலும் சிதைப்பதிலும் அமெரிக்காவே முன்னிற்கிறது.

ஃபிலிப் ராத்

ஆங்கில இலக்கியம் ஆரம்பம் முதலே புதினங்களையே மையமாகக் கொண்டு இயங்கி வந்திருக்கிறது. இடையிடையே சிறுகதைகள் மின்னி மறைந்தாலும் பிரதானமாக நாவல்களை வாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் ஆங்கில வாசகர்கள். இதற்கு பள்ளி பருவம் முதலே அவர்களுக்கு வாசிப்பதும் எழுதுவதும் ஒரு பாடமாகவே அமைவது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். அன்றாடத்தில இருந்து துண்டித்து தன்னை ஒரு பயணத்தில் தொலைத்துக் கொள்வதைப் போன்ற அனுபவத்தை கொடுக்கும் கருவியாக வாசிப்பை நாடும் பெரும்பான்மையான ஆங்கில வாசகர்களுக்கு இந்த குறுகிய வடிவ கதைகள் உதவவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அச்சு ஊடகங்கள் பெருகத் தொடங்கிய காலகட்டத்தில் சிறுகதைகள் அதிகம் எழுதப்பட்டது. 1948 ல் ஷெர்லி ஜாக்ஸன் தொடங்கி ஹெம்மிங்க்வே, ஜே.டி. சாலிஞ்சர், பிலிப் ராத், ப்ராங்க் ஓ கானர் மற்றும் ஜான் அப்டைக் வரை சிறுகதைகளை பிரபலமடையச் செய்தார்கள். மினிமலிசம் பரவி இலக்கிய படைப்புகளின் மீது பெரும் பாதிப்பு செலுத்தியபோது ரேமண்ட் கார்வர் போன்றவர்களின் சிறுகதைகள் பெரும் வரவேற்பை பெற்று சிறுகதைகள் வாசகர்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கை அடைந்தது.

ஆனால்,1980 க்கு பிறகு அடுத்த முப்பது வருடங்களில் சிறுகதைகள் ஆங்கில இலக்கிய பரப்பில் அதன் இடத்தை இழந்தே இருந்தது. நாவல்கள் தாக்கு பிடிக்க காரணம் வெவ்வேறு வடிவங்களில் அது தன்னை உருமாற்றிக் கொண்டதினால்தான். 2000க்குப் பிறகு நாவல்கள் எழுதப்படுவதே சினிமாவிற்கென்றானது. பிரபலமடையும் நாவல்கள் அனைத்தும் சினிமாவின் திரைக்கதையை ஒட்டியே எழுதப்படுகிறது. கதைக் களங்களும் பாத்திரங்களும் சினிமாத்தன்மையுடன் இயற்றப்பட்டது. மின்னணு ஊடகங்கள் பெரும் புழக்கத்திற்கு வந்த இந்த காலகட்டத்தில் நவீன வாசகனின் கவனத்தைக் கோரவும் வாசிப்பை தக்க வைக்கவும் நாவல்கள் விதவிதமான வடிவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. புத்தகம் வாசிப்பதையே ஒரு விளையாட்டாக மாற்றும் அளவிற்கு ஜாலம் காட்டின. கதைக்கருக்களும் ஆழமற்று பதின்ம வயதினருக்கு ஏற்றவையாக அவர்களின் மனங்களைப் போலவே சட்டென சினுங்கும் தன்மை கொண்டிருந்தன. உதாரணமாக Illustrated Novel எனும் வகை. ஐம்பது சதவிகிதம் எழுத்தாகவும் மீதி படங்களாகவும் தொகுக்கப்படும். ஒரு கதையை நாவலாகவும் காமிக் புத்தகமாகவும் மாறிமாறி வாசித்ததை போன்ற உணர்வை கொடுக்கும். Digi Fiction – முழு நாவலையும் படிக்க வேண்டுமெனில் புத்தகமாக கொஞ்சமும் அதைத் தொடர்ந்து வீடியோ வடிவில் காட்சிகளாகவும், பின்பு வலைத்தளங்களில் மீதி கதையையும் காமிக் வடிவிலோ அல்ல எழுத்தாகவோ தொடர வேண்டும். ஒரு ரிலே ரேஸ் போல தாவி தாவி ஒரு நாவலை படிக்க வேண்டும். பின்பு முக்கியமாக Chick lit or Chick Literature எனும் மிகப் பிரபலமான நாவல் வகை. இளம்பெண்களை நோக்கி எழுதப்படும் நாவல்கள். பெண்களை மையப்படுத்தி எழுதப்படும் இக்கதைகள் மிக இலகுவான கதைக் களங்களையே கொண்டிருக்கும். பெரும்பாலும் பள்ளிப் பருவ காதல் கதைகள். The Fault in Our Stars அப்படி சமீபத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட ஒரு நாவல். திரைப்படமாகவும் பிரபலமானது.
கார்வர்


இத்தகைய வகை மாதிரிகளோடு மட்டும் நில்லாமல் நாவல்கள் வெறும் 150 பக்கங்களுக்குள்ளாக வெளிவரத் தொடங்கியிருப்பது சிறுகதைகளின் இடத்தை இல்லாமலே ஆக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் சொல்வதற்கு கதைகள் அற்றவர்களை போல ஒரே தன்மையான கதைகளை மீண்டும் மீண்டும் விரித்து எழுத நாவல்களே அவர்களுக்கு உதவுகிறது. சிறுகதை உத்தியை கிட்டத்தட்ட தொலைத்தவர்களாகவே ஆங்கில எழுத்தாளர்கள் திகைத்து போய் நிற்கிறார்கள்.

இதனால் சிறுகதை வாசகர்கள் மீண்டும் வெளிநாட்டு சிறுகதைகளை மொழிபெயர்ப்பின் மூலம் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆண்டன் செக்காவ் இன்று மீண்டும் பிரபலமான சிறுகதையாசிரியராக அமெரிக்காவில் வலம் வருகிறார். டால்ஸ்டாய் சிறுகதைகள் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு பரவலாக வாசிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பிற்கென்று அமெரிக்காவில் Asymptote விருதுகளை வழங்கி வருகிறது. பிரிட்டானிய Independent விருதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் சிறுகதைகளுக்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. பின்னர் இது ‘மேன் புக்கர்’ பரிசுடன் இணைந்தது. அரபு நாட்டிலிருந்து வரும் சிறுகதைகளும் கிழக்காசிய சிறுகதைகளும் இன்று அதிகம் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகிறது.

சிறுகதைகள் இன்று பெரும்பாலும் இணைய பத்திரிக்கைகளில் தான் அதிகம் வெளியிடப்படுகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டது மொழிபெயர்ப்பு சிறுதைகள்தாம். தான் அறியாத உலகை வாழ்வை ஊர்களை மனிதர்களை அறிந்து கொள்ள இயலுவதாலேயே மொழிபெயர்ப்பு சிறுகதைகள் பெரும் வரவேற்பை பெறுகிறது இன்று. நேரடி அமெரிக்க ஆங்கில சிறுகதைகள் நியூயார்க்கில் கலிஃபோர்னியாவில் உள்ள பெரு நகரங்களில் அவர்கள் அறிந்த அவர்கள் புழங்கும் பகுதிகளிலிருந்து மட்டுமே கிளம்பி வருகிறது. அக்கதைகளும் சிறு பெட்டிக்குள் அடைபட்ட விசைப் பந்துகளைப் போல குடும்பச் சிதைவுகள், பேய்க் கதைகள், வேற்று கிரக வாசிகள், போதைப் பிறழ்வுகள் என்று தன்னுடைய தேடல் எது தான் கண்டடைவது எது என்பதை அறியாமல் சுற்றி வருகிறது.

இந்நிலையில்தான் ஒரு சிறு அலையைப் போல புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நேரடி ஆங்கில சிறுகதைகள் மேலெழத் தொடங்கியுள்ளன. இவர்கள் அகதிகளாகவோ அல்ல தொழில் நிமித்தமாக 80 களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் குடி பெயர்ந்தவர்களின் முதல் அல்ல இரண்டாம் தலைமுறை மக்கள். இவர்கள் மேற்கத்திய குடிமகன்களாகவே வளர்ந்தாலும் தன் வேரை கண்டடையும் தேடல் கொண்டிருப்பதினால் இரண்டு கலாசாரங்களுக்கு இடையிலான மோதல் இவர்களுக்குள் கேள்விகளை எழுப்புகிறது. முதல் தலைமுறை தன் இருப்பை நிலை நாட்டும் போராட்டத்தில் தன் பூர்வீகத்தை மொத்தமாக மறந்து மேற்கத்திய வாழ்வில் ஒன்றினையும் முனைப்பில் இருக்க அடுத்த தலைமுறையோ தராசு தட்டின் நடு முள் போல இரு கலாச்சாரங்களையும் அளந்து பார்க்க முற்படுகிறார்கள். வெற்றி பெற்றவர்களின் வெற்றிகளை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஏற்கனெவே விவாதிக்கப்படும் உறவுச் சிக்கல்கள் இவர்கள் பார்வையில் வேறொரு பரிணாமம் பெறுகிறது. வேறொரு தளத்தில் அலசுவதால் அன்றாடப் பிரச்சினைகள் கூட புது உருவம் பெருகிறது. இலக்கியம் பொதுவெளிக்கு எதிராக நின்று உரத்து பேசுவதாலும் சராசரிகளுடன் முரண்படும் முனைப்பில் இருப்பதாலும் உலகம் முழுதும் கிளம்பியிருக்கும் நிற இன பேதங்களின் பூதாகர பயங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டியிருக்கிறது. இச்சூழலும் கூட கலாச்சாரங்கள் முயங்கியும் முரண்பட்டும் வெளிப்படும் கதைகள் பரவலாக்கப்படுகிறது என்றும் தோன்றுகிறது.


மிகப் பிரபலமான பல புலம்பெயர்ந்த சிறுகதையாசிரியர்களின் பட்டியலிலிருந்து நால்வரின் அறிமுகமும் அவர்கள் கதைகளின் பேசுதளங்களை பின்வரும் பகுதிகளில் அறிமுகப்படுத்திக் கொள்வதின் மூலமாக இன்றைய அரசியல் சூழலில் இலக்கியத்தில் இவர்கள் முன்னனியில் வந்து நிற்பதின் அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.

யியுன் லீ:
கடந்த பத்தாண்டுகளில் அதிக கவனமும் விருதுகளையும் குவித்த படைப்பாளிகளில் விமர்சகர்களின் பட்டியல்களில் தவறாமல் இடம் பிடிக்கும் பெயர் யியுன் லீ (Yiun Li). இவர் ஒரு சீன அமெரிக்க எழுத்தாளர். தன்னுடைய 28வது வயதில் அமெரிக்காவிற்கு பட்டப் படிப்புகளுக்காக வந்தார். 2005 லிருந்து தொடர்சியாக தன்னுடைய சிறுகதைகளுக்காக விருதுகளை வென்றிருக்கிறார். 2012 ல் பெரும் மன அழுத்தம் காரணமாக இருமுறை தற்கொலைக்கு முயன்று, எழுதுவதையும் முற்றிலுமாக நிறுத்தியிருந்தார். 2015லிருந்து மீண்டு வந்து இப்போது தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வருகிறார். இவருக்குள்ளே எஞ்சியிருக்கும் சீனா ஒரு மாய டிராகனைப் போல இவரின் சிறுகதைகளில் இருந்தும் இல்லாமலும் வெளிப்படுகிறது. சீனாவின் தொன்மங்களும் பண்பாடும் மார்க்ஸியத்திற்கு பிறகான குழப்பங்களும் இவரின் கதைகளில் உருவகங்களாக உருமாறுகிறது.
பெற்றோரை விட்டு வேற்று நாடு புகும் அனைவருக்கும் தாய் தந்தையுடனான உறவுதான் மிகச் சிக்கலாக மாறுகிறது. உறவுகளை இறுகக் கட்டி அதன் மீது எழும்பி நிற்கும் பண்பாடுகளிலிருந்து வளர்ந்து வரும் இடம் பெயர்ந்தவர்கள் பெற்றோரை விட்டு கடல் தாண்டி நிற்கும் குற்ற உணர்வும் எதிர் முனையில் நாகரீகங்களின் மாற்றங்களையும் தனிமனித சுதந்திரம் எனும் நவயுக கோட்பாட்டை புரிந்துகொள்ள முடியாத பெற்றோர்களின் மரபார்ந்த மனங்களும் காரணங்களாகிறது.
இங்கு வெளியான ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள் – https://www.jeyamohan.in/109212#.XW-9zZMzaT8  கதையிலும் முதல் தளத்தில் பிரதானமாக நிற்பதுவும் இதுவே. தந்தை மகளுக்கான பிரிவு அவர்கள் புரிந்து கொண்ட காலாசாரத்தின் அடிப்படையில் தொடங்குகிறது. திருமணத்தை மீறிய உறவின் தொடக்கமும் அதை எதிர்க்கும் பண்பாட்டு அடக்குமுறையினாலும், அப்பா தன்னுடைய அடையாளத்தை மறைத்து ஒரு பொய்யான வாழ்கையை அந்நிய நாடு வரையிலும் தொடர்கிறார். மகள் தன்னுடைய உறவை மறைக்க கூட அவசியமில்லாத ஒரு பண்பாட்டில் வாழ்கிறார். இரண்டாம் தளத்தில் மொழி, உரையாடலின் முக்கியத்துவம் அல்லது அதன் அவசியமின்மை. அது உறவுகளை உடைக்கும் கண்ணியாக மாறுவது அல்லது உறவுகளை உருவாக்கும் காரணியாக மாறுவது. உரையாடலே ஒரு உறவை உருவாக்கும் அடிப்படை காரணியென்று மகள் தன் திருமண உறவை முறித்துக் கொள்கிறாள். அதன் காரணமாகவே தன் புது உறவையும் அமைத்துக் கொள்கிறாள். ஒரு புது மொழி ஒருவனை புது மனிதனாக்கும் என்று நம்புகிறார். அந்நிய மொழியில் தன்னை கண்டடைகிறாள். ஆனால் தந்தையோ ஆத்மார்த்தமான உறவிற்கு மொழி அவசியமில்லையென்று நினைக்கிறார். அவர்கள் ஆயிரமாண்டு பிரார்த்தனை செய்திருந்தாலே போதும் அவர்கள் இவ்வாழ்வில் ஒன்று சேர்வதற்கு என்று நம்புகிறார். இது நம்மை மூன்றாம் தளத்திற்கு இட்டுச் செல்கிறது. மூன்றாம் தளத்தில் சீனத் தொன்மக் கதை ஒரு அந்நிய நாட்டில் புரிந்து கொள்ள முடியாத ஒரு பண்பாட்டில் தரும் ஆசுவாசம். ஆயிரம் ஆண்டு பிரார்த்தனை என்ற தொன்மமே உறவுகள் பிரிவதற்கும் சேர்வதற்கும் காரணம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த குடும்பச் சிதைவுகளை அர்த்தப்படுத்திக் கொள்ள முயல்கிறார் தந்தை. மகளுக்கு இந்த தொன்மத்தை கேள்வி கேட்கும் பார்வைதான் உண்டு. சிதைவுற்ற தன் வாழ்விலிருந்து தான் தஞ்சம் அடையும் இடம் இதுவல்ல என்று இவர் உணர்கிறார். இக்கதை முழுதும் இந்த இரட்டை நிலை பிரதானமாக இருக்கிறது. மிகச் சன்னமாக இந்த விவாதம் இக்கதை முழுதும் தொடர்கிறது. இத்தகைய மறைபிரதிகளும் உருவகங்களும் இவரது கதைகள் அனைத்திலும் காணமுடியும்.
டினா நயேரி (Dina Nayeri) – இவர் ஈரானிய அமெரிக்க எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். தன்னுடைய 8வது வயதில் தன் தாய் கிறித்துவ மதத்திற்கு மாறியதன் விளைவாக எழுந்த இஸ்லாமிய அடக்குமுறையிலிருந்து தப்பித்து துபாயிலும் ரோமிலும் அகதிகளாக சிறிது காலம் வாழ்ந்து பின்பு அமெரிக்காவில் தஞ்சமடைகிறார்கள். இவரின் தந்தை ஈரானிலேயே இருந்துவிட, இவர் தன் தாய் தம்பியுடன் நீண்ட அகதி வாழ்விற்கு பிறகு அமெரிக்க குடிமகன்களாக மாறுகிறார்கள். தற்போது லண்டனில் வசித்து வருகிறார். தன்னுடைய கதைகள் அனைத்தையும் தன்னுடைய வாழ்விலிருந்தே எடுப்பதாக சொல்கிறார். தன் வாழ்வைப் போலவே தாய்-மகளிடம் இருக்கும் பிணைப்புகளும் பினக்குகளும் இவரின் கதைகளின் மையமாக அமைகிறது. அவற்றில் இவர்கள் அலைந்து திரிந்த நிலங்கள் பெரும் படிமங்களாக மாறுகின்றன.

