Monday, December 25, 2023

கிருமி கதைகள் - முன்னுரை

 



கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கியிருந்தபோது அமெரிக்க அறிவியல் பத்திரிகையொன்றில் முக்கியமான ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மக்களை அச்சுறுத்தும் வண்ணம் அல்லாமல் ஆனால் மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை அது விடுத்திருந்தது. ‘இந்த நோய்த் தொற்று, மின்னல் ஓட்டப்பந்தயத்தைப் போல வேகமாகப் பரவி உடனே காணாமல் போய்விடாது. இது மராத்தான் ஓட்டத்தைப் போன்றது. இன்னும் பல ஆண்டுகளுக்கு நாம் இந்தக் கிருமியை எதிர்நோக்க வேண்டியிருக்கலாம். உடல் உறுதியும், ஊட்டச்சத்துகளும், துணை மருந்துகளும் மட்டுமே போதாது, மனவலிமையே பிரதான கேடயமாகச் செயல்படும்’ என்ற அறிவிப்பை அக்கட்டுரை முன்வைத்தது. இதுவரை மானுட வரலாற்றில் நிகழ்ந்த அத்தனை நோய்த்தொற்றுகளையும் அக்காலகட்டங்களில் நிலவிய சமூக வழக்கங்களையும், கலாச்சார செயல்பாடுகளையும், தொழில்நுட்பத் திறன்களையும் கணக்கில் கொண்டு 2020ம் ஆண்டின் பெருந்தொற்று இப்படித்தான் இருக்கும் என்ற கணிப்பை வழங்கியது. நண்பர்களில் பெரும்பாலானோர் இது மேலுமொரு மேற்கத்தியக் கருத்தியல் மோசடி என்றே உதாசீனம் செய்தனர். உண்மையில் இக்கட்டுரை ஓர் இந்திய அறிவியல் கூடத்திலிருந்து வெளிவந்திருந்தாலும் நாம் இப்படித்தான் புறக்கணித்திருப்போம் என்பதை பிற்பாடு உணர்ந்துகொண்டேன். இச்சமயத்தில்தான் இந்திய அரசாங்கம் மூன்று நாளில் நோயை ஒழித்து வாகை சூடுவோம் என்று பிரகடனம் செய்தது. கண்களால் மட்டுமல்ல கற்பனையில் கூட இந்த எதிரியை உருவகித்திட முடியாது என்று உணரத் தொடங்கியதும் கைதட்டல்களும் பாத்திர உருட்டல்களும் பாடல்கள் பாடியே கிருமியை மிரளச் செய்வதுமென பல்வேறு உத்திகளை கையாளத் தொடங்கினோம். ஒன்றன் பின் ஒன்றான அலைகளில் வீழ்ந்து இப்போது அலையின் நிச்சயமின்மைக்கு ஒப்புக்கொடுத்து அதன் மீதே பயணிக்கக் கற்றுக்கொண்டோம்.


மீண்டும் மீண்டும் இங்கு நிறுவப்படும் ஒன்று இருக்குமென்றால் அது மனிதர்கள் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்வது இல்லையென்பதுதான். அத்தனை அழிவுகளையும் மனிதன் கண்டு, தோற்று, தேறி, மீண்டு வந்து நின்றபோதும் மீண்டுமொரு அழிவிற்குத் தன்னை எப்படியேனும் தயார்ப்படுத்திக் கொள்கிறான். ஆயுதங்களும் போர்களும் பிரிவினையும் வெறுப்பும் வஞ்சமும் மனிதர்களின் கூட்டு நனவிலியில் சுழன்றபடியே இருக்கின்றன. வெளியேறும் வழி இல்லை. மறுபுறம் இது மானுட மனத்தின் நேர்நிலைத் தன்மையையும் சுட்டுகிறது. இது மீண்டும் நிகழாது, இதைத் தன் வலிமையால், அறிவுத்திறத்தால், அறிவியலின் கரத்தால் வென்றிட முடியும் என்பதே அகத்தில் எழும் முதல் ஒளியாக இருக்கிறது. அதுவே மானுடத்தை உந்திச் செல்லும் விசையும்கூட. 


பெருந்தொற்று போன்ற பேரழிவுகள் பெருத்த சத்தமின்றி நிகழ்பவை. உகிர்கள் உதிர்ந்து அழிவதைப் போல பூமியிலிருந்து உயிர்கள் மெல்ல மறைந்துபோகும். இழப்பும் அதன் வலிகளும் யானையின் பெருத்த நடையைப் போல அழுத்தமாகவும் ஆழ்ந்த தடத்தினையும் விட்டுச் செல்லும். ஆனால் எந்தப் பேரழிவிற்குப் பிறகும் ஒரு சில நன்மைகள் முளைக்கவே செய்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் போரின் விளைவாகப் பிறந்திருக்கின்றன, நோய்த்தொற்றுகளின் முடிவில் உயிர்காக்கும் மருந்துகள் உருவாகின, தனிமனித ஒழுக்கத்தின் மீதான கவனம் அதிகரித்திருக்கின்றன. கவண் எறியைப் போல பின்னடைவிற்குப் பிறகான செல்திசை பன்மடங்கு விசையுடன் கூடிவிடுகிறது உயிரினத்திற்கு. போர்கள் மக்களைக் குழுக்களாகப் பிரித்து ஒரு அடையாளத்தைத் தொற்றிக் கொள்ளச் செய்கிறது. அவ்வடையாளத்தின் பின்னே தனித்தவர்களையும் ஒன்று திரட்டுகிறது. ஒரு குறிக்கோளைக் கற்பித்து அதன் பொருட்டு உயிர் துறப்பது உயரிய கொள்கையின் சின்னமாக நிறுவுகிறது. தனி மனிதனின் தியாகச் சிந்தனையையும் தீரத்தையும் தூண்டிவிடுகிறது. ஆனால் இவை அத்தனையையும் சிதறடிக்கிறது பெருந்தொற்றுக்கெதிரான போராட்டம். மானுடரை வெல்லும் ஒரு எதிரி அருவமற்றது என்பது நிம்மதியிழக்கச் செய்கிறது. மனிதனைச் சிறியவனாக, சக்தியற்றவனாக ஆக்கிவிடுகிறது. 


உலக இலக்கியங்களில் போர்கள் மிக விரிவாக சித்தரிக்கப்பட்டிருப்பது எளிய வாசகர்கள் கூட அறிந்ததே. போர்களின் பின்னணியில் தேசத்தின் வரலாறுகளும், தனி மனிதனின் அலைக்கழிப்புகளும் காதல் காவியங்களும் கூட படைக்கப்பட்டிருக்கின்றன. இன்றளவும் சிறந்த இலக்கியப் படைப்புகளாக அவையே முன்நிற்கின்றன. ஆனால் நோய்த்தொற்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களும் சிறுகதைகளும் ஒப்புநோக்க மிகக் குறைவே. பல நாவல்களில் நோய்களும் அது உண்டு குவித்த உயிர்களின் கதைகளும் வந்திருந்தாலும், முழுக்க தொற்றுநோயின் பின்னணியில் உருவாகிய படைப்புகள் சொற்பமே. அல்லது அவை கேளிக்கை எழுத்தாகவோ அறிபுனைவாகவோ மிகுபுனைவாகவோ பொழுதுபோக்கு கதைகளாக எழுதப்பட்டிருக்கின்றன. இவ்வகை எழுத்துகள் ஆங்கிலத்தில் மிகப் பிரபலம்.


1353ல் ‘கறுப்பு மரணத்தை’ அடிப்படையாகக் கொண்டு பொக்காஸியோ எழுதிய ‘The Decameron’ பெருந்தொற்று குறித்து எழுதப்பட்ட முதல் இலக்கியப் படைப்பு. நோய் பரவல் குறித்த அத்தனை எழுத்துகளுக்கும் அப்படைப்பே முன்னோடி. கொள்ளை நோயிலிருந்து தப்பிக்க வீடடைந்த பத்து மனிதர்கள் கூறும் நூறு கதைகளின் தொகுப்பு. கொரோனா காலத்தில் சமகால எழுத்தாளர்கள் பெருந்தொற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதிய சிறுகதைகளை ‘The Decameron Project’ என்ற பெயரில் தொகுத்தது நியூ யார்க் டைம்ஸ். அத்தொகுப்பிலிருந்து இரண்டு சிறுகதைகளும் இரண்டு குறுங்கதைகளும் இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அதன் பிறகு மிகப் பிரபலமான நாவல் ஆல்பர்ட் காம்யூவின் ‘The Plague’. கொரானா காலத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட நாவலாக இதைக் குறிப்பிடுகின்றனர். மார்க்குவேஸின் ‘Love in the time of Cholera’ இவ்வகை நாவல்களில் பிரபலமாக அறியப்பட்ட ஒன்று. டேனியல் டெஃபோவின் ‘A Journal of the Plague Year’ மற்றும் ஒஸே ஸரமாகோவின் ‘The Blindness’ ஆகியவை மக்கள் மீண்டும் தேடி எடுத்து வாசிக்கும் நாவல்களாக இருக்கின்றன. மேரி ஷெல்லி, ஜாக் லாண்டன் போன்றவர்களின் சில படைப்புகளும் இவ்வகையில் கொள்ளத்தக்கதே.