தன்னுடைய சொந்த வாழ்க்கையையே கிட்டத்தட்ட வேறொரு கோணத்தில் ‘A Ride out of Phrao’  –  https://aqreview.org/a-ride-out-of-phrao/ என்ற அவரின் சிறுகதையில் வெளிப்படுகிறது. ஈரானிலிருந்து வெளியேறும் தாய் அமெரிக்க வாழ்க்கையோடு இயைந்து போக முடியாமல் மகளை விட்டு தாய்லாந்துக்கு அமைதிப்படையினரோடு சேர்ந்து செல்கிறார். ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் கவிதைகளைப் போல தன்னை பிரதிபலிக்கும் நிலங்களிலிருந்தும் மக்களிடமிருந்தும் தன்னை கண்டடைகிறார் தாய் ஷிரின்.  ஒரு நேரடியான சாதாரண கதை போல இது தெரிந்தாலும் இது தனித்திருக்கும் பேசுதளங்கள் கொஞ்சம் வித்தியாசமானது.

  1. Ethnomethodology – ஒரு சமூகத்தின் இயல்பில் லேசாக ஊடுறுவி அச்சமூகத்தின் நடைமுறைத் தன்மையை அறிந்து கொள்வது. கலைத்து போட்ட பின் அது தன்னை மீண்டும் எப்படி ஒழுங்குபடுத்திக் கொள்கிறது என்று பார்ப்பது. தாய்லாந்திலிருக்கும் ஒரு சிறு கிராமத்தில் அந்நியராக வந்து சேரும் டாக்டர் ஷிரின், கொஞ்சம் கொஞ்சமாக அச்சமூகத்தை அவரும் அக்கிராமம் அவரையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. இவர் அசைந்து கொடுக்கும் இடமெல்லாம் தன் பூர்விக நிலமான ஈரானை ஒத்திருக்கிறது. ஒத்து போக முடியாத இடங்களில் இவர் ஒதுங்கி வாழ நேர்கிறது. இப்படி ஒருவரின் பூர்வீக சமூகத்திற்கும் புலம் பெயர்ந்த சமூகத்திற்கும் இருக்கும் ஒற்றுமையின் அளவுகோளின்படி ஒருவரையொருவர் புதிதாக மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து வரும் அவரது மகளால் அது முடிவதேயில்லை. வெளியேறி வசதியான ஒரு ஓட்டலில் தங்கிய பிறகு தான் அவரால் சகஜமான நிலைக்கே திரும்ப முடிகிறது.
  2. நம்பிக்கைகள்/ உருவகங்கள் – உருவ வழிபாடு அற்ற முஸ்லிம் மதத்தில் பிறந்த ஷிரின் தாய்லாந்து முழுக்க நிறைந்திருக்கும் புத்தர் சிலைகள் புன்னகைத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறார். கொஞ்சம் ஆட்டிஸ்டிக்காக இருக்கும் மகனின் மீது வன்முறையை நீட்டும் தந்தையை கண்டும் அந்த புத்தர் சிரித்துக் கொண்டுதான் இருப்பார் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உலவுவதாக சொல்லப்படும் பேய்களை இரக்கமற்ற அந்த தந்தையாகத் தான் பார்கிறார். அல்லது எத்தனை முறை கொன்றாலும் மீண்டும் மீண்டும் தன் வீட்டுச் சுவற்றில் உலவும் பல்லியாக பார்கிறார். அந்நிய நிலங்களில் ஒன்றியலமுடியாத அத்தனையும் பூதங்களாக தொல்லுலகின் பேயுருவங்களாகத் தெரிகிறது.
  3. இது ஒரு வகையில் கதாசிரியரின் தன் தாயின் மீதான படிப்பாய்வும் கூட. இக்கதையில் வரும் டாக்டர் ஷிரின் ஈரானில் பிறந்து அமெரிக்காவை கடந்து வந்தாலும் தன் சுயத்தை அவர் தாய்லாந்து கிராமத்தில் தான் கண்டடைகிறார். அங்குதான் தன் முழு ஆளுமையும் வெளிப்படுவதாக உணர்கிறார். தாய்லாந்தில் முதியவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை அவருக்கு பிடித்திருக்கிறது. தான் முதியவள் என்பதை மறைக்க வேண்டிய அவசியமற்றவராகிறார். தன் நரை முடிக்கு கூட இனி பூச்சு தேவையில்லை என்று விடுதலையடைகிறார். அச்சமூகத்தில் தனக்கு கிடைக்கும் உயர்ந்த இடத்தையே இனி தன் வாழ்வாக மாற்றிக் கொள்கிறார் ஷிரின். இக்கதாசிரியரின் தாய்க்கு உண்மையில் அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை. அமெரிக்காவில் ஒரு அம்மாவாக மட்டுமே தன் வாழ்வை கழித்தவர் தொலைத்தது என்ன என்ற ஒரு சிறு ஆய்வே கதையாக விரிகிறது.

குழந்தை பருவத்தை அகதி முகாம்களில் கழித்ததின் வலிகளையும் வாழ்வு தன்னகத்தே மறைத்து வைத்திருக்கும் கைவராத விடுதலையுமே இவர் கதைகளின் பேசுபொருட்கள்.
வியட் தன் ங்குவேன் (Viet Than Nguyen) – குவென் வியட்னாமை பூர்வீகமாகக் கொண்டவர். தன்னுடைய நாலு வயதில் அவருடைய குடும்பம் சாய்கானின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவிற்கு தஞ்சம் புகுந்தது. 2010 ல் சிறுகதைகளின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 2016ம் ஆண்டு தன்னுடைய நாவலுக்காக புலிட்ஸர் பரிசை வென்றிருக்கிறார். 2017 ல் வெளிவந்த இவரின் சிறுகதைத் தொகுப்பு பெரும் வரவேற்பை பெற்றது. அமெரிக்காவின் வியட்னாமிய காலனிகளில் அகதிகளின் கதை கேட்டே வளர்ந்தவர். அவர்களின் உண்மைக் கதைகளையே தன்னுடைய நாவல்களிலும் சிறுகதைகளிலும் மீட்டுருவாக்கம் செய்கிறார்.
சாய்கானின் வீழ்ச்சிக்குப் பிறகு தெற்கு வியட்னாம் மக்கள் பலரும் re-education camp என்ற பெயரில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் 17 ஆண்டுகள் கூட சிறையில் இருந்திருக்கிறார்கள். அங்கிருந்து கிளைத்து எழும்பும் வாழ்க்கைக் கதைகள் விசித்திரமானவை. அப்படியொரு விசித்திரமான வாழ்க்கைப் போக்கை சித்தரிப்பதாலேயே Fatherland – https://vietnguyen.info/wp-content/uploads/2013/07/NguyenViet_Fatherland.pdf என்ற இந்த சிறுகதை முக்கியமான கவனத்தைப் பெறுகிறது. போர் காலங்களிலேயே தன் கணவனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதை அறிந்து மனைவி தன் மூன்று குழந்தைகளோடு அமெரிக்காவிற்கு வெளியேறுகிறாள். போர் முடிந்ததும் சிறையிலடைக்கப்படும் லய் மீண்டு வந்து மறுமணம் புரிந்து அதில் பிறக்கும் மூன்று குழந்தைகளுக்கும் முதல் மனைவியின் குழந்தைகளின் பெயரையே வைக்கிறான். அமெரிக்காவில் இருக்கும் குடும்பத்தின் மூத்த பெண் வியட்னாமில் தன் பெயர் கொண்டிருக்கும் தங்கையை காண வருகையில் கதை தொடங்குகிறது. இருவருக்குமான கனவுகள், பொய் முகங்கள், இருவருக்கும் ஒன்று போலவே அமையும் ஏமாற்றங்களையும் விவரிக்கிறது.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக திரிந்து தன் வாழ்வை சேர்த்து கட்டியமைக்க முயலும் இவர்களுக்கும் வல்லரசு நாடுகளில் வாழும் அகதிகளும் வாழ்வு தரத்தில் பெரிய வித்தியாசமில்லை என்பதை இந்தக் கதை அடிக்கோடிடுகிறது. வியட்னாமிற்கு வரும் மேற்கத்திய சுற்றுல்லாவாசிகள் இவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதும் போர்க் காலங்களில் இவர்கள் பதுங்கியிருந்த குழிகளுக்குள் சென்று வருவதுமென தன் சொந்த நாட்டிலேயே இவர்கள் வாழ்வு காணுலா காட்சியாக மாறியிருக்கிறது. புலம் பெயர்ந்த நாட்டில் அகதிகளின் மீதூறும் கண்களைத் தான் தன் நாட்டிலும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
இந்த இரண்டு குடும்பங்களுக்கிடையில் கண் அறியாத ஒரு இணைப்புக் கம்பியை போல அவர்களின் பெயர்கள் இருக்கிறது. அது அவர்களை மீண்டும் ஒன்று சேர்க்கும் என்பது லய் யின் நம்பிக்கை. தன்னுடைய நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் தான் ஒரு காட்சி பொருளாக இருப்பதை போலதான் வேறு நாட்டில் வாழ்வதும் இருக்கும் என்ற கசப்பு தட்டுப்படும் போது, கெட்ட கனவுகளை கொடுக்கும் சாத்தானை அழிப்பதைப் போல் தன் அமெரிக்க அக்காவின் புகைப்படங்களை எரித்து விடுகிறாள். கவிழ்த்து வைத்த நீல கிண்ணத்தைப் போன்ற வானத்தின் அடியில் அப்புகை பரவுவதை காண்கிறாள். இந்த நீல கிண்ணம் அனைவருக்கும் ஒன்றுதானே என்று உணர்கிறாள்
கென் லியு (Ken Liu) – இவரும் சீனாவில் பிறந்தவர். தன்னுடைய 11வது வயதில் இவர் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது.  மைக்ரோசாஃப்டில் பணிபுரிந்து பின்னர் ஹார்வர்டு சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்து தற்போது கார்பொரேட் கம்பெனிகளின் வக்கீலாக பணியாற்றி வருகிறார். 2002 லிருந்து புனைவுக் கதைகளை பதிப்பித்து வரும் இவர் அறிவியல் புனைவு, ஃபேண்டஸி வகை கதைளின் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார். பல சீன இலக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். இவரின் இந்த காகித மிருகச் சாலை – https://io9.gizmodo.com/read-ken-lius-amazing-story-that-swept-the-hugo-nebula-5958919 என்ற சிறுகதை 2013ல் ஃபேண்டஸி வகை கதைகளுக்கு வழங்கப்படும் அத்தனை விருதுகளையும் வென்றது.
சிறு நிறப்பேதங்களையும் உடலமைப்பின் வித்தியாசங்களையும் சகித்துக் கொள்ளமுடியாத ஒரு உலகில் இந்த வேற்றுமைகளையே தன் அடையாளங்களாக சுமந்து திரிவதின் சிரமங்களை சொல்லும் கதையிது. பெற்றோர் இருவரும் வேற்று இனத்தவர்களாக இருக்க இரண்டிலும் சேர முடியாமல் தனித்து நிற்கும் பிள்ளைகளின் மனச் சிக்கல்கள் “Three Body Problem of identity” – என்று அழைக்கப்படுகிறது. மகன் பெற்றோர்களின் இருவேறு கலாச்சாரங்களின் பக்கமும் இழுபடுகிறான். அமெரிக்க அப்பாவிற்கும் சீன அம்மாவிற்கும் பிறக்கும் ஜாக் அமெரிக்க முகமாக தன்னை மாற்றிக் கொள்வதற்காக அம்மாவின் அன்பெனும் மாயங்களை முற்றிலுமாக உதறுகிறான். ஆங்கிலத்தில் தன் அன்பை வெளிப்படுத்த இயலாத அம்மா அவனுக்கு செய்து கொடுக்கும் சீன ஒரிகாமி விலங்கு பொம்மைகள் மூலம் வெளிப்படுத்துகிறாள். தன் மூச்சினால் அவற்றிற்கு உயிர் கொடுக்கிறாள்.  தான் வளர வளர நண்பர்களிடமிருந்து உருவத்திலும் கலாச்சாரத்திலும் விலகி நிற்பதை உணர்ந்தவுடன் மகன் முழுவதுமாக அமெரிக்கனாகிறான். மாற முடியாத அம்மாவை முற்றிலும் விலக்கி வைக்கிறான். அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவன் கையில் அகப்படும், சிறுவயதில் தோழனாகவே உடனிருந்த புலி ஒரிகாமி உயிர்பெருகிறது. அவன் அம்மாவின் நினைவுகளும் மீண்டு எழுகிறது.
புலம் பெயர்ந்த வாழ்க்கையில் சிறுவர்களின் முதல் தழும்பு அவர்களுக்கு பள்ளியிலோ நண்பர்களிடமோ தன் உருவம் மீதான கிண்டலும் கேலியும்தான். அந்த அவமானம் அவர்கள் வயதில் அவர்கள் கண்டடைய வேண்டிய மாயங்களை காணாமல் செய்துவிடுகிறது. அவன் கற்பனையில் அவனுடன் உலாவிக் கொண்டிருந்த அத்தனை காகித மிருகங்களும் காணாமல் போனது அவன் பால்யத்தையே இழந்தது போலத்தான். நாடோடிக் கதைகள் கொண்ட கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை அவள் அம்மா அறிந்திருக்கிறாள். கற்பனை உலகில் தன் அன்பை பூரணமாக வெளிப்படுத்துகிறாள். இறந்தவர்கள் மீண்டெழும் நாள் குறித்து அவள் அழுந்திக் கூறுவது அப்படியொரு நாளில் தான் மீண்டும் தன் பிள்ளை ஜாக்கிடம் வந்து சேர்வோம் என்ற நம்பிக்கையில்தான். மூதாதையர்கள் உயிர் பெறும் நாள்தான் அவன் தன் அம்மாவை புரிந்து கொள்ளும் நாளாகவும் மாறுகிறது. அவளின் கடிதத்தில் சீன மொழியில் ‘அன்பு’ என்ற வார்த்தையை தேடி தெரிந்து கொள்கிறான். அவனுக்கு சீன கலாச்சாரத்திலிருந்து கிடைத்தது அதுவொன்றே.



ஒருசில அடிப்படை கூறுகளை கொண்டு இவர்களின் கதைகள் மூலம் ஆங்கில இலக்கியத்தில் சிறுகதை மீண்டும் உயிர்ப்படைந்திருப்பது ஏன் என்று புரிந்து கொள்ளலாம்.
  1. கதைக் களங்கள் – சிதைவுற்ற குடும்பங்கள், போதை அடிமை பழக்கம், பதின்பருவ காதல்கள், உடற் மோகங்கள் இவையே நவீன ஆங்கில சிறுகதைகளின் அடிப்படைகளாக மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. சிதைவுற்ற குடும்பங்கள் – இது பெரும்பாலும் தனி மனித சுதந்திரத்தை நோக்கியே உருவாகும் முரண்பாடுகளாக இருக்கும். இந்த பிளவுகள் ஒரு கட்டத்தில் சலிப்பையே கொடுக்கும். தேடுதல் உள்ள எவருக்கும் இது அர்த்தமற்றதாகப் படும். ஆனால் இடம் பெயரும் வாழ்வினால் உண்டாகும் குடும்ப முரண்கள் முற்றிலும் மனித மனங்களின் செயல்பாட்டை வாழ்ந்து பார்க்கமுடியாத தருணங்களின் அடிப்படையில் உருவாகிறது. வாசகன் தன்னை அதில் பொருத்தி பார்த்துக் கொள்ளமுடியாவிட்டாலும் கற்பனையில் அது மிகப் பிரம்மாண்டமானதாக விரிகிறது. வெறும் ஆண் பெண் உறவுகளைப் பற்றி மட்டுமே பேசி வரும் கதைகளினூடே தாய் – மகன், தந்தை – மகள் உறவுகளின் சிக்கல்கள் ஆங்கில வாசகனுக்கு அதுவரை இல்லாத பெரும் திறப்பை கொடுக்கிறது. மேலே சொன்ன கதைகளில் வரும் குடும்ப சிக்கல்கள் அசாதாரணமான தளங்களில் நிகழ்கிறது. உடனே திருத்தி அமைக்க முடியாத வாழ்க்கை போக்குகளாக உள்ளது. சீனாவின் மிஸ்டர் ஷீயும், வியட்னாமின் மிஸ்டரி லய்யும் அவர்களின் சிதைவுக்கு மாவோவின் கலாச்சார கட்டுப்பாடுகளும் வியட்னாமிய போரின் பின் விளைவுகளும் காரணமாக அமைகிறது.
  2. வரலாறு – வரலாற்று பார்வை இக்கதைகளின் அடுத்த முக்கிய கவனம் ஈர்க்கும் கூறாக இருக்கிறது. இக்கதைகள் தன்னியல்பாகவே வரலாறை தொட்டு பேசுகிறது. ஆங்கில இலக்கிய வாசகனுக்கு பரிச்சயமில்லாத சில வரலாறுகளையும். இக்கதைகளின் மூலம் அவன் காலத்தில் பின் சென்று வரலாறும் மனிதர்களும் முட்டி மோதிக் கொள்வதைக் காண்கிறான். அத்தனை அல்லல்களினூடாக மனித தரிசனங்களை கண்டடைகிறான். பெரும் வராலாற்று பின்புலத்தில் இக்கதைகள் நிகழ்வதால் இச்சிறுகதைகள் நாவல்தன்மையை நோக்கி நகருகிறது. கதைகள் முன்னும் பின்னும் கிளை விரித்து பரவுகிறது. தனிமனிதனுக்கு எதிராக வரலாறே ஒரு தனி மனிதனாக உருவம் பெற்று அவனோடு முரண்பட்டு நிற்கிறது. ஒருவரை ஒருவர் மாற்றியமைக்கிறார்கள். எப்போதுமே வரலாறுதான் வெற்றி பெருகிறது. ஆனால் அதற்கெதிரான போராட்டத்தை எந்த தனிமனிதனும் கைவிடுவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கும் வரலாறே சிரித்தபடி பதிலளிக்கும்.
  3. தொன்ம மீட்டுருவாக்கம் – புலம் பெயர்ந்தவர்களின் மரபார்ந்த நாகரீகங்களும் தொன்மங்களும் அமெரிக்க அல்ல ஆங்கில வாழ்வு முறைக்கு முற்றிலும் மாறானாது. புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் தொன்மத்தை மீட்டெடுக்கிறார்கள் அல்லது அது உருவாவதை மீள் கற்பனை செய்கிறார்கள். யியுன் லீயின் கதைகளில் பாட்டி கதைகள் போல ஏதாவது ஒரு தொன்மக் கதையோ அல்ல நாடோடிக் கதைகளோ தவறாமல் வந்துவிடும். ஒரு ஏரியை கடக்க ஒரே படகில் இருவர் செல்ல நேர்ந்தால் அப்பயணத்துக்காக அவர்கள் 300 வருட பிரார்த்தனை செய்திருக்க வேண்டும் என்ற தொன்மம், தன் சிறு வாழ்வையும் மீறி உலகம் அவனுக்கு அப்பால் உழல்வதை வாசகன் உணர்கிறான். சீனாவின் மறைந்தவர்கள் உயிர்த்தெழும் நாளைப் போல, மெக்ஸிகோவின் மாயன் நாகரீக்கத்தின் தொடர்ச்சியாக மயானக் கொண்டாட்டங்கள் என்பன போன்ற தொன்ம கதைகளும் சடங்குகளும் பல்வேறு கதைப் படிமங்களாக அமெரிக்க குழந்தைகளை வந்தடைந்துக் கொண்டிருக்கின்றன. மாய எதார்த்தக் கதைகளை தேடித் தேடி லத்தீன் அமெரிக்க கதைகளை மொழிபெயர்த்து வாசித்த வாசகர்களை இன்று இச்சிறுகதை ஆசிரியர்களால் நேரடி ஆங்கில சிறுகதைகளாக, அமெரிக்காவிலேயே நிகழும் கதைகளென வந்து சேர்கிறது.
  4. மொழி – இளம் அமெரிக்க எழுத்தாளர்களின் மொழி பேச்சு வழக்கை ஒத்தியிருப்பது தொடர் வாசிப்பிற்கு பெரும் தடையாக அமைந்து விடுகிறது. உதாரணமாக ‘f’ வார்த்தைகளும் ’s’ வார்த்தைகளுமான வசவு சொற்கள் அத்தனை உரையாடல்களிலும் தொடர்ந்து வருவது எதார்த்தத்தை நெருங்கிய படைப்பு என்ற உணர்வை ஆரம்பத்தில் தந்தாலும் அன்றாடத்தின் சலிப்பையும் தந்து விடுகிறது. இது இலக்கிய வாசகனை எந்த விதத்திலும் மேலெழச்செய்யாமல் போகிறது. சின்ன விஷயங்களையே பேசிக் கொண்டிருப்பதை போன்ற ஒரு எண்ணத்தை கொடுக்கிறது. வாழ்வின் நுண்மைகளைத் தேடிச் செல்லும் வாசகனை இது வெளியே தள்ளிவிடுகிறது. முக்கியமாக செறிவான மொழியற்ற கதைகள் செவ்வியல் தரத்தை நெருங்குவதில்லை. வட்டார வழக்குகள் நிறைந்திருக்கும் மொழியில் பேச்சு வழக்கு தனித்துவம் பெருகிறது. ஆனால் நிலத்திற்கு நிலம் ஆங்கில உச்சரிப்பும் சரி தவறுமாக இலக்கணம் மட்டும் மாறுபடும் மொழிச்சூழலில் பெரும்பாலும் ஓர் அர்த்தம் கொண்ட பன்மொழி அதிகம் காண்பதற்கில்லை. மாறாக, இந்த புலம் பெயர்ந்தவர்களின் நேரடி ஆங்கில கதைகளில் இத்தகைய மொழி கையாளப்படுவதில்லை. அப்படியே வந்தாலும் அது கலாச்சார வித்தியாசங்களை காட்டும் முகமாக மட்டுமே வருகிறது. மேலும் ஆங்கிலத்தை, ஒரு மொழியாக கற்று இவர்கள் எழுதுவதால் பேச்சு வழக்கில் அரிதாக தென்படும் வார்த்தைகள் இவர்கள் கதைகளில் பார்க்க முடியும். அர்த்தம் மிகுதியான வார்த்தைகளை கையாள்கிறார்கள். இவர்களின் மொழி ஆங்கில இலக்கிய வாசகனுக்கு பெரும் வசீகரமாக இருக்கிறது.

இந்த நான்கும் ஆங்கில சிறுகதைகள் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்ட இக்காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெறச் செய்யும் கூறுகளாக கருதலாம். இதனாலேயே புலம் பெயர்ந்தவர்களின் எழுத்துக்கள் சிறுகதைகளை மீண்டும் மைய இலக்கியத்தில் காணச் செய்யத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ஒரு தமிழ் இலக்கிய வாசகனாக இந்த கலாச்சார இணைதலும் பிரிதலும் பெரும் பரவசத்தை கொடுப்பதில்லை. இந்த கூறுகுகள் எதுவும் தமிழ் வாசகனுக்கு புதிதில்லை. நிலமும் வரலாறும் மட்டுமே புதிது. ஆகவே இக்கதைகள் மேலெழுந்து மானுட தேடலை முன்னெடுக்காவிடில் நமக்கு அவை கொடுப்பது அனேகமாக ஒன்றுமில்லை. புலம் பெயர்ந்தவர்களின் சிறுகதைகள் தங்களின் பாதிப்பினால் மேற்கத்திய கலாச்சாரம் மாறுதலடைந்ததையோ அவர்களின் பண்பாடு நெகிழ்ந்து திசை திரும்புவதையோ தன் தேடலாக கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் வாழ்வின் பிரதிகளாக மட்டுமே வருமெனில் இந்த சிறுகதைகளின் அலையெழிச்சியும் சிறுகல் மோதி உடையும். ‘காகித மிருகச்சாலையில்’ ஜாக் எப்படி அம்மாவின் ஆரிகாமி மூலமாக மூதாதைகள் மீண்டெழும் நாளில் கற்பனை என்னும் மாயத்தை மீண்டும் கண்டுகொண்டானோ அப்படி ஆங்கில சிறுகதை இயக்கமும் மீண்டு எழுந்து வருமென்று நம்பலாம்.
நன்றி!

[ஈரோடு சிறுகதை விவாத அரங்கில் பேசப்பட்ட கட்டுரை. நரேன்]

Sunday, August 19, 2018

ஊட்டி காவிய முகாம் 2018 - உலகச் சிறுகதைகள், ஒரு முன்னுரை

ஊட்டி காவிய முகாமிற்காக உலகச் சிறுகதைகள் மீதான விவாதத்திற்கென இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்து அதன் மீது ஒரு முன்னுரையை தயாரித்து வைத்திருந்தேன். நேரமின்மையால் அவ்விவாதம் நிகழவில்லை.  திரு.ஜெயமோகன் இம்முன்னுரையையும் இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் தனது தளத்தில் பதிந்து விவாதங்களையும் வரவேற்றார்.

மொழிபெயர்ப்பு சிறுகதைகள் - முன்னுரை





ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்:

உலகெங்கிலும் பிழைப்புக்காகவோ அல்ல உயிரைக் காக்கவோ மக்கள் சொந்த நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். சொந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு இடம் பெயர்வதும் அமெரிக்காவிற்கு இடம் பெயர்வதும் அனேகமாக வேறு வேறு வகையைச் சேர்ந்தது என்று தோன்றும். தன்னுடைய அரசாங்கமோ அதன் உள் அமைப்புகளோ எவ்விதமான எதிர் நிலைகளை கொண்டு எழுந்தாலும்  இன்றும் அமெரிக்காதான் பெரும்பாலானோர்க்கு கனவு தேசம். மக்கள் தனிச்சையாகவே அவ்விழுமியங்களை காக்கும் பொருட்டு பல்வேறு சக்திகளோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஓரளவிற்கு உயர் நிலை தொழில்களுக்காக அங்கு இடம் பெயர்பவர்கள் ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும். இந்தியர்களின் கால்களில் ஒன்று கடல் தாண்டி இந்தியாவில் எப்போதும் இருக்கும். அமெரிக்கக் குடியுரிமை பெற்றாலும்  இந்தியக் குடியரசில் தங்களுக்கு பங்கு உண்டு என்று நினைப்பவர்கள், முகநூலிலேனும். குலதெய்வ கோவிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை வருவது அன்றாட அலுவலைப் போன்றதொரு எண்ணமும் இருக்கும். இதற்கெல்லாம் காரணமாக அவர்கள் எப்போது இந்தியா திரும்பி வந்தாலும் நிம்மதியான சலனமற்ற ஒரு அடிப்படை வாழ்வை இங்கே அமைத்துக் கொள்ள முடியுமென்பதுதான். சீனர்கள் அமெரிக்காவில் கால் பதித்த நாள் முதலே அவர்களின் சீனா அமெரிக்காவிற்குள் வந்து விடுகிறது. திரும்பச் செல்லுதல் கிடையாது. எவ்வளவு தத்தளிப்பாக ஆங்கிலம் பேசினாலும் அவர்களுக்கு அமெரிக்கா தாய் நாடாகிவிடுகிறது. ஆனால் இவர்களிலிருந்து மேலெழும் இளம் தலைமுறையினர் அல்லது இரண்டாம் தலைமுறையினரின் அகவயமான சிக்கல்களும் அதுவே கதைகளாகவும் தற்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவ்வகையில் சீனப் பூர்வீகம் கொண்ட யியுன் லீ (Yiyun Li) சமகால அமெரிக்கப் பெண் எழுத்தாளர்களில் அதிகக் கவனம் பெற்று வருகிறார்.

1972ல் பெய்ஜிங்கில் பிறந்த யியுன் லீ யின் தந்தை ஒரு அணு விஞ்ஞானி. சீன விஞ்ஞானிகள் அமெரிக்கா வந்தடையும் மரபைத் தொடர்ந்து இவர்கள் குடும்பம் 90களின் மத்தியில் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தது. யியுன் லீ அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பிற்குப் பின் புனைவு-அபுனைவு படைப்பியல் தொடர்பாக பட்டப் படிப்பை முடித்து புனைவிலக்கியத்தில் நுழைந்தார்.  இவரின் சிறுகதைகள் பரவலான வரவேற்பை பெற்றது. A thousand years of good prayers என்ற சிறுகதை தொகுப்பு PEN/Hemmingway உட்பட பல விருதுகளையும் வென்றது. அதீத அலைக்கழிப்பினால் 2012ல் இரண்டு முறை தற்கொலை முயற்சியை மேற்கொண்டார். புனைவுகள் எழுதுவதிலிருந்து ஒரு வருடம் ஒதுங்கிக் கொண்டு சுயசரிதைகளையும் வரலாறுகளையும் மட்டுமே தொடர்ந்து வாசித்து வந்தார். சுயசரிதைகளை வாசிப்பது, மனிதர்களின் வாழ்வை அறிந்துக் கொள்வது தனக்கு ஆசுவாசம் அளிப்பாதாக சொல்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுதி வரும் இவரின் 2015ல் வெளி வந்த “A Sheltered woman” – அமெரிக்காவில் இளந்தாய்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் முதல் மாதம் மட்டுமே செவிலித்தாயாக பணிபுரியும், தனக்கென குழந்தையே பெற்றிடாத ஒரு சீன மூதாட்டியைப் பற்றிய கதை – சன் டைம்ஸின் சிறந்த சிறுகதையாக தேர்வு செய்யப்பட்டது.

குருபூஜையின் போது ஊட்டியில் உங்களுடன் தங்கியிருந்த ஒரிரவில் சமூகத்தில் மதிப்பீடுகள் மாறியிருப்பது இலக்கியங்களில் பிரதிபலிக்கிறதா? இந்த மதிப்பீடுகள், விழுமியங்களின் மாற்றங்கள் எதனால் நிகழ்கின்றன? எந்த அளவிற்கு அவை பிறழ்ந்து தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும்  என்ற விவாதத்தில் மதிப்பீடுகளின் மாற்றங்களுக்கு இன்றைய சமூகத்தில் தனிமனித சுதந்திரத்தின் மீது எழும் பிரக்ஞையே பெரும் காரணியாக இருப்பதாகவும் பொருளியல் சுதந்திரம் துணையிருப்பதாகவும் கூறியிருந்தீர்கள். ஆனால் இந்த மாற்றங்கள் ஒரு சட்டகத்திற்கு உட்பட்டுதான் நடக்கும். மதிப்பீடுகள் (Values) சமூகங்கள் அல்ல நாடுகள் கட்டமைத்த ஒழுக்கங்களுக்கு  (Ethics) உள்ளேயேதான் மாற்றம் பெரும். அவ்வொழுக்கங்களின் மாற்றங்கள் மானுட தரிசினத்திற்கு (Vision) உட்பட்டதாகத்தான் இருக்கும் என்று நீங்கள் விளக்கிய படிநிலைகளை நிறுவுமாறு “ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்” என்ற இச்சிறுகதை அமைந்திருப்பதாகத் தோன்றியது.

மிஸ்டர்.ஷீயும் அவரது மகளும் தங்கள் திருமணத்தை மீறிய தோழமையை தேடிச் செல்கிறார்கள். ஷீ தொடுதலுக்கும் தேவையற்ற ஒரு காதலை யீலானோடு வளர்த்துக் கொண்டதிற்காகவே அவர் ஏற்கும் தண்டனை, அடுத்த தலைமுறையை சென்றடைந்து, தனக்கும் தன் மனைவி மகளுக்கும் இடையே பெரும் தனிமையை எழுப்பி நின்று விடுகிறது. தன்னை, தன் கெளரவத்தை குடும்பத்திடமிருந்து பாதுகாத்துக் கொள்ள அவர் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு பொய்யிலிருந்து வெளிவருவதற்கு, அவர் தனக்கே அந்நியனாக மாற வேண்டியிருக்கிறது. சீனாவில் மாவோவின் ஒழுக்க நெறிமுறைகளின் படி தன் மதிப்பீடுகளை ஒருவாக்கி கொண்ட ஷீயும், அது உலகப் பொதுமையானதென்ற அவர் எண்ணமும், தன் மகள் அவள் தோழனோடு சத்தம் போட்டு சிரித்துப் பேசும்போது பெரும் சவாலை எதிர்கொள்கிறது. அவள் தன் உணர்வுகளுக்கு பொருள்படும்படியான ஒரு தோழமையை தேடிக் கொண்டாள், அதை பகிரங்கமாக சமூகத்துக்கு வெளிக்காட்டி திருமண வாழ்விலிருந்து விலகியும் வந்துவிட்டாள். எதன் பொருட்டு அவர் ஒரு பொய்யை அரண் எழுப்பி காத்து வந்தாரோ அது சடாரென வெட்டவெளியில் கூத்தாடிக் கொண்டிருக்கிறது. மிகச் சமீபத்தில் விவாகரத்தான தன் மகள் ஒரு ஆணோடு சிரித்துப் பேசுவது விபச்சாரியின் செயல் என்று கொந்தளிக்கிறார், தான் அமெரிக்காவிற்கு வந்ததின் உள் நோக்கம் அவளுக்கு நல்ல துணை தேடி அமைக்கத்தான் என்பதையும் மறந்துவிட்டு. தன் புதுத் தோழியான “மேடம்” அவர் வயதுக்கு பொருந்தாத அடைகள் அணிவதை உடனே மேடத்தின் பூர்வீக நாட்டின் ஒழுக்க விதிகளோடு ஒப்பிட முயற்சிக்கிறார். ஈரானைப் பற்றி அவருக்கு என்ன தெரியுமோ தெரியாதோ ஆனால் மேடம் இப்போது இங்கே சந்தோஷமாக இருக்கிறார் என்பதை உணர்வதன் மூலமாகவே தன் மகளையும் அவர் புரிந்துக் கொள்கிறார். “அந்நிய நாடு அந்நிய எண்ணங்களை கொடுக்கும்”.  இந்த மதிப்பீடுகளின் மாற்றங்களும் இம்மூன்று நாடுகளுக்குமிடையிலான ஒழுக்க வேறுபாடுகளுக்கும்  ‘ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்’ என்ற தொன்மத்திற்குள்  சட்டகம் அமைத்து அடைத்துக் கொள்ளும்போது பெரும் ஆசுவாசமடைகிறார் மிஸ்டர்.ஷீ. தன் மகளின் முறிந்த மணவாழ்விற்கும், தனக்கும் தன் மகளுக்குமான பசையற்ற உறவுக்கும், மேடத்திடம் துளிர் விட்டிருக்கும் இளந் தோழமைக்கும் அவர் தன் தொன்மத்திலேயே விடை கண்டடைகிறார். தொன்மம் மானுட தரிசனத்தின் ஆதாரம்.