                                                            ***


ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் சிறுகதையின் அலை ஒன்று தொடங்கியது என்றே கூறத்தக்க வகையில் பல நூறு சிறுகதைகள் எழுதப்பட்டன. பல புது சிறுகதையாசிரியர்கள் தோன்றினர். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினர். எழுத்தாளர் ஜெயமோகன் தினமும் ஒரு சிறுகதையென நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை வெளியிட்டார். ஆனால் அக்கதைகள் நோய்த்தொற்று குறித்தோ நடப்புச் சூழலையோ சுட்டும் விதமாக அமையவில்லை. ஊரடங்கின் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கே தன்னை புனைவுலகில் ஈடுபடுத்திக் கொண்டதாகவும், கொண்டாட்டமாக இந்நாட்களைக் கழிப்பதற்கு இச்சிறுகதைகளே தனக்குச் சிறகுகள் கொடுத்ததாகவும் குறிப்பிட்டார். உண்மையில் அத்தனை பேரழிவு காலங்களிலும் இலக்கியவாதிகள் அப்படித்தான் இருந்திருக்கின்றனர். எந்த பேரழிவு இலக்கியமும் அது நடக்கும் சூழலில் எழுதப்பட்டவை அல்ல. ஒரு மரணம் வாழ்வை விசாரணை செய்யத் தூண்டுகிறது. மாறாக ஆயிரக்கணக்கான மரணங்கள் ஒற்றைச்செய்திப் பதிவாக எஞ்சி விடுகிறது. பேரழிவு தரும் சலிப்பு எழுத்தாளர்களின் மனநிலைக்கு நேர் எதிரானது. அத்தனை படைப்பாளிகளும் இது நேரும் உலகில் தான் இல்லை என்று நம்ப விரும்புகின்றனர். மனோதிடத்தைக் காப்பதற்குக் கலையும் இலக்கியமுமே ஒரே வழி. 


பெருந்தொற்று குறித்தான சிறுகதைகள் மிகச்சிலவே எழுதப்பட்டிருக்கின்றன. சிறுகதை வடிவத்தின் முன்னோடியான எட்கர் ஆலன் போதான் பெருந்தொற்று சிறுகதைகளையும் துவக்கி வைத்திருக்கிறார். ‘செந்நிற மரணம்’ எனும் சிறுகதை உருவகக் கதை வகைமையிலும் முதன்மையானது. நோய்த்தொற்று சிறுகதைகளைத் தேடி வாசித்தபோது ஒன்று புலனானது. சிறந்த படைப்பாளிகள் அத்தனை பேரும் பேரழிவையும் தொற்று நோய்களையும் நேரடிச் சித்திரங்களாகக் கதைகளில் படைக்கவில்லை. அக்கதைகளில் நோயும் வலியும் அழிவும் மனம் உருக்கும் நாடகத் தருணங்களாக வெளிப்படவில்லை. யதார்த்தச் சித்திரங்கள் அநேகமாக எந்தச் சிறந்த சிறுகதைகளிலும் இல்லை. மாறாக இப்படைப்பாளிகள் நோயையும் கிருமியையும் உருவகங்களாகச் சித்தரித்திருக்கின்றனர். மனித மனதின் வக்கிரங்களின் புறத்தோற்றமாகவே உருவகித்திருக்கின்றனர். அல்லது, கிருமியை வாழத் துடிக்கும் ஒரு உயிரியாகக் கருதியுள்ளனர். ஒரு கிருமியின் அகத்திற்குள்ளும் ஊடுருவும் மனம் படைத்தவர்களாகத் தலைசிறந்த இலக்கியவாதிகள் வெளிப்பட்டிருக்கின்றனர். இவ்வகையான கதைகளே இத்தொகுப்பை உருவாக்க உந்துதலாக இருந்தன. 


கொரோனா காலத்தில் சிறுகதைப் போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வழியாக பெருந்தொற்று சிறுகதைகள் சில தமிழில் வெளிவந்தன. அக்கதைகளிலிருந்து இவை முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கும் என்று கருதுகிறேன். சூழலிலிருந்து தள்ளி நின்று பெரியவற்றைத் தரிசிக்கும் கண் வாய்த்திருக்கிறது இப்பெரும் படைப்பாளிகளுக்கு. கவியுருவகக் கதைகளும் யதார்த்தக் கதைகளும் கலந்து உருவாகியிருக்கிறது இத்தொகுப்பு. மானுடம் துவங்கிய காலம் முதலே மனிதர்கள் எதிர்கொண்ட இயற்கை போராட்டங்களும் அதில் கசந்து அவதியுறும் நம்பிக்கைகளும் அழிவுகளும்கூட ஒன்று போலவே இருப்பதை இக்கதைகள் தொட்டுக் காட்டுகின்றன. நிகழ்காலத்தின் கேள்விகள் அத்தனைக்கும் வரலாறும் அதில் பூத்து முகிழ்த்த இலக்கியங்களுமே விடைகளைத் தாங்கி நிற்பது ஆச்சரியமானதுதான். வாழ்க்கைக் கதைகளை அனுபவித்து அறிவதுதான் வரலாற்றைச் சற்றேனும் உண்மைத்தன்மையுடன் அணுகி உணர நமக்கிருக்கும் வாய்ப்பு.


‘கிருமி கதைகளில்’ கிருமி நேரடி பொருள் கொள்வதில்லை. கிருமி என்ற சொல்லே இன்றைய சூழலில் பல்வேறு அர்த்த சாத்தியத்தைக் கொண்டுள்ளது. இக்கதைகளில் நிறைந்தும் மறைந்தும் இருக்கும் கிருமிகளை உணர்வதின் மூலமாக மானுட வாழ்வின் சாரத்தைப் பற்றிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இம்மொழியாக்கச் சிறுகதைகளை வெளியிட்ட யாவரும், கனலி, அகழ் ஆகிய மின்னிதழ்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். கோவை சொல்முகம் வாசகர் வட்ட நண்பர்களுக்கும், வாசித்து கருத்துகளைப் பகிர்ந்த நண்பர்கள், என் தாய் தந்தையர், தங்கை ரேவதி, தோழி ஷீலா பார்த்தசாரதி, மீனாம்பிகை, எழுத்தாளர்கள் இரம்யா, ஜி.எஸ்.எஸ். நவீன், பாலாஜி பிருத்விராஜ் ஆகியோருக்கும் என் நன்றிகள். இக்கதைகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பான சித்திரங்களை அளித்திருக்கும் ஓவியர் சீராளன் ஜெயந்தன் அவர்களுக்கு என் அன்பு. இத்தொகுப்பை வெளிகொண்டு வர தொடர்ந்து ஆர்வம் காட்டி ஊக்குவித்த எழுத்தாளர் ஜீவ கரிகாலனுக்கும், யாவரும் பதிப்பகத்தாருக்கும் உளமார்ந்த நன்றிகள். பெருந்தொற்று காலத்தில் இயற்கையை நெஞ்சுரத்துடன் நேர் நின்று நோக்கியவர்களுக்கும் இயற்கையைத் தனதாக்கிக் கொண்டவர்களுக்கும் இத்தொகுப்பைச் சமர்ப்பிக்கிறேன்.


நரேன்

Sunday, December 17, 2023

'கிருமி கதைகள்' வெளியீடு


 




கிட்டத்தட்ட இரண்டே வாரங்களில் 'கிருமி கதைகள்' மொழியாக்கத் தொகுப்பு தயாராகிவிட்டது. ஒன்றரை வருடங்களாகத் தேடித் தேர்ந்து நிதானமாக மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் இவை. நான்கு கதைகளைத் தவிர மற்றனைத்தும் மின்னிதழ்களில் வெளியாகி பரவலாக வாசிக்கப்பட்டவை. 'யாவரும்' ஜீவ கரிகாலன் இத்தொகுப்பிற்காக நீண்ட காலம் காத்திருந்தார். இத்தொகுப்பிற்கான எதிர்பார்ப்பிலும் வெளியிடும் ஆர்வத்திலும் திளைத்த முதலாமவர் அவர்தான். 


விஷ்ணபுரம் விருது விழாவில் இந்நூலினை வெளியிடும் நல்வாய்ப்பு அமைந்தது. ஆசான் ஜெயமோகன் முன்னிலையில் என் பெருமதிப்பிற்கும் அணுக்கதிற்கும் உரிய எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் வெளியிட, எனதருமை அண்ணன் கடலூர் சீனு பெற்றுக்கொண்டார். எட்கர் ஆலன் போ வின் சிறுகதையின் தமிழாக்கம் வெளிவந்தவுடன் வாசித்து கருத்துகளை பகிர்ந்த முதல் வாசகர் அவர். இவ்வரிசைக் கதைகளுக்கான தொடக்கமும் அதுதான். 


உடன், நண்பர் சுஷீல்குமாரின் முதல் நாவலான சுந்தவனமும் ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை தொகுப்பான நின்றெரியும் சுடரும் வெளியிடப்பட்டன. 


ஆசான் ஜெயமோகனின் இந்நிகழ்வு குறித்த பதிவு - https://www.jeyamohan.in/194787/


இருநூறு ஆண்டுகளில் பெருந்தொற்றை மையப்படுத்திய சிறுகதைகளின் வடிவத்தையும் அழகியல் மாற்றங்களையும் இத்தொகுப்பு ஒரு துளி சித்திரமென அளிக்கும் என நம்புகிறேன்.    