இரண்டாவதாக, அப்பாவிற்கும் மகளுக்கும் இடையே முரணான மொழி பற்றிய புரிதல். “உங்களுக்கு சொந்தமான ஒரு மொழி உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவியதில்லையென்றால், வேறொரு மொழியை தேர்ந்து அதில் நீங்கள் வெளிப்படுவது உங்களை புதிய மனிதராக்கும்” என்று சொல்லி சீன மொழியில் தன் கணவரோடு இயல்பான உரையாடலை மேற்கொள்ள முடியாததாலும் ஆனால் ஆங்கிலத்தில் தன் தோழனிடம் தான் உண்மையாய் வெளிபட்டதும்தான் தன் விவாகரத்திற்கு காரணமாக காட்டுகிறாள் மகள். இதை ஷீயால் என்றுமே புரிந்துக் கொள்ளமுடியாமல் போகும் என்று படுகிறது. தன் மொழியிலேயே அவர் ஒரு ராக்கெட் சயிண்டிஸ்டாக வளர்ந்தவர். ஆனால் மனைவியிடமும் மகளிடமும் அவரின் நெருக்கத்தை குறைத்தது மொழியல்ல, தன் உணர்வுகளை, அவர் வேலை அவருக்களித்த உற்சாகத்தை பகிர்ந்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாமல் போனதுதான். அவர் மகளே கூட தன் புது உறவை தொலைபேசி உரையாடலை அப்பா கேட்கும்படி நடத்தும் நாடகத்தின் மூலம்தான் தெரியப்படுத்துகிறாள். மிஸ்டர்.ஷீயும் மேடமும் வெவ்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட தனக்குதானேதான் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடையில் இடைவிடாத, வெகுசில நாட்களே முதிர்ந்த ஒரு அன்பு உறவாடிக் கொண்டிருக்கிறது. தான் எப்போதும் அறிந்திராத மகிழ்வை இப்போது அனுபவிப்பதாக அவருக்கு தோன்றுகிறது. மொழிகளுமற்ற மதிப்பீடுகளுமற்ற பரிசுத்த துளிர் இலையின் மீது நின்றிருக்கும் அச்சூரிய கணத்தில் உறைந்துபோய்விடுவதென முடிவெடுக்கிறார் மிஸ்டர்.ஷீ.


அமைதிப் பிரதேசத்தின் முயல்:

ஹஸான் ப்ளாஸிம் அரபு மொழியில் எழுதிய  ‘Green zone Rabbit’ என்ற சிறுகதையை தமிழில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து நம் நண்பர்களுடன் நான் பகிர்ந்த போது சிலருக்கு இது நேரடியான ஒரு பொழுதுபோக்கு சிறுகதையென்றும் விவாதத்திற்கு அவ்வளவு உவப்பானதில்லையென்றும் தோன்றியது. இருப்பினும் இக்கதையை நான் முன் வைக்க விரும்பிய காரணங்களுள் ஒன்று, போர் சூழல்களிலிருந்து வெளிவரும் தற்கால கதைகள், மத்திய கிழக்கிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும், க்ரைம் த்ரில்லர் வகையிலேயே அமைந்திருக்கிறது. அதற்குள்ளாக அவர்களின் வாழ்வின் ஒரு கணத்தை பதிவு செய்து அனுப்புகிறார்கள். இதன் உளப் பிண்ணனியும் இது விரிவடையும் ஒரு தொடர் போக்கா என்பதையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருந்தது.

ஹஸான் ப்ளாஸிம்  அடிப்படையில் ஒரு திரைப்பட இயக்குனர். அவர் படங்களினால் அவருக்கு உள்நாட்டில் ஆபத்து நேரும் என்று அறிந்ததும் இராக்கிலிருந்து தப்பித்து பல நாடுகளில் தலைமறைவாகி இறுதியில் ஃபின்லாந்தில் தஞ்சமடைந்தார். இதுவரை இரண்டு சிறுகதை தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். “இராக்கிய கிறிஸ்து” என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2014ல் Independent Foreign Fiction பரிசை வென்றார். இப்பரிசு 2015லிருந்து Man Booker International பரிசோடு இணைக்கப்பட்டது. இத்தொகுப்பிலிருக்கும் ஒரு கதை The Green Zone Rabbit. ஃபின்லாந்தின் புகழ்பெற்ற ஒரு ஓவியரின் “The Garden of Death” என்ற ஓவியம்தான் இக்கதை எழுத தூண்டுதலாக அமைந்திருக்கிறது ஆசிரியருக்கு. இறந்தவர்கள் சொர்கத்திற்கு சென்று சேரும் முன்னால் தங்கியிருக்கும் தோட்டம் இது. போர் நிறைந்த இராக்கிய நாட்டில் ஆபத்துகளிலிருந்து விலகி மிகப் பாதுகாப்பானதாக அமைக்கப்படும் Green Zone அத் தோட்டத்தைப் போன்றது. அதன் பாதுகாப்பும் வசதிகளும் ஒரு மாயத் தோற்றமே.

இக்கதையில் வரும் முயல் உண்மையிலேயே முட்டையிட்டிருக்கக் கூடும் என்ற எண்னம் எழுகையில் இது Fabulism அல்லது மாய யதார்த்த வகையைச் சேர்ந்ததாகிவிடுகிறது. ஹஜ்ஜார் அது முயலின் முட்டைதான் என்று நம்பிவிடுவதற்கான சாத்தியம் உண்டு. அவனுக்கு யார் மீதும் சந்தேகம் எழவில்லை. சல்சால் தன் மீது பாய்கையில் “இது நான் இட்ட முட்டையில்லை” என்கிறான். யாரும் வைத்திருக்கவில்லை. மேலும், அவன் வித்தியாசமான மிருகங்களைப் பற்றி தொடர்ந்து படித்தவன். வினோதமான விலங்குகளுக்கும் அதன் வழக்கங்களுக்கும் பழகிப் போனவன். தான் இதுவரை அறிந்திராத முட்டையிடும் முயல் இனத்தை சேர்ந்தது இது என்றே அவன் நம்புவான்.

அமைதிப் பிரதேசத்திலிருக்கும் முயல் தன் இயல்பை மீறி முட்டையிடவும் கூடும் என்ற எண்ணம் அமைதிப் பிரதேசத்தை முகநூலோடு ஒப்பிடுகையில் மேலும் விரிவடைகிறது. 1970 களில் இராக்கில் இலக்கியமும் கலைகளும் மேலோங்கியிருந்தது. புத்தக வாசிப்பு மிகப் பரவலாக இருந்தது. டால்ஸ்டாயும் காஃப்காவும் மிகவும் பழக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர். அதற்கான குறிப்புகள் இக்கதை முழுதும் உண்டு. போர் தொடங்கிய பின்னால் நூலகங்களும் கல்விக் கூடங்களும் அழிந்து போயின. இலக்கியம் வாசித்த காலத்தை “அமைதிக் காலம்” என்று இன்றளவும் நினைவுகூறுகின்றனர். இன்று சதா குண்டுவெடிப்புகளும் உயிர்ப் பலிகளும் நடந்தேறிக் கொண்டிருக்கும் நாட்டில் கருத்து அடிமைகளின் முகநூல் மோதல்கள் மேலும் சில உயிற்களை காவு வாங்குவது கவலையோடு நோக்கப்படுகிறது. அமைதிப் பிரதேசம் முகநூலுக்கும் அம்முயல் சல்சாலுக்கும் உருவகங்களாகிறது. இந்த மாய பாதுகாப்புக்குள் இருக்கும் வரை அவர்கள் முயல்கள்தான். தேவையெனில் முட்டையிடவும் செய்வார்கள். வெளியில் காலடி எடுத்து வைத்ததும் வெடிக்கிறார்கள் அல்ல வெடித்துச் சாகிறார்கள். சல்சால் முயலைக் காணும்போதெல்லாம் எரிச்சலுறுவதும் இதனால்தான். அது அவன் தான். ஒரு தொழில் முறை கொலையாளி முயலாகி பதுங்கியிருக்கிறான். சல்சாலும் முயலுமே இக்கதையில் எரிந்து தழல்களாகிறார்கள்.

இக்கதையில் வருபவர்கள் பெரும்பாலும் இலக்கிய பரிச்சயம் உள்ளவர்கள். ஹஜ்ஜார் ருஷிய நாவல்கள் வாசித்தவன், கலாச்சார துணை அமைச்சர் இரண்டு நாவல்கள் எழுதியவர், சல்சாலின் முகநூல் முகம் டால்ஸ்டாய். போரும் அமைதியும் என்று முகநூலில் உரக்கச் சொல்பவனாகயிருக்கிறான். இதில் கடைசி இரண்டு பேரும் முகநூலில் கருத்துகளையும் கோட்பாடுகளையும் அலசி ஆராயும் அறிஞர்கள். மாற்றி மாற்றி விதந்தோதிக் கொண்டாலும், ஒருவரையொருவர் கொல்வதற்கு காத்திருக்கிறார்கள்.

இப்போது, முகநூல் வெறும் பொழுது போக்குதானே என்பவர்களுக்கு அது ஒரு நாட்டின் உயிர்ப் பிரச்சினையாக மாறியிருப்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுவதை கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒர் படைப்பாளியின் முன்னுணர்வுக்கு வாசகன் தர வேண்டிய கவனமிது. இக்கதையில் வன்முறைகளெல்லாம் நாடகத்தனமற்று சொல்லிச் செல்லும் போது மெய் நிகர் உலகின் கருத்து மோதல்களினால் உயிர்கள் போவது கோடிட்டு காட்டப்படுகிறது. தினமும் பத்து கார் குண்டுகள் வெடிக்கும் ஒரு நாட்டில் கூடவே முகநூல் மோதல்களினால் ஒரு உயிர் போவதை கவலையோடு முன்வைக்கிறான் ஆசிரியன். ஒருவேளை இது போர் நிகழும் பூமியாக இருந்து கொல்வதும் மடிவதும் யாரென்றரியாத ஒரு நிலத்தில் ஆயுதங்களும் குண்டுகளும் சுலபமாக கைவரும் சாத்தியமிருந்தால், நீங்கள் வெறுப்பு உமிழும் உங்கள் பரம முகநூல் எதிரியின் மீது குண்டெறியமாட்டீர்கள் என்று உறுதியாக கூறமுடியுமா நண்பர்களே?

நரேன்

Wednesday, July 26, 2017

மறைந்து கொண்டிருக்கிறாய், நீ…

அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் எழுதிய மறைந்து கொண்டிருக்கிறாய், நீ என்ற சிறுகதையின் என் தமிழாக்கம் சொல்வனத்தில்...



இன்று காலை படியிறங்கி கீழே வந்தபோது குக்கீ மாயமாக மறைந்து விட்டதை உணர்ந்தேன். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவசரக்கால அதிகாரப்பூர்வ விதிகளின்படி கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போனவைகளுக்கான பிரத்தியேக துறைக்கு போன் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட குரலைப் பின்தொடர்ந்து என்னுடைய சமூக பாதுகாப்பு எண்ணையும் அஞ்சல் குறியீட்டு எண்ணையும் அழுத்த வேண்டும். விலங்குகள் திடீரென காணாமல் மறைந்து போனதை பதிவு செய்ய எண் இரண்டை அழுத்தவேண்டும். வீட்டு விலங்குகளுக்கு எண் மூன்று. பின்பு வரும் ஒரு சிறிய ஒலியைத் தொடர்ந்து தெளிவாகவும் சத்தமாகவும் ‘பூனை’ என்று தொலைப்பேசியில் சொல்ல வேண்டும். பெண் குரலில் ஒரு பூனைக்கான அளவுரு வரையறைகள் எனக்கு விவரிக்கப்படும். அது காணாமல் போன என் பூனையை ஒத்து இருந்தால் # பட்டணை அழுத்தி 15 நொடிகளில் விபரங்களைப் பதிவு செய்யலாம். சிறு இசையொலி என் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும். அதைத் தொடர்ந்து தொடக்கத்தில் ஒலித்த அதே அழகான குரலில் பிற்பாடு என் கோரிக்கையை ரத்து செய்யவோ அல்ல மேலதிக தகவல்களை சேர்க்கவோ வழிமுறைகள் சொல்லப்படும்.
ஆனால் நான் போனை எடுத்து உன்னுடைய எண்ணை அழுத்தினேன். உன்னால் தீர்க்க முடியாத பிரச்சினைகளையே எப்போதும் உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஏதோ இப்படி பேசிப் பெருக்கியே வருத்தங்களைக் கரைத்துவிட முடியும் என்பதைப் போல.
“குக்கீ போயிடுச்சு” என்று சொல்லி உன் பதிலுக்காக காத்திருந்தேன்.
என் மறுமுனை சப்தமில்லாமல் நின்றது.
“போன் பண்ணி புகார் கொடுத்திட்டியா?” என்று கேட்டாய். உன்னுடைய குரல் யாரோ ஒருவரின் செல்லப் பிராணி அதுவும் நாம் இதுவரை சந்தித்திராத தூர தேசத்து மனிதரொருவரின் பூனை அது என்பதைப் போல சகஜமாய் இருந்தது.
“நான் பண்ணலை” என்றேன். “மனம் சோர்வாய் இருக்கு” சேர்த்துக் கொண்டேன். நான் அடிக்கடி மன அழுத்தத்தில் சோர்ந்து போவேன். ஆனால் அதற்கு ஒரு நல்ல காரணம் எல்லோருக்குமே இப்போது இருக்கிறது.
“ஐயம் ஸாரி” என்றாய் பதிலுக்கு.
“வயர்களையெல்லாம் கடித்து வைக்க குக்கீக்கு ரொம்ப பிடிக்கும்” என்றேன்.
“தெரியும்” என்றாய். இத்தருணத்தில் என்னோடு துணையிருக்க பிரியப்படுவதாய் நீ சொல்லவேயில்லை. நானும்தான்.
அதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை. போனை வைத்துவிட்டேன். சில நேரங்களில் உன்னை உடனே திரும்ப அழைத்திருக்கிறேன் நீ ரிஸீவரை கையில் எடுக்கும் சப்தம் கேட்பதற்காகவே. நம் இருவருக்குமான அந்த சமப் பொழுதில், ஒரு முனையிலிருந்து மிக நேர்த்தியாகத் திரிக்கப்பட்ட வயர் கம்பிகளாய் பல நூறு மைல் தாண்டி என்னை வந்தடையும் ஒரு பிளாஸ்டிக் துண்டை உன்னுடைய கைகள் ஏந்தியிருப்பதை உணர்வதற்காகவே. உன் குரல் மறைந்து போனாலும் நீ இன்னும் இருக்கிறாய் என்று தெரிந்துகொள்ளவே. ஆனால் சமீபமாக நான் அப்படிச் செய்வதில்லை. நீ போனை எடுக்காமல் போகும் அந்த ஒரு நாளின் மீது பயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
~oOo~
உலகப் பேரழிவு மிக அமைதியாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அது தனக்கென தனித்துவமான ஒரு முறைமையை அழகியலைக் கைக்கொண்டிருந்தது. தெய்வீக அழகு என்றே அதைச் சொல்லலாம். மிக நீண்ட காலமாய் நீடித்தது.
ஆயுதங்களோடு பதுங்கு குழிகளில் அடைந்து கொண்டே இந்தப் பேரழிவை எதிர்கொண்டுவிடலாம் என்பதைப் போல மக்கள் தயாராயினர். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், கேன்களில் பாதுகாக்கப்பட்ட சோளம், பால் பவுடர், பேட்டெரிக்களைத் தங்களோடு பதுக்கிக் கொண்டனர். “அழிவிற்கு பிறகான புது உலகில் வாழச் செய்யவேண்டியவை இவைதான்” என்ற தலைப்பில் புத்தகங்கள் கூட எழுதி வெளியிட்டனர். அத்தியாவசியமான ஏதாவது ஒன்றிரண்டு பூமியில் இல்லாமல் போயிருந்தாலும் புது உலகு கிட்டத்தட்ட தற்போதையதைப் போலவே இருக்கும் என்பது அவர்களின் கற்பனை. உதாரணமாக அவர்கள் இப்படி யோசித்திருக்கக் கூடும். தப்பிப் பிழைத்தவர்கள் திரும்ப நுழைகையில் பூமியிலிருந்து செடி, காய் கனிகளின் வாழ்வு முற்றாக நீங்கியிருக்கும். முதலில் விலங்குகளெல்லாம் பித்தாகி திரிந்து பின் பட்டினியில் சாகும். முடிந்தளவு அவைகளை உப்புக்கண்டம் போட்டு பத்திரமாக வைக்க வேண்டியது அவசியம். நீங்கள் பாதுகாப்பான ஓரிடத்தில் வளர்ப்பதற்கென அத்தியாவசியமான சில செடி விதைகளை வைத்திருக்க வேண்டும். நீங்கள் எடுத்துப் பதுக்கி வைத்திருக்கும், எந்த நோய் நொடியும் அண்டியிராத தரமான மண்ணை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்து நீங்கள் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். தங்கமான மனதுடைய ஒரு பலசாலி, ஒரு விஞ்ஞானி வகையறா, ஒரு பொறியாளன், ஒரு குழந்தை மற்றும் நீங்கள் காதல் செய்யக்கூடிய சாத்தியமுள்ள ஒரு நபர், காதல் முளைக்கும் வரை நீங்கள் எஞ்சியிருந்தால் உதவும்
இப்பூமியின் முடிவு இப்படி நிதானமாகவும் இவ்வளவு விநோதமாகவும் இருக்கும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. எல்லாம் தன்னிருப்பிலிருந்து அப்படியே மாயமாகி வெளியேறியது, தம்மையே முழுமையாக மறந்துவிட்டவை போல. இந்நிலையில் சாவியை தொலைத்தால் தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. வீட்டு ஓனரிடம் உபரியாக இருக்கும் சாவியை கேட்டு வாங்கி இம்முறை இரண்டு நகல்களாக போட்டு எடுத்துக் கொள்ளலாம்தான். இப்படி சாவி மறைந்துபோகும் போக்கு தொடருமென்றால் இந்த இரண்டாவது நகல் உதவியிருக்கும். அல்லது, இதையே ஒரு குறிப்பாக புரிந்து கொண்டு திசையற்று தனக்கான மறையும் புள்ளியை தேடி அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு உலக வெளியில் நடந்தும் போய்விடலாம். அதாவது இதை சிகாகோவில் இருக்கும் என் சகோதரர் வீட்டிற்குப் நான் போய்விடுவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். என்னிடம் கொடுப்பதற்கென்று அவர் வீட்டு சாவி கூடுதலாக ஒன்று வைத்திருப்பாராக இருக்கும்.
இந்தப் பேரழிவு இருப்பிலிருந்து ஒவ்வொன்றையும் பிடுங்கி வெளியே எறிந்துகொண்டிருப்பது ஒரு விதத்தில் அழகாய்த்தான் இருந்தது. ஓரத்தில் ஒரு சிறிய பெட்டியை அழுத்தியவுடன் இணைய வலைப்பக்கம் விரித்திருந்த உலகம் மூடிக்கொள்வதைப் போல அவ்வளவு சுலபம்; அவ்வளவு சுத்தம். அதில் வேடிக்கையும் கலந்திருந்தது; ஒரு குண்டு மனிதன் கைவிடப்பட்ட கடைகளிருந்த வீதியில் நடந்து போகும்போது கீழே குனிந்து பார்ப்பான். அவன் காற்சட்டை காணாமல் போய் என்றோ வாங்கிய ஹாலோவீன் பேய் பொம்மைகள் போட்ட ஜட்டி வெளியே தெரியும்படி நடந்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இந்த மாதிரியான நகைச்சுவைகள்தான்.
இதைப்போலப் பல காணொளி காட்சிகள் இணையத்தில் எப்போதும் தென்படும்; ஒருநாள் இணையமும் இல்லாமல் போனது.
~oOo~
மிச்சிகன் ஏரிக்குள் தண்ணீரின் மேல் நீளும் நடை பாலத்தின் மீதிருந்த ரங்கராட்டின பெர்ரிஸ் சக்கரத்தைப் பார்த்துவிட வேண்டுமென்று நினைத்தேன். அது எப்போது மாயமாக மறையுமென்று தெரியவில்லை. எப்படியாவது முயற்சி செய்து அதைப் பார்க்கும் கடைசி ஆள் நானாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. அதற்கு நிறையக் காத்திருப்பும் கண்காணிப்பும் மேலதிக உழைப்பும் தேவைப்படும். காலம் முடியும் இத்தருவாயிலும் செய்வதற்கென்று வேறு விஷயங்களும் இருக்கத்தான் செய்தன. ஒரு பிளாஸ்டிக் பையில் இரண்டு ஆப்பிள்களைப் போட்டு எடுத்துக்கொண்டு, சுலபமாக செய்யக்கூடிய காரியமாயிருந்தும், வீட்டை பூட்டாமலேயே வெளியேறி நடந்தேன். லிஃப்டில் தரை தளத்திற்கு வந்து கிழக்கு ஜாக்சன் டிரைவில் தண்ணீர் தெரியும் விளிம்பை நோக்கி நடந்தேன். பின்பு அங்கிருந்து நெடுஞ்சாலையோரம் இருந்த கைப்பிடி கம்பியை என் ஒற்றைக் கையுறை அணிந்த கையால் பிடித்தபடி தொடர்ந்தேன். வாலிபர்கள் நிரம்பியிருந்த ஒரு சொகுசுக் கார் என்னைக் கடந்தபோது அதிலிருந்த ஒருவன் என்னை நோக்கி ஏதோ புரியாத வார்த்தைகளில் கத்தினான். முன்னெப்போதோ அவை வசவு வார்த்தைகளாக இருந்திருக்கக் கூடும். அது ஒரு பனிக்காலம் ஆனால் அவ்வளவு குளிர் இல்லை. வானிலையில் மாற்றங்களே அனேகமாக இல்லாமல் போனது மற்ற எவற்றையும் போலவே. இன்றைய நாள் நேற்றையதைப் போலவே இருந்தது: தூங்கி வழியும் காற்றும் வெளிறிய நீல வானும், மேகங்கள் இல்லாத ஆனால் துல்லியமற்ற மூடுபனி கவிந்ததை போன்ற ஒரு வெள்ளை; மெலிந்து கொண்டிருக்கும் காற்று மண்டலமாக இருக்க கூடும் அது.
மேம்பாலத்தின் நடைபாதையில் சீகல் பறவைகள் தன் அழுக்கான வெண் உடம்பை ஒன்றின்மீது ஒன்று நெருக்கமாய் அழுத்தி அண்டி உட்கார்ந்திருந்தன. அவை எதைக் கண்டாலும் தின்றுவிடும் போல – ரொட்டி துண்டுகள், மரப் பட்டைகள், துடைத்தெறிந்த காகிதங்கள். நாம் கழிவுகளை கொட்டி நிரப்புவதைக் காட்டிலும் வேகமாக சிந்திக்கும் திறனையே இழந்து வரும் இந்த மங்கும் உலகில், பிழைத்திருப்பதற்கென்றே படைக்கப்பட்டவை இந்தப் பறவைகள். ஒரு சின்ன பிளாஸ்டிக் சிங்க பொம்மையை விழுங்கும் முயற்சியில் சீகல் பறவையொன்று அதீத பொறுமையுடன் தன் அலகால் சிடு சிடுவென கொத்திக் கொண்டிருந்தது. அவைகளுக்குப் பின்னால் பாலத்தின் ஒரு ஓரத்தில் பூதாகரமாக உயர்ந்து நின்றது பெர்ரிஸ் சக்கரம். இத்தனைக்கும் நான் முதல்முறை பார்த்தபோது தோன்றியதைப் போல அது அவ்வளவு பெரியதல்ல. சக்கரத்தின் ஆரை கம்பிகள் பல காணாமல் போயிருந்தன. சுழலும் சிகப்பு இருக்கை வண்டிகளும் தொலைந்திருந்தன. பார்ப்பதற்குத் தொடர்ந்து ஒரே இடத்தில் குத்து வாங்கிய ஒருவரின் முகவாய் போல இருந்தது.
அதனருகே வெட்டவெளியில் நடந்து சென்றேன் ஆனால் என்னை யாருமே பார்க்கவில்லை. அடிப்பாகத்தை நெருங்கிப் பார்த்தபோது அதன் செயலியக்க கருவிகள் பூட்டு போட்டிருந்தன. கார்ட்டூன் படங்களில் வருவதைப் போல பொருத்தமேயில்லாத பெரிய நெம்புகோல் ஒன்று சக்கரத்தின் வேகத்தை மாற்றியமைக்க இருந்தது. வழி மறித்துப் போட்டிருந்த சங்கிலியின் அடியில் நுழைந்து தரை நெருங்கி ஆரம்ப நிலையிலிருந்த முதல் இருக்கை பெட்டியில் ஏறி ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு அசைத்து ஊஞ்சலாட்ட முயற்சி செய்தேன்; பலனில்லை. பாதுகாப்பு கம்பியை விலக்கிவிட்டு தண்ணீரை பார்த்தவாறு திரும்பி அமர்ந்தேன். எப்பவும் போல அலைகள் கரையை நக்கி ஈரமாக்கிக் கொண்டிருந்தது. தண்ணீர் பின்னிழுத்து மறைந்தால் உடனே அடுத்த அலை அதன் இடத்தைப் பிடித்துக்கொள்ளும். அதிலிருந்து தவறுவதோ இடைவெளியோ இருப்பதேயில்லை. பிளாஸ்டிக் பையில் கை நுழைத்துப் பார்த்தபோது என்னிடம் ஒரேயொரு ஆப்பிள் மட்டுமே இருந்தது.
இந்தப் பேரழிவு எல்லா விதமான பொருட்களையும் காணாமல் செய்துவிடுகிறது. நினைவுகளைக் கூட முழுதாக விழுங்கிவிடுகிறது. உன் ஞாபகங்களிலிருந்து நான் மறைந்து போகும்போது உன்னருகில் இருக்க விரும்பவில்லை. உன் நினைவிலிருந்து அவ்வளவு சுலபமாக நான் தவறி விழுவதைப் பார்க்க விரும்பவில்லை, உனக்கு முன்னரே நான் உன்னை மறந்து போவேன் என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து போகும் என்று தோன்றும்போதெல்லாம் உன்னை அழைத்து உன்மேல் பொய்க் கோபத்தில் எரிந்து விழுந்திருக்கிறேன். ஏதோ மறக்கப்படுவோம் என்ற பயத்தில் நீதான் முதலில் வீட்டை விட்டு, ஊரையே விட்டு, தொடர்வதற்கோ தொலைப்பதற்கோ எந்த அறிமுகமுமற்ற ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டாய் என்பதைப் போல. உண்மையில் இதை யாருக்கு யார் செய்தார்கள் என்பதை நீ மறந்திருப்பாய் என்று நினைத்தேன். இன்னும் மறக்கவில்லை நீ.
~oOo~
முதலில் பொருட்களெல்லாம் மறையத் தொடங்கியபோது வேடிக்கையாக இருந்தது, மோசமான ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சி அறுபடல்கள் போல. ஒருமுறை பூக்கள் சில கண்முன்னே காணாமல் போனபோது “ப்பூஃப் “, “போய்ங்க்” எனப் பின்னணியில் ஒலி கொடுத்து உரக்கச் சிரித்து விளையாடினோம். வேகமாக காலியாகிக்கொண்டிருந்த உலகம் கூட அந்நாட்களில் முழுமையானதாகத் தோன்றியது. தொடர்ந்து சப்தமெழுப்பி விளையாட முடியாதபடி நிறையப் பொருட்கள் மறையத் தொடங்கின. உலகில் உள்ள எதுவும் திரும்ப வரமுடியாமல் போய்விடக்கூடும் என்பது வருந்தச்செய்தது. வீட்டு வேலைகள் அதிகம் செய்யும் தேவை இனி இருக்காது, நம் வாழ்வு தன்னைத் தானே சுத்தம் செய்யத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லி சிரிப்பாய். ஆனால் நீதான் பாத்திரங்களை கழுவி, நாற்காலி மேஜைகளுக்கடியில் மூலை முடுக்கெல்லாம் கூட்டிப் பெருக்கி, தினமும் சுத்தமான ஆடை உடுத்தி, படுக்கையை திருத்தி வீட்டு வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டு செய்வாய். கண்ணாடி டம்ளர்கள் போய்விட்டபோது பேப்பர் தாள்களை மடித்து குடுவைகள் செய்தாய். பேப்பர்களும் போனவுடன் துண்டு துணிகளை கொண்டு செய்து பார்த்தாய். தண்ணீரை துணியால் எப்படிக் கொள்வது. எந்தத் தடங்களையும் இயல்பாய் கடப்பவன் நீ. நான் அதற்கு நேரெதிர்.