Saturday, July 1, 2023

ஒரு வீராங்கனையின் தனிமை - சமகாலப் பெண் எழுத்தாளர்கள் வரிசை

 








யுகீகோ மோடோயா - Yukiko Motoya (July 14, 1979) : நாவலாசிரியர், நாடகாசிரியர்உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றானஅகுதகவாவிருதினை 2006ஆம் ஆண்டு வென்றவர். ‘மிஷிமா யுகியோ விருது’, சிறந்த நாடகங்களுக்கு வழங்கப்படும்கிஷிடா குனியோஉட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் நாவல்களும் சிறுகதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பினை பெற்றவை. ஒன்றிரண்டு ஜப்பானிய ஜாம்பவான்களைத் தவிர்த்து ஜப்பானிய இலக்கியம் பரவலாக உலக இலக்கிய வாசகர்களை வந்தடைவதில்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கொண்டாடப்படும் ஜப்பானிய எழுத்தாளர்களை விடவும் மிகவும் தீவிரமாகச் செயல்படும், மகத்தான படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று விமர்சகர்கள் தொடர்ந்து எழுதி வருகின்றனர். சில அமைப்புகள் இவர்களை மொழிபெயர்க்கும் முனைப்பிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி கடந்த பத்தாண்டுகளில் பரவலாக வாசிக்கப்பட்டு கொண்டாடப்படும் எழுத்தாளர்களில் ஒருவர் யுகிகோ


ஜப்பானின் சமகாலப் பெண் எழுத்துகளில் இவரின் படைப்புகள் கவனம் பெறுவதற்கு முக்கிய காரணம் இவரது கதைகள்எளியவாசிப்பிற்குரியவை என்ற தோற்றத்தைச் சூடிக்கொள்வதுதான். யதார்த்தமான கதைகள் என்ற முகமூடியில் மிக விசித்திரமான உணர்வுக்குழப்பங்களைக் கையாள்கிறார். இவரின் கதைகளின் பிரதான பாத்திரங்கள் கூட இப்படியான முகமூடிகளைச் சூடிக் கொள்கின்றன. அன்றாடத்திலிருந்து விடுபடும் வழியை வேறொன்றாக மாறிவிடும் கலையின் மூலம் அடைகிறார்கள். ‘ஒரு வீராங்கணையின் தனிமைகதையின் நாயகி தனக்கான இடத்தை பெருக்கிக்கொள்ளும் வழி சுவாரசியமானது. நவீன வாழ்வின் சிக்கல்கள் பெரும்பாலும் கண்களுக்குப் புலப்படாதவை. விரல் நீட்டி குற்றம் கூறும் சாத்தியம் அற்றவை. அடித்து வெளியே தள்ளமுடியாதபடி உருவமற்றவை. அதனாலேயே அதை எதிர்கொள்வதற்குத் தன்னைப் பெருக்கிக்கொள்ளும் தேவையை அடைந்திருக்கிறார்கள் நவீன பெண்கள்.




       ஒரு வீராங்கனையின் தனிமை - யுகீகோ மோடோயா



நான் சூப்பர் மார்கெட்டில் இருந்து வீட்டிற்குத் திரும்பியபோது என் கணவர் டி.வி.யில் குத்துச்சண்டை பார்த்துக்கொண்டிருந்தார்


நீங்கள் இதெல்லாம் பார்ப்பீங்க என்றே எனக்குத் தெரியாதே. நான் நினைச்சே பார்த்ததில்லை.” மளிகைப் பொருட்களை வரவேற்பறையில் மேசை மீது வைத்தேன்


அவர் சோஃபாவில் அமர்ந்திருந்தார். அவரின் உணர்வைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு உறுமல் சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தார். அவர் உண்மையிலேயே குத்துச் சண்டையில் மூழ்கிவிட்டதாகத்தான் தெரிந்தது


யார் வெற்றி பெறப் போவது? அந்த உடல் பெருத்தவனா இல்லை சிறியவனா?”


நான் அவர் அருகில் சோஃபாவில் அமர்ந்து என் கழுத்திலிருந்து துண்டை கழற்றி வைத்தேன். உடனடியாக இரவு சமையலைத் தொடங்குவதுதான் திட்டம். ஆனால் சற்று சோர்வாக இருந்தது. என் சைக்கிளில் கியர்கள் வேலை செய்யவில்லை. கொஞ்சம் ஓய்வு வேண்டும். பதினைந்து நிமிடங்கள்


அவர் கண்கள் இன்னமும் டிவியிலேயே ஒட்டியிருந்தன. இப்போதுவரை அந்தச் சிறியவன் தான் மிகுந்த வலுவுடையவனாகத் தெரிகிறான் என்றார். அந்தச் சுற்று முடிந்துவிட்டது போல, சத்தமாக மணி ஒலித்தது. இரண்டு போட்டியாளர்களுமே இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருந்தனர். எதிராளியின் குத்துகளால் வெட்டப்பட்ட காயத்தினால் உண்டானது என்று யூகித்தேன். மேடையின் மூலையில் நாற்காலிகளில் அவர்கள் அமர்ந்ததும் உதவியாளர்கள் அவர்களின் தலையின் மீது நீரை ஊற்றினார்கள்.


காட்டுத்தனமாக இருக்கு. விலங்குகள் நீருக்குள் குதித்து எழுவதைப் போல.”


காட்டுத்தனம்என்பது ஒரு பழிச்சொல் போல ஒலித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஆனால் எப்படியோ என் கணவர் அதைப் பிடித்துக்கொண்டார்.


உண்மையில் அப்படிப்பட்ட ஒரு ஆணுக்குத்தான் நீ ஆசைப்பட்டாய் இல்லையா?”


என்ன? என்ன சொல்றீங்க?”


நடிக்காதே. எனக்குத் தெரியும். முரட்டுத்தனமாக ஒருவன் உன்னைக் கையாள வேண்டுமென நீ ரகசியமாக விரும்புகிறாய் என்பது எனக்குத் தெரியும்.”


அறிவார்ந்த ஆண்களைத்தான் எனக்குப் பிடிக்கும் என்பது உங்களுக்கே தெரியும். இப்படி கூர் உணர்வில்லாத உடல் பெருத்த ஜடம் எனக்குத் தேவையில்லை.”


இறுகப் பிடித்திருந்த ரிமோட்டை மேசை மீது வைத்துவிட்டு, கைகளில் ஸ்வெட்டரை  மேலேற்றி தன் விரல்களால் மற்றொரு கையின் மணிக்கட்டைச் சுற்றிப் பிடித்துக்கொண்டார். தன் நாடித் துடிப்பை தானே பரிசோதித்துக் கொள்வதைப் போலஉண்மைதான், குத்துச்சண்டை வீரர்களை விடவும் அவரின் மணிக்கட்டு மிகவும் மெல்லியதாக இருந்தது


அதாவதுவீரனாக இருக்கனும்னு அவசியம் இல்லையே. நீங்க ஒரு நல்ல கலைஞராகவும் ஆகலாம் இல்லையா,” நான் சீண்டினேன். எதை விடவும் அவர் மீது பரிதாபப்படுவதைத்தான் அவர் மிகவும் வெறுத்தார். அதனால் நான் பேச்சை கிண்டல் தொனிக்கு மாற்றினேன்.


அதாவது இப்படிப்பட்ட ஒரு ஆண் உன்னைக் கவர்ந்து செல்ல நினைச்சா கூட நீ உடன் போக மாட்டேன்னு சொல்றே, அப்படித்தானே?”


ஏதாவது சொல்ஏதாவது’. அவர் தன்னம்பிக்கையை மீண்டும் எப்படியாவது கட்டி எழுப்பிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் டிவியில் தோன்றியவர்கள் என் கவனத்தை முழுதாக மீண்டும் திருடிக்கொண்டுவிட்டார்கள். என் இரத்தம் எகிறியது, உடல் சூடாவதை என்னால் உணர முடிந்தது. “ஆமா, நிச்சயமா. அவனோடு எல்லாம் போய்விட மாட்டேன். அப்புறம்அப்படியெல்லாம் நடக்கப் போறதும் இல்லை.” சண்டை வீரர்கள் மிகவும் அழகாக இருந்தார்கள். நம்பமுடியாத உடல்கள் அவர்கள் இருவருக்குமே. விரைப்பான எலும்பும் சதையும். உடலில் எதுவுமே வீணாக இல்லை


என் கணவர் மீண்டும் பேசினார். “என் உடலைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”


எனக்குப் பிடிச்சிருக்கு. உங்கள் சருமம் மிக மென்மையாக பளபளப்பாக இருக்கு.” ஏன் நான் இது மாதிரியான குத்துச் சண்டைகள் இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்டுவிட்டேன்? குத்துச்சண்டை, மல்யுத்தம், தற்காப்புக் கலைகள் - இதெல்லாம் எனக்கானவை இல்லை என்று கருதிக்கொண்டிருந்தேன். எவ்வளவு பெரிய தவறு. நான் இதை எப்போதுமே செய்கிறேன். நான் யார் என்று ஒரு முன்முடிவை அடைந்து வேறு எந்தச் சாத்தியங்களையும் சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை. என் நடுநிலைப் பள்ளிக் காலங்களிலிருந்தே நான் அப்படித்தான் இருக்கிறேன். என் நண்பர்களுடன் நான் கேளிக்கைப் பூங்காவிற்குச் சென்றிருந்தபோது என்னைப் போன்ற ஒரு அமைதியான பெண்ரோலர் கோஸ்டரில்செல்லமாட்டாள் என்று முடிவு செய்துவிட்டேன். அன்று அதில் ஏறாதவள் நான் மட்டும்தான். என்னை போன்ற ஒருத்தி எப்படியும் ஏதாவது கலை நிகழ்ச்சிகளுக்குத்தான் பெயரைக் கொடுப்பாள். கைவினைப் பொருட்கள் செய்யும் குழுவில்தான் அவள் இயல்பாக இருப்பாள். ஊள்ளூரிலேயே ஏதாவது வேலை தேடிக்கொள்வாள். அன்று நான் அந்தரோலர் கோஸ்டரில்ஏறியிருந்தால் உண்மையில் என்னவாகியிருக்கும். எனக்குப் பரிச்சயமற்ற இன்னொருஎன்னைசந்தித்திருப்பேன் என்று நினைக்கிறேன். முற்றிலும் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன்