மறைந்து போவது தொடங்கிய முதலிரண்டு வாரங்களில் செய்தி நிலையங்கள் இதற்கு ‘மறை பேரழிவு’ எனப் பெயரிட்ட போதுதான் இது என்னவென்று தெளிவு கிடைத்தது. இதிலிருந்து திரும்ப மீள முடியாது என அறிவிக்கப்பட்ட நாளில் நான் அலுவலகத்திலிருந்து மதிய இடைவேளையில் வெளியேறி நடந்தேன். எங்கு போகிறேன் என்று யாரிடமும் சொல்லவும் இல்லை காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களையெல்லாம் ரத்து செய்துவிடலாமா என்று கேட்டு வந்த மின்னஞ்சல்களுக்கும் பதில் அனுப்பவில்லை. இந்த இடத்திற்கு இனி திரும்பப்போவதில்லை என்பதை உணர்ந்தே வெளியேறினேன். சுரங்க நடைபாதையை அடைத்து விட்டதினால் ப்ரூக்ளின் பிரிட்ஜை கடந்து மைர்டெல் அவென்யூவில் இருந்த நம்முடைய அபார்ட்மெண்டுக்கு நடந்தே வந்தேன். அந்நாளில் உலகம் அப்போதும் நெரிசலுற்றிருப்பதாகத்தான் பட்டது. காற்றுமண்டலத்திற்கு அப்பாலுள்ள வெறுமையை மூடிமறைக்க ஏதுவாக மேலே வானம் சாயம்போகாத தீவிர நீலமாக இருந்தது. கார்கள் வரிசையாக மேம்பாலத்தின் மீது முட்டி மோதிக்கொண்டு நின்றிருந்தன. இடம்பெயர உயர்ந்து பறக்கும் பறவைகளின் சத்தம் போல ஓட்டுநர்கள் சண்டையிட உத்தேசமில்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
வீடு வந்து சேர்ந்தபோது மதியம் தாண்டியிருந்தது. நீ ஆறரை மணிக்குத்தான் வருவாய். செய்தித்தாள் எடுத்துப் படிக்க முயன்று முடிந்த மட்டும் எல்லா மாய மறைவு செய்திகளையும் படித்து முடித்தேன். மற்ற செய்திகளெல்லாம் குறைந்து கொண்டே வருகிறது. சில இடங்களில் தாளின் சாம்பல் நிறம் தெரியுமளவிற்கு வெற்றிடமாகவே இருந்ததைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஏழரை தாண்டி எட்டு ஆன பின்னும் நீ வீடு வந்து சேரவில்லை. குக்கீக்கு உணவு வைத்துவிட்டு அவள் குடிக்க தண்ணீரும் நிரப்பி வைத்தேன். அழ ஆரம்பித்து கட்டுப்படுத்தி மீண்டும் நிறுத்தினேன். அழிந்த கண் மையை சரிசெய்து முகத்தை பழையபடி வைத்துக்கொண்டேன். நீ வந்தபோது மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. உன்னிடமிருந்து வித்தியாசமான வாசம் எதுவும் வெளிவரவில்லை. வியர்வையோ சிகரெட்டோ மது வாசமோ எதுவும் வெளிவரவில்லை. எங்குதான் இருந்தாய் இவ்வளவு நேரம்? நீ வேலையிலிருந்து வருவதற்கே தாமதமாகிக் கொண்டிருந்தது. நீ கேள்விப்படவில்லையா? “நிச்சயமானது”, “மீளமுடியாதது”, “இறுதி நாட்கள்”. இந்த வார்த்தைகள்தான் திரும்பத் திரும்ப பேசப்படுகிறது.
நீ என்னை அணைத்தபோது என் கண்ணீர் துளிகளின் ஈரத்தடம் உன் சட்டையில் படிந்தது. உன் நெஞ்சருகிலிருந்து விலகியபோது அவை மங்கிய இரு சிறுகண்களென என்னைத் திரும்பி நோக்கியது.
“ஏன் இப்படிச் செய்தாய்” எனக் கேட்டேன். “எங்கே போயிருந்தாய் இவ்வளவு நேரம்?”
“வேலையிலிருந்தேன்” என்றாய். “நிறைய பேர் விட்டுச் சென்றுவிட்டார்கள், உனக்கு தெரியும்தானே? டோபி, மேரியான் மற்றும் புதிதாக சேர்ந்த பயிற்சி ஊழியர்கள் அனைவரும். தேவைக்கு இப்போது வேலையாட்களே இல்லை எங்களிடம். இரண்டு புதிய கட்டுமான உத்தரவுகள் வேறு என் கைவசம்.”
என் உள்ளங்கைகளில் உன் முதுகு கதகதப்பாகவும் திடமாகவும் அழுந்தியிருந்தது.
“கட்டியெழுப்புவதற்கு இனி எதுவும் இல்லை. உலகம் நழுவிக்கொண்டிருக்கிறது.” என்றேன்.
“எனக்குத் தெரியும்” என்று பதில் சொன்னாய். “அதைத் தடுக்க நம்மால் செய்யக்கூடியது எதுவும் இல்லை”.
“அதையேதான் நானும் சொல்கிறேன்”
நீ என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நாமிருவரும் ஒரே விஷயத்தை சொல்வது போலத்தான் எனக்கு கேட்டது இருந்தாலும் முற்றிலும் அது எப்படி வேறு வேறு அர்த்தம் கொண்டதாக இருக்கமுடியுமென்றுதான் எனக்கு விளங்கவில்லை. அன்றே பின்னிரவில் உன்னுடைய வேலையை விட்டுவிட்டு மிச்சமிருக்கும் பகற்பொழுதுகளிலும் என்னுடனேயே இருக்கும்படி கேட்டேன். பிழைத்திருப்பதற்கான தயாரிப்புகளில் ஈடுபடலாம். தோட்டம் ஒன்றை அமைக்கும் வசதி கொண்ட வீட்டை வாடகைக்கு எடுக்கலாம். திறந்து மூடுவதற்கு ஏதுவான ஜன்னல்கள் கொண்ட வீடு. பகலெல்லாம் சுற்றி நடந்தலைந்து இன்னும் இங்கு வெகுகாலம் தங்காமல் போகப் போகின்றவற்றை பற்றியெல்லாம் அறிந்து கொள்வோம். ஆனால் நீ மாட்டாய். உனக்கு கட்டிட கலைஞனாக இருக்கவே விருப்பம். முற்றான அழிதலை நோக்கி ஒவ்வொன்றாக கழியத் தொடங்கியிருக்கும் இவ்வுலகில் புதிதாக ஒன்றையேனும் சேர்த்துவிடுவதுதான் உனக்குச் சந்தோஷத்தை கொடுக்கும் என்று சொன்னாய்.
~oOo~
நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த நடைபாதையொன்று பாலத்திற்கு அடியில் போனது. அதன் குளிர்ந்த இருட்டிலிருந்த ஒரு பெஞ்ச் நோக்கியிருந்த வெற்றிடம் யார் யாரோ தூக்கியெறிந்த கண்ணாடி துண்டுகளால் நிரம்பியிருந்தது. இக்கண்ணாடி ஓடுகளில் சூரிய ஒளி பட்டதும் தரையிலிருந்து மேலுயரும் சரவிளக்கொன்றை ஏற்றியதைப் போல பச்சையும் வெள்ளையாக நிலத்துண்டுகள் ஜொலித்தன. ஒவ்வொருமுறையும் அவ்விடத்தைக் கடக்கும்போது அவை குறைந்துகொண்டே வருகிறது. அந்த பெஞ்சும் இல்லை இப்போது. கண்ணாடி துண்டுகளை பார்த்தவாறு என் கடைசி ஆப்பிளைக் கடித்தேன். முடிவற்று வாழ்க்கை முழுதும் உன்னோடே இருக்கப்போவதாக நினைத்த காலங்கள் உண்டு. ஆனால் நமக்கான நேரம் கணக்கிடப்பட்டுவிட்டது, அதன் எல்லையை நம்மால் காணக்கூடிய அளவிற்கு எனும்போது அவ்வளவு உறுதி நிலைக்கவில்லை. ஒரு செஸ் விளையாட்டிற்கோ அல்லது சினிமா பார்ப்பதற்கோ தேவைப்படுவதைவிடவும் நீண்ட நேரம், ஆனால் நமக்கென கற்பனை செய்ததைவிடவும் மிக மிகக் குறைந்ததெனும் அளவில் நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியவில்லை. முன் சிலநாட்களில் காலையுணவின் நேரம் கடந்த பின் தான் தூக்கத்திலிருந்தே விழிப்போம். மதிய உணவின் நேரமும் தாண்டும் வரை படுக்கையிலேயே கிடப்போம். அப்படியான நாட்களைப் போல இப்போது உணர்கிறேன். அந்நாட்கள் என்னை நடுங்கச் செய்யும். நம் நேரத்தை எப்படி உருப்படியாகக் கழிப்பது என்பதில் நமக்குள் சண்டை வரும். நேரம் தீர்ந்துவிடப் போகிற மாதிரியும் நாட்கள் காலியாகிவிடுவது மாதிரியும் வாழ்க்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க நீ விரும்பவில்லை. “எனக்கு எந்த நோயுமில்லை” என்றாய். “நமக்கு கேன்சர் இல்லை, நாம் செத்துக் கொண்டு இல்லை” என்றாய். “அதனால் நாம் வாழ்வதைப் போல் வாழ எனக்கு விருப்பம் இல்லை” என்றாய். இரண்டு விதமான மக்கள் உண்டு. அதில் ஒருவர் எப்போதுமே முதலில் விட்டுக்கொடுப்பவர்கள்.
நாம் சண்டையிட்டபோதெல்லாம் அதை முதலில் கடந்து போனது நீதான். சமையலறை சுவரிலிருந்த நீள்சதுர சந்தின் வழியே செய்தித்தாளில் புகைப்படங்களின் அடியில் உள்ள சிறு சிறு குறிப்புகளையும் நீ தலையைக் கவிழ்த்து குனிந்து உற்று பார்ப்பது தெரியும். அதிலிருந்து சுற்றத்தின் பிரக்ஞையற்று நிமிர்ந்து பின்னால் சாய்ந்தவாறே செய்திக்கட்டுரைகளுக்கு திரும்பிப் போவதைப் பார்ப்பேன். அப்பொழுதே எனக்குத் தெரியும் நான் உன்னை விட்டு விலகினால் ஏற்படும் வெற்றிடம் அடித்துச் செல்லும் பெருவெள்ளப் பாதையின் பள்ளம் நிரம்பும் வேகத்தில், காயம் ஆறுவது போல ஆறிவிடுமென்று.
நீர்ப்பாலத்திலிருந்து இவ்வளவு தூரத்திலும் சீகல் பறவைகள் ஒன்றோடொன்று குப்பைகளுக்கிடையில் சண்டையிட்டு கடுங்குரலில் கத்தும் சத்தம் கேட்க முடிகிறது. இந்நாட்களில் இச்சப்தங்கள் கடலை நோக்கி பலம் கொண்டு எறியப்பட்ட கல்லைப் போல மெலிந்த காற்றை கிழித்துக்கொண்டு வெகு தூரம் பயணிக்கிறது. பாதி கடித்திருந்த ஆப்பிளின் உட்பகுதி என் வலது கையுறையை நனைத்திருந்தது. இன்னொரு கை கண்ணீரை நிறுத்தி மூக்கின் மேல் அழுந்தியிருந்தது. இரண்டு வகையான மக்கள் உண்டு. அதில் ஒருவர் யாருக்காவது கேட்கும் சிறிது சாத்தியமாவது இருந்தால் முட்டுமே அழுவர். ஆப்பிளை தரையில் வைத்து அதை நோக்கி “பூஃப்ப்” என்று சத்தம் எழுப்பினேன். ஏதாவது நடக்குமெனக் காத்திருந்தேன். வந்த பாதையிலேயே திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.
வீட்டை அடைந்ததும் குக்கீயின் எல்லா விளையாட்டு பொருட்கள், உணவு தண்ணீர் குவளை, மணி தொங்கும் சிறிய ஊதா நிற பந்து, ஆளுயர கத்தும் வாத்து பொம்மை என எல்லாவற்றையும் சேகரித்து கூடத்தில் மெல்லிய போர்வை விரித்து அதன் மீது ஒவ்வொன்றாக மறைந்து போவதை வசதியாகப் பார்க்குமாறு கிடத்தி வைத்தேன்.
~oOo~
இந்த மறைதல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறதா? இல்லை. கிழக்கிலிருந்து மேற்காகவோ மேற்கிலிருந்து கிழக்கிற்கோ இந்த நிகழ்வுகள் நகர்ந்தபடியிருக்கிறதா? ஒருவேளை அகரவரிசைப்படியோ தோன்றிய காலவரிசையிலோ வகை மாதிரி பிரித்துக்கொண்டோ மறைந்து வருகின்றனவா? அதுவும் இல்லை. பிரயத்தனப்பட்டு இதைப் புரிந்துகொள்ள முயலுகையில் இதன் ஒழுங்கின்மைதான் அதிகம் வெளிப்படும். ஒரு வாரம் அதது வைத்த இடத்தில் வைத்தபடி இருக்கும். திடீரென வாரப் பத்திரிக்கைகள் என்ற ஒன்றே இல்லாமல் போகும். உங்கள் வீட்டில் மட்டுமல்ல யார் வீட்டிலும். புதிதாக ஒன்றைத் தயாரித்து வெளியிடவும் யாரும் தயாராக இல்லை. பெரியதிலிருந்து சிறியதிற்கென இது நகர்ந்து வருகிறதா? இதற்கென ஏதாவது திட்டமாவது இருக்கிறதா? எதைப் பற்றியும் யோசிப்பதற்கு களைப்புற்றிருக்கும் ஒரு மனநிலையில் இது அழகாகவே இருக்கிறது – எதிர் வீட்டின் அறை விளக்குகளை ஒவ்வொன்றாக ஒருவர் அணைத்துக்கொண்டே வருவதைப் பார்ப்பதை போல.
காலியாக கிடந்த என் தம்பியின் அறையில் தரையில் அமர்ந்து வரிசையாக நான்கு சாக்லேட் பார்களை உண்டேன். உன்னை ஏற்கனவே ஒருமுறை அழைத்திருந்தேன். மீண்டுமொருமுறை அழைப்பதற்கான காரணத்தை உருவாக்கிக் கொண்டிருந்தேன். தொட்டுணர முடியாத பொருண்மையற்றவையே காணாமல் போகும் என்று வல்லுநர்கள் கூறத் தொடங்கினர். கருத்துகள், ஞாபகங்கள், நினைவோட்டங்கள் சீக்கிரம் அழியக்கூடியவை என்றனர். தெளிவான உதாரணங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. குக்கீ காணாமல் போனது உனக்கு இன்னும் நினைவிலிருக்கிறதா என தெரிந்து கொள்ள அழைப்பது சரியாக இருக்குமென்று எண்ணினேன்.
எண்களை அழுத்தினேன். இரண்டு முறை மணி அடித்ததும் உன் குரல் கேட்டது.
“ஹலோ” என்றாய்.
“நான்தான்” என்றேன்.
“நீயேதான்” என்று பதில் சொன்னாய்.
” குக்கீயை உனக்கு இன்னும் நினைவிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளத்தான் அழைத்தேன்” என்றேன்.
“ஆஃப் கோர்ஸ். எனக்கு இன்னும் குக்கீயின் ஞாபகம் இருக்கிறது”. நம் தொடர்பு அசைவற்று போனதுபோல இருமுனைகளிலும் அமைதி.
“என்ன ஞாபகம் வைத்திருக்கிறாய்?” என்று கேட்டேன்.
“நீ குக்கீ யை வளர்க்கத் தேர்ந்தெடுக்க காரணமே அது உன்னைக் கடித்து வைத்ததுதான் என்பது ஞாபகம் இருக்கிறது.” என்று சொன்னாய். “இந்த பிராணியை வெற்றி கொள்வது உனக்கு முக்கியம் என்று முடிவெடுத்தாய். பூனையை எப்படி பிடித்துத் தூக்குவது என்று தெரியாமல் கிடைத்த இடத்திலெல்லாம் பிடித்து தூக்க முயன்றது ஞாபகத்தில் இருக்கிறது. நடுவில் பிடித்து வயிற்றை அழுத்தி தூக்கியபோதெல்லாம் நீ கடி பட்டாய்.”
“உன் எண்ணை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன்” என்றேன்.
“நல்லது” என்றாய்.
சரி உன்னைப் போகவிடுகிறேன் என்று சொன்னதற்கு குட் நைட் என்றாய். இருவரும் இணைப்பைத் துண்டித்தோம்.
இந்நாட்களில் தான் உன் இழப்பை அதிகம் உணர்ந்தேன் நீ தொலைந்து போனதற்கு பிறகான நாட்களை விடவும். உன்னுடன் பேசுவது குறையக் குறைய உன் மீதான காதல் தீவிரமடைவதைப் போன்ற வேகத்தில் நல்ல நினைவுகளை மறப்பதைக் காட்டிலும் கசப்பான விஷயங்கள் அனைத்தையும் வேகமாக மறந்து கொண்டிருந்தேன். நான் ஒரு விளையாட்டு விளையாடுவேன். ” நாம் சிறந்த ஜோடியா இல்லையா?” என்று அதற்கு நானே பெயர் சூட்டிக்கொண்டேன். தெரிந்தோ தெரியாமலோ நீயும் என்னோடு சேர்ந்தே இதை விளையாடினாய். இதுதான் அந்த விளையாட்டு. நாம் சேர்ந்து சினிமாவுக்குப் போக திட்டமிட்டதை மறந்துவிட்டு நீ தனியாகவோ அல்ல உன் நண்பரோடோ சினிமா பார்க்கப் போய்விடுவாய். நான் வீட்டில் தனியாக காத்துக்கொண்டிருப்பேன். சிலசமயம் உன் செல்போனை சார்ஜ் பண்ணுவதையும் மறந்து விட்டு உன் அலுவலுக வேலையிலேயே அதிகாலை நான்கு மணி வரை இருந்துவிடுவாய். உனக்காகவே காத்திருந்து சோபாவிலேயே தூங்கிக் கொண்டிருக்கும் என்னை வந்து எழுப்புவாய். அப்போது என்னை நானே கேட்டுக்கொள்வேன். – “நாம் சிறந்த ஜோடியா இல்லையா?”. அதற்கடுத்து நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதுவே விடையாகவும் அமையும். பின்பு நீ ஏன் இப்படிச் செய்கிறாய் என்பதைப் பற்றியே சோர்ந்து போகும்வரை யோசித்துக் கொண்டிருப்பேன்.
இந்த மறைதல்களெல்லாம் கிட்டத்தட்ட தோற்ற மயக்கங்களைப் போல ஒருவிதமான இருத்தலியல் மாயங்களாக இருக்கலாம் என்ற கோட்பாட்டின் மூலம் அரிஸோனாவில் வாழ்ந்து வரும் எச்சார்புமற்ற சுயேச்சை இயற்பியல்வாதி ஒருவர் புகழடைந்திருந்தார். நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவைகளை நாம் இன்னும் நினைவில் வைத்திருந்து நம்மால் அவற்றை நம் மனக்கண்ணில் மீட்டு நிறுவமுடிகிறது என்பதே அவை இங்கேயே இன்னும் இருப்பதற்கான சாட்சி என்றார் அவர். கல்லைக் கண்டார் கடவுளைக் காணார். இது எல்லாமே பார்க்கும் பார்வையைப் பொறுத்தது என்றார் அவர். நிலை மாறும் பார்வை கோணம்: கார் எடுத்துக் கொண்டு கிளம்பும்போது உங்கள் பார்வையிலிருந்து விலகும் வீடு, அருகில் ஒரு குன்றின் மீதிருந்து பார்த்தால் தெரிவதைப் போல. வீடு தொலைந்து போனது என்று நினைப்பது முட்டாள்தனம். மறைந்து போனவையெல்லாம் நம்மோடு இன்றும் ஒருங்கியிருப்பவைதான் ஆனால் காலத்தால் பொருளிழந்தவை என புரிந்துகொள்ளவேண்டும். இதுதான் அவரின் ‘கால-இட தடை’ கோட்பாடு. இதை நம்பியவர்களெல்லாம் தங்களுக்கு சிறப்பு தகுதிகள் அளிக்கும் ஒரு இடம் உண்டு என்றும் நம்பினார்கள். புறா வண்ண மென்முகடுகளை கொண்ட நார்மண்டி கடற்கரையில் சமீபத்தில் தொலைந்து போனவையெல்லாம் கொஞ்சம் மிருதுவாக முப்பது நாற்பது வருடப் பழமையானவையாக மீண்டும் தோன்றுவதாக பரவிய வதந்தியின் பேரில் அவர்கள் அங்குப் புனிதயாத்திரை சென்றனர். 1759ல் பன்னிரண்டு வயது சிறுமி ஒரு கிழவனோடு நடக்கவிருந்த திருமணத்திலிருந்து தப்பிக்க இங்கு மூழ்கி இறந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.
நான் தரையில் அமர்ந்து க்ரானோலா பார் கவர்களை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டேன். அந்தப் பையை இன்னுமொரு பிளாஸ்டிக் பையில் போட்டுவைத்தேன். பிளாஸ்டிக் பைகளும் மறைந்துக் கொண்டிருந்தனதான். ஆனாலும் என் தம்பி நிறைய பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தான். உன்னை மீண்டும் அழைப்பதற்காக போனை எடுத்தேன். என் நினைவில் இருந்தே உன் நம்பர்களை அழுத்தினேன்.
உனக்கு பதிலாக பதியப்பட்ட குரல் ஒன்று, அழைப்பை தற்போது ஏற்க இயலாது என்று கூறியது.
மறைந்து போனவைகளுக்கான பிரத்தியேக துறைக்கு போன் செய்தேன். “மனிதர்களுக்கு” எண் ‘1’ அழுத்தி மீண்டும் “ஆண்களுக்கு” எண் ‘1’ அழுத்தினேன். வயது “21லிருந்து 31க்குள்” என்பதைக் குறிக்க எண் ‘3’ஐ அழுத்தினேன். அடுத்து “நண்பர்கள்” எண் ‘3’ ஆனால் நான் அதற்கு மாறாக எண் ‘2’ அழுத்தினேன். அது “காதலர் அல்லது இணைந்து வாழும் முக்கியஸ்தர்களுக்குரியது”. இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாய் என்று நினைக்கிறேன். அழகிய பெண்குரல் பதிவை உறுதி செய்ய “ஆண் காதலர் வயது 21லிருந்து 31க்குள்” என்று சொல்லி தகவலை உறுதி செய்ய சொல்லி கேட்டது. நான் # பட்டனை அழுத்தி உன்னை விவரிக்கத் தொடங்கினேன்.
~oOo~
ஒரு இலையுதிர் காலத்து பிரகாசமான காலைப் பொழுதில் என் முகத்தை உற்று நோக்கியிருந்த உன் முகத்தில் விழித்தது நினைவிலிருக்கிறது. சில விடியல்களில் நாம் ஒன்றாக தூக்கம் களையும்போது ஒருவரை ஒருவர் மறந்துவிட்டதைப் போல் பாவனை செய்வோம். நம்மில் ஒருவருக்கு அம்னீஷியா வந்துவிட்டது. அந்த ஒருவர், “நான் யார்? எங்கிருக்கிறேன்” எனக் கேட்க, தகுந்தாற்போல் ஒரு புது கதையை புனைவது மற்றவர் பொறுப்பு. நல்ல கதைகள் கொஞ்சம் நீளமாகவும் மிகச் சிறந்த கதைகள் மொத்தமாக புது வாழ்க்கையே போனஸாக கிடைத்துவிட்டதைப் போல தோன்றச் செய்யும். கவலைப் படாதே என்று என்னை நீ ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தபோது ஜன்னலுக்கு வெளியே மஞ்சள் இலைகள் பொன்னிற ஒளியை பரப்பிக் கொண்டிருந்தது. நான் பாதுகாப்பாக இருந்தேன், உன்னோடு இருந்தேன். கல்லூரி காலங்களிலிருந்தே நாம் ஒன்றாகவே இருந்தோம். அந்த வருடத்தின் மிக வெம்மையான நாளொன்றில் பூங்காவின் மையத்தில் சந்தித்தோம். குளத்தை நோக்கியிருந்த பெஞ்சில் அமர்ந்து வான்கோழி, சுவிஸ் வெண்ணெய் கொண்டு ஸ்பினாச் தழைகளால் சுற்றியிருந்த சாண்ட் விச்சை உண்டோம். இருவர் கையிலும் அதே சாண்ட்விச்.
இலையுதிர் மதியங்களில் இலைகள் கணக்கில்லாமல் தான்தோன்றியாக எப்பொழுதுமே விழுந்து கொண்டிருந்தது. இலைகள் வண்ணம், எடை, காற்றின் வேகம் என எதன் பொருட்டுமில்லாமல் தரையில் சொட்டிக்கொண்டிருந்தது.
மிக நுட்பமாக எல்லா இடங்களிலும் நிகழ ஆரம்பித்த இந்த மறைதல்கள் நாட்களின் மீது கனமாக அழுத்திக் கொண்டிருந்தது, இந்தப் பொழுது எப்போது கடந்து போகும் என்று சில நேரம் நம்மை காத்துக் கொண்டிருக்க வைப்பதைப் போல. இந்த உணர்வே, நீ இல்லாமல் என்ன செய்யப்போகிறேன் என்று யோசிக்கும் முன்னரே உன்னை விட்டு விலகுவதற்கு வசதியாக இருந்தது. நம்முடைய வீட்டின் வெளியே சாவி இல்லாமல் நின்று கொண்டு உன்னை திரும்பத் திரும்ப செல்போனில் அழைத்தேன், நீ வேலையில் இருக்கிறாய் என்று தெரிந்தும் கூட. ஒவ்வொரு முறையும் என் அழைப்பை எடுக்காமல் போனபோது நீ மறைந்துவிட்டாய் என்றே கற்பனை செய்து கொண்டேன், அப்படியொரு கற்பனை என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை உணரத் தொடங்கியதுவரை. நான் மறைந்து விட்டதைப் போல தோன்றியது. நான் இல்லாமலும் எல்லாம் தொடர்ந்து செயல்படுவதைப் பார்த்தேன். அதைக் கண்டுகொள்ளவில்லை. தெரு முனையிலிருந்த ஏடிஎம் சென்று என் வங்கி கணக்கிலிருந்த அத்தனை பணத்தையும் எடுத்தேன். வங்கி கணக்குகள் அப்போது இருந்தது. ஆனால் எங்கேயோ யார் கண்களுக்கும் தட்டுப்படாதபடி. அவை இப்போதும் இருக்கக் கூடும், வங்கிகளே காணாமல் போய் விட்ட பின்னரும். நான் பணத்தையும் நம்முடைய காரையும் எடுத்துக் கொண்டு மேற்கே சிகாகோவை நோக்கி ஓட்டத் தொடங்கினேன். இவை இறுதி நாட்களாக இல்லாமலிருந்திருந்தால் நாம் இப்போதும் ஒன்றாகத்தான் வாழ்ந்திருப்போமா? நான் உன்னைவிட்டுப் பிரிந்ததிலேயே மிகக் கடினமானது எதுவென்றால் என் வாழ்க்கையை நான் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பதை நானே பார்த்துக்கொண்டு, எந்நேரமும் என்னருகிலேயே இருந்துகொண்டு, என்னை கேள்விகளால் துளைத்துக் கொண்டு, என் உடம்பிற்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, நீ வீடு திரும்பியதும் எனக்குப் போன் மேல் போன் போட்டு அழைப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டும் இருந்ததுதான்.
அறிவிப்பிற்குப் பிறகு மக்கள் இரண்டு விதமாக இருந்தனர். இரண்டில் ஒன்றைச் செய்தார்கள். இந்த அழிவிலிருந்து தப்பிக்க அதிக அக்கறை கொண்டு செயல்பட்டார்கள். அல்ல இதை அப்படியே விட்டேத்தியாக கண்டுக்கொள்ளாமல் இருப்பது. எப்படியாவது வாழ்ந்து பார்ப்பது என்று சேகரித்த பொருட்களைப் பதுக்கி பாதுகாப்பது. அல்லது மிச்சமிருக்கும் நேரம் அதன் போக்கிலேயே தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கட்டும் என விட்டுவிடுவது. புழங்கக்கடையில் காய் கனி செடிகளை வளர்க்கத் தொடங்குவது. அல்லது வீட்டுத் தோட்டங்களை புதர் மண்ட விட்டுவிட்டு முழுக்குடியில் மதிய நேரத்தில் கஞ்சா புகை சூழ தோட்ட நாற்காலியிலேயே தூங்கிக்கொண்டிருப்பது.
கொஞ்சக் காலத்திற்கு எதைச் செய்வதாக இருந்தாலும் அதை முழு அர்ப்பணிப்புடன் செய்தோம். ஆனால் சில வாரங்களிலேயே அதைத் தொடர்வது கடினமாகிப் போனது. கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் குறைந்து எதைப் பற்றியுமான அக்கறை வலுவிழந்து உதிரி உதிரியாகவே செயல் தீவிரம் மிஞ்சியது. செய்வதென்று தொடங்கி பிறகு செய்ய நிறைய இருக்கிறதென்ற சோர்விலேயோ அளவுக்கு மிஞ்சி அதிகம் செய்துவிட்டோம் என்ற அயற்சியிலேயோ தூங்கப் போய்விடுவோம். இறுதியில் இரண்டில் ஒருவித மக்கள் மட்டுமே இருந்தனர்.
~oOo~
பிரதான படுக்கை அறையில் மெத்தை மீதிருந்த உறைகளைக் களைந்தேன். என் தம்பி திரும்ப வரப்போவதில்லை. ஆனாலும் படுக்கையை சீர் செய்து ஒரு நல்ல விருந்தாளியாக நடந்துக் கொண்டேன். நட்சத்திர விடுதிகளில் செய்வதைப் போல உறைகளைச் சுருக்கமில்லாமல் நகர்ந்து நழுவி விட முடியாதபடி அவற்றின் முனைகளை மெத்தைக்கு அடியில் இறுக்கமாக மடித்து படுக்கையை சுத்தமாகத் தயார் செய்து வைப்பேன். அதில் படுப்பதற்கு நானே பாடுபட வேண்டும். தலையணைகளை மெத்தை உரைகளுக்கு அடியிலிருந்து பலம் கொண்டு வெளியே எடுத்து போர்வைகளை மெத்தையிலிருந்து கிழிப்பதைப் போல பிய்த்து பின் அதற்குள் உறங்கச் செல்வேன்.
இன்னமும் வேலை செய்யும் மிகச் சில போன்களில் என்னோடதும் ஒன்று. சத்தம் போட்டு சொன்னேன்.
விளக்குகளை எரிய விட்டு தூங்கத் தொடங்கியிருந்தேன். எனக்கு ‘பார்க்கும்’ நேரங்கள் அதிகம் வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் கண் முழிக்கும்போதெல்லாம் பார்க்க வேண்டும். வெளியே ஜன்னலில் பனி விழுந்து கொண்டிருந்தது. சினிமாக்களில் வரும் பனிப்பொழிவு போல கனவுலக பஞ்சு இழைகளெனத் தனித்த விளக்கு கம்பத்தை சுற்றி சொரிந்து கொண்டிருந்தது. காணாமல் போனவர்களுக்கான தொடர்பு எண்ணில் ஒலித்த குரலுக்கு சொந்தமான பெண்ணை நான் காதலித்திருக்கலாம். நான் விரும்பியபோதெல்லாம் அழைத்து அவள் குரல் கேட்டு இப்போது சற்றும் இல்லாமல் போனது போல் தோன்றும் ஒரு உணர்வை மீட்டெடுத்திருக்கலாம். அவளைக் காதலித்தது யாராக இருந்தாலும் அவர்கள் இன்றும் இங்கே இருப்பார்களெனில் அதிர்ஷ்டசாலிகள்தான். பனிப்பொழிவு வேகம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மெலிந்துக் கொண்டிருந்தது. பின்பு இரண்டோ மூன்றோ பஞ்சுத் துளிகள்தான் எங்குபோவதெனத் தெரியாதவை போல் மேலும் கீழுமாக அலைந்துக் கொண்டிருந்தது.
என் அறையில் விளக்கு சிறிது நேரம் எரிந்து கொண்டிருந்தது. கண்ணாடி ஜன்னலில் என் நிழற்பிம்பத்தைப் பார்த்தேன். தலைமேல் இருந்த விளக்கு சடாரென இருளடைந்தது. பல்பு தொங்கிக்கொண்டிருந்த வயர் வெறுமையாக ஆடும் சத்தம் மட்டும் கேட்டது. கண்களுக்குத் தெரியவில்லை. கூடிக்கொண்டே போகும் அமைதி மற்ற பொருட்களும் மறைந்து கொண்டிருக்கின்றன என உணர்த்தியது. உலகிலுள்ள அத்தனையும் தனக்கேயுரிய ஒரு லயத்தில் அதிர்வுறும், ஒரு சிறுதுளி சத்தம் வெளியிடும் என்று சொல்வார்கள். உண்மையில் எதுவும், எதுவுமே அதிர்வலைகளை வெளியிடாமல் இருப்பதில்லை. என் உடம்பிலிருந்து வெப்பம் வெளியேறிப் போகும் இடமில்லாமல் அதிர்ந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. இருள் திட்டு திட்டாய் கரும்புள்ளிகளின் மாயத் தோற்றத்தில் என் கண்களை கடந்து பின்னால் மிதந்து சென்று கொண்டிருந்தது. என்னைச் சுற்றி என்னைப் பார்த்துக்கொண்டு எவருமே இல்லையென்றால் நான் மறைந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு எப்படித் தெரியும்? இது வெறும் தூக்கமில்லை என்பதை எது எனக்குச் சொல்லும்? இந்த இருட்டில் மறைந்து போவதையெல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை ஆனால் எல்லாமும் தூரம், வெகு தூரம் போய்க்கொண்டிருக்கிறதென்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. ஒரு கட்டத்தில் எதுவுமே தெரிந்து கொள்ள முடியாமல் போனது.
நெப்ராஸ்கா மாகாணத்தில் லிங்கன் நகரில் உள்ள ஒரு பெண் தன்னால் மறைந்து போனவர்களோடு உரையாட முடியுமென்று கோரினாள். அவளை அழைத்து டெலிபோனில் யாரைத் தேடிக்கொண்டிருக்கிறோம் அவர்களின் முழுப் பெயர், வயது, உயரம், எடை என்ன என்பதைச் சொல்ல வேண்டும். அவள் தன் வீட்டின் பின்னாலுள்ள பல தசமங்களுக்கு முன் தன் தாத்தா தோண்டி வைத்த கிணற்றருகே சென்று இத்தகவல்களைக் கிணற்றுக்குள் சத்தம் போட்டு அடியாழத்துக்குப் போகும்படி கத்துவாள். திரும்ப வரும் எதிரொலியில் அந்தப் பக்கம் போய்ச் சேர்ந்த மாயமான உங்கள் விருப்பத்திற்குரியவர்கள் அவ்வார்த்தைகளைக் கலைத்து போட்டு பதில்களாக கோர்த்து தாங்கள் தெரிவிக்க வேண்டியதை கிசுகிசுப்பான குரலில் அனுப்பி வைப்பார்கள் என்று சொன்னார்கள். இதற்கு நன்கொடையாக அவளுக்குச் சுத்த தங்கமோ நகைகளோ வெள்ளிப் பாத்திரங்களோ கொடுத்து விட வேண்டும். அவளுக்குக் கேட்பதை போல அவர்களின் குரல் மற்றவர்களுக்கும் கேட்டு அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் எவ்வளவு நாம் உடனில்லாத குறை கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே அவளின் விருப்பம் என்றும் சொல்லிக்கொண்டாள். இங்கிருந்து மறைந்தவையெல்லாம் அந்தப் பக்கம் சென்று சேர்ந்துவிட்டதெனவும் அங்கிருப்பவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு மற்றனவும் அவர்கள் பக்கம் வந்து சேர்ந்து புதியதோர் உலகை முழுதாக மீண்டும் உருவாக்க காத்துக் கொண்டிருப்பதாகவும் அவள் சொன்னாள்.