மணி மீண்டும் ஒலித்தது. வீரர்கள் எழுந்து நின்றனர். அடுத்தவன் முகத்தில் ஓங்கிக் குத்துவதைத் தவிர அதில் வேறொன்றும் இல்லையென்று நினைத்திருந்தேன், ஆனால் அசைந்தசைந்து தன் மேல் விழும் குத்துகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொண்டார்கள். கழுகுக் கண்களால் எதிராளியின் அசைவுகளைக் கூர்ந்து கவனித்தனர். அதனால்தான் கழுகுப் பார்வை என்று அழைக்கிறார்களோ என்னவோ. எனக்கு மட்டும் கழுகுப் பார்வை இருந்திருந்தால் எத்தனையோ விஷயங்களைத் தவற விட்டிருக்க மாட்டேன். போட்டி முடிந்துவிட்டது. இதுவரை அடித்ததிலேயே மிகப் பெரிய மணிச் சத்தம் இப்போது கேட்டது


அடுத்த நாளே நான்பாடி பில்டர்ஆவதற்கான பயிற்சியைத் தொடங்கினேன். நான் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆகிவிட வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன், ஆனால் ஒரு சண்டைக்காரியின் எந்தக் கூறும் என்னிடம் இல்லை என்பதை உணர்ந்தேன். யாரையும் அடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இயற்கை ஆரோக்கியம் மற்றும் அழகுப் பொருட்கள் கடையில், விற்பனை மேசையில் பணி புரிந்துகொண்டிருக்கும்போது கூட முந்தைய இரவு டிவியில் பார்த்த குத்துச் சண்டைக்காரர்களின் உடல்கள்தான் என் மூளைக்குள் எந்நேரமும் ஊர்ந்துகொண்டிருப்பதாய் தோன்றியது


அத்தனை திசைகளிலும் திருப்பித் திருப்பி அவர்கள் தங்கள் உடல்களை அகக்கண்களுக்கு காண்பித்தபடியிருக்கின்றனர். நான் வாடிக்கையாளர்களிடம் எங்கள் விற்பனைப் பொருட்களைக் காட்டி விவரித்துக்கொண்டிருக்கும்போது கூட. இது மூலிகை மருத்துவத்தில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும், மாதுளையுடன் கூடிய, உடல் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் கிரீம்! ‘உறுதியான கைகளைக் கொண்டிருப்பது எப்படியான உணர்வைத் தரும்?’ கேசத்திற்கான இந்த அரிதான இயற்கை எண்ணெய் செறிவூட்டப்பட்ட தாவர சாற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ‘உறுதியான உடலின் அசைவுகள் எப்படி இருக்கும்?’


நான் வேறொரு உறவைத் தேடுகிறேனா? நிச்சயமாக இல்லை. என் கணவரை நேசிக்கிறேன். அவர் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொள்பவர்தான். எப்போதும் ஏதோவொரு குழப்பத்தில் இருப்பவர்தான். ஆனால் அவர் மிகக் கடினமாக உழைப்பதுதான் அதற்கெல்லாம் காரணம். நான் சில தசைகளை இறுக்கமாக்கி அதன் இன்பத்தில் திளைக்க விரும்புகிறேன், அவ்வளவுதான். இப்படியொரு பரபரப்பை அனுபவித்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. வேலை முடித்து வீடு திரும்பும் வழியில் மருந்துக் கடையில் புரதச் சத்து மாவை வாங்கிக் கொள்ள வேண்டும்.


புரோட்டீன் பவுடரைசுவைத்துப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. ஜிம்மில் சேருவது என்று முடிவெடுத்து விட்டேன். வீட்டு பட்ஜெட்டில் இந்தச் செலவைச் சேர்ப்பது பற்றி சற்று கவலைப்பட்டேன். ஆனால் இரயிலில் இரண்டு நிறுத்தத் தொலைவிலேயே ஒரு சிறிய பயிற்சிக்கூடத்தைக் கண்டுகொண்டேன். அவர்கள் இணையதளத்தில் இப்படியொரு விளம்பரம் இருந்தது - ‘நீங்கள் விரும்பும் மாற்றத்தை அடையும் வரை 100 பயிற்சி வகுப்புகள் இலவசம்!’ இதற்கு முன்னால் முறையாக எந்த உடற்பயிற்சியும் செய்தது கிடையாது. நூறு நாட்களில் எவ்விதமான மாற்றத்தை அடையப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை


முதல் நாள், என்னுடைய பயிற்சியின் துவக்கத்தில், என் பயிற்சியாளரிடம் நான் ஒருபாடி பில்டராகவிரும்புகிறேன் என்று வெளிப்படையாக என் விருப்பத்தைச் சொன்னேன். அவன் ஒரு இளைஞன், இருபதுகளின் துவக்கத்தில் இருப்பவன். அட்டைத் தாளில் எழுதிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டுத் தலைதூக்கி என்னை ஆச்சரியமாகப் பார்த்தான்


உடலை ஏத்தனுமா? எடை குறைப்பு இல்லையா?”


ஆமாஒரு பயிற்சி திட்டம் பற்றிய விளம்பரம் உங்கள் இணையதளத்தில் இருந்தது.”


உண்டுதான். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே. பொதுவாக முப்பது வயது தாண்டிய பெண்கள் எடை குறைக்கத்தான் வருவாங்க. நீங்களும் அப்படித்தான்னு நினைச்சேன்…”


ரொம்பக் கஷ்டமா?”


அப்படியெல்லாம் இல்லை. ஆனால் எடை தூக்கும் பயிற்சியால் மட்டுமே பாடி பில்டிங் செய்ய முடியாது. உணவு ரொம்ப முக்கியம். உங்களால ஒரு நாளைக்குச் சராசரியா நான்காயிரம் கலோரிகளை உண்ண முடியுமா? இது பொதுவாக ஒரு ஆண் உண்பதை விடவும் இரண்டு மடங்கு.”


ஒரு நாள் முழுக்க பிரித்துப் பிரித்து சாப்பிடுவேன். புரோட்டீன் பவுடரும் தேவைதானே? அதை நான் ஏற்கனவே எடுத்துக்கொள்ளத் தொடங்கிட்டேன்.”


குறிப்பிட்ட இலக்கு ஏதாவது உங்க மனசுல இருக்கா? போட்டியில் எதுவும் கலந்துக்கபோறீங்களா?”


இல்லைஇதை நான் யாருக்கும் காட்டக் கூட போறதில்லை. சும்மாஎனக்காக சில தசைகளை வளர்த்துகலாம்னு…”


ரொம்ப விசித்திரமா இருக்கு,” போலோ சட்டை அணிந்திருந்த அந்த இளைஞன் கூறினான். பின்னர் தன் பால் பாயிண்ட் பேனாவின் முனையை அட்டையின் மீது சில முறை தட்டினான். அவன் என்னை நிராகரித்துவிடுவான் என்று கவலைப்படத் தொடங்கினேன். ஆனால் என்னை ஆச்சரியப்படுத்தும் வகையில் கூறினான் -  “சரி, உங்களுக்கென ஒரு பயிற்சி திட்டத்தைத் தொடங்குவோம்.”


சிறு வயதிலிருந்தே அவன் ஒரு விளையாட்டு வீரன் என்பதை நான் அறிந்துகொண்டேன். கல்லூரி காலங்களில் அவன் ரக்பி விளையாடியிருக்கிறான், டால்ஃபின்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொள்வதைப் பற்றி தீவிரமாகவே சிந்தித்திருக்கிறான். நல்ல வேளையாக அவனுக்கு இருந்த சில தொடர்புகள் மூலமாக இந்த ஜிம்மில் பயிற்சியாளனாகச் சேர்ந்துவிட்டான். சிறுபிள்ளையின் சாயலில் கவர்ச்சியான முகம் கொண்டவன். எடுப்பான பற்கள் உடையவன். என்னை விடப் பன்னிரண்டு வயது இளையவன். பயிற்சி உடையில் இல்லாதபோது அற்பமான உடைகள் ஏதாவது அணிந்துகொள்வானாக இருக்கலாம். அவன் தலைமுடியைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றியது எனக்கு. முழுநேரமும் ரக்பிதான் விளையாடிக்கொண்டிருப்பானாக இருக்கும். அப்படி இருந்தாலும் அவனுக்கு அது சரியாகத்தான் இருக்கும். தன் சமவயதுப் பெண்களின் மீது ஈர்ப்பு கொண்டவனாக இருப்பான் என்று தோன்றியது. எனக்கும் என் கணவரும் ஒரே வயது. கல்லூரியில்தான் முதலில் சந்தித்தோம்.