Friday, July 1, 2016

பாலத்தில் ஒரு கிழவன்

எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகச் சிரிய சிறுகதையின் என் மொழியாக்கம் சொல்வனத்தில்..



முழுக்க தூசி படிந்த ஆடைகளோடு சாலையோரத்தில் உலோக விளிம்பு கொண்ட மூக்கு கண்ணாடியை அணிந்தபடி கிழவர் ஒருவர் அமர்ந்திருந்தார். நதியை கடக்க ஒரு தொங்கு பாலம் இருந்தது. அதன் மீதேறி கட்டை வண்டிகளும் பாரம் பூட்டிய வாகனங்களும் ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் நதியைக்  கடந்தபடி இருந்தனர். கோவேறு கழுதைகள் இழுத்துச் சென்ற வண்டிகள் மேடேறிப் பாலத்தை கடக்க இயலாமல் திணறி தேங்கி நின்றன. இராணுவ வீரர்கள் பின்னாலிருந்து உந்தித் தள்ளி அவ்வண்டிகள் கரையைக் கடக்க உதவிக் கொண்டிருந்தனர். வண்டிகளெல்லாம் ஒவ்வொன்றாக சாலையிலிறங்கி வெளியேறத் தலைப்பட அவற்றோடு குடியானவர்களும் முழங்கால் முழுகும் தூசி படிந்த மணலில் அடிமேல் அடியெடுத்து முன்னேறினர். அனால் அந்தக் கிழவர் மட்டும்  அமர்ந்திருந்த இடத்திலிருந்து நகரவேயில்லை. அதற்கு மேல் எங்கும் செல்வதற்கு முடியாமல் சோர்வுற்றிருந்தார்.
பாலத்தைக் கடந்து சென்று அப்பால் எவ்வளவு தூரம் எதிரிகள் நெருங்கியிருக்கிறார்கள் என அறிந்து வருவதுதான் எனக்கு இடப்பட்ட பணி. அவ்வாறு நோட்டமிட்டு மீண்டும் பாலமேறி வந்தேன். இப்போது மிகச்சில வண்டிகளும் நடந்தபடி வெளியேறும் வெகு சில மனிதர்களுமே தென்பட்டனர். கிழவர் அப்போதும் அங்கேயே இருந்தார்.
“எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டேன் அவரிடம்.
“சான் கார்லோஸிலிருந்து (San Carlos)” என்று சொல்லி மெலிதாகப் புன்னகைத்தார்.
தனது சொந்த ஊரின் பெயரை தன் வாயால் சொன்னது அவருக்குள் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புன்னகைக்கும் அதுவே காரணம்.
“என்னிடம் சில விலங்குகள் இருந்தன. அவற்றைப் பராமரித்து வந்தேன்.” என்று விளக்கினார்.
என்ன சொல்ல வருகிறார் என விளங்காமல், “அப்படியோ” என்று மேலும் அவர் சொல்லப் போவதை கவனிக்கத் தொடங்கினேன்.
“ஆமாம். என் விலங்குகளைக் கவனித்துக்கொண்டு அங்கேயே இருந்தேன். சான் கார்லோஸ் நகரத்தை விட்டு வெளியேறிய கடைசி ஆள் நான்தான்.”
அவரின் அழுக்கு படிந்த கருப்பு ஆடைகளையும் புழுதி படிந்த முகத்தையும் மூக்கு கண்ணாடியையும் மீண்டும் ஒருமுறை நோட்டம் விட்டேன். ஆடு மேய்ப்பவராகவோ பண்ணை வைத்திருந்தவர் போலவோ தெரியவில்லை. “என்ன விலங்குகள் அவை?” என கேட்டேன்.
“வித விதமான விலங்குகள்,” ஆற்றாமையில் தலையசைத்தார். “அவற்றையெல்லாம் அங்கேயே விட்டு விட்டு வரவேண்டியதாயிற்று.”
நான் தொங்கு பாலத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். அப்படியே அடியில் ஓடிய எப்ரோ (Ebro) நதியின் ஆப்பிரிக்க நிலங்களை ஒற்றியிருந்த அதன் டெல்டா நிலப்பகுதிகளையும். எவ்வளவு சீக்கிரத்தில் எதிரிகள் கண்களுக்கு தென்படுவார்களோ என்று எண்ணி வியந்தபடியே இருந்தேன். அவர்கள் வருகையை அறிவிக்கும் விதமாக எழப் போகும் முதல் ஓசையைக் கேட்க கூர்ந்த கவனத்துடன் காத்திருந்தேன். கிழவர் இன்னமும் அங்கேயே அமர்ந்திருந்தார்.
“என்ன விலங்குகள் அவை?” மீண்டும் கேட்டேன்.
“மொத்தம் மூன்று விதமான விலங்குகள் வைத்திருந்தேன். இரண்டு ஆடுகள், ஒரு பூனை மற்றும் நான்கு ஜோடி புறாக்கள்.”
“அவற்றையெல்லாம் அங்கேயேவா விட்டு வந்தாய்?”
“ஆமாம். ஆயுதப் படைகள் தான் காரணம்.  படைத் தளபதி என்னை ஆயுதப் படைகள் சூழ்ந்த அவ்விடத்தை விட்டு வெளியேற சொன்னார்.”
“குடும்பம் ஏதும் இல்லையா உனக்கு?” வினவியபடி பாலத்தின் கடை முனையை எட்டி பார்த்தேன். வேக வேகமாக எஞ்சிய சில வண்டிகள் கரை தாண்டி சென்றன.
“இல்லை. நான் வளர்த்த விலங்கினங்கள் மட்டும்தான்.  பூனைக்கு ஒன்றும் நேராது. பூனைகள் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும். ஆனால் மற்றவைகளுக்குத் தான் என்ன நேரும் என்றே தெரியவில்லை.”
“எத்தகைய அரசியல் சார்புடையவன் நீ?” என்று கேட்டேன்.
“எந்த அரசியல் கோட்பாட்டையும் சாராதவன் நான். எழுபத்தி ஆறு வயதாகிறது எனக்கு. பன்னிரண்டு கிலோ மீட்டர்கள் கடந்து வந்திருக்கிறேன். இங்கிருந்து இனிமேலும் என்னால் நகர முடியும் என தோன்றவில்லை.”
“நின்று நிதானிக்க இது சரியான இடமில்லை. டோர்டோசாவுக்கு  (Tortosa) செல்லும்  பிரிவுச் சாலையில் வாகனங்கள் இருக்கும். முடியுமென்றால் அங்கே சென்று விடுவது நல்லது” என்றேன்.
“இன்னும் சிறிது நேரம் இங்கே இருந்துவிட்டு செல்கிறேன்” என்றார். தொடர்ந்து, “வண்டிகளெல்லாம் எங்கே போகின்றன” என்று கேட்டார்.
“பார்சிலோனாவை (Barcelona) நோக்கி” என்று பதிலளித்தேன்.
“அந்தத் திசையில் எனக்கு ஒருவரையுமே தெரியாது. இருந்தாலும் உனக்கு மிக்க நன்றி,” என்றவர், “மிக மிக நன்றி” என்றார் மீண்டும்.
சோர்வாய் என்னை நோக்கினார். வெறுமையான பார்வை. தன் கவலையை யாரிடமேனும் சொல்ல வேண்டும் என்ற பாவனையில், “பூனைக்கு ஒன்றும் நேராது. எனக்கு கண்டிப்பாகத் தெரியும். பூனையை பற்றி கவலைப்பட்டு அமைதி இழக்கத் தேவையில்லை. ஆனால் மற்றவை…..
மற்றவைகளுக்கு என்ன கதி நேரும் என நீ நினைக்கிறாய்?”
“ஏனிந்த கேள்வி. அவைகளுக்கும் ஒன்றும் ஆகாமல் போகலாம்.”
“உனக்கு அப்படியா தோன்றுகிறது?”
“ஏன் நடக்காது? வாய்ப்புண்டு.”
“ஆனால் ஆயுதங்கள் சூழ்ந்த இடத்தை விட்டு என்னையே வெளியேறச் சொன்ன நிலையில் அவை மட்டும் என்ன பண்ணும்?”
“அப்புறாக்களின் கூண்டை திறந்து விட்டிருந்தாயா?”
“அமாம்”
“அப்படியெனில் அவையெல்லாம் பறந்து விடும்.”
“அமாம். நிச்சயமாக பறந்து போய்விடும்.  ஆனால் மற்றதுகள்.. அவைகளைப் பற்றி நினைக்காமல் இருப்பது தான் நல்லது,” என்றார்.
“இளைப்பாறியது போதுமென்றால் இங்கிருந்து கிளம்பு,” அவசரப்படுத்தினேன். “எழுந்து நடக்க முயற்சி செய்.”
“நன்றி,” என்றபடியே  அங்கும் இங்கும் தள்ளாடி எழுந்து நின்றவர் முடியாமல் மீண்டும் புழுதித் தரையிலேயே சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டார்.
“விலங்குகளைப் பராமரித்து வந்தேன்.” சுரத்தையின்றி சொன்னார். இம்முறை என்னிடம் அல்ல.
“விலங்குகளை பார்த்துக் கொள்வது மட்டும் தான் நான் செய்து வந்தது.”
அந்தக் கிழவருக்காகச் செய்வதற்கு ஒன்றுமில்லை. அது ஒரு ஈஸ்டர் ஞாயிறு. பாசிச படைகள் வேகமாக எப்ரோவை நோக்கி வந்துக் கொண்டிருந்தன. மேகங்கள் சூழ்ந்து வானமே சாம்பல் பூண்டிருந்தது. மிகவும் தாழ்ந்த உயரத்தில் மேகங்கள் கூடியிருந்ததால் போர் விமானங்கள் எதுவும் அன்று பறக்காது என்பதுவும் உண்மையிலேயே பூனைகள் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் திராணி பெற்றவை என்பதுவும்தான் கிழவனாருக்கு கடைசியாக வாய்க்கப் பெற்ற இரு பெரும் நற்பேறுகள்.

http://solvanam.com/?p=45274

Friday, May 1, 2015

உத்தமன் வில்லன்!

கமலிடம் பிடித்தது பாதி பிடிக்காதது பாதி என கலந்து செய்த கலவை இது. இடைவேளைக்கு முன் பின் என பிரிக்காமல் அது இரண்டற கலந்திருப்பதுதான் பிரச்சினையே. உண்மையில் கமலுக்கு அதுதான் இப்படத்தின் பிரதான உத்தியாக தோன்றியிருக்க வேண்டும். அதாவது, "இரண்டு கதைகளை வெட்டி காட்சிகளை Non-linear முறையில் அடுக்கி - Nolan அளவிற்க்கு குழப்பமெல்லாம் இல்லை; இரண்டு linear கதைகளை வெட்டி ஒன்று மாற்றி ஒன்றாக அடுக்கி - 'சாகா வரம் போல் சோகம் இல்லை' என மரணம் உணர்த்தும் உயர் தத்துவ கோட்பாட்டோடு முடிக்க வேண்டும்."
'who's the hero' என தானே எழுதி தற்பெருமை படாதபடி அதில் தானே ஆடி நடித்து, கயிறு பிடித்து எகிறி உதைத்து.. இப்படி எந்த பந்தா படலமும் இல்லாமல் கமல் அறிமுகமாகும் படம் சகலகலா வல்லவ காலத்திற்கு பிறகு இதுவாகத்தான் இருக்கும். அறிமுகம் மட்டும் அல்ல. படம் முழுதும் கமல் ஹீரோ செய்வது எதையும் செய்வதே இல்லை. முரணாக கதையில் அவர் அகிலம் போற்றும் உலக நாயகன். குடிபோதையில் தன் படத்தின் முதல் காட்சி திரையிடும் அரங்கின் பாத்ரூமிலேயே உருண்டு விழும் நாயகன். டாக்டரோடு ஊர் அறியா காதல், தன்னை உத்தமனாக நேசிக்கும் மனைவி, வில்லனாக பார்க்கும் மகன் என முதல் 15 நிமிடங்களிலேயே கதையின் premise அட்டகாசமாக நிறுவப்படுகிறது.
சினிமா பற்றிய சினிமா அதுவும் கமலிடமிருந்து என புரிந்தவுடனேயே அது கிளப்பிய உற்சாகம் இன்னும் பசியாரவேயில்லை. சமீபத்தில் வெளிவந்த Meta-movie க்களுக்கு ஏற்பட்ட அதே கதிதான் இங்கும். கதைக்குள் கதை. நம்மை உள்ளிழுத்து செல்லும் வெளிப்புறம் மிக பலமாக இருந்து உள்மடிப்பில் பொதிந்து இருக்கும் கதையும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளேயே விருப்பத்தோடு தொலைந்து போக செய்ய வேண்டும். ஒரு Maze போல. அதற்கு பதிலாக "ஆஹா ...உள்ளே வந்து மாட்டிகிட்டோமோ" என தோன்றினால் வெளியேற பதறி அங்கும் இங்கும் அலைய வேண்டியிருக்கும். தியேட்டரில் நிஜமாகவே exit தேடி அங்கும் இங்கும் அலையும் zombieக்களை பார்க்க முடிந்தது. (கிட்டத்தட்ட மூன்று மணிநேரம்) இதே பிரச்சினை சமீபத்திய ஜிகர்தண்டாவிலும், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படங்களிலும் இருந்தது. அதில் மிக பலவீனமானது உ.வி. மரணம் பிடித்து இழுக்கும் ஒரு சாதனையாளன் கடைசியாக செய்ய வேண்டியதை குறித்து துரிதப்படுகிறான். நேர்மாறாக உட்கதையில் மரணம் அண்டவேமுடியாத ஒரு சாமானியன். இந்த இரண்டு வரி அழகான சிந்தனையை கமலாலேயே கூட வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் புனைய முடியவில்லை!

மீண்டும் மார்கதரிசியும் (கே.பி.) மனோவும் சேர்ந்து - ஏற்கனவே கதைப்படி 5 கிளாசிக்குகள் கொடுத்தவர்கள் - ஒரு காமெடி படம் அதுவும் அகில் உலக நாயகனின் கடைசி படமாக இருக்ககூடிய படம் எடுத்தால் அதுவும் அந்த படத்தை நமக்கே காட்டும்போது எப்படி இருக்க வேண்டும். எப்படியோ இல்லையென்றாலும் குறைந்த பட்சம் கிரேசி மோகன் நாடகம் போலாவது? ஒரு புலிகேசி? தெனாலிராமன் (original)? ம்ஹூம்...! வசனம் யார் என்று கமல் creditல் போடாதபோதே அதில் ஏதோ உள்குத்து நெருடியது. 'எடை-இடை-உடை' மாதிரி கமலின் அச்சு பிச்சு தனம் தூக்கல். எனக்கு தெரிந்ததெல்லாம் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற ஆர்வம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதில் எது இங்கு தேவை என்பதுதானே முதல் விதி, எந்த கதைக்கும்? தான் ஒரு வில்லுபாட்டுக்காரன் என்பதாலே உத்தமன் கதைக்கு உத்தம வில்லன் என பெயர் (அர்ச்சுனன் - வில்லாளி - வில்லனாம்..) ஆனால் உத்தமன் நிகழ்த்தும் கலை தெய்யம். ஏன்? கடைசி பாடல் என்னதான் வாய் பிளக்கவைத்தாலும்..(கொட்டாவியும்).
ஹரி பகவான் தோன்றும் முன்னரே "சொறி.. சொறி.." என பாடி வைக்கும் எந்த 'கிரேசி'த்தன காமெடியும் எங்குமே பொருந்தாமல் போனது பெரும் சோகம். கிச்சு கிச்சு மூட்டியாவது கரை சேர வேண்டும் என்ற பயமே தெரிந்தது. பூஜா குமார் கடைசி காட்சியில் "ஹே.. அல்லா.." என்று கதறுகிறார் திடீரென.படத்தில் ஹரியும் ஜேகப்பும் இருப்பதலா.. இங்கு சுயமரியாதை சம்மட்டியெல்லாம் அவசியம் தானா?இந்தா வெச்சுக்கோ என கமல் அள்ளி வீசும் "எனக்கு தெரியும்" களெல்லாம் துருத்திக் கொண்டு துருக்கி வரை துரத்துகிறது. கமல் திறமைக்கு தகர தராசு எதற்கு (ஸாரி... impact..!) கமலும் கமல் சார்ந்த அழுது வடியும் காட்சிகளே பரவாயில்லை என தோன்றியது. ஊர்வசியும் M.S.பாஸ்கரும் டிராமாவை இனிமையாக்குகிறார்கள். சத்தமேயில்லாமல் ஜெயித்திருப்பது கிப்ரான் தான். ஒரு நிமிஷம் இருப்பை உதறி கவனித்தால் பின்னணியில் ஒவ்வொரு காட்சியோடும் நம்மை அமர்த்தி வைத்திருப்பது இவர்தான் என்பது புரியும்.
இது நல்லாயிருக்கே.. அது நல்லாயிருக்கே என சேர்த்துகொண்டே போவது சிறந்த சினிமா எழுத்து அல்ல. Minimalism தான் நவீன சினிமாவின் முதல் விதி. இது கமலுக்கும் தெரிந்தேதான் இருக்கும். ஆனால் எந்த வியாபார கட்டாயமோ தொடர்ந்து கமலின் திரைக்கதை சோர்வையே கொடுக்கிறது. ஒரு பேட்டியில் மணி ரத்னம் "ஏற்கனவே சொல்லிட்ட மாதிரி இருந்தா அந்த காட்சியை வெட்டி விடுவோம். ஒரு படத்தில் ஒரு உணர்வுக்கு ஒரு செய்திக்கு ஒரு காட்சி தான் இருக்க வேண்டும்" என்றார்.
உ.வி. ல் ஒரு நெகிழ்ச்சியான காட்சி. கமல் தன் பையனிடம் "என்ன பண்ணாலாம்னு இருக்க?" என அவன் எதிர்கால வாழ்கையின் திட்டம் பற்றி கேட்க அதை இப்போது கேட்பதின் அர்த்தம் புரிந்து அழுது கொண்டே "கொலம்பியா சென்று சினிமா கல்லூரியில் படித்து உங்களுக்காக ஒரு சிறந்த திரைக்கதை எழுதனும்பா. நீங்க யாருன்னு இந்த ஊருக்கு காட்டனும்பா" என்பான். அந்த கட்டாயம் இப்போது கமலுக்கே இருப்பதாக படுகிறது.