இப்படி பலவிதமான எண்ணங்கள் என் தலையில் ஓடிக்கொண்டிருந்த போது பிரகாசமான சிவப்பு போலோ ஷர்டில் இருந்த பயிற்சியாளன் எந்த உணர்வுகளுமின்றி என்னை நோக்கினான். “பாடி பில்டிங்கை ஏற்றும் கொள்ளும் மனம் பொது மக்களிடையே வெகு குறைவாகவே உள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தயாராக இருக்க வேண்டும். அப்புறம், முக்கியமாக உங்கள் குடும்பமும் உங்க முயற்சியில் பங்கு பெற வேண்டும்,” அவன் கூறினான்


இந்த அறிவுரைக்குப் பிறகும் என் கணவரிடம் நான் எதையும் சொல்லவில்லை. எங்களுக்குத் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது, ஒரு மிகப் பெரிய இரகசியத்தை அவரிடமிருந்து நான் மறைப்பது இதுவே முதல் முறை. ஆனால் அவரும் வீட்டில் தனது முழு நேரத்தையும் பணிக் கோப்புகளிலும் கணினியிலும் புதைந்து கழித்துக்கொண்டிருந்தார். தன்னுடைய தன்னம்பிக்கையை ஊதிப் பெருக்கிக் கொள்ளும் தேவையின் பொருட்டு மட்டுமே என்னுடன் எப்போதாவது பேசினார். மணவுறவில் நேசம் என்பதெல்லாம் கிட்டத்தட்ட இல்லாமலே போனது


நான் பணிபுரியும் கடையின் வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில்தான்புரோட்டீன் பவுடர்அருந்தத் தொடங்கியிருக்கிறேன் என்று கூறி என் உணவுப் பழக்கத்தின் மாற்றத்தை அவரிடம் விளக்கினேன். நான் இப்படி விதவிதமான உணவுப் பழக்கங்களை ஏற்கனவே பலமுறை முயன்று பார்த்திருக்கிறேன். அதனால் என் கணவருக்கு இப்போது எதுவும் புதிதாகப் படவில்லை. எனது இளம் பயிற்சியாளருடன் இணைந்து உருவாக்கிய பயிற்சி திட்டத்தை முறை கெடாது பின்பற்றினேன். தனியறையில் என் கணவர் புதைந்திருக்கும்போது அவருக்குத் தெரியாமல் நான் தண்டாலும் தோப்புக்கரணப் பயிற்சியும் மறைவாகச் செய்தேன். என் அடிப்படை உடல் வலு மேம்படத் தொடங்கியது. அதனால் வாரத்தில் நான்கு நாட்கள் உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கு எடை தூக்குவது, கயிறு பிடித்துத் தொங்குவது, ஏறுவது, தசை கூட்டும் இயந்திரப் பயிற்சிகளையெல்லாம் செய்தேன். டம்பல் பிரஸ், பெஞ்ச் பிரஸ், டி-பார் ரோவ்ஸ், ரிவர்ஸ் கிரஞ்ச்சில மணி நேரங்களுக்கு ஒரு முறை புரோட்டீன் பவுடர், சராசரி ஆணின் ஒரு நாள் கலோரி உட்கொள்ளலை விட இரண்டு மடங்கு எடுத்துக்கொண்டேன்.  


அழகான தசைகளைச் செதுக்குவதற்கு நான் நினைத்ததைவிட அதீத அர்ப்பணிப்பு தேவைப்பட்டது. உட்சபட்ச சாத்தியத்தை அடைந்துவிட்டோம் என்று தோன்றியவுடன், மேலும் தொடர்ந்து செயல்பட வேண்டும் - இன்னும் இரண்டுமூன்று எனக் கூட்டிக்கொண்டே போக வேண்டும். இதை நான் தனியாகச் செய்திருந்தால் எப்போதோ கைவிட்டிருக்கக்கூடும். ஆனால் என்னுடன் என் பயிற்சியாளன் நூறு இலவச வகுப்புகளுக்குத் துணையிருந்தான். உடல் கூட்டும் பயிற்சிகளுக்கு நிச்சயம் ஒரு துணை தேவை: வரம்பை மீறிய எடையைத் தூக்கிவிட்டால் பொத்தென கழுத்தில் விழுந்து இறக்கவும் நேரிடும். பயிற்சியாளன் என் பக்கத்திலேயே இருந்து அப்படி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொண்டான். “இன்னும் ஒன்றே ஒன்று. பிரமாதமா செய்றீங்க. அவ்வளவுதான்அப்படித்தான்….”


ஒவ்வொரு முறையும் பயிற்சியின் முடிவின் போது என் இறுகிய தாடையின் வழியாகச் சுவாசிப்பதால் வாயிலிருந்து நுரை ததும்பியது. ஆனால் அதுகூட என்னைப் பற்றிய ஒரு திறப்பாகத்தான் இருந்தது. திருமணமான புதிதில் வீட்டுக் கணக்குகளைப் பராமரிப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. அலுவலகப் பணிகளை ஞாயிற்றுக்கிழமைகூட வீட்டில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த என் கணவன், ரசீதுகள் கணக்கில் ஏறாமல் இன்னமும் குவிந்துகிடப்பதைப் பார்த்துச் சொல்வார், “நீ செய்கிற செயல்களில் உனக்கு உறுதியே இல்லை.” அடிக்கடி கண்டிப்பான குரலில் என்னைப் பார்த்து கேட்பார், “உன் வாழ்க்கையில நீ எப்போதாவது எதையாவது சாதித்திருக்கியா?”


என் கழுத்தின் திண்மை கூடியது. கவனிக்காமல் இருக்கவே முடியாது. கடையில், வாடிக்கையாளர்களுக்கு ஈரப்பத மூட்டும் சோப்புகளை எங்களின் புறங்கைகளில் தேய்த்து நுரைத்துக் காட்டுவோம். ஆனால் இப்போது, தசைநாண்களும் நரம்புகளும் திரண்டிருக்கும் என் மணிக்கட்டின் அளவு தங்களுடையதைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருப்பதையே கண் அசைக்காமல் அவர்கள் பார்த்தனர். ஜொஜோபா எண்ணெய் பற்றிய என் விளக்கத்தைக் கேட்பது போல் நடித்தபடி என் கழுத்தையே கவனித்துக்கொண்டிருந்தனர். அது இப்போது என் முகம் அளவிற்கே விரிந்திருந்தது. என் மேலங்கியின் உள்ளிருக்கும் மற்ற பாகங்களெல்லாம் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் ஊகிக்க முயல்வது அவர்களின் கண்களிலேயே தெரிந்தது. நான் முற்றிலும் நிர்வாணமாக இருப்பதைப் போலத் தோன்றியது எனக்கு.


கடைசியில், கடையின் உரிமையாளரே இதைப் பற்றிப் பேச என்னை அழைத்தாள். “சமீப நாட்களா நீ கொஞ்சம் வித்தியாசமா இருப்பதைப் போல இருக்கே?” அவள் கேட்டாள். “ஏதும் விசேஷமா? இல்லை பிரச்சினையா?”


அப்படி எதுவும்…”


நீ முன்னே இருந்ததை விடவும் இப்போ கொஞ்சம் பெருசா இருக்கிறாய் இல்லையா, அதனாலதான்நீ கர்ப்பமாக இருக்கலாமோ என முதல்ல நினைத்தேன், ஆனால்உன் உடம்புக்கு ஆகாத மருந்து ஏதும் எடுத்துக்குறியா? மெனோபாஸூக்காக ஏதேனும்பக்க விளைவுகள் இருக்கா?”


இல்லையில்லை….”


ஆனால் நிச்சயமா உன்னுடைய ஹார்மோன்களுக்கு ஏதோ ஏடாகூடமா ஆகியிருக்கு…”


என் பயிற்சி பற்றிய உண்மையை முதலாளியிடம் ஒரு நம்பிக்கையில் தெரிவித்தேன். முதலில் அவள் வெறுமனே தலையசைத்தாள்சற்று சந்தேகம் கொண்டிருந்தாள். நான் இதற்கு முன் வேறு எந்த விஷயத்திலும் இவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்ததில்லை என்று அவளிடம் தெரிவித்தபோது அது என் கண்களிலேயே தெரிகிறது என்று பதிலளித்தாள். என் முதலாளி மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட பெண்மணி. தனி ஆளாக தன் மூன்று குழந்தைகளையும் வளர்த்து வருகிறாள், தன் கடையின் கிளைகள் அத்தனையும் நிர்வகிக்கிறாள். உறுதியற்ற, குறிப்பிடும்படியாக எதையும் ஆற்றிடாத என் கடந்த கால வாழ்க்கையை அறிந்தவள் என்பதால் முழு மனதுடன் தனது ஆதரவை என்னிடம் தெரிவித்தாள். என்னுடைய மாற்றத்தை அவள் பெரிதும் விரும்பினாள்.


கடையில் உள்ள எனது சக பணியாளர்களும் என்னுடைய இந்த புதிய பயணத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்கள். அடுத்த நாள், யாரோ ஒருவர் தான் இதுவரை பயன்படுத்திடாத யோகா பாயை எனக்காகக் கொண்டு வந்து கொடுத்தார்கள். வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் கேசப் பொலிவு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரிக்குப் பின்னால் என்னால் முடிந்த அளவிற்கு இனி பயிற்சி செய்ய முடியும். இடைவேளைகளின் போது பியர் கோப்பை முழுதும் பச்சை முட்டையை உடைத்து ஊற்றி நான் குடித்ததைக் கண்கள் விரிய யாரும் பார்த்து ஆச்சரியப்படவில்லை. எப்போதாவது சில இளசுகள் வாகன நிறுத்துமிடங்களில்எச்சரிக்கை - புன்னகைக்கும் பலசாலிப் பெண் உங்கள் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவாள்என்பது போல எதையாவது சுவரில் கிறுக்கி வைப்பார்கள். அனேகமாக அத்தனை வாடிக்கையாளர்களுமே இதற்கெல்லாம் பழக்கப்பட்ட பின் இயல்பாகக் கடந்து போனார்கள். நிறைய ஒற்றைத் தாய்மார்களும், தன் குழந்தைகளையோ அல்லது தொழிலையோ வளர்ப்பதில் மும்முரமாக இருக்கும் பெண்களும் என் மாற்றத்தைக் கண்டு மிகவும் ஊக்கம் பெறுவதாகக் கூறினார்கள். எவ்வளவு கடினத்தை எதிர்கொள்ள நேர்ந்தாலும் என் புன்னகையை நழுவ விடாமல் பார்த்துக்கொண்டேன். ஏனென்றால், ‘பாடி பில்டராகஒரு லட்சிய அழகை எட்டுவதற்காகத்தான் என் தசைகளைச் செதுக்கிக்கொண்டிருக்கிறேன்.


என் தோலுக்கு அடியில் ஒரு உலோகத் தகட்டைப் பதித்திருப்பதைப் போல என் மார்பு அவ்வளவு திடமாக இருந்தது. ஒரு மரக்கட்டையை அப்படியே இரண்டாகப் பிய்த்து எரிந்துவிடமுடியும் என்பதைப் போல என் கைகள் பெரியதாகத் தெரிந்தது. என் இடுப்பில்சிக்ஸ்-பேக்தோன்றத் தொடங்கியது. தொலைவில் என்னைப் பார்த்தால் தலைகீழான முக்கோணத்திற்குக் கால் முளைத்ததைப் போலத் தெரிவேன். அப்படியிருந்தும் என் கணவர் மட்டும் எதையுமே கவனிக்கவில்லை. நான் என் சக பணியாளர்களிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் எனக்குச் சமாதானம் சொன்னார்கள் : “அதுதான் ஆண்களின் குணம்.” “நான் முடிவெட்டினால் கூட அவரால் கண்டு பிடிக்க முடியாது.”


நான் இன்னமும் கை வைக்காத ஒரு இடம் என் தலைமுடிதான். நீளமாக இருந்தால்தான் என் கணவருக்குப் பிடிக்கும். என் சருமத்தைச் சீர் செய்தேன், ஒரு வாடிக்கையாளர் எனக்கு அறிமுகப்படுத்திய பல் மருத்துவரிடம் மிகக் குறைந்த செலவில் பற்களை வெண்மையாக்கிக் கொண்டேன். ஆனால் நான் பாடி பில்டர் ஆவதற்கு முன்னால் இருந்ததைப் போல என் தலைமுடி மட்டும் அப்படியே இருந்தது


வாரத்திற்கு நான்கு என்ற கணக்கில் நான் மொத்தம் எண்பது வகுப்புகளை முடித்திருந்தபோது என் பயிற்சியாளன் என்னை ஒருமாடலைப்போலபோஸ்கொடுக்கக் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்தினான். “உடல் வலிமையாக இருப்பதை உணர்வது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்தவர்களும் உங்க செதுக்கிய உடலைப் பார்க்கும்படி  நீங்கள் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும். அதை ஒரு இலக்காகவே உங்களிடம் இருக்கட்டும்,” என்று அவன் கூறினான்


முதல் சில முறை அவர் பரிந்துரைத்தபோது நான் பணிவாக மறுத்துவிட்டேன். அப்படியான பெரிய மேடைகள் எனக்கானவை அல்ல. ஆனால் அவன் தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டிருந்தான். “இப்படி சுத்தமாகத் தன்னம்பிக்கையே இல்லாமல் நீங்க இருப்பதைப் பற்றியும் நாம ஏதாவது செய்தாக வேண்டும் என நினைக்கிறேன்,” என்றான்.


தன்னம்பிக்கை இல்லாதவளா? நானா?”


ஆமாம். ஒருவேளை அது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒவ்வொருமுறையும் ஏதாவது பேசி முடித்ததும் இறுதியில்எது எப்படியோஎன்று முணுமுணுக்குறீங்க. அல்லது எப்போதும்நான் இந்த மாதிரியான ஆள்என எதையாவது சொல்லி விலகுறீங்க. இதெல்லாம் எங்கிருந்து எதற்கு சொல்றீங்கன்னு தெரியலை. ஆனா நீங்க உங்க தன்னம்பிக்கையைக் கண்டிப்பா வளர்த்தே ஆகனும்.”


எனக்குக் காரணம் தெரியும். சிறு தவறைக்கூட அனுமதிக்காத கணவனுடன் வாழ்வதினால் நான் இழந்த எதையும் மீண்டும் மீட்டுக்கொள்ளும் குணங்களைத் தொலைத்திருந்தேன். திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் நாங்கள் இப்படி இல்லை. ஆனால் படிப்படியாக அவரது அவநம்பிக்கைகளை ஈடுசெய்யும் பொருட்டு என் தவறுகளை நானே அவர் முன்னால் பட்டியலிட்டுப் பழகியதால் என்னை நானே பெரிதாகப் பொருட்படுத்தாத நிலைக்கு ஆளானேன்


போட்டியில் கலந்துகிறேன்னு என்று என்னால உறுதியளிக்க முடியாது,” என்று சொன்னேன். பயிற்சிக் கூடத்திலிருந்து கண்ணாடியின் முன்னால் உடலை இறுக்கி வாழ்வில் முதல் முறையாக ஒருபோஸ்கொடுத்தேன். ஒருபாடி பில்டராகஇருப்பது என்பது இதுதான். சற்று பதட்டத்துடன் என் கைகளை முகத்திற்கு நேராகக் கொண்டு வந்து எந்த கோணத்தில் நிறுத்தினால் முழு கவர்ச்சியுடன் உடல் வலு வெளிப்படுமோ அப்படித் திரும்பி நின்றேன்.


பார்ப்பதற்கு எளிது போலத் தெரிய வேண்டும்,” பயிற்சியாளன் கூறினான். அதனால் இதழின் ஓரங்களை மேலே உயர்த்தி, தொடர்ந்து என் தசைகளை அழுத்தமாக வெளிக்கொணர முடிந்த மட்டும் முயன்றேன்.


என் புன்னகை இன்னமும் இயல்பானதாக மாறவில்லை. கண்கொண்டு என்னை நானே கண்ணாடியில் பார்க்கமுடியவில்லை என்பதால் கைகளைக் கீழிறக்கித் தளர்த்தினேன்.   


ஒன்றும் அவசரமில்லை. தொடர்ந்து பயிற்சி செய்வோம்,” என் தோள் மீது துண்டை போர்த்திவிட்டு பயிற்சியாளன் சொன்னான்.


ஒரு நாள் எங்கள் கடை வாயிலில் ஜொஜோபா எண்ணெய் மாதிரிகளை இலவசமாக விநியோகித்துக் கொண்டிருந்தபோது என் இரண்டு வாடிக்கையாளர்களின் நாய்களுக்கிடையே சண்டை மூண்டது. ‘யார்க்கிநாய் தன் கழுத்துப் பட்டையைக் கயிற்றிலிருந்து அறுத்துக் கொண்டு தன்னை விட மிகப் பெரிய நாயை நோக்கி ஓடி எகிறி எகிறிக் குரைத்தது. இதனால் பெரிய நாய் யார்க்கியின் கழுத்தைக் கவ்விக் கொண்டது. பெரிய நாய் சற்று கூச்ச சுபாவமுள்ள நாய்தான். வேறொரு நாய் தன்னருகில் வந்து மோப்பம் பிடித்து, உறுமிக் கொண்டிருந்தால் கோபப்படுவதற்குப் பதிலாகச் செய்வதறியாது தொலைந்து போய்விட்டதைப் போல முழித்துக்கொண்டிருக்கும் வகையான நாய்தான். யார்க்கியின் உரிமையாளர் தன் செல்லப் பிராணியைக் காப்பாற்றும் முயற்சியில், மூர்க்கத்துடன் பெரிய நாயை யார்க்கியின் கயிற்றால் ஓங்கி அடிக்கத் தொடங்கினார். இதனால் மேலும் குழப்பமடைந்த பெரிய நாய், வாயில்யார்க்கியைக்கவ்விக் கொண்டே தலையை அப்படியும் இப்படியும் வேகமாக அசைத்தது. ‘யார்க்கியின்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. பெரிய நாய் தன் தாடைகளைத் திறந்து கோரப் பற்களிலிருந்து விடுவித்த போது துரதிருஷ்டவசமான நாய்க் குட்டி தன் கடைசி மூச்சை இழந்திருந்தது


யாரும் எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவர்கள் மனதில் என்ன நினைத்தார்கள் என்று எனக்குத் தெரியும்: மரத்தடியைப் போன்ற என் கைகளால் நான் ஏன் அந்த இரண்டு நாய்களையும் விலக்கவில்லை. தேவைப்படும்போது உதவிக்கு வராத அந்தத் தசைகளை அவர்கள் ஏன் இனிமேலும் ஆதரிக்க வேண்டும்?


ஒரு விளையாட்டு வீரனின் தசைகளிலிருந்து பாடி பில்டரின் தசைகள் வேறுபட்டவை. அவை உண்மையில் அழகியல் மதிப்பிற்காகவே உள்ளன. ஒரு மதிப்புமிக்க பாடி பில்டர் தங்கள் சக்தியை அன்றாட பயன்பாடுகளுக்கு உட்படுத்துவதில்லை. நானும் இந்த நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டதால், சண்டையிடும் நாய்களை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட என் மனதில் தோன்றவில்லை. ‘யார்க்கிநட்பு நிறைந்த நாய். ஆற்றல் மிக்க அந்நாய்க்குட்டி எங்கள் கடையில் மிகப் பிரபலம். நானேகூட சில முறை என் கைகளில் ஏந்தியிருக்கிறேன்


நான் கடையில் பயிற்சி செய்வதை இனி நிறுத்திவிடுகிறேன்.” அன்றைய தினம் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னால் இதை என் முதலாளியிடம் சொன்னேன். அதுவும் நல்லதுதான் என்று சொல்லி அவள் தலையசைத்தாள். பணியாளர்களுக்கான அறையில் யாரும் என்னுடன் பேசவில்லை. அறைக்குள் பதற்றம் நிலவியது. “நாளை பார்க்கலாம்,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். கடையின் பின்பக்கமாக வெளியே வரும்போது யோகா பாய் குப்பையில் வீசப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.


இரவுணவிற்குப் பின் என் கணவர் தன் படிப்பறைக்குள் செல்லும் முன், “இன்று கடையில் ஒரு சம்பவம் நடந்ததுஎன்றேன். நான் நினைத்ததை விடவும்யார்க்கியின்மரணத்தை நேரில் பார்த்தது என்னை வெகுவாக உலுக்கியிருந்தது. என் கவலைகளை அவரிடம் சொன்னேன், இனி தொடர்ந்து அக்கடையில் பணிபுரிய முடியுமா எனத் தெரியவில்லை என்றேன். ஆனால் அவர் வழக்கம் போலஹ்ம்ம்ம்’, ‘சரிஎன்று சொல்லிவிட்டு போவதற்காக எழுந்தார்.


கட்டுப்படுத்தமுடியாத அளவிற்குக் கோபம் மூண்டது. சிதறியிருந்த உணவு மிச்சங்களைத் துடைத்து பாத்திரங்களை எடுத்தபடி சொன்னேன், “நான் இன்று சலூனுக்குப் போனேன்.” நான் செய்வதென்ன என்று உணர்ந்துகொள்ளும் முன்னரே, என் கைகளில் என் தலைமுடியை ஏந்தியிருந்தேன். “சின்னதாக வெட்டிவிட்டேன்,” என்று சொன்னேன். உண்மையில் நான் சலூனுக்குச் சென்றே பல மாதங்கள் ஆகிவிட்டன.


மேசையின் அடியில் நாற்காலியைத் தள்ளுவதை நிறுத்தி என்னைப் பார்த்தார் என் கணவர். இதற்கு முன்னர் கடைசியாக அவர் எப்போது என்னை இப்படிப் பார்த்தார் என்பதுகூட எனக்கு நினைவில்லை. முகத்தில் சில சுருக்கங்கள் கூடிவிட்டதே தவிர கல்லூரியில் இருந்ததைப் போலவேதான் இப்போதும் இருக்கிறார். பத்தொன்பது வயதில் நாங்கள் சந்தித்தபோது இருந்ததைப் போலவே. சில நொடிகள் கழித்துக் கூறினார், “நல்லா இருக்கு.”


நிஜமாகவா? என் முடி நீளமாக இருந்தால்தான் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்திருந்தேன்.”


இதுவும் அவ்வளவு மோசமாக ஒன்னும் இல்லை.”


நான் எவ்வளவு வெட்டியிருப்பேன் என நினைக்கிறீங்க?”  


ஹ்ம்ம்ம்ஒரு எட்டு அங்குலம் இருக்குமா?” அவர் தன் மூக்கைத் தடவினார். பிறகு என் முகபாவம் இறுக்கமாக மாறுவதைக் கண்டதும், என்னைச் சமாதானப்படுத்துவதைப் போலப் புன்னகைத்தார். இந்தப் புன்னகைதான் ஒரு காலத்தில் என்னை அழைத்ததும் அவருடன் உடனே வெளியே செல்லும் துணிவைத் தந்தது. அப்போது எனக்கு வேறு ஒருவர் மீது ஈர்ப்பு இருந்தபோதிலும். ஒன்றன் பின் ஒன்றாக என் கன்னங்கள் மீது கண்ணீர் விழுவதைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்ட என் கணவர், “என்ன ஆச்சு?” என்று கேட்டார்


என் கண்களைத் துடைக்க முயன்றபோது, கைகளில் தடவியிருந்த எண்ணெய்யின் மீது கண்ணீர் வேகமாக உருண்டோடியது


ஒன்னும் இல்லை.”


ஆனால் நீ அழுகிறாயே. வேலையில ஏதும் பிரச்சினையா?”


ஒரு நிமிடம் முன்னால் நான் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்த அத்தனையையும் முழுவதுமாக மறந்துவிட்டார். நான் தலையை ஆட்டியபோது அவர் மேசையைச் சுற்றி வந்து என் தோளைத் தட்டினார். என் முக்கோணத் தசை அழகாக மேலெழுந்து தோளை நிறைத்திருந்தது. அவர் என்னை ஆற்றுப்படுத்துவதை விடவும் என் உடலை அவர் தொட்டுப்பார்ப்பதற்காக அவரை நான் அனுமதித்தது போலத்தான் இருந்தது. இல்லை. இனிமேலும் இதைச் செய்யமுடியாது


அவருடைய சிறிய கையை விலக்கிவிட்டுச் சொன்னேன், “நீங்கள் உங்களைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுறீங்க. உங்களுடன் இருக்கும்போதெல்லாம் நான் யார் என்பதையே புரிந்துகொள்ள முடியாதவளா இருக்கேன். கொஞ்சங்கூட உங்களுக்கு ஆர்வத்தைத் தூண்டமுடியாதவளாகத்தான் நான் இருக்கேனா?”


நான் ஏன் இப்படிக் குலைந்துபோயிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதவரைப் போலத் தோன்றினார் என் கணவர். வழியும் கண்ணீரைத் தடுப்பதற்காக என் வாயை இறுக மூடிக்கொண்டேன். அவர் கண்ணெதிரே என் மேலாடையையும் பாவாடையையும் கழற்றினேன். ‘போஸ்பயிற்சிக்காக நான் அணிந்திருந்த மிகச் சிறிய பயிற்சி உடையைக் கண்டதும் என் கணவர் புரியாமல் கேட்டார், “அது என்ன? புது உள்ளாடையா?”


நான் வீட்டிலிருந்து கிளம்பினேன். ஜிம் மூடுவதற்கு இன்னும் நேரம் இருந்தது.  


கோச். கோச். கோச்.


மூச்சு வாங்க நான்பிக்கினியில் வந்து நின்றாலும், பயிற்சியாளன் என்னை ஜிம்மிற்குள் புன்னகையுடன் அனுமதித்தான்.


பயிற்சி பண்ணலாம்.”


அளவுக்கு மீறிய பயிற்சி ரொம்ப ஆபத்து. ஓய்வு நாட்களில் முழுசா ஓய்வு எடுக்கனும். “


மூன்று செட் பெஞ்ச் ப்ரஸ் மட்டும் ப்ளீஸ். அவை எனக்கு உடனடியாக நிம்மதியைக் கொடுக்கும்.”


நான் அவனிடம் தொடர்ந்து கெஞ்சினேன். அதனால் சரி என்று சொல்லி என்னை நீள் இருக்கையில்  அமரச் சொன்னான்.


வெறிச்சோடிய ஜிம்மில்பார்பெல்லைஉயர்த்தி இறக்கியபோது என் கண்களிலிருந்து நீர் வழிந்தது. “அவருக்கு மட்டும் ஏன் புரியவில்லை?”


உங்கள் கணவருக்கா...?”


ஆமாம். அவருக்கு எதுவுமே புரிவதில்லை.”


நீங்க அவர்கிட்ட பேச முயற்சி செஞ்சீங்களா?”


என்னால முடியாது. அவருக்கு என் மேல விருப்பம் இல்லை.”


இருந்தாலும் நீங்க பேசணும். பாடி பில்டிங் சமயத்தில் பெரும் தனிமையைக் கொடுக்கும்.”


தனிமை. பயிற்சியாளனின் சொல் என் நெஞ்சில் சிக்கிக் கொண்டது. “அவரை எப்படி அணுகுவதென்றே தெரியலை.”


பார்பெல்லைகீழே வைத்தேன். கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு ஒருபோதும் சொல்லக்கூடாத ஒன்றை என்னிலிருந்து நழுவவிட்டேன். “நீங்களே என் துணையா இருந்திருக்கலாம், கோச்.”


என் சொற்களை அமைதியாக உள்வாங்கிக்கொண்டான். என் மேல் அவன் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும், அதனால் மேலே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். ஆனால் பயிற்சி பெறும்போது என் கணவனை விட இவனே எனக்கு உற்ற துணையாக இருக்க முடியும் என்று எத்தனை முறை நினைத்திருப்பேன்? என் எல்லைகளைக் கடந்து செயல் புரிய இவன்தான் எனக்கு உதவியாக இருந்தான். என்னிலும் என் மாற்றத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்தான்


சற்று நேரம் கழித்து என்னிடம் கேட்டான், “இப்போ கொஞ்சம் பரவால்லியா?”


நான் கூறியதை அவன் உண்மையென அர்த்தப்படுத்திக்கொள்ளவில்லை என்பதை எனக்கு சாதுரியமாக உணர்த்தியதற்கு அவனுக்கு நன்றி. தலையசைத்துவிட்டு பார்பெல்லை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டேன்


மற்ற எல்லா விளையாட்டு வீரர்களை விடவும் நான் பாடிபில்டர்களைத்தான் அதிகம் மதிக்கிறேன். அவங்க அளவுக்குத் தனிமையானவர்கள் வேறு யாரும் கிடையாது. ஆழ்ந்த தனிமையை மறைத்துக்கொண்டு எல்லாரைப் பார்த்தும் புன்னகைப்பாங்க. வேறு எந்த உணர்வும் தனக்கு இல்லை என்பது போல எப்பவும் பல்லைக் காட்டிக்கிட்டே இருப்பாங்க. அது வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதோட வெளிப்பாடு. என்ன ஆனாலும் தொடர்ந்து வாழ்ந்துகிட்டே இருக்கனும் என்ற உறுதிப்பாடு…”


ஆனால்….” சாந்தமாக அவனிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளுக்குப் பதில் கேள்விகளைக் கேட்டேன். “எப்போதும் அப்படியே சிரித்துக்கொண்டிருந்தா உண்மையான உணர்வுகளைத் தொலைத்திட மாட்டோமா? தனிமை நம்மை அழத்தூண்டும் போது புன்னகையைக் காட்டுவது சரிதானா? என் கணவருக்கு என்னுடைய அத்தனை முகங்களையும் நான் காட்டியிருக்கனும். அவருக்குத் தெரியாத பல எனக்குள்ளே இருக்கு…” 


அனேகமாக இதற்குப் பிறகு இங்கு பயிற்சி மேற்கொள்ள வரமாட்டேன் என்று நினைக்கிறேன். என் கணவரை விவாகரத்து செய்வேன். திரும்பவும் ஒரு சராசரி, சலிப்பூட்டும் பெண்ணாக மாறி அன்று என் பள்ளிக் காலத்தில்ரோலர் கோஸ்டரில்ஏறியிருந்தால் எல்லாமும் மாறியிருக்குமோ என்று சதா எண்ணியபடியே மெதுவாகச் சாவேன்


தம்ப்..தம்ப்..தம்ப்.. மந்தமான சத்தம் கேட்கவே கோச் எழுந்து பெரிய கண்ணாடிச் சாளரத்தை நோக்கிச் சென்றான். நானும் இருக்கையில் எழுந்து அமர்ந்தேன். கண்ணாடியின் மறுபக்கத்தில் என் கணவர் நின்று கொண்டிருந்தார், மூடிய கைகளால் வேகமாகத் தட்டிக்கொண்டிருந்தார்


அது உன் கணவரா?” கோச் என்னிடம் கேட்டான். லேசான கலக்கத்துடன், “ஆமாம்என்றேன்.


அவர் இங்கு எப்படி வந்தார்? அவருக்கு என் ஜிம்மைப் பற்றி எதுவுமே தெரியாதே. இவ்வளவு வெளிப்படையான மனக் குழப்பத்தில் அவரை இதற்கு முன் பார்த்ததேயில்லை.


நான் அவரை பின் வாசல் வழியாக அழைச்சிட்டு வரேன்,” என்று சொல்லி கூடத்தை விட்டு வெளியேறினான். அவன் சென்ற பிறகு எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இளம் பயிற்சியாளனுடன் நான் தனியாக இருப்பதை என் கணவர் கண்டுவிட்டார். அதீத பதட்டத்தில் இருந்தார். என்னிடம் கத்தப் போகிறாரா? ஆனால் என்னில் ஒரு பகுதி அதற்குத் தயாராகவே இருந்தது. அத்தனையும் தெளிவுறப்போகும் தருணம் இது என்பதை நான் உணர்ந்துகொண்டபோது அதற்கான காத்திருப்பு நீள்வதாகத் தோன்றியது. என் கணவர் இன்னமும் கண்ணாடியைத் தட்டிக்கொண்டிருந்தார்.


நான் எழுந்து கண்ணாடிக்கு முன்னே சென்றேன். தசைக்கட்டுகளை இறுக்கி அவரை நோக்கிபோஸ்கொடுத்தேன். கைகள் இரண்டையும் மேலே தூக்கி தலையை வளைத்து என் தலைகீழ் முக்கோண மேலுடம்பு எடுப்பாகத் தெரியும்படி என் மார்பை வெளியே தள்ளினேன். நான்பிக்கினிஅணிந்து அசைவுகளைக் காட்டிக்கொண்டிருப்பதை நம்பமுடியாமல் பார்த்தார். என் கைகளை இடுப்பில் வைத்து அடுத்த போஸுக்கு மாறியபோது தலையை ஆட்டினார், மிகுந்த வலியுடன்போதும் நிறுத்துஎன்று சொல்வதைப் போல இருந்தது. தன் மனைவியை இப்படிப் பார்க்க விரும்பமாட்டார் என்பது தெரியும். ஆனால் இதுதான் நான். இன்னமும் என்போஸ்மாற்றாமல், இதற்கு முன் காட்டிராத விதவிதமான முகபாவங்களை அவருக்குச் செய்து காட்டினேன். என் தனிமையான முகம், என் சோக முகம், என் அலட்சிய முகம். அவருக்கு அவ்வளவு திறன் இல்லை என்று அறிந்த என் முகம். அவரிடம் சொல்ல முயற்சி செய்தேன். இதுதான் நான். ஒரு கணவன் புறக்கணிக்கும்படியான மனைவி இல்லை நான்.   


என் கணவர் பின் கதவை நோக்கி நகர்ந்தார், என் பயிற்சியாளன் அவரை அழைத்திருக்கக் கூடும். என் சக்தி ஆவியாகி வெளியேறியது, நான் தரையில் அமர்ந்தேன். கூடத்தின் கதவுகள் திறக்கப்படும்வரை என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை


உங்கள் கணவரை அழைத்து வந்துவிட்டேன். நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நீங்க ரெண்டு பேரும் ஒரு மாதிரியான ஆட்களாகத்தான் இருக்கீங்க.”


இதன் மூலம் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்துகொள்வதற்குள் அவன் பின்னாலிருந்து என் கணவர் வெளிப்பட்டார். உள்ளுணர்வு உந்த நான் பாதுகாப்பான தூரத்தில் நின்றேன், ஆனால் அவர் கோபமாக இல்லை. அவர் அழவும் இல்லை. சோகமான முகத்தில் செய்வதறியாத முகபாவத்துடன் என்னை நோக்கி வந்து என்னருகில் நின்றார்


ஜிம் உறுப்பினர் அட்டையைப் பார்க்கும் வரை எனக்கு எதுவுமே தெரியலைநீ இவ்வளவு பெருசாகிட்ட…”


என்னை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தலைமுடியைக் கோதினார்.


நான் இப்போதும் கூட உடற்பயிற்சி செய்கிறேன். கோடைக்காலங்களில் என் உடலில் எண்ணெய் பூசி என் கணவருடன் பூங்காவிற்குச் செல்கிறேன். உலா வரும் நாய்களை வேடிக்கை பார்ப்போம், சாண்ட்விச் சாப்பிடுவோம், சில நேரங்களில் உதிர்ந்த இலைகளின் மீது கைகோர்த்தபடி நடப்போம். அவரது கைகள் இன்னமும் ஒரு கலைஞனுடையதைப் போல மென்மையாக இருந்தன, என்னுடையதோ ஒரு காட்டு விலங்கினைப் போல இருந்தன. என் பயிற்சிகளே காரணம். வழியே போகிறவர்கள் எங்கள் உடல் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதைப் பற்றிப் பேசிப் போகிறார்கள், நாங்கள் கண்டுகொள்வதில்லை


எனதுபோஸ்முன்பை விட இப்போது மிகவும் மேம்பட்டு விட்டதாக என்னுடைய கோச் சொன்னான். “ஒரு நல்ல திருப்புமுனை உங்களுக்கு காத்திருக்கு என நினைக்கிறேன்.”


என் முதலாளியுடனும் சக ஊழியர்களுடனுமான என்னுடைய உறவு சீர் செய்யப்பட்டது. நான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள், என்னால் உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை. அப்படி நான் கலந்துகொண்டால் அவர்கள் எனக்கென ஒரு ரசிகர் மன்றம் தொடங்குவதாகவும், பெரிய பதாகைகள் வைக்கப்போவதாகவும் பேசிக்கொண்டார்கள். மதிய உணவின் போது யாரோ கேட்டார்கள் - “உன் விருப்பத்தையும் கேட்போம்அந்த பேனர்ல உன்னைப் பத்த என்ன எழுதனும்னு ஆசைப்படற?”


நான் சொன்னேன்: “ரோலர் கோஸ்டரைக் கூட உன் வெற்றுக் கைகளால் சுண்டி எறிந்துவிட முடியும்!!


வசந்த காலம் தொடங்குவதற்கு முன் பார்பெல் எடையை இன்னும் முப்பது பவுண்டு கூட்டி தூக்க வேண்டும். ஒரு நாய்க்குட்டி வாங்க வேண்டும், அழகான செல்லமான ஒருயார்க்கி’